ஓர் ஏமாந்த கதை
எல்லோரிடமும் எச்சரிக்கையாக இருக்க வைக்கிறது!

ஓர் ஏமாந்த கதை
எல்லோரையும் திருடர்களாகப் பார்க்க வைக்கிறது!

எல்லா ஏமாந்த கதைகளிலும்
திரும்ப அடையவே முடியாத
ஓர் இயல்பு இருக்கிறது.

அந்த ஏக்கம்தான் ஏமாந்தவர்களின் பெரும் கோபமாய் ஆகிறது

நினைக்கும் போதெல்லாம்
அந்த நினைவின்
திரும்ப அடைய முடியாத தூரத்திற்குள்
திரும்பத் திரும்ப சிக்கிக்கொள்ள வைக்கிறது

பாதைகளின் கண்களுக்குத் தப்பிய ஏமாற்றுக்காரர்களோ
மறதிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்
அல்லது ஞாபகமாய் மறந்து விடுகிறார்கள்

பாதிக்கப்பட்டவர்களில் இருந்து விசாரணை ஆரம்பமாகிறது

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதிலிருந்தே
அவர்களை விமர்சிக்கிறார்கள்

ஆறுதல் சொல்வதாக கதைகளைக் கேட்க தொடங்குகிறார்கள்
பாதுகாப்பு அளிப்பதாக கண்காணிக்கத் தொடங்குகிறார்கள்

பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே
கைவசம் இருக்கும் நிலையில்

அவர்களின் சொற்களோடு
முரண்படும் எல்லாரும்
ஏமாற்றுக்காரர்கள் ஆகிவிடுகிறோம்

தப்பியோடிய மேகங்களிடம் வெட்டப்பட்ட மரம் போராடுவதைப் போன்றது இது

வெட்டிய கைகள் பிடிபடுவதில் யாதொரு பயனும் இல்லை
மேகங்கள் தான் மழை பொழிய வேண்டும்!

படைப்பாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.