மனிதர்கள் எப்போதும் வித்தியாசமான உயிரினங்கள். நாம் ஒருவரை இப்படித்தான் என்று முதல் பார்வையில் நினைத்தால், நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் முழுக்க வித்தியாசமாக இருப்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவர்களைப் பற்றிய எண்ணமும் மாறி இருக்கும்.

எப்போதும் நான் ஒருவரைப் பற்றி அவ்வளவு எளிதில் இவர்கள் இப்படித்தான் என்று முடிவு எடுத்துவிட மாட்டேன். ஒரு பிரச்னை என்ற சூழலில் எப்படி எப்படி அவர்கள் வெளிப்படுகிறார்கள் என்று பார்ப்பேன்.

இப்படி இருக்கும்போது எனக்குத் திருமணம் செய்ய வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள். என்னிடம் சொல்லாமலேயே ஓர் இடத்தை முடிவு செய்தும்விட்டார்கள். மறுக்க உரிமைகள் கொடுக்கப்படுவது இல்லை. நான் மறுத்தேன். மீண்டும் பார்க்க ஆரம்பித்தார்கள். எங்கள் பக்கம் ஒரு பெண்ணை, பொது இடத்தில் வைத்துச் சந்திக்க வேண்டும் என்றால் ஆணின் வீட்டில் இருந்து ஒரு படையே கிளம்பிவிடும்.

நான் இரண்டு பேரைத் தவிர என்னுடன் யாரையும் அழைத்துச் செல்வது இல்லை. எனக்குப் பார்க்கும் மாப்பிள்ளையுடன் பேச கொடுக்கப்படும் நிமிடங்கள் குறைந்தபட்சம் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்.

என்னது, ஐந்து அல்லது பத்து நிமிடங்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், எங்கள் வீட்டில் இப்படி ஒரு வாய்ப்பைப் பெறும் முதல் நபர் நான்தான்.

அப்படி இருக்கையில் மாப்பிள்ளையிடம் சில கேள்விகளைக் கேட்பேன். அதில் மூன்று கேள்விகள் மட்டும்தாம் முக்கியமானது.

‘உங்களுக்கு லைஃப் பார்ட்னர் எப்படி இருக்கணும்?’ –

இதை மட்டும் கேட்டுப் பாருங்கள். கிடைக்கும் பதில்களைப் பொன் எழுத்துகளில் பொறித்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்த கேள்வி. ‘பொண்ணுங்க எப்படி இருக்கணும்?’ முன்னாடி ஏதாவது பதில் சொல்லி இம்ப்ரஸ் செஞ்சிருந்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.

அடுத்தது அவர்களுடைய வீட்டைப் பற்றி, பழக்க வழக்கங்கள் பற்றி கேளுங்கள்.

முதல் இரண்டு கேள்விகளில் உங்களுக்குப் பிடித்த பதில் கிடைத்தாலும் மூன்றாவது கேள்வியில் அந்த நபர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்திருந்திருக்கிறார் என்று தெரியும்.

இந்தக் கேள்விகள் எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஆனால், உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்து உங்கள் எதிர்பார்ப்பைப் பொறுத்துக் கேள்விகளை மாற்றிக்கொள்ளுங்கள்.

முக முக்கியமான விஷயம், நீங்கள் மட்டும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், எதிரில் இருப்பவர் பதில் மட்டும் கூறிக்கொண்டிருக்கிறார், கிட்ட தட்ட நீங்கள் கேட்பதற்கு எல்லாம் தலை ஆட்டுகிறார் என்றால் நம்பிவிடாதீர்கள்.

பெண் வேண்டும் என்பதற்காகத் தலையாட்டிவிட்டு, பிறகு திருமணம் முடிந்ததும் உண்மையான குணத்தைக் காட்டும் ஆண்கள் அதிகம்.

இந்த விஷயம் மட்டுமில்லை. எந்த விஷயமாக இருந்தாலும், ‘இதை இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று சொன்னால், கேள்வி கேட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பதிலாக வெறுப்பும் கோபமும் கிடைக்கலாம்.

BUT IF YOU DON’T QUESTION YOU MAY HAVE ANY OTHER CHOICE BUT TO ACCEPT THE THINGS WHICH ARE OUTDATED.

அதனால் கேள்வி கேளுங்கள் தோழிகளே! எந்த விஷயமாக இருந்தாலும் பெண் என்பதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கேள்வி கேளுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் மட்டும்தான். உங்கள் இன்பம், துன்பம் அனைத்தும் நீங்கள்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். அது உங்கள் முடிவைப் பொறுத்து அமையும்.

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.