காலம் : பதினாறாம் நூற்றாண்டு

சீருடை அணிந்திருந்த அந்தச் சிப்பாய்கள் தங்கள் பணியிடமான காவல் அரணிலிருந்து வெளியேவந்து சோம்பல் முறித்தனர். தங்களுக்குள் பகடி பேசிச் சிரித்துக்கொண்டனர். எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிவிடுவதற்கு வரும் பதிலிக் காவலர்கள் வந்துவிட்டனர். சதுர வடிவத்தில் இருக்கும் அந்தக் கோட்டையின் நான்கு மூலைகளிலும் அமைந்திருந்த அந்தக் காவல் அரண்கள், ஒருவர் மட்டுமே நிற்கக்கூடிய அளவில் வட்டவடிவில் இருந்தன. அதற்குள் நின்று சுற்றிப் பரந்துவிரிந்து கிடக்கும் கடலை நோட்டமிட்டுக்கொண்டிருப்பதே அவர்களது பணி. எப்போதும் பார்க்கும் சோம்பலான வேலைதான். கோட்டைக்குள்ளிருந்த கத்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கும் ஓசை கேட்டது. அண்டை தேசமான பாரதத்திலிருந்து வந்திருந்த கட்டுமானிகள் ஆங்காங்கே சுவர்களில் பழுது பார்த்துக்கொண்டிருந்தனர். போர்த்துக்கீசிய தளபதிகள் நடமாட்டம் ஏனோ இன்று கோட்டைக்குள் அதிகமிருந்தது. கோட்டையின் முன்புறமிருந்த மிகப்பெரிய நுழைவாயிலிலிருந்து கோட்டைக்குள் சாய்தளமாகச் சென்ற பாதையின் வழியாகப் படைவீரர்கள் பீரங்கிகளை மேலே ஏற்றிக்கொண்டிருந்தனர்.

சக தோழர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டே தன் பணியிடத்திற்குள் நுழைந்து, கிழக்கு திசையில் பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிப்பாய்க்குத் திடீரென ஏதோ பொறி தட்டியது. தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த ஒரு கப்பலின் அளவு பெரிதாகிக்கொண்டேவர வித்தியாசமாகத் தெரிகிறது. அது பயணிகள் வரும் கப்பல் அல்ல, கட்டாயம் அது போர்க்கப்பலாகத்தான் இருக்க வேண்டும். மேலை தேசத்து கொடியின் அடையாளம் தெரிந்தது. கூர்ந்து கவனித்தார். இது ஒல்லாந்தர் தேசத்து கொடி அல்லவா… போர்த்துக்கீசியர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்வது தானே இவர்களது வேலை? கூக்குரலுடன் சைகை காட்ட, நான்கு புறமிருந்தும் காவலாளிகள் ஓடி வந்தனர். போர்க்கப்பலை உறுதி செய்தனர். அருகிலிருந்த மணிகோபுரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பெரிய மணியை பலங்கொண்டமட்டும் அடித்தனர். அடுத்த நொடி அந்தக் கோட்டை பரபரப்பானது. படைத் தளபதிகளுக்குச் செய்தி சென்றது. சிப்பாய்களும் உயர் அதிகாரிகளும் கூடினார்கள். பீரங்கியை இயக்குபவர்கள் தயாரானார்கள். கோட்டையின் உயர்ந்த சுவர்களில் ‘ப’ வடிவத்தில் ஆன வெட்டுகளில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. சுற்றிலுமுள்ள தண்ணீரும் நெருக்கமான பீரங்கிகளும் உயரமான சுவர்களுமாக அந்தக் கோட்டையின் பிரம்மாண்டம் வெளியிலிருந்து பார்க்கும் எதிரிகளுக்குப் பயத்தைக் கொடுப்பதாக இருந்தது. சில மணிநேரத்தில் அந்த இடம் யுத்தகளமானது. பீரங்கியிலிருந்து குண்டுகள் சீறிப்பாய்ந்தனர். சத்தம் வானைப் பிளந்தது. “ஐயோ” என்று அலறிக்கொண்டே காதை இறுக மூடிக்கொள்கிறேன். “ம்மா…ம்மா…என்ன ஆச்சு?” அருகிலிருந்த மகள் பூஷிதா உலுக்கினாள். திடுக்கிட்டு நிகழ்காலத்திற்குத் திரும்பினேன்.

கடல்காற்று பரபரவென சுழற்றியடித்து நிற்க விடாமல் தள்ளியது. காலை அழுத்தி ஊன்றிக்கொண்டு சமாளித்து நின்றோம். விஜயனுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்து நீண்டதொரு தமிழ் மரபினைக்கொண்ட மன்னார் மாவட்டம், வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளிலெல்லாம் தன்னை இருத்திக்கொண்டே வந்திருக்கிறது. அப்படிப்பட்ட மன்னார் மண்ணின் அடையாளங்களில் மிக முக்கியமானதான செயின்ட் ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் மன்னார் கோட்டையைப் பார்ப்பதற்காகத்தான் அந்த மாலை வேளையில் வந்திருந்தோம். கோட்டையின் அமைப்பையும் செயல்பட்ட விதத்தையும் விவரித்துக்கொண்டிருந்த நண்பர் அன்டனி மடுத்தீனின் வார்த்தைகளில் மூழ்கி முழு சந்திரமுகியாகவே மாறி, போர்த்துக்கீசியர் காலத்திற்கே சென்றுவிட்டேன் போலும்.

காலப்பயணத்தில் தன் உடலை உதிர்த்து எலும்புக்கூடுகளாகக் காட்சியளிக்கும் அந்த கோட்டையைச் சுற்றிப் பார்த்தோம். மன்னார்த்தீவையொட்டி, பாக் ஜலசந்திக்குள் (பாக் நீரிணைக்குள்) நீண்டு அமைந்துள்ள இக்கோட்டை, தீவின் தென்கிழக்கு முனையை அண்டித் தலைநிலத்தைப் பார்த்தபடி அமைந்துள்ளது. 1560இல் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தின் மன்னார்தீவைக் கைப்பற்றியதன் வாயிலாக இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்த போர்த்துக்கீசியர் தங்களது பாதுகாப்பிற்காக மன்னார் தீவையொட்டி மிகப்பெரிய கோட்டையை உருவாக்கினர். இக்கோட்டை குறித்து ஒருசில கல்வெட்டுகள், குறிப்புகள் தவிர பெரிதாக வரலாற்று ஆவணங்கள் இல்லை. சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் யூகங்களாகவும் நம்பிக்கைகளாகவும் வாய்வழிக்கதைகளாகவுமே இருக்கின்றன.

போர்த்துக்கீசிய ராணுவத் தளபதி வைஸ்ராய் கான்ஸ்டன்டைன் டி பிரகன்ஸா (Viceroy D Constatine de brangaza) தலைமையில், காத்தரின் மேஜர் டான் ஜோர்ட் சொய்ஸா (Cattarin Majar Don Geord Soysa) மேற்பார்வையின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக, குவைறோஸ் பாதிரியார் (Queyros) எழுதிவைத்துள்ள குறிப்பைச் சுட்டிக்காட்டுகின்றனர். “When the Portuguese arrived in the 16th century Manthai was a ruined city. The temple at Thirukeswaram at Manthaai was already in ruins. The fort of Mannar was erected in 1560 under the supervision of Viceroy D Constantine de brangaza out of the stone of the “Thirukeswaram temple”. (பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் அழிந்து போயிருந்த மாந்தை நகருக்குள் வந்து இறங்கினர். அப்போது திருகேதீஸ்வரம் கோயில் அழிவு நிலையில் இருந்தது. அந்தக் கோயிலிலிருந்து எடுக்கப்பட்ட கற்களைக்கொண்டு1560இல் வைஸ்ராய் கான்ஸ்டன்டைன் டி பிரகன்ஸா மேற்பார்வையின் கீழ் இந்தக் கோட்டை கட்டப்பட்டது) என்கிறது அந்தக் குறிப்பு.

1560 லிருந்து இன்றுவரை பல அழிவுகள், சிதைவுகளைக் கடந்து, ஆட்சி மாற்றத்துக்கேற்ப தானும் மாற்றம்பெற்று ஒரு கட்டத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயோதிகத்தாயாக இந்த வரலாற்றுச் சின்னம் காட்சியளிக்கிறது. கோட்டையின் உச்சியிலிருந்து பார்த்தால் சுற்றிச் சுற்றி கண்ணுக்கெட்டும் தூரம் வரை கடலும், அகழிகளுமாக நீர்… நீர்… நீர்தான். ஒரு புறம் மட்டும் கோட்டைக்கு நடந்து செல்வதற்கான எட்டு அடி அகலப் பாதை காணப்படுகிறது. அதுதான் மன்னார்த்தீவை அந்தக் கோட்டையுடன் இணைக்கிறது. அந்த நடைபாதையைத் தவிர்த்துவிட்டால் கோட்டையே தீவு போலத்தான் இருக்கிறது.

ஆங்காங்கே சில பிரெஞ்சு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தரையோடு தரையாக ஒரு கட்டில் அளவிற்கான பெரிய கல்லில், புரியாத மொழியில் இருக்கின்றன சில குறியீடுகளும் குறிப்புகளும். மிஞ்சியுள்ள ஞாபகார்த்த கல்வெட்டுகள் ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன. THE MEMORIAL OF THE WIFE OF JOAD DE MELVO SAMPAYAO , CAPTAIN OF MANNAR 1584 – 7 FOUND IN THE RESIDENCY GROUNDS,WAS SET UP HERE 1904 என்ற கல்வெட்டு மட்டுமே வாசிக்க முடிகிறதாக இருக்கிறது.

சதுர வடிவத்தில் இருக்கும் கோட்டையின் நான்கு புறங்களிலும் கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 அடி உயரம், இரண்டரை அடி அகலமுள்ள சுவர்கள் சுண்ணாம்புக்கற்களால் கட்டப்பட்டுள்ளன. முருகைக் கற்களும் செங்கல்லும் தங்கள் காலத்தைப் பறைசாற்றி வெளியே தலைநீட்டிக்கொண்டிருக்கின்றன. நீர் சேமித்து வைப்பதற்கான சேமிப்புக்கிடங்குகள் காணப்படுகின்றன. எதிரிகளின் வருகையை அறிவிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மணி கோபுரத்தில் நான்கு உயரமான தூண்கள் மட்டுமே மிச்சமாக நிற்கின்றன. கோட்டைக்குள்ளே போர்த்துக்கீசியரின் வழிபாட்டிற்காக கட்டப்பட்டிருந்த கத்தோலிக்க தேவாலயம் பின்னர் ஒல்லாந்தரால் கல்வினிஸ்ட் கிறிஸ்தவ தலமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆலயப்பகுதி என்பதற்கு அடையாளமாக பலிபீடமும் பிரார்த்தனைக்கூடமும் மௌனசாட்சிகளாக இருக்கின்றன. ஆலயப் பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்டு, இப்போது வெளியில் வைத்திருக்கும் கற்பலகையில் அழகிய சிற்பம் ஒன்றும் அதன்கீழ் மதகுருமார்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு ஆலயத்தின் விழுமியங்களை வெளிப்படுத்துகிறது. கோட்டையெங்கும் அலுவலகங்கள், அலுவலர்களுக்கான தங்குமிடங்கள் என நிறைய அறைகள் காணப்படுகின்றன. அங்கு காணப்படும் இரண்டு கிணறுகள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பரந்திருக்கும் அகழிகளில் நீர் நிறைந்து காணப்படுகிறது மன்னார்க்கோட்டைக்கும் அல்லிராணிக்கோட்டைக்கும் நிலக்கீழ்சுரங்கம் இருப்பதாகவும் தற்போது கொடிய விஷ ஜந்துகள் இருப்பதாகவும் செய்தியுண்டு. அறைவட்ட வடிவில் இரண்டு துவாரங்கள் அடைக்கப்பட்டிருக்கும் அடையாளங்கள் காணப்படுவதால், அவை ஒருவேளை சுரங்கப்பாதையாக இருந்திருக்கலாம்.

1658 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியரிடமிருந்து ஒல்லாந்தர் மன்னார்த்தீவைக் கைப்பற்றுகின்றனர். அதே ஆண்டில் கோட்டை ஒல்லாந்தரின் ஆட்சி நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டதும் மேற்கு மற்றும் வடக்கு திசைகளில் அகழிகளை அமைத்து கோட்டையை மேலும் பலப்படுத்தி, பாதுகாப்பினை உறுதிசெய்கின்றனர். ஒல்லாந்தர்களின் ராணுவ கேந்திர மையமாகக் கோட்டை மாற்றம் பெற்றது. 138 வருடங்கள் நீண்ட நெடிய காலம் டச்சுக்கோட்டையாகக் கம்பீரமாக கோலோச்சியிருக்கிறது. 1796இல் பிரித்தானியம் ஆட்சியைக் கைப்பற்ற கோட்டை ஆங்கிலேயர் வசமாகி, தன் கடமையைத் தொடர்ந்தது. 1948இல் ஆங்கிலேயர் நாட்டைவிட்டுச் சென்றபின், இலங்கை ராணுவம் 30 ஆண்டுகள் கோட்டையைத் தன்வசம் வைத்திருந்தது.

கோட்டையில் காணப்படும் விரிசல்கள் அதன் வயதையும் வரலாற்றையும் சொல்கின்றன. இந்தக் கோட்டைக்குத் தேவையான கருங்கற்கள், மாந்தை துறைமுக நகரின் மத்தியில் அழிவடைந்த நிலையில் இருந்த திருக்கேதீஸ்வரத்தின் பிரம்மாண்டமான கோயிலில் இருந்து கொண்டுவரப்பட, இந்தியாவின் கர்நாடகப் பகுதியில் இருந்து கட்டுமானிகள் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். பள்ளிமுனைப் பகுதியில் அவர்களுக்கான குடியிருப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களது வாரிசுகளே இன்றைய பள்ளிமுனையில் வசிக்கும் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஒவ்வோர் ஆட்சியாளர் கீழும் ஓயாமல் உழைத்துத் தேய்ந்து, தன்னை உருமாற்றிக்கொண்டு, சிதிலமடைந்து, காலத்தின் கோலங்களைத் தன் உடலில் தாங்கித் தனித்து நிற்கிறது கோட்டை. கோட்டையைச் சுற்றி வரும்போது முருகைக்கற்கள், சுண்ணாம்புக்கற்கள், அகழிகள், மணிக்கோபுரம், காவலர் அரண், சுரங்கம், நீர்த்தேக்கம் எனக் காலச்சக்கரம் நம்மை உள்வாங்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்வதைத் தடுக்க முடியவில்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.