“எங்கப்பா எவ்வளவோ சொன்னார், விடலை. எங்கண்ணன் பேசாமயே இருந்து பார்த்தான். அப்பவும் குடியைவிட முடியல. ஆனா, சிபி செல்லமா சொல்லிச் சொல்லியே என்னைத் திருத்திட்டான்!

“இன்னிக்கு அவனுக்குப் பொறந்தநாள். வெளியே போலாமான்னு கேட்டேன். வேண்டாம், எப்பவும் மீட்டிங், கான்ஃபரன்ஸ்னு ஊர் சுத்திட்டே இருக்கே, இன்னிக்கு என் கூட வீட்ல இருந்துருன்னு சொன்னான். அதனாலதான் உங்களுக்கு அவன் அனுமதியோட இந்த பார்ட்டி. இதுக்கப்புறம் ஒரு மாசம் குடிக்க மாட்டேன். மூணே ரவுண்ட்தான்… ஓகே? அதுக்கு மேல போனா சிபி திட்டுவான். “

“சரியான புருஷதாசிடி நீ!” என்று கிண்டலடித்தாள் மீனா.

“அப்டி ஏன் சொல்லணும்? I treat him as my equal and respect him. ” சீரியஸானாள் ஆதி.

“ஓகே… ஓகே… சும்மாதான் சொன்னேன். உன்கிட்ட gender equality பாடம் கேட்க வரலை. சீக்கிரம் சிபியைச் சிக்கன் எடுத்துட்டு வரச்சொல்லு. சியர்ஸ்!”

கண்ணாடி டம்ளர்கள் சிணுங்கின.

மொட்டை மாடி நிலாவும் தென்றலும் நண்பர்களின் கொண்டாட்டத்துக்கு உகந்ததாக அமைந்திருந்தது.

வெடித்துக் கிளம்பிய சிரிப்புக்கிடையில் ட்ரே நிறைய தின்பண்டங்களும் தனது ஸ்பெஷல் சிக்கன் கறியும் முக்கியமாக முகம் பூத்த புன்முறுவலுமாக வந்தான் சிபி. முதுகுப்புறம் டிஷர்ட் குப்பென்று வியர்த்திருந்தது; மாற்றிக்கொள்ள மறந்துவிட்டான். ஆதி பார்த்தால் திட்டுவாளே என்ற எண்ணவோட்டத்தை ‘ஹாப்பி பர்த்டே’ கூக்குரல்கள் இடைமறித்தன.

“ஹேய்! அண்ணா, ஹாப்பி பர்த்டே!”

“இருக்க இருக்க அழகாகிட்டே போறீங்கண்ணா…” என்று கண்ணடித்தாள் சஃபி, ஆதியின் புது அசிஸ்டெண்ட்.

எல்லாரிடமும் கலகலப்பாகச் சில நொடிகள் பேசி விசாரித்துவிட்டு,

வந்திருந்த பத்துப் பேரில் யார் யாருக்கு ஆஃப்பாயில் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு சென்றான் சிபி. தன் பிறந்தநாளன்று வெளியில் சுற்றாமல் ஆதி வீட்டில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“உன் ஹஸ்பெண்ட் மாதிரி பாசிட்டிவ் பெர்சனை நான் பார்த்ததே இல்ல. Always cheerful.” பிரமிப்புடன் சொன்னாள் ராணி.

“Yes I’m really lucky” என்று நாத்தழுதழுத்த ஆதி, நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை சிபிக்காகவே சிந்திக்கத் தொடங்கினாள்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.