துலங்காத மர்மங்கள் 2

இலங்கையில் எதிரும் புதிருமாக இருக்கும் நான்கு சமயத்தவர்களையும் பக்தி என்ற கோட்டில் இணைத்து வைக்கிறது ஒரு மலை என்று தோழி மெரினா கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. சமவெளிகளில் அடித்துக்கொள்பவர்கள் மலையில் கூடிக்கொள்கிறார்களா!

இலங்கையின் இரண்டாவது பெரிய, அழகு மிகுந்த சோலைகள் சூழ்ந்த அந்த மலை ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில், நிர்வாக ரீதியாக நுவரெலியா மாவட்டத்துக்குச் சொந்தமானதாக இருக்கிறது. நான்கு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தை சர்ச்சையின்றி வணங்கிச் செல்லும் உலகின் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் தத்தமது புனித மலையாகக் கருதி வருகின்றனர். அவரவர் நம்பிக்கையின் பின்னால், அவரவர் மதம் சார்ந்த புனிதக் கதைகள் காலந்தோறும் புனையப்பட்டு வருகின்றன.

இந்துக்கள் அதை சிவனின் பாதமாகக் கருதி, ‘சிவனொளிபாத மலை’ என்று அழைக்க, பௌத்தர்கள் புத்தரின் காலடியாகக் கருதி, சிங்களத்தில் ‘ஸ்ரீபாத’ என்று அழைக்க, முஸ்லிம்கள் அதனை முதல் மனிதன் ஆதாமின் பாதம் என நம்புவதால் ‘பாவா ஆதம் மலை’ (ஆதாமின் மலை) என்கின்றனர். கிறிஸ்தவர்கள் புனித தோமஸின் மலை என அழைக்கின்றனர்.

கடுங்குளிரும் காற்றும் அதிகமுள்ள மாதங்களான மார்கழிப் பௌர்ணமியிலிருந்து வைகாசி வரை இம்மலை விழாக்கோலம் பூண்டுவிடுகிறது. மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. அடிவாரத்திலிருந்து உச்சியை அடைய 6 முதல் 8 மணித்தியாலங்கள் பிடிக்கிறது. இரவில் படியேறத்துவங்கினால், அதிகாலை சூரிய உதயத்தின் போது மலைஉச்சியை அடைந்துவிடலாம். அதிகாலை சூரியோதத்தைக் காண்பதே அனைவரின் இலக்காக இருக்கிறது. இங்கிருந்து பார்க்கும்போது சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்கின்றனர். மலையேறத் துவங்கியவுடன், நல்ல தண்ணீர் பிரதேசம் என்ற இடத்தையடுத்து, நாகதீப விகாரை தெரிகிறது. இலங்கையின் நீண்ட நதிகளான மகாவலி கங்கை, களு கங்கை, களனி கங்கை உள்ளிட்ட நதிகள் தோன்றுமிடங்களைப் பார்க்க முடிகிறது. கற்பக விநாயகர் ஆலயத்தையொட்டி சிவபாதமலைக்குச் செல்லும் பட்டிக்கட்டுகள் தொடங்குகின்றன. செல்லும் வழியில் சிவன் கோயிலும் சில பௌத்த விகாரைகளும் காணப்படுகின்றன. அழகிய நீர்வீழ்ச்ச்சியொன்று மனதை மயக்குகிறது. “சொட்டும் பனித்துளிகள் சில்லிட குளிர்காற்றில் உடல் புல்லரிக்க, மழைச்சாரல் தூவானமிடும் காலத்தில் மலை ஏறுவது இன்பத்திலும் இன்பம்” என்று ரசித்துச் சொல்கிறார் அடிக்கடி மலையேறும் தோழி ஓருவர்.

நிறைய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதல் முறை தரிசனத்திற்குச் செல்பவர்கள் கையில் வெள்ளைத் துணியில் நாணயம் ஒன்றை வைத்து காணிக்கை முடிந்து செல்ல வேண்டும் எனபது ஐதீகம். அருவி விழும் இடத்தில் கையில் கட்டியுள்ள காணிக்கையைச் கழற்றி வைத்துவிட்டு, அந்த அருவியில் முகம், கை, கால் கழுவி தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். மலை உச்சியை அடையும் முன், ஊசி மலை உள்ளது. அந்த இடத்தில் ஊசியில் நூல் கோத்துக்கொண்டு, அம்மலையின் ஆரம்ப இடத்தில் கட்டிவிட்டு, நூலைக் கையில் எடுத்துக்கொண்டு மலை ஏற வேண்டும். கையில் உள்ள நூல் அறுந்துவிடாமல் இறுதி அந்தம் வரும்வரை மலைவழியே கொண்டு சென்றுவிட்டால், மனத்தில் எண்ணிய காரியங்கள் நடக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதுமட்டுமல்ல, முதன் முறையாக வரும் யாத்திரிகர்கள் கைகளில் சுண்ணாம்பு பூசிக்கொள்ளுதல் போன்ற காரணம் தெரியாத கட்டாயச் சடங்குகளும் இருக்கின்றன. மலையுச்சியில் உள்ள காண்டா மணியை அடிப்பதன் மூலம் யாத்திரிகர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. சிவ பாதத்தைத் தரிசிக்க நிசங்கமல்ல என்ற அரசன் தனது ‘சத்துரங்கனி’ என்ற படையுடன் சிவனொளி பாதத்தைத் தரிசிப்பதற்கு நிசங்கலென எனும் குகை வழியே வந்ததாக கூறப்படும் குகையொன்றும் காணப்படுகிறது. 1950ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட THE DRAGON GATEWAY என்று சொல்லக்கூடிய மகர தோரண வாயிலானது லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையத்தில் எந்தவித இயந்திரக் கோளாறுகளும் ஏற்படாது இருப்பதற்காகச் சமன் தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.

சிங்களவர்களால் சமனல கந்த என்று அழைக்கப்பட்ட இந்த மலையை, போர்த்துக்கீசியர்கள் முதன்முதலில் ‘ஆதம்ஸ் பீக்’ என்று அழைக்கத் துவங்க, 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் அதைத் தொடர, பல அரசுப் பதிவேடுகளிலும் அதே பெயரில் பதிவாகியுள்ளது. பல்வேறு மத நம்பிக்கைகளுக்கான புனைவுகள் சுவாரசியமூட்டுகின்றன.

திருமாலும் பிரம்மாவும் தங்களுக்கிடையில் யார் பெரியவர் எனப் போட்டியிட்டு, சிவனிடம் பூசை செய்த நேரத்தில் சிவன் ஒளியாக எழுந்தருளி பாதம் பதித்த இடம் சிவனொளி பாதமலை என்ற நம்பிக்கை இந்துக்களிடம் இருக்கிறது. தமிழ்க் கடவுளான முருகப்பெருமான், சூரபத்மனை அழித்தபோது சிவன், இம்மலை மேலே எழுந்தருளி சூரசம்ஹாரத்தைக் கண்டு ரசித்தாராம். அப்போதுதான் இந்தக் கால்தடம் உருவானதாம். எனவேதான் சிவனொளிபாத மலை என்றும் நம்புகின்றனர்.

மன்னர் மெனியக்கித்தவின் வேண்டுதலைத் தொடர்ந்து, அரசர்களுக்கிடையே நிகழ்ந்த மோதலுக்கு மத்தியஸ்தம் செய்ய புத்தர் இலங்கை வந்ததாகவும் அப்போது (கி.மு. 519 -520) இலங்கையில் பல பிரதேசங்களுக்கும் சென்றவர் சமனல கந்த என்று அழைக்கப்பட்ட இன்றைய ஸ்ரீபாத மலையில் தனது கால் தடத்தைப் பதித்துச் சென்றதாகவும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். சங்குச் சக்கரம் உள்ளிட்ட 108 மங்கலப் பொருள்கள் கொண்ட புத்தரின் கால்தடங்கள் சீனா, தாய்லாந்து, ஜப்பான், சிரியா, பராகுவே, ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படுவதாகவும், அதே அடையாளங்கள் ஸ்ரீ பாத மலையிலும் காணப்படுவதால் இது புத்தரின் கால்தடங்களே என்பதில் பெரு நம்பிக்கையுடன் இருக்கின்றனர் பௌத்தர்கள். (ஆனால், அங்கெல்லாம் இவை புனிதப்படுத்தப்படுவதில்லை.)

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி ஆதாம் வாழ்ந்த ஏடன் தோட்டம் இன்றைய ஈராக்கில் உள்ளதால், இந்த மலை இந்தியா வந்த இயேசு கிறிஸ்துவின் நம்பிக்கைக்குரிய சீடரான புனித தோமஸ் காலடி பதித்த இடம் என நம்பி தோமஸ் மலை என அழைக்கின்றனர்.

“சொர்க்கத்தில் வாழ்ந்த ஆதாமும் ஏவாளும் கடவுளால் விலக்கப்பட்ட கனியைப் புசித்தனர். அதனால் கோபமுற்ற கடவுள், இருவரையும் பூமிக்குக் கடத்திவிட்டார். ஆதாம் வந்திறங்கிய இடம் செரண்டிப் (இலங்கை) எனும் நாடாகும்” எனத் திருக்குரானில் எழுதப்பட்டுள்ளது (Holy Qur’An, Surah Al-Baqarah) என்கின்றனர் இஸ்லாமியர்கள். (கி.பி. 861ஆம் ஆண்டு இலங்கை வந்த மொரோக்கோ நாட்டு யாத்திரிகர் சுலைமான் தாஜூர் இந்த மலைக்குச் சென்றவர், இதை அல்லாவின் மலை (Al Rohun) என்று அழைத்திருக்கிறார்.) கடவுளால் படைக்கப்பட்ட ஆதாமின் கால்தடம்தான் இது என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர் இஸ்லாமியர்கள்.

இதுபோன்ற எந்தக் கதைகளுக்கும் தொல்பொருள் வரலாற்றுச் சான்றுகள் கிடையாது. இக்கால்தடத்தை ஆய்வு செய்வதற்கு, இவ்விடத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பௌத்தமத பீடங்களும் அனுமதிக்கவில்லை. என்றாலும் பல்வேறு மதங்களின் பல்வேறு நம்பிக்கைகள் அனைவரையும் அந்த இடத்தில் ஒன்று சேர்க்கின்றன.

மதங்களின் சங்கமிப்பை நிகழ்த்தும் இந்த அதிசயமலை பல மர்மங்களையும் தன்னுள் இழையோடவிட்டு நிமிர்ந்து நிற்கிறது. யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பிக்கும்போது மலையகம் எங்கும் வண்ணத்துப்பூச்சிகள் அலைஅலையாகப் பறந்து திரிகின்றன. இவை அனைத்தும் சிவனொளி பாத மலைக்குச் சென்று இறைவனைத் தரிசிப்பதாகவும் நம்பப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் பட்டாம்பூச்சிகள் வருவது ஏன்? அதன்பின் எங்கே செல்கின்றன? கையில் பூசும் சுண்ணாம்பிற்கும் நூல் கோப்பதற்கும் காரணம் என்ன? மலையுச்சியில் ஐந்தரை அடி நீளமும் இரண்டரை அடி அகலமுமாகக் காணப்படுவது யாருடைய காலடிச் சுவடாக இருக்க முடியும்? உலகின் பல பகுதிகளிலும் இதுபோன்ற பிரம்மாண்ட கால்தடங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் வரலாறும் அறிவியலும்கூட இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியவில்லை. சமகால அரசியல் சூழ்ச்சிகள் இந்த மலையையும் விட்டு வைக்கவில்லை. சிவனடி பாத மலை, ஆதம்ஸ் பீக், தோமஸ் மலை என்பதெல்லாம் படிப்படியாக மறைக்கப்பட்டும் மறக்கடிக்கப்பட்டும் ஸ்ரீ படா (ஸ்ரீ பாத மலை) என்ற பெயர் மட்டுமே திட்டமிட்டு நிலைநிறுத்தப்படுகிறது.

நிமிர்ந்து பார்க்கிறேன்… தீராத மர்மங்களோடு புன்முறுவல் பூக்கிறது அந்தச் சமத்துவமலை!

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.