காலம்: கணக்கிட முடியாத பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்.


இடம்: மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் இனாமலுவக் கோரளை.


இயற்கை தன் இருப்பைக் காட்ட பூமியின்மீது சற்றே கோபம்கொள்ள, பூமித்தாயின் அடிவயிற்றிலிருந்து எரிமலையொன்று வெடித்துக் கிளம்பி ஆக்ரோஷமாக பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓய்கிறது. அப்போது வெளித்தள்ளப்பட்ட எரிமலைக்குழம்பு அவ்விடத்தைச் சுற்றிப் பரவி, உயர்ந்து காலத்தின் சாட்சியாக உறைந்து போனது. அப்படி உறைந்து நின்ற குன்றுகள்தாம் பிற்காலத்தில் சிம்மகிரி என்றும் சிகிரியா குன்றுகள் என்றும் அழைக்கப்படும் என்று அந்த இயற்கை அறியவில்லை.

காலம்: கி.மு. மூன்றாம் நூற்றாண்டு.

இடம்: மாத்தளை மாவட்டத்தில் இனாமலுவக் கோரளை.

அங்கிருந்த அந்த இயற்கையான கற்குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதிகள் மக்களின் குடியிருப்புப் பகுதிகளாக மாறியிருந்தன. குன்றுகளிலிருந்த பாறைகளில் புத்த மடாலயக் குடியிருப்புகள் இருந்தன. அந்தப் பௌத்த பிக்குகள் பாறைகளுக்கிடையே குகைகளையும் குடைந்து தங்களுக்கென பாறை தங்குமிடங்களை உருவாக்கிக்கொண்டனர். அடிவாரத்திலுள்ள கற்குகைகளில் தங்கள் கருத்துகளைப் பின்வரும் சந்ததியினர் அறிந்துகொள்ளும் வண்ணம் தாங்கள் அறிந்த பிராமி எழுத்துகளால் பதிந்து வைத்தனர். அந்த அழகிய கற்குன்றைச் சுற்றிலும் பிக்குகளும் பொதுமக்களுமாக ஆள்களின் நடமாட்டம் எப்போதும் இருந்த வண்ணமிருந்தன.

காலம்: கி.பி. 455 – 495

இடம்: இலங்கையின் மத்திய மாகாணம்

இலங்கை தேசம் தென்னிந்திய மன்னர்களால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போது தாதுசேனன் மன்னன் அவர்களிடமிருந்து நாட்டை மீட்டு, அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 455 முதல் ஆட்சி செய்யத் தொடங்கினான். அவனுக்கென பட்டத்து ராணி இருந்தாலும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள் என்று சமூகத்தால் கருதப்பட்டவளை இரண்டாவதாக மணம் முடித்தான். முடியாளும் மன்னர்கள் நினைத்தால் எத்தனை மணம் வேண்டுமானாலும் முடிக்கலாம், யாரையும் முடிக்கலாம், கேட்பார் யாருண்டு? இரண்டாவது மனைவிக்கு மகன் காசியப்பன் பிறந்தான். முதல் மனைவிக்கோ அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்தே பிறக்கிறான் மொகலான எனும் மகன். ஆனால், தாதுசேனன் தன் பட்டத்து ராணிக்குப் பிறந்த மகனுக்கே ஆட்சி எனப் பிரகடனப்படுத்தினான்.
கோபம் கொண்ட காசியப்பன் கி.பி. 477இல் தனது தந்தையான தாதுசேனனைக் கொன்று, சகோதரன் மொகல்லானவுக்கு என அறிவிக்கப்பட்டிருந்த அரியணையைக் கைப்பற்றுகிறான். தனது தந்தை தாதுசேனனின் உடலைச் சிறைச்சாலை சுவருக்குள் உயிருடன் வைத்து பூசி மெழுகினான் என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். மொகல்லான தென்னிந்தியா தப்பிச் சென்றான். சென்றவன் எப்படியும் தமிழக மன்னர்களின் துணையுடன் வந்துவிடலாம் என்று பயந்து போன காசியப்பன் தனது இருப்பிடத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென சிந்தித்தான். தன் ஆட்சியெல்லைக்குட்பட்ட பகுதியெங்கும் சுற்றியலைந்தான்.

ஒருநாள் தேடியலையும்போது கண்ணில் படுகிறது அந்த வனங்களுக்குள்ளிருந்த அழகிய குன்று. சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் எரிமலைக்குழம்பால் உறைந்துபோய், சில நூறு ஆண்டுகளுக்குமுன் பௌத்த பிக்குகளின் வசிப்பிடமாக மாறியிருந்த அதே அழகிய குன்று. ஒருகாலத்தில் பிக்குகளும் பொதுமக்களும் ஆக்கிரமித்திருந்த அந்த இடம் இன்று வெறிச்சோடிக் கிடந்தது. பொதுமக்கள் நடந்து களைத்த பாதைகள் வனங்களாக மாறியிருந்தன. அதைக் கண்டவுடன் புன்னகையுடன் நகர்ந்தான். தான் வசிக்கப்போகும் இடம் அதுதான் என முடிவு செய்தான். அதன்பின் வேலைகள் மளமளவென நடந்தன. அண்டை நாடுகளிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து குவிந்தனர் அரசனின் ஆசையை நிறைவேற்ற. குன்றத்தின் மேல், தான் வாழ்வதற்கான அழகான கோட்டையை மட்டும் அமைத்துக்கொண்டதோடு திருப்தியடையவில்லை. அழகிய பூந்தோட்டமும் குளிப்பதற்கு நீர் தடாகங்களையும் அழகுற அமைத்துக்கொண்டான். கோட்டையுடன் சேர்ந்து அரண்மனையும் அந்தக் குன்றின்மீது உருவாகியது. குன்றின் ஒருபுறம் அழகிய அரை நிர்வாணப் பெண்களின் 500 சித்திரங்களை வரைவித்தான். காசியப்பன் கலா ரசிகன் என்பதை நிரூபிக்கிறார்கள் அந்த ஓவியக் கலைஞர்கள். கண்ணாடி போன்ற பளிங்குகளில் தேன், சாம்பல் மற்றும் மரப்பட்டைகளைக் கொண்டு வரையப்பட்ட, பூக்கள் ஏந்திய வெற்று மார்புக் கன்னிகள் தத்ரூபமாக மன்னனை மகிழ்விக்கிறார்கள். பதவிப் பிரச்னையின் விளைவால் அங்கு ஓர் அழகிய கோட்டை உருவாகியது.

மிகவும் பாதுகாப்பான அந்தக் குன்றில் புதுத் தலைநகரை அமைத்தான் காசியப்பன். அரசனனின் புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது, சுற்றி வர ஆழ்ந்த அகழி சூழ்ந்திருக்க குன்றின் மேலே குகைக்குள் கட்டிய கோட்டைக்குள் எந்த எதிரியால் நுழைய முடியும்? கி.பி. 495 வரை காமக்கிழத்தியர் புடைசூழ முகில்கள் தழுவிச் செல்லும் அந்தச் சொர்க்கபுரியில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டான் காசியப்பன்.

ஆனால், கி.பி. 495இல் மொகல்லான படையுடன் வந்து காசியப்பனைத் தோற்கடிக்க, தோல்வியைத் தாங்க முடியாமல் தனது வாளில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் காசியப்பன். மொகல்லான தலைநகரை அனுராதபுரத்திற்கு மாற்றிவிட்டு, சிகிரியாவை ஒரு புத்த மடாலய வளாகமாக மாற்றிவிட்டான். இன்ப அரண்மனையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த காசியப்பன் ஒரு காமக்கிழத்தியால் கொடுக்கப்பட்ட விஷத்தால் படுகொலை செய்யப்பட்டார் என்றும்கூடச் சில பதிவுகள் உண்டு.

காலம்: கி.பி.1831.

இடம் : மாத்தளை மாவட்டத்தில் இனாமலுவக் கோரளை.

கால மாற்றத்தில் இலங்கை அந்நியர் கைவசம் மாறி மாறி இறுதியில் ஆங்கிலேயர் வசமானது. 1831ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ராணுவத்திலிருந்து மேஜர் ஜொனாதன் போர்ப்ஸ் பொலன்னுறுவைக்குச் சென்று திரும்பும்போது, மாத்தளை மாவட்டத்தில் இனாமலுவக் கோரளையில் புதர் சூழ்ந்த அந்தச் சிகரம் அவர் பார்வையில் படுகிறது. 500 அடி உயரமுடைய குன்று வனத்தால் சூழப்பட்டிருந்தது. அதன் உச்சியில் தெரிந்த கோட்டை பார்வையில் பட்டது. வியப்புற்றார். ஆம், எரிமலைக் குழம்பு, பௌத்த பிக்குகளின் வசிப்பிடம், காசியப்ப மன்னனின் அரண்மனை, பௌத்த மடாலயம் என்று அதே சிம்மகிரி சிகரம்தான். ஆர்வமிகுதியில் சிரமப்பட்டு குன்றின்மீது ஏறிப் பார்வையிட்டவர், அதன்பின் சிம்மகிரி பழங்கால மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கைவசமானது. 1890இல் மிகச் சிறிய அளவில்தான் தொல்லியல் பணிகள் தொடங்கப்பட்டன. இங்கு விரிவான ஆராய்ச்சி தொடங்கிய முதல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பெல். வனங்களுக்குள் மறைந்துகிடந்த அந்த வைரத்தை அடுத்தடுத்த ஆய்வாளர்கள் பட்டை தீட்டினார்கள். உலகின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. 1982 உலக அருஞ்செல்வமாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது. வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அந்த அதிசயத்தைப் பார்க்கக் குவிந்தனர்.
பொன்னியின் செல்வன் நாவலில் ராஜராஜா சோழனின் வருகை இங்குதான் ஆரம்பமாகும். ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் இளவரசரைச் சந்திக்க தம்பள்ளை வரும்போது சிகிரியாவில் இருந்து ராஜராஜ சோழன் சீன யாத்திரிகர்களை யானையில் ஏற்றிக்கொண்டு யானைப்பாகனாக, முதத்தை மூடிக்கொண்டு வருவார். சீன யாத்திரிகர்கள் முதல்நாள் தம்புள்ள வந்துவிட்டு, சிம்மகிரி போனதாகக் கூறிய ஆழ்வார்க்கடியான், “சிம்மகிரி இங்கிருந்து காத தூரத்தில் இருக்கிறது. இன்னும் சிங்களவர் வசத்தில் இருக்கிறது. பகல் வேளையாயிருந்தால் இங்கிருந்தே பார்க்கலாம். சிம்மகிரி குன்றின் உச்சியில் ஒரு பலமான கோட்டை இருக்கிறது. அங்கேயுள்ள ஒரு குகையில் அற்புதமான அழியா வர்ணச் சித்திரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் அவர்கள் அங்கே போயிருக்க வேண்டும்” என்று சீன யாத்திரிகர்களின் வருகைக்கான காரணத்தைச் சொல்வார் ஆழ்வார்க்கடியன்.


தற்போது சிகிரியா என்றழைக்கப்படும் அன்றைய சிம்மகிரியின் நுழைவாயில் சிங்கத்தின் உருவத்தை ஒத்திருக்கிறது. சிங்கம் ஒன்று தனது முன்னங்காலை ஊன்றி அமர்ந்திருப்பது போன்ற பிரம்மாண்டமான புறத்தோற்றம் நம்மை மயிர்க்கூச்செறியச் செய்கிறது. பிரதான நுழைவாயிலில் மூன்று விரல்களைக்கொண்ட சிங்கத்தின் பாதங்கள் காணப்படுகின்றன. அங்கிருந்து மேலே செல்லும் படிகள் அகன்றும் குறுகியும் மாறி மாறிச் செல்கின்றன. கால்களுக்கு மேலே ஒரு சிங்கத்தின் தலை மற்றும் நுழைவாயிலைச் சுற்றி பாதங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், தலை பல ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து விழுந்திருக்கிறது. சிங்கத்தின் வடிவத்தில் நுழைவாயில் இருக்கும் அந்த அமைப்பினால்தான் இந்த இடத்திற்கு சிங்ககிரி அல்லது சிங்கப்பாறை என்ற காரணப்பெயர் உருவாயிருக்க வேண்டும்.

சுற்றிலும் மரங்கள் அடர்ந்த காடுகள். நுழைவாயிலிலிருந்து இருபுறமும் நெருக்கமான மரங்கள். அருகே விட்டுவிட்டு செவ்வக வடிவிலான நீர்த்தேக்கங்கள். சிங்கத்தின் பாதங்கள் இரண்டின் நடுவே மேலே ஏறிச் செல்லும் படிகள். அந்தக் குன்றின் மேல்தான் உலகப் புகழ்பெற்ற சிகிரியா ஓவியங்கள் உள்ளன. அதன் உச்சியில் அரசனின் அரண்மனை, குளங்கள், காவல் அரண்கள் இருக்கின்றன. குன்றின் கீழ்ப்பகுதியில் சுற்றிவர கற்பூங்கா, நீர்ப்பூங்கா, பட்டிவரிசைப் பூங்கா என ஒட்டுமொத்தமாக 4 படி வரிசைகளைக் கொண்டுள்ளது. இயற்கையான குன்றுகளே ஆசனங்களாகவும் அரசவை மண்டபங்களாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கற்பாறைகளே வில்லாக வளைந்து வாயில்களாக அமைந்திருக்கின்றன. நீர்ப்பூங்காவிற்குள் குளங்கள், அகழிகள், நீர்தூவிகள் என அற்புதத்தை அள்ளித் தெளித்திருக்கின்றனர், அதை உருவாக்கிய கலைஞர்கள். உள்ளே அஜந்தா ஓவியங்களுக்கு ஒப்பான சிகிரியா குகை ஓவியங்கள் நாம் படியேறும் களைப்பை மறக்கடிக்கச் செய்கின்றன. 500 ஓவியங்களில் தற்போது 22 ஓவியங்களே பாதுகாக்கப்பட்டுள்ளன. கரடுமுரடான மேற்பரப்பைக் கொண்ட கற்பாறை மீது சாந்துபூசி, சாந்து உலருமுன் வரையப்படும் பிரெஸ்கோ புவனோ என்ற தொழில்நுட்ப முறையில் வரையப்பட்டிருப்பதாகவும், அவை இந்திய அஜந்தா ஓவியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தது எனவும் அறிஞர்கள் கூறுகிறார்கள். பதவி மோகம் கொண்ட ஒரு கலாரசிகனால் உருவான அழகிய கோட்டை பார்க்கப் பார்க்க வியப்பை ஏற்படுத்துகிறது.

வரலாறுகள் எப்போதும் நம்மை வசியப்படுத்துபவைதான். அந்த வரலாறு உயிர்பெற்று நம் கண்முன் பிரம்மாண்டமாக நிற்கும்போது உலக மக்களை ஈர்ப்பதில் வியப்பென்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.