திருமணமே வேண்டாம் என்கின்ற மில்லினியல்கள் காலத்தில் கணவன் – மனைவி உறவைப் பற்றி எழுதிக்கொண்டிருக்க என்ன காரணம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். கணவன் – மனைவி உறவு பற்றியல்ல, பொதுவாக உறவு பற்றி எழுதுகிறேன் என்றே எண்ணுகிறேன். அதோடு, பாரம்பரிய திருமணம், பாரம்பரிய உறவுகள் இவற்றைக் கட்டிக்காப்பாற்ற உருவாக்கப்பட்ட திருமணம், குடும்பம் இவற்றில் எனக்கு அக்கறையுமில்லை.

திருமணம் என்கின்ற நூற்றாண்டுகள் பழமையான நிறுவனத்தை மாற்றியமைக்கலாம் என்கின்ற தீவிர எண்ணமெல்லாம் எனக்கு இருக்கவே முடியாது. திருமணம் எனப்படும் இத்துப்போன நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு நமக்கு ஏற்றாற்போல வாழலாம். ஒரு சமையல் குறிப்பிற்கு எப்படிப் படிமுறைகள் இருக்குமோ, ஓர் இசையை அழகுணர்ச்சியோடு கோப்பதில் எவ்வளவு ஈடுபாடும் கலையுணர்ச்சியும் அவசியமோ, ஒரு கவிதைக்கு அழகான சொற்கள் எவ்வளவு வலுசேர்க்குமோ அப்படித்தான் வாழ்க்கைக்கும் சில ஒழுங்குகள் கண்டிப்பாகத் தேவை. அந்த ஒழுங்கு திருமணமாகத்தான் இருக்கமுடியும், திருமணமாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்கின்ற தீவிர பற்றுதல் சிக்கலானது.

பாரம்பரியத் திருமணம் பல தலைமுறைகளாகவே கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, அதனை யாரும் கஷ்டப்பட்டு காப்பாற்றவோ கீழே தள்ளிவிடவோ அவசியமில்லை. ஆனால், இந்தப் பூவுலகில் எப்போதும் வீழ்ச்சி காணாத, வீழ்த்தவே முடியாத ஒன்று உண்டெனில் அது காதல்; காதல் மட்டுமே! காதல் மீதான நம்பிக்கை காதலோடு வாழ்வதன் நுணுக்கங்களைக் கண்டறியத் தூண்டுகின்றது. காதலில் ஒருமுறை வீழ்வது, ஒருவரில் வீழ்வது என்பது போன்ற ஒழுங்குகளிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், ஒருமுறை வீழ்த்திய காதலே திரும்பத் திரும்ப வீழ்த்தும்போது உண்டாகும் அதியற்புத உணர்வு மயக்கத்தில் தெளிவைக் கண்டடைதல் கலை இன்பம். காதலெனும் விசித்திரக் கடலில் சலிப்பின்றி நீந்தும் மீனாகிவிட்டால் வாழ்வுக்கு வேறு அர்த்தங்கள் கிடைப்பதில் சந்தேகமே வேண்டாம். பார்வைகள் மாறும். பால்நிலைப் புரிதல்களில் முன்னேறமுடியும். பெண் மதிப்புக்கூடும். பால் புதுமையினரை அணைத்துக்கொள்ளும். பணம் என்கின்ற கருவி நம்மைக் கையாள அனுமதிக்காமல் நாம் அதனைக் கையாள்வதில் தேர்ந்தவர்களாக முடியும்.

வாழ்வின் எல்லாத் தத்துவங்களுக்கும் சில நுணுக்கங்கள் உண்டு. நாம் யாரும் யாரைப்போலவும் வாழ வேண்டாம். நமக்காக வாழ்வது, நமக்குப் பொருத்தமான பொறிமுறையை ஏற்படுத்திக்கொள்வது, நமக்கான உறவைத் தீர்மானிப்பது, நமக்கான குடும்பத்தை அமைப்பது என்று அனைத்திலும் நிர்ப்பந்தம் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் காதல் சேரும்போது எல்லாமே அழகாக மாறிவிடும்!

வழக்கமான திருமணத்தில் தோல்வியடைந்தபோது அதனை வாழ்வின் முழுத் தோல்வியாக நான் கருதியதில்லை. அதனை எனது குறைபாடாகவும் எண்ணியதில்லை. சமூகமும் குடும்பமும் அப்படி எண்ணிக்கொண்டிருந்தாலும் என்னைப் போல சுதந்திரமான பெண்ணுக்கு வழக்கமான திருமண அமைப்பில் கௌரவமான இடமில்லை என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பாக மட்டுமே தோல்வியைப் பார்த்தேன். திருமணம், சமூகம் வரையறுக்கும் குடும்பம், ஆணுடன் உறவு போன்ற எல்லாமே என் வாழ்தலுக்கான தேவையினிடத்திலிருந்து முற்றாக விலகித் தூரமாகிவிட்டிருந்த ஒரு தருணத்தில் ஆணாதிக்கத்தின் அத்தனை அதிகாரங்களும் கோலோச்சவென்றே கன கச்சிதமாக நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள திருமணமும் அதனோடு ஒட்டிப் பிறந்த குடும்ப அமைப்பையும் அசைக்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உள்ளதென்று உணரத் தொடங்கி – நம்பத் தொடங்கிவிட்டிருந்தேன். இந்த இடத்தில் காதலிலும் எல்லாக் காதலும் ஒன்றில்லை, கனவுகளை மதிக்கின்ற, இலக்குகளை நோக்கிப் பயணிக்கத் துணை வரக்கூடிய, நாம் விரும்பியபடி குடும்பத்தைத் தேர்வு செய்கின்ற வகைக் காதலே தனித்துவம் நிரம்பியது என்ற தெளிவுண்டானது. இந்த வகை காதல் நம்பிக்கையை விதைநிலமாகக் கொண்ட பசுநிலம்.

அன்றாடம் பயணிக்கும் பாலம் உறுதியாக நன்றாகக் கட்டப்பட்டது, கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆழமான ஆற்றில் வீழ்ந்திடாது என்ற நம்பிக்கை அந்தப் பாலத்தில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் ஓட்டத்திலும் வெளிப்படும். நம் தோழர்கள், கூட்டாளிகள், இணையர் ஆகியோர் நேர்மையானவர்கள் என்ற மிக ஆழமான நம்பிக்கையும் உறவுப் பயணத்தைப் பாதுகாப்பாகத் தொடரச் செய்யும். இப்படியோர் உறுதியான நம்பிக்கை விதையிலிருந்து துளிர்க்கும் காதல் காட்டில் இருள் இருக்கும். இருளை விலக்கும் ஒளியும் இருக்கும். எல்லாக் கனவுகளுக்கும் இலக்குகளுக்கும் சாத்தியமிருக்கும். அழுகை, சிரிப்பு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும்.

காதலும் நம்பிக்கையும் என் வாழ்வின் தோல்வியடைந்த பல அத்தியாயங்களின் வெற்றுக் கற்பிதங்களை அழித்து எழுதச் செய்திருக்கின்றன. குடும்பம், திருமணம் பற்றி எனக்கிருந்த கற்பனைகளுக்கு உயிர் தந்திருக்கின்றன. சமூகவியலின்படி, ‘குடும்பம்’ எனப்படுவது, ரத்த உறவுகளால் வரையறுக்கப்பட்டது, தந்தை, தாய், குழந்தைகளால் ஆன ‘சமூக அலகு’ போன்ற வரைவிலக்கணங்களைத் திருத்தி எழுதும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

எனது வரைவிலக்கணப்படி, ‘குடும்பம்’ என்பது ஒரே கடைசி பெயர்களைக் கொண்டவர்களாலோ அல்லது ரத்தத்தால் மட்டுமோ வரையறுக்கப்பட்டதில்லை; ‘குடும்பம்’ என்பதன் உள்ளார்ந்த பொருள் நம்பிக்கை, அன்பு இரண்டினாலுமே வரையறுக்கப்படுகிறது. இவை ஒருவருக்கு இன்னொருவர் மிகவும் தேவைப்படும்போது உடனிருக்கச் செய்யும். ஒருவரை இன்னொருவர் விட்டுக்கொடுக்காத, கீழே இறக்கிவிடாத நெருக்கத்தைக் குறிக்கும். ஒருவரின் இழப்பை, துக்கங்களை இன்னொருவரின் தோளில் தாங்கும். ஒருவரை ஒருவர் நேசிப்பதில் போராடும். எனது இப்போதைய குடும்பம் ஒரே கடைசிப் பெயர்களையோ ஒரே குடும்பப் பெயர்களையோ கொண்டவர்களால் ஆனதில்லை. எங்கள் பிணைப்பு நாங்களே தேந்தெடுத்துக் கொண்டது, ரத்த பந்தத்தினால் அல்ல. இந்த அமைப்பு யாரையும் இணைத்துக்கொள்ளவும், விரும்பும்போது யாரும் விலகிப்போகவும் மீண்டும் இணையவும் அனுமதிக்கும். குடும்பம் என்பதன் வரையறைகளை நாங்கள் இன்னமும் கண்டடைகிறோம். இந்தப் பயணம் நீள நீள அதன் அழகும் கம்பீரமும் உறுதியும் பிரபஞ்சமளவு அகண்டதாயிருக்கும். இப்படியொரு திறந்த, தடைகளில்லாத குடும்ப உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது அள்ள அள்ளக் குறையாத தெவிட்டாத காதலும் நம்பிக்கையும்.

அள்ள அள்ளக் குறையாத தெவிட்டாத காதலும் நம்பிக்கையும் ஒரே கணத்தில் உருவாகி முடிவடைகின்ற ஒன்றில்லை. இது நீட்சியானது. முடிவற்ற பயணம். ஒரு பயணத்திற்கு எடுத்துப் போகும் வாகனத்தை முன்னாயத்தம் செய்வதைப் போல அது இடையறாது ஓடிக்கொண்டேயிருக்க எரிபொருள் நிரப்பியும் இயந்திரங்களைச் சரிபார்த்தும் கவனித்துக்கொள்வதைப் போல, அதன் சாரதி நாம் அங்கங்கு நிறுத்தித் தேநீர் அருந்தி, உணவுண்டு, ஓய்வு கண்டு நம்மைக் ஆற்றிக்கொள்வதைப் போல உறவுகளில் காதலும் நம்பிக்கையும் அள்ளக் அள்ளக் குறையாதிருக்கவும் தெவிட்டாதிருக்கவும் உழைத்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

உழைப்பை பெறுவதும் தருவதும் மொத்தத்தில் பகிர்வது, மொத்தமாகப் பகிர்வது என்றுகூட அர்த்தம் கொள்ளலாம். பரஸ்பர காதலாலும் நம்பிக்கையினாலும் இறுகப் பற்றிப் பிடித்திருக்கும் இணையர்களின் உறவில் வன்முறைகள், ஏமாற்று, துரோகங்கள், நயவஞ்சக பழிதீர்க்கும் படலங்களுக்கு இடமிருக்காது. ஆனால், சுயநல எண்ணங்கள் ஓங்கிய இன்றைய முதலாளித்துவ நவீன உலக வாழ்வில் திட்டமிடலற்ற முன்பின் தெரியாத சவால்கள் உறவைச் சாய்த்துவிடும் அபாயங்கள் அநேகம். அப்படியான சிலதை முன்னைய கட்டுரைகளில் பேசினோம்.

பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, மில்லினியல்கள் 10இல் நால்வர் சொந்தக் குடும்பத்துடன் வாழ்வதில்லை. அவர்கள் தங்களுக்கான குடும்பங்களை உருவாக்கிக்கொள்கின்றனர், பல மில்லினியல்கள் சோதனை முறைத் திருமணங்களைத் தேர்வு செய்கின்றார்கள்.

உலகம் வேகமாகப் முன்னே போய்க்கொண்டிருக்கின்றது. அதன் வேகத்திற்காக நாம் மாறவேண்டிய அவசியமில்லை. எல்லாரும் மாறுகிறார்கள் என்பதற்காகவும் மாறவேண்டியதில்லை. நமக்கிருக்கும் கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி அளவுக்குத் தனிமனித விருப்பங்களை அடைவதற்கான துணிவும் நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறோம். நமக்கு வேண்டியது என்ன என்று தெரிந்துகொண்டும் போலியாக வாழ்ந்து தன்னையே ஏமாற்றிக்கொள்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம்.

குடும்ப நிறுவனங்களை வேண்டாத ஆணி என்று சதாவும் விமர்சனம் செய்கின்ற சிலர், தன் சொந்தக் குடும்பத்தின் வழக்கமான நமத்த போக்குகளை மாற்ற ஒரு துரும்பைக்கூட அசைத்திருக்க மாட்டார்கள். சமூகம் உருவாக்கிய அதே வழியில் திருமணம் செய்து கொண்டு அதே வழக்கமான குடும்ப அமைப்பிற்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு, இணையரிடம் சொல்ல வேண்டிய கண்டனங்கள், கோபங்கள், ஏமாற்றங்களை எல்லாம் நகைச்சுவையாக முகநூல் சுவரில் எழுதித் தொங்கவிடும் முற்போக்கு வேடதாரிகள் பெருகிக்கொண்டிருக்கும் காலமாகவும் இது இருக்கிறது. இவர்கள் யாருடன் உரையாடலைச் செய்யவேண்டுமோ அவர்களைத் தவிர்த்துவிட்டு, தங்கள் இயலாமைக்கான வடிகாலாக எதையோ எழுதிவிட்டுக் கடந்துவிடுகிறார்கள்.

மனிதர்களின் மிகப்பெரிய பலவீனம், தனக்கு இது ஏற்புடையதில்லை என்று தெரிந்தாலும் ஏதோவொரு காரணத்திற்காகப் போலியாக இணங்கியிருப்பது, நியாயங்களைக் கற்பித்துக்கொண்டு தன்னை மீட்காதிருப்பது. தங்கள் மீதே நம்பிக்கையற்ற பலவீனர்கள் எந்தவொரு மாற்றத்தையும் நம்பமாட்டார்கள். இன்றுள்ள நிலையிலிருந்து தங்கள் வாழ்வை எந்த வகையிலும் மாற்றியமைக்க இவர்களால் முடியாது.

ரத்தம், சதை, நாடி, நரம்புகள் எங்கினும் வியாபித்து வேர் ஊன்றிப் பிடித்திருக்கும் குடும்ப, கலாசார, மத நம்பிக்கைகள், பால்நிலை வேறுபடுத்தல்கள், பண்பாட்டு வேர்கள் யாரையும் அத்தனை எளிதில் விடுவிப்பதில்லை. மனிதர்களும் இவற்றை அத்தனை எளிதில் விடுவதுமில்லை. பிடிக்காத வேலையை விட்டுவிடவும் வெறுப்பான உறவிலிருந்து வெளியே வரவும் விரும்பியதைச் செய்யவும் விரும்பிய இடம் போகவும் விரும்பிய வாழ்வை வாழவும் பாதுகாப்பான உறவை, தனக்கான குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்வதையும் தொடங்குவதற்கான முதல்படி நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் வேர்களை உடைத்தெறிவது. நம்மை விடுவிக்கக்கூடியவர்கள் நாம், நாம் மட்டும்தான்.

Nothing is absolute. Everything changes, everything moves, everything revolves, everything flies and goes away.

– Frida Kahlo

இன்னும் பேசுவோம்…

படைப்பாளர்:

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். தற்சமயம், அமெரிக்கப் பல்கலைக்கழகம் University of Nebraska Omaha வில் மனித உரிமைகளுக்கான ஆராய்ச்சி அறிஞராகப் பணிபுரிகிறார்.