அன்பு பத்ரி, அம்ருதா,

இரண்டு வருடங்களாக இந்தத் தொற்று சூழலில் பல சூறாவளிகள் பல சுழல்கள் நம் குடும்பத்தைக் கலைத்துப் போட்டுவிட்டன. மரணம் எவ்வளவு கொடுமையானது என்பதை மீளவியலாது தவிக்கும் நம் குடும்ப உறுப்பினர்களின் தொடர் இழப்பு நிதர்சனமாகக் காட்டிக்கொண்டிருந்தாலும், நமக்கான அழைப்பு வரும் வரை, நாம் எப்படியோ நம் மீதி வாழ்க்கையைக் கழித்தே ஆக வேண்டும்.

வாழ்க்கை என்றால், அர்த்தமே இல்லாத வாழ்க்கையா, வாழ்க்கையில் அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்னும் சிந்தனையின் எழுச்சியில் அர்த்தமே இல்லாத வாழ்வை அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றி அமைத்துக்கொள்ள முடிந்த அளவில் நம் சக்தியை அளிப்போம்.

சமுதாய நன்மைக்காக வாழ்ந்த நம் முன்னோரின் வாழ்க்கையில் ஓர் இம்மி அளவு நன்மையை நாம் நம்மைச் சார்ந்தவர்க்குச் செய்தாலே நம் வாழ்க்கை அர்த்தம் பொதிந்ததாகவே இருக்கும். நம் தாத்தா காந்தி அரங்கசாமி ராஜா சுதந்திரப் போராட்ட தியாகி, ராஜபாளையத்தில் அவருக்குச் சிலை வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நம் முன்னோர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள்? அந்த Family Tree வம்சாவளி வரைபடம் பார்த்திருக்கிறீர்களா?

Family Tree என்பதைத் தமிழில் எப்படி எழுதலாம்?

வம்சாவளி, வம்ச வரலாறு, மரபுக் கிளையமைப்பு, கொடி வழி, குடும்ப மரம், குடும்ப வரைபடம் இவற்றில் எது பொருத்தமாக இருக்கும்.

குடும்ப மரம் என்பது குடும்ப நபர்களின் வம்சாவளி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவர்களின் பெயர்களைக் குறிக்கும் ஒரு வரைபடம். அதில் ஆண்களை முன்னிறுத்தி ஓர் ஆணின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை என்று தந்தைவழி உறவு முறைகளாக ஒவ்வொருவரின் தந்தைப் பெயரும் குறிக்கப்பட்டிருக்கும். ஆணின் மகன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். மகள் இருக்கும் கொடி, குடும்ப மரம் அதிகமாக இருப்பதில்லை. ஏகதேசமாக ஒன்றிரண்டு இருப்பது அபூர்வம்.

மரணத்தை நோக்கித் தொடரும் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு கட்டத்தில் நம் முன்னோர்கள் யார், நம் முந்தைய தலைமுறையினரின் பெயர்கள் என்னென்ன அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைத் தேடும் ஒரு தேடல் நிகழும். இதைப் புத்தகங்களாகவும் சிலர் எழுதி இருக்கின்றனர்.

ஆங்கிலத்தில் எழுத்தாளர் W. Daniel Quilen எழுதிய Secrets of Tracing your Ancestors புத்தகமும், எழுத்தாளர் Alan Stewart எழுதிய Grow your own Family Tree (The easy guide to researching family history) புத்தகமும் வாசிக்க நேர்ந்தது.

நம் முன்னோர்களைப் பற்றிய ரகசியங்களை அறிதலும், எப்படி நம் முன்னோர்களைத் தேடுவது என்பதையும் இந்தப் புத்தகங்கள் கோடிட்டுக் காட்டிப் பேசுகின்றன.

நம் பெற்றோரும் அவர்களைப் பெற்றவர்களும் யார் யார், அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பவற்றைப் பற்றி ஒவ்வொரு முன்னோரையும் வேர்களைத் தேடிப் போகும் எண்ணங்கள் ஏன் தோன்றுகின்றன? அது சுய வரலாறை நோக்கிச் செல்லும் பயணமா? அதில் சமூகவியலும் சார்ந்துள்ளதா? இன வரலாறைத் தேடும் விளைவா? போன்ற எண்ணற்ற கேள்விகளை உள்ளடக்கிய பயணம் இது.

ராமாயணம், மகாபாரதம், ரகுவம்சம் போன்ற காவியங்களில் குடும்ப மரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழின் சில நாவல்களில், நாவல் ஆரம்பிப்பதற்கு முன்பே அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை அறிந்துகொள்வதற்காக, குடும்ப மரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

முன்னோர்களின் வேர்களைத் தேடிச் செல்லும் பயணம் என்றதும், அலெக்ஸ் ஹேலி எழுதிய, ‘ Roots ’ புத்தகம் உடனே நினைவுக்கு வருகிறது. வேர்கள் என்னும் அந்தப் புத்தகம் ஏழு தலைமுறைகள் என்று மொழிபெயர்ப்பாளார் ஏ. ஜி. எத்திராஜுலுவால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் புராதன மாலி நாட்டின் கிண்ட்டே வம்சத்தில் பிறந்த குண்ட்டாவின் அடிமை வாழ்க்கையில் தொடங்கி ஏழு தலைமுறையினரின் விவரணைகளாகச் சேர்த்துக் காட்சிப்படுத்தியுள்ளது. குண்ட்டா, கிஜ்ஜி, கோழி ஜார்ஜ் வாய்மொழியாக மெடில்டா, டாம் – இரீன், வில்பர்மர், பெர்த்தா என தொடர்ந்து அலெக்ஸ்ஹேலி இந்தக் குடும்ப வம்சாவளியைத் தேடிக் கொடுத்துள்ளார்.

இதைப் போன்று பல குடும்ப மரங்களைப் பல மொழிகளிலும், தமிழிலும் காணலாம்.

மொழிகள் பற்றி அறிந்துகொள்ளும் Structural Linguistics என்னும் பிரிவில், எந்த மொழிகள் எந்தெந்த மொழிகளில் இருந்து பிரிந்து வந்திருக்கின்றன என்னும் மொழிக்குடும்பங்கள் பற்றிய குடும்ப மரம் உள்ளன. எந்தக் குடும்ப மொழியிலிருந்து எந்த மொழிகள் வந்துள்ளன என்பதை ஆய்வு ரீதியாகப் பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

தோழி கவிதாயினி அமுதா பொற்கொடி எழுதிய வேர்களை வருடும் விழுது புத்தகத்தில் ஆதி தேடும் நதியின் பயணம் என்று 47 அத்தியாயங்களில் தன் வாழ்வின் பயணத்தையே சிறு சிறு காட்சிப்படுத்துதலாகக் கொடுத்துள்ளார். அதில் எம் பூசாரி வம்ச வரலாறு என்னும் முதல் கட்டுரையிலேயே தங்கள் குடும்ப மரத்தைக் கொடுத்துள்ளார். ஒவ்வோர் அத்தியாயமும் விறுவிறுப்பாக அமைத்துள்ளார்.

இந்தக் குடும்ப மரம் கட்டுரையில் நம் குடும்ப மரம் இடம் பெறுகிறது. ஆந்திராவிலிருந்து 17ஆம் நூற்றாண்டில் ராஜபாளையத்துக்கு வந்த சூரபராஜா இந்துகூரி என்னும் ஊரிலிருந்து வந்தவர்; அதனால் அவர் வழி வந்தவர்கள் இந்துகூரி தாயாதியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த சூரபராஜா அவர்களிடமிருந்து இந்தக் குடும்ப மரம் ஆரம்பித்து, என் தந்தை ரகுபதிராஜா வரை வந்துள்ளது. இது தந்தைவழி குடும்ப மரம் என்று வந்ததால் இந்தக் குடும்ப மரத்தில் பெண் குழந்தைகளின் பெயர் இருக்காது. எம் தந்தைக்கு இரு மகள்கள் என்பதால் எங்கள் இருவர் பெயரும் அதில் இருக்காது. அதனால் தனிக் குடும்ப மரம் கேட்டுப் பெண்கள் நாங்கள், எங்கள் குழந்தைகள் இருக்கும் குடும்ப மரமாக இதைக் கொடுத்திருக்கிறேன்.

இரண்டையும் தனித்தனியாகப் பார்க்கலாம்.

பாருங்கள். மீதியைத் தொடர்வோம்.

அன்புடன்

மதுமிதா

17.03.2022

படைப்பாளர்

மதுமிதா

மதுமிதா

மதுமிதா என்னும் பெயரில் எழுதிவரும் கவிதாயினி மதுமிதா ராஜபாளையத்தில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி.

எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். தமிழில் பல நூல்கள் படைத்துள்ள இவரின் தாய்மொழி, தெலுங்கு. ஹிந்தி பிரவீன்உத்தரார்த் வரையும், சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் படித்துள்ளார். முப்பதுக்கும் அதிக நூல்களை உருவாக்கியுள்ளார். இருபதுக்கும் அதிக விருதுகளை வென்றிருக்கிறார்.