“ஹேய் மச்சி, எப்போ ட்ரீட்டு? டீம் லீட் ஆயிட்ட போல!” என்று சிபியின் தோளைத் தட்டினான் ரவி.

“ஹேய், ஆமாம்டா. Long awaited with a good hike. ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“ஹும். இதுக்கெல்லாம் நீ மீனா மேடம்க்குதான் தாங்க்ஸ் சொல்லணும், இல்ல?” அமுத்தலாகச் சிரித்தாள் லீனா.

“அஃப் கோர்ஸ்! அவங்க எனக்கு எல்லா விதத்துலயும் பெரிய சப்போர்ட்டா இருந்திருக்காங்க. Very grateful to my manager Meena!” என்று மகிழ்ச்சி மிகுதியில் உணர்ச்சி வசப்பட்டான் சிபி.

“ஆமாமாம், எவ்ளோ சப்போர்ட்! நீயும் அவங்களுக்கு எவ்ளோ ஒத்துழைச்சிருக்கேன்னு எங்களுக்குத் தெரியாதா?” என்று லீனாவும் ரவியும் நமுட்டுச் சிரிப்புடன் சிபியின் கையைக் குலுக்கிவிட்டு நகர்ந்தார்கள்.

காண்டீனில் அவர்கள் அரட்டை தொடர்ந்தது. இன்னும் சிலரும் சேர்ந்திருந்தனர். டாபிக்கே சிபியின் பிரமோஷன்தான்!

“ஹேய்! பார்த்தியா, நேத்து வந்த பையன் அவனுக்கு பிரமோஷன் குடுத்துருக்கா மீனா.” ரவிதான் தொடங்கினான்.

“ஆமாம் அவன் எவ்ளோ சின்சியர் தெரியுமா? Skillsetலயும் அவனை அடிச்சிக்க ஆளில்லை.” – இது ரூபா.

“என்னம்மா ரூபா! நீயும் அவன் வலையில, விழுந்துட்டியா? ஹா… ஹா… அவன் லேட் நைட் வேலை பண்றது எதுக்குன்னு நிஜமாவே உனக்குத் தெரியாதா? கொய்ந்தம்மா நீ!” என்று பொறாமையில் சீண்டினான் ரவி.

எல்லாரும் சிரித்ததும் அங்கு பேச்சு ரூட் மாறியது.

சிபியின் வேலை சுறுசுறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த ராஜுவுக்கு அதுவரை சிபிக்கு பிரமோஷன் கிடைத்தது குறித்து எந்தப் பொருமலும் இருக்கவில்லை. சிபியின் இனிய பண்பினாலும் உதவும் மனப்பான்மையாலும் பணியிடத்தில் நல்லவிதமாகவே அறியப்பட்டிருந்தான். ஆனால், இப்போது இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜுவுக்குச் சுருக்கென்றது.

“என்ன சொல்றீங்க? நான் அவனை நல்லவன்னு நினைச்சிருக்கேன்!”

“ஹய்யோ! நீயுமா வெகுளியா இருக்கே? அவங்க ரெண்டு பேருக்கும் அஃபேர்னே தெரியாதா?”

“வாட்?”

பேச்சு தொடர்ந்தது.

***

“ஸ்வீட் எடுத்துக்கோ ஆதி! ” என்று காதலுடன் ஸ்வீட் பாக்ஸை நீட்டினான் சிபி. சோர்ந்திருந்தாலும் ஆதியைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

கடந்த சில ஆண்டுகளாக எழுதிய எந்தப் புத்தகமும் சரிவரப் போகவில்லை. கதை, வசனம் எழுதிய திரைப்படங்களும் பெரிதாக ஓடாததால் தீவிர மன அழுத்தத்தில் இருந்தாள் ஆதி.

பாரில் ஒரு சண்டையில் சக குடிகாரி ஒருத்தியின் மண்டையை உடைத்துவிட்டதால் ஆறு மாதங்கள் ஜெயிலில் இருக்கிறாள்.

“எதுக்கு இது? நான் இங்கே கிடந்து சாகுறேன். உனக்கென்ன ஜாலியா இருக்கே” என்று கசப்பை உமிழ்ந்தாள் ஆதி.

“ஐயோ, அப்டி இல்ல ஆதி, எனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு. இனிமே நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்!”

ஏற்கெனவே பொருமிக்கொண்டிருந்த ஆதியின் உள்ளம் பற்றி எரிந்தது.

மனைவி ஜெயிலுக்குப் போனதும் சிபி குடும்பத்தைக் காக்க ஓயாமல் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஜெயிலுக்கு வந்து ஆதியைப் பார்த்த அவளது அப்பாவும் தம்பியும் சிபியைப் பற்றித் தவறாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆதியின் மனம் குழம்பி இருந்தது.

“சீ! எவ கூடப் படுத்து இந்த பிரமோஷனை வாங்குனே?” என்று ஸ்வீட் பாக்ஸைத் தட்டிவிட்டாள் ஆதி.

சிபி மௌனமாகக் கீழே விழுந்த பாக்ஸை எடுத்தான். கண்களில் கோபக் கண்ணீர்.

“நான் நீர்ல கரைவேன்!

நெருப்புல உருகுவேன்!

ஆனா, தப்பான வார்த்தையை மட்டும் தாங்கவே மாட்டேன் ஆதி, தாங்கவே மாட்டேன்!”

குமுறியபடி ஜெயிலைவிட்டு வெளியேறினான் சிபி.

‘ஓ… ஒரு தென்றல் புயலாகி வருதே’ பின்னணியில் இசைக்கத் தொடங்கியது.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.