உறவை வணிகம்போலக் கையாள்வதற்குக் கற்றுத்தருவது போலுள்ளதாக ‘நேர்பட பேசு’ முன்னைய கட்டுரைகளைப் படித்த ஒருவர் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார். வணிகம் என்பது வெறுமனே பணத்தை மட்டும் முதலீடாகக் கொண்டதில்லை. வணிகத்தில் பணம் தவிர்க்க முடியாத ஒன்று. எனினும், ஒரு வணிகத்தின் நிலையுறுதியைப் பணம் மட்டுமே தீர்மானிக்க முடியாது. வணிகத் திறமை, அனுபவம், பங்குதாரர்களுக்கும் கூட்டாளர்களுக்குமிடையேயான நேர்மை, நம்பிக்கை, அறவுணர்வு என்று பல்வேறு அடிப்படைகள் வணிகத்தின் தன்மையைப் பொறுத்து அதன் விருத்தியைத் தன்வயப்படுத்திக் கொள்வதைப்போலவே, உறவிலும் அன்பு, நேர்மை, உண்மை, மதிப்புணர்வு, அறவுணர்வு போன்ற பல ஊக்கிகள் அதனை வளர்த்துக் கொள்ளவும் பெறுமானத்தைக் கூட்டவும் தேவையாயிருக்கிறது.

பணத்தைக் கையாள்வதற்கும் உறவில் இருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதாகத்தான் சிலகாலம் வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன். விரைவாகவே வாழ்வு சில ஒழுங்குகளைக் கற்றுத்தந்தபோது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் மன ஆயாசமில்லாமல் அன்றாட வாழ்வை வாழ சிலவற்றை ஏற்றுக்கொண்டேன். எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றால், அப்படியுமில்லை. என்னைப் பொறுத்தவரை வாழ்வு கற்பதற்கான வகுப்பறை. இங்கு ஆசானும் மாணாக்கரும் நாம்தான். இந்த வகுப்பறையில் பிழை, தவறு என்று அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு முயன்று தோற்கலாம். மீண்டும் முயன்று நினைத்ததை அடையலாம். பெரும்பாலும் என் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட எந்தவொரு பொருளையும் எழுத்தில் கொண்டுவர நான் முயற்சிப்பதில்லை. இந்த நேர்பட பேசு கட்டுரைகளும் என் தேடலும் கற்றலும் என் தோல்விகளும் தெளிவுகளும்தாம்.

நான் எனது பதினெட்டாவது வயதிலிருந்து உழைக்கும் பெண்ணாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் வருமானம் என்ன என்பதைப் பற்றியோ என் செலவுகள், சேமிப்புப் பற்றியோ யாருக்கும் பொறுப்புக்கூறும் அவசியம் எனக்கு இருந்ததில்லை. எனது முதல் திருமணம் வெறும் இரண்டு ஆண்டுகள்கூட நீடித்திருக்கவில்லை என்பதாலும் அப்போதிருந்த அனுபவக்குறைவு, புரிதலின்மைகள் காரணமாகவும் பணத்தைப்பற்றி முன்னால் கணவருடன் உரையாடியவைகூட நினைவில் இல்லை. எந்த முன் தீர்மானமும் உடன்பாடும் இல்லாமலேயே வீட்டுவாடகையையும் மாதந்தோறும் மளிகை சாமான்களுக்கான செலவுகளையும் செய்துவந்தேன். கணவர் அரசு துறையில் அப்போதுதான் பணியில் இணைந்திருந்தார். நான் தனியார் துறையில் தொடர்ந்து சில ஆண்டுகளாக வேலையில் இருந்தேன். எங்கள் இருவரது ஊதியத்தொகையும் பெரிய வித்தியாசத்தில் இருந்தது. அவரைவிடவும் இரண்டு மடங்கு அதிகம் சம்பாதித்தேன். அத்துடன், அப்போது நாங்கள் வாடகைக்கு வசித்த வீடு எனக்குப் பிடித்தபடியாக நானே தேடி எடுத்துக்கொண்டது. அதற்கான முன்பணத்தைக்கூட நானேதான் கொடுத்திருந்தேன். எனவே, ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் வாடகையைச் செலுத்துவதை எனக்கான பொறுப்பு என எழுதப்படாத விதியாக்கிக்கொண்டிருந்தேன். உண்மையில் எனது முன்னைய திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஆனால், தாங்க முடியாத வன்முறைகளினாலும் பாதுகாப்பின்மையாலும் முரண்பாடுகள் வளர்ந்து குகை இருட்டுக்குள் எங்களைத் தள்ளிய பிறகு, இனி இந்த வாழ்வில் எந்த ஆசுவாசமும் கிடைப்பதற்கில்லை என்று தலையைத் தூக்கியபோது நான் தெருவில் நின்றுகொண்டிருந்தேன். முன்பணம் கொடுத்து கொழும்பு நகரில் வாடகைக்கு அமர்த்திய அதே வீட்டிலிருந்து, ஒவ்வொரு மாதமும் தேதி தவறாமல் நான் வாடகை செலுத்தி வந்த அதே வீட்டிலிருந்து உடுத்திருந்த இரவுடையும் கையில் குழந்தையுமாக வெளியேற்றி, துரத்தப்பட்டேன். மழையில் நனைந்தபடி நான் தெருவில் நின்றிருக்கும்போது அவர் அந்த வீட்டில் பாதுகாப்பாகப் படுத்துறங்கிக்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சி அவ்வப்போது என் ஞாபகத்தில் வரும். இப்போதெல்லாம் உதட்டோரப் புன்னகையுடன் இந்த ஞாபகத்தை எளிதில் கடந்துவிடுகிறேன். அன்று அப்படியொரு நிலை ஏற்பட்டதற்கான காரணம் இப்போது நன்றாகப் புரிகிறது. நாள்தோறும் வேலைக்குச் சென்று கைநிறையச் சம்பாதிக்கிற பெண்ணாக இருந்தபோதும் நான் பணத்தைக் கையாள்வதில் புத்திசாலித்தனமாக இருந்திருக்கவில்லை. அதற்கான அனுபவமும் தெளிவும் எனக்கிருக்கவில்லை. ஏன், நம் உம்மாக்களுக்கோ நம் குடும்பப் பெண்களுக்கோகூட இந்தத் தெளிவு இருந்ததாக நான் அறிந்ததேயில்லை.

என்னைவிடவும் குறைவாகச் சம்பாதித்துக்கொண்டு, நான் வாடகை செலுத்திய வீட்டிலிருந்து என்னை வெளியே தள்ளிவிட அவர் ஆண் என்ற அதிகார உணர்வு தவிர வேறொரு காரணமுமில்லை. குறைவான சம்பளம், கூடுதல் சம்பளம் என்பது இங்கு பிரச்னையே இல்லை. ஆனாலும், நாங்கள் இருவரும் முறையாகத் திட்டமிட்டுப் பேசி வீட்டு வாடகையைக் குறைந்தபட்சம் இருவரும் இணைந்து செலுத்துகின்ற அளவுக்கான ஒரு புரிதலுக்கு வரமுடிந்திருந்தால் அன்று நான் வெளியேற்றப்பட்டிருக்க மாட்டேன். அவ்வளவு உறுதியாகக் கொஞ்சம்கூட குற்றவுணர்வே இல்லாமல் வெளியேற்றியிருக்கவும் அவரால் முடிந்திருக்காது. ஏனென்றால், இருவர் இணைந்து ஒன்றைச் செய்வதற்கான முடிவுக்கு வருவதற்கிடையிலான பயணம் என்பது வெறுமனே பணம் சம்பந்தப்பட்டது அல்ல. அது நபர்களுக்கிடையிலான புரிதலை, இணக்கத்தை விசாலப்படுத்தக்கூடியது. ஒருவரின் உழைப்பையும் கௌரவத்தையும் புரிந்து நடக்கச் செய்வது.

வாழ்வு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. இரண்டாம் முறையாகவும் ஓர் ஆணுடன் இணைந்து புதிய வாழ்வை அமைத்திருக்கிறேன். எல்லா ஆண்களும் ஒன்றுபோலில்லை. எல்லா வாழ்வும் ஒரே விதமாக இருக்கப்போதில்லை. என்றாலும் பணத்தைக் கையாள்வதில் நான் சில தெளிவான நிலைப்பாடுகளுக்கு வந்திருந்தேன். பொருளாதார ரீதியாக நல்ல வளமாகவே இருக்கிறேன். என் பிள்ளைகளையும் என்னையும் பார்த்துக்கொள்ளவும் நிறைவாக வாழவும் போதுமாக உழைக்கிறேன். இப்படியே தொடர முடியாதா? ஆனால், இந்த வாழ்வுக்குள் நுழைந்தவரின் பணம் பற்றிய பார்வையை வைத்தே அவரோடு இருக்கும் நபர்களின் மீதான அவரின் பொறுப்புணர்வையும் நாடிப்பிடித்தறிகின்ற அளவுக்கு நிர்வாகம் புரிந்தவளாகிவிட்ட பிறகு, அப்படியே தொடர முடியாது என்பதுதானே உண்மை. இங்கே உறவில் எதிர்பார்ப்பில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உறவு என்பது எதுவுமேயற்ற போலிமை என்பதையும் சொல்லிவிடவேண்டும். எந்தவித எதிர்பார்ப்புமேயில்லாமல் உறவென்பது சாத்தியமுமில்லை.

நாம் இருவரும் உழைக்கிறோம். உன் பணம் எனக்குத் தேவையில்லை, எனது உனக்கில்லை என்று சொல்லிக்கொண்டு யாராவது வாழ்வைத் தொடங்கினால் உண்மையில் அவர்கள்தாம் இந்த யுகத்தின் படித்த முட்டாள்களாயிருப்பார்கள். இணைந்து வாழ்வதென்பது ஒவ்வொருவரினதும் சக்தியை, உணர்ச்சிகளை, நேரத்தை, நிர்வாணத்தை முழுவதையும் பகிர்ந்துகொள்வது. ஒருவரின் நேரத்தை, சக்தியைப் பகிர்ந்துகொள்கின்ற வாழ்வில் உன் பணம், என் பணம் என்று அதனை மட்டும் திரைபோட்டு பிரித்தோ சுவர் எழுப்பி மறைத்தோ வாழ்வது எதார்த்தமில்லை. அது அவ்வளவு போலியானது. இன்னும் சொன்னால் இப்படியொரு வாழ்வில் இணைந்திருக்கும் இருவர் ஆணோ பெண்ணோ பால்புதுமையினரோ நிச்சயமாக ஒருவரை இன்னொருவர் சுரண்டி வாழும் நிலையே அங்கு சந்தேகமில்லாமல் இருக்கும்.

நானும் எனது இணையரும் பணத்தை நிர்வாகம் செய்வதைப் பற்றி பல உரையாடல்களைச் செய்திருக்கிறோம். ஆமாம், மெனக்கெட்டு, இதைப் பற்றி பேசுவதற்கென்றே நேரம் ஒதுக்கி தேநீர் கோப்பை, காகிதம், பேனாக்களுடன் அமர்ந்து மணிக்கணக்காகப் பேசியிருக்கிறோம். சிலபோது உடன்படாத விவாதங்களுடன் எங்கள் உரையாடல்கள் முடிந்திருக்கின்றன. பின்னொரு நாளில் மீண்டும் அவற்றைக் குறித்துப் பேசியிருக்கிறோம். இப்படியாக நாங்கள் எங்களுக்கென்று, எங்கள் வருமானத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் பொருந்தக்கூடிய வகையில் நிதியைக் கையாளும் ஒரு முறைமையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டு முறை ஆறஅமர்ந்து பேசி முடிவுகள் எடுக்கிறோம். குடும்பத்தில், நட்பில் எங்களை நம்பி இருப்போருக்குப் பணம் அனுப்புவது, நண்பர்களுக்கு அன்பளிப்பு வாங்குவது, பணத்தைக் கடன் கொடுப்பது அல்லது நிலுவைகள் இருப்பின் செலுத்துவது என்று எல்லாமே பேசுகிறோம். பண விடயத்தில் சந்தேகமோ கேள்வியோ வராத அல்லது கேள்வி கேட்பதற்குத் தயங்குகின்ற சூழ்நிலைகளை முற்றாக உடைத்து நாங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற கூட்டுத் தீர்மானம், கூட்டு நிதிப் பயன்பாடு என்கின்ற கட்டமைப்பு எங்களை எங்களுக்கே பொறுப்புக்கூறும் நபர்களாகவும் ஆக்கியிருக்கிறது. எங்கள் இருவருக்கிடையிலான பிணைப்பை இறுக்கமாக்கியிருக்கிறது. நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. கனவுகள் மீது பற்றுக் கூடியிருக்கிறது.

நிதிப் பயன்பாடு பற்றிய உரையாடல்களின் துவக்கத்தில் ஒருமுறை இணையர் இப்படிக் கேட்டார்:

“டேக் – அவுட் தேநீர் அருந்தினால்கூட அதனையும் ரிப்போர்ட் செய்யவேண்டுமா?”

பண வெளிப்படைத்தன்மையை இருவரும் கையாள்வது என்று தீர்மானித்துக்கொண்ட பிறகு அவருக்கு இந்தக் கேள்வி வந்தது, நியாயம்தான். நாம் வெளியே போகும்போது, தனியாகவோ நண்பர்களுடனோ காக்டெயிலுக்குச் செலுத்திய பணம், காப்பி அருந்தியது என்று ஒவ்வொன்றுக்கும் கணக்குச் சொல்லிக்கொண்டிருந்தால் வாழ்க்கை கசப்பாகிவிடும். மேலே தொடக்கத்தில் ஒருவர் அபிப்பிராயப்பட்டதுபோல உறவில் வணிகத்தின் பண்புகள் மேலோங்கிவிடும். பணத்தைக் கையாள்கிறோம் பேர்வழி என்று ஒருவரை இன்னொருவர் கண்காணிப்புச் செய்துகொண்டிருக்கத் தேவையில்லை. பண நடைமுறையை உறவில் உள்ள இணையர்கள் தங்களது சௌகரியத்திற்காகவும் முரண்பாடில்லாத நிம்மதியான வாழ்வுக்காகவுமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, கணக்கு விசாரணை செய்துகொண்டோ, ஒப்புவித்துக்கொண்டோ இருப்பதல்ல இதன் பொருள். யாரும் யாரும் ரிப்போர்ட் செய்வதால் அல்ல, தனக்குத்தானே பொறுப்புக்கூறுபவராக இருப்பதாலேயே இந்தக் கட்டமைப்பைச் சீர்படுத்தமுடியும்.

மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட பணத்தை அவரவர் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் சுதந்திரத்தை ஏற்படுத்திக்கொண்டால் டேக் -அவுட் தேநீர் செலவு பற்றியெல்லாம் வருத்தப்பட வேண்டியதில்லை. இது அவரவர் வருமானத்திற்கும் மாதாந்த இதர செலவுகளையும் பொறுத்து தீர்மானிக்கப்படவேண்டிய தொகை. உதாரணத்திற்கு ஆளுக்கு ஐந்தாயிரம் ரூபாய். அவர்கள் அதனை எதற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு விதியை வைத்துக்கொள்ளலாம். இணையர்கள் தனியாகத் திரிவதற்கோ தேநீர், காக்டெயில் செலவுக்கோ சலூன், பார்லர் போன்ற தனிப்பட்ட தன்னைப் பராமரிக்கும் எதற்காகவும் செலவு செய்துகொள்ளலாம். இது செலவுக்கான வரம்பு மட்டுமல்ல, ஒருவரின் ஊதாரிச் செலவுகளையும் கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து பேசுவோம்…

படைப்பாளர்:

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். தற்சமயம், அமெரிக்கப் பல்கலைக்கழகம் University of Nebraska Omaha வில் மனித உரிமைகளுக்கான ஆராய்ச்சி அறிஞராகப் பணிபுரிகிறார்.