“ஸ்ரீலங்காவின் மிகச் சிறந்த தேநீரை எங்கள் சிறப்பு விருந்தினரான உங்களுக்கு வழங்க விரும்புகிறோம், தேர்வு செய்யுங்கள்” என்று குறும்புடன் நண்பர் அன்ரனி மடுதீனும் தோழி மெரினாவும் ஒரு நீண்ட பட்டியலை நீட்டியபோது குளிரால் வெடவெடத்துக் கொண்டிருந்தோம். நுவரேலியாவின் ஒரு மிகப் பெரிய தேயிலைத் தோட்டத்திற்குள் அமைந்திருந்த ஆடம்பரமான தேயிலை ஷோ ரூமில், மாதிரி சுவை பார்ப்பதற்கான அறை அது. சுற்றிலும் ஆங்கில முகங்கள். நூற்றுக்கணக்கான நறுமணங்களில், சுவைகளில் தேநீர் இலைகளும் தூள்களும் நூதனமான வடிவங்களைக் கொண்ட பாக்கெட்களில் பேக் செய்யப்பட்டு, அலங்காரமாக அணிவகுத்திருந்தன. தேவைப்படும் தேநீர் வகையைச் சுவை பார்த்து வாங்கிக்கொள்ளலாம். எதைத் தேர்வு செய்வது எனக் குழப்பமாக இருந்தது. ஒரு கப் தேநீரின் விலையைப் பார்த்தவுடன், அந்தக் குளிரிலும் வியர்த்தது. “கம்பெனிக்குக் கட்டுபடியாகாது, வாங்க போகலாம்” எனக் சைகை காட்டினேன். ஆனாலும் அவர்கள் விடவில்லை. இறுதியில் ஏதோ ஒரு பெயரை டிக் செய்துவிட்டு, தேநீர் வரும்வரை சுற்றிப் பார்க்கலாம் எனப் பின்புறமிருந்த தோட்டத்திற்குள் நுழைந்தோம். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆங்காங்கே பரவலாகத் தெரிந்தார்கள். அனைவரும் மலையகத் தமிழர்கள். நம்ம ஊர் அக்காக்கள் தேயிலைக் கொழுந்துகளைக் கூடையில் சேகரித்துக்கொண்டிருந்தார்கள். கைகள் பரபரவென துளிரைப் பறித்துப் பின்பக்கம் வீசிக்கொண்டிருந்ததைப் பார்க்கவே அழகாக இருந்தது. எங்களைப் பார்த்ததும் இந்திய முகத்தை அடையாளம் கண்டு, சிநேகிதமாகச் சிரிக்க, கதைக்கத் துவங்கினோம். ஆசை, ஆசையாகப் பேசினார்கள். முத்துலட்சுமி, சாரதா என அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். திண்டுக்கல் அருகில்தான் பூர்வீகம், இன்னும் உறவினர்கள் அங்கேதான் இருக்கிறார்கள் எனக் கண்கள் மின்ன சொன்னார்கள். அவர்களது வாழ்க்கை, ஊதியம், வசிப்பிடம், குழந்தைகள் எனப் பேச்சுத் தொடர இறுதியில் மனம் கனக்க, விடைபெற்றோம்.

நாங்கள் கேட்ட சுவையில் தேநீர் பாக்கெட்டுகளும் வெந்நீரும் சர்க்கரையும் குளிர்ந்த பாலும் வந்திருக்க, பாலையும் சர்க்கரையையும் ஒதுக்கிவைத்த மடுதீன், “சுவையான தேநீர் செய்வது எப்படி?” என்று வகுப்பெடுக்கத் துவங்கினார். “டீ பேகை வெந்நீரில் போட்ட பின்னர், கோப்பையை ஒரு சாஸரால் மூடி மூன்று நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன் நறுமணம் வெளியேறாமல், சுவை மட்டும் வெந்நீரில் இறங்கி இருக்கும். நினைவில் வைத்திருங்கள், சிறந்த தேநீர் என்பது பாலோ சர்க்கரையோ கலக்காமல் தயாரிக்கப்படுவதுதான்” என்று முடிக்க, ஜெர்க்கானேன். “அப்போ, நெஞ்சுவரை இனிக்கும் சர்க்கரையுடன், கொழகொழவென பால் கலந்து, நாம் குடிப்பதெல்லாம் தேநீரே இல்லியா கோப்ப்ப்ப்பால்?”

இலங்கையின் தேநீர் ஏறத்தாழ 100 நாடுகளின் உணவு மேசையை நிரப்புகிறது. 2009, ஜூன் மாதத்தில் புனே நகரில் ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோதுதான் இலங்கையிலிருந்து வந்திருந்த தோழிகளின் அறையில், ஒரு நடு இரவில் மிகச் சமீபத்தில் நடந்து முடிந்திருந்த யுத்தத்தின் கண்ணீர்க் கதைகளை உயிர்நடுங்க கேட்டுக்கொண்டே, அவர்கள் கொண்டு வந்திருந்த இலங்கைத் தேநீரை முதன்முதலாகச் சுவைத்தேன். அதன் பிறகான இந்த 12 வருடங்களாக இலங்கைத் தேநீரின்றி என் பொழுதுகள் முடிவதில்லை. மெதுவாகச் சிவக்கும் இலங்கைத் தேநீர் கொடுக்கும் சுவையை, அரை ஸ்பூன் போட்ட நிமிடத்தில் சிவந்த நிறமாக மாறும் இந்திய டஸ்ட் டீக்கள் ஏனோ கொடுப்பதில்லை. உலகின் எந்த மூலைக்குப் போனாலும் சிலோன் டீ பருக முடியும். என்னை சிலோன் (?) எனப் புரிந்துகொண்டு, மகிழ்விப்பதாக நினைத்து கேட்கும், “டு யூ வான்ட் சிலோன் டீ?” என்ற புன்னகையுடனான கேள்வியை நான் போகும் ஒவ்வொரு தேசத்திலும் எதிர்கொண்டிருக்கிறேன். இயந்திரகதியில் கொழுந்துகளைப் பறித்துப் போட்டுக்கொண்டிருந்த அக்காக்களின் முகம் நினைவில் அழுத்த, இலங்கை தேநீரின் வரலாறு குறித்து அறிய ஆர்வமானேன். என் ஆவல் புரிந்து காரை இயக்கிக்கொண்டே நண்பர் மடுதீன் விவரிக்க ஆரம்பித்தார்.

காலம் : கி.பி. 1796. உலகின் பல நாடுகளையும் ஆக்கிரமித்த ஆங்கிலேய அரசு இலங்கையிலும் கால் பதித்தது. வருடங்கள் போனாலும் வர்த்தகரீதியில் இலங்கையிலிருந்து எதிர்பார்த்த பணமோ லாபமோ ஈட்ட முடியவில்லை.

கி.பி. 1829 : இலங்கைக்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் பொருட்டு கோல்புறூக் – சார்லஸ் கமரன் என்ற இருவரை இலங்கைக்கு அனுப்புகிறது இலங்கை அரசு.

கி.பி : 1830 ‘கோல்புறூக் – சார்லஸ் கமரன் பரிந்துரை’களின் விளைவாக இலங்கையின் பொருளாதாரம் வணிகமய ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறுகிறது. இலங்கையின் நிலங்களைத் தனியாருக்குப் பிரித்துக்கொடுத்து தோட்டப்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் பரிந்துரை.

கி.பி : 1840 – ஒரே ஆண்டில் 13,275 ஏக்கர் காணிகள் ஆங்கிலேய அரசின் உயர் அதிகாரிகளுக்கு ஓர் ஏக்கர் ஐந்து ஷில்லிங்குகள் என்ற விலையில் கொடுக்கப்படுகிறது. பின் வந்த ஆண்டுகளில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பிரிட்டனைச் சேர்ந்த தனியாருக்கு வழங்கப்படுகிறது. இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் தேயிலை, காப்பித் தோட்டங்கள் நிறுவுவதற்கான வேலைகள் தொடங்கப்படுகின்றன.

அதற்கு முன்பாகப் பரிசோதனை முயற்சியாக, 1839 இல் இந்தியாவின் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட முதல் அங்கீகரிக்கப்பட்ட தேயிலை விதைகள் பேராதனியில் உள்ள ராயல்பொட்டானிக் கார்டனில் நடப்பட்டதாக டெனிஸ் பாரஸ்ட் எழுதிய ‘ஒரு நூறு ஆண்டுகள் இலங்கைத் தேநீர்‘ என்ற புத்தகத்தின் குறிப்பு சொல்கிறது.

லுதினன் கேர்னல் ஹென்றி சீ பேர்ட் என்பவர் 1844இல் 14 பேரை இந்தியாவிலிருந்து அழைத்துக்கொண்டு இலங்கை வருகிறார். இவர்களே இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட முதல் புலம்பெயர் தொழிலாளர்கள். அந்தச் சமயத்தில் வறுமையும் சாதிக்கொடுமையும் உச்சத்தில் இருந்த காரணத்தினால், தமிழகத்தின் கிராமப் புறங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பிழைப்பிற்காக இலங்கை, பர்மா, வியட்நாம், பிஜூ தீவுகள், மலேசியா எனப் பிற நாடுகளை நோக்கி நகரத் தயாராகிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இலங்கை தேயிலைத் தோட்டத்திற்குக் கூலியாட்கள் தேர்வு செய்வதற்கான ஏஜென்ஸிகள் திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், அரக்கோணம், நாமக்கல் எனத் தமிழகத்தின் பல பாகங்களிலும் திறக்கப்பட்டன. அதன் மூலம் ஏழை, எளிய மக்களைக் கவர்ந்து, கூலிகளாக இலங்கை அழைத்துச் செல்ல தேர்வு செய்கின்றனர். அப்படித் தேர்வு செய்யப்பட்ட மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்குப் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே வந்து சேர்ந்தனர். நூறு பேர் செல்லக்கூடிய படகுகளில் 200 பேர் ஏற்றிச் செல்லப்பட்டனர். “தமிழகத்திலிருந்து மக்கள் டின்னில் அடைக்கப்பட்ட புழுக்களைப் போல கொண்டு வரப்பட்டனர்” என்று தனது குறிப்பில் எழுதுகிறார் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஓல்கொட் (Henry Steel Olcot). தலைமன்னார் கரையில் இறங்கி, 131 மைல்கள் கால்நடையாகவே மாத்தளை வரை அடர்ந்த காட்டிற்குள் கொடூர விலங்குகளையும் கடுமையான முட்பாதைகளையும் கடந்து சென்றனர். போதிய உணவோ நீரோ தேவையான மருந்துப் பொருள்களோ இன்றி வழியில் மடிந்தவர் ஏராளம். நோயுற்றோரை வேறுவழியின்றி வழியிலேயே கைவிட்டுச் செல்ல விலங்குகளுக்கும் பனிக்கும் உயிருடன் பலியானோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

மலைப்பகுதியை அடைந்தும் துயரம் தீரவில்லை. அட்டைக்கடி, கொசுக்கடி, தேள்கடி எனத் தொடர்ந்தது. காட்டு விலங்குகள் உயிரைப் பறித்தன. காலராவும் மலேரியாவும் அம்மையும் தாக்கின. வந்த தொழிலாளர்களில் பாதிப்பேர் மடிய, மீதிப் பேரே தேறினர். அதனால் மீண்டும் மீண்டும் தேவைக்கு அதிகமாகவே ஆட்களைச் சேகரித்தனர். பிழைப்பிற்காகக் கடல்கடந்து வந்த தமிழர்கள் பாறைகள் சூழ்ந்த அந்தக் கடினமான பகுதியைக் கனமான கருவிகள் கொண்டு உடைத்தனர். உயிரைப் பறிக்கும் அசுர உழைப்பினால் அந்த மலைப்பகுதியை விளைச்சலுக்கு ஏற்றதாக மாற்றினர். தங்களை அழைத்துவந்த ஆங்கில முதலாளிகளுக்கு விசுவாசமாக 150 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர். லயன் என்று அழைக்கப்பட்ட ஒற்றை அறையிலேயே மொத்தக் குடும்பத்தின் வாழ்க்கையும். மாடாய் உழைக்கும் காசை கங்காணிகள் பொய்க்கணக்கு எழுதிப் பறித்துக்கொண்டனர். பாலியல் கொடுமைகளுக்கும் குறைவில்லை. “பயணத்திலும் தோட்டங்களிலும் ஏழு ஆண்டுகளில் சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேர் மடிந்து தங்கள் உயிரையும் உடலையும் இலங்கையின் தோட்ட மண்ணுக்கு இரையாக்கினர்” என்று டொனோவன் மொல்ட் ரிச் எழுதிய பிட்டர் பெர்ரி பான்டேஜ் என்ற நூலில் குறிப்பிடுகிறார். தங்கள் உயிரையும் உழைப்பையும் கொடுத்து, இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகத் தேயிலையையும் ரப்பரையும் உருவாக்கிக் கொடுத்தனர்.

இலங்கையின் தேயிலை விவசாயம் சர்வதேச அரங்கில் உயர்ந்து நின்றது. 1867இல் ஸ்காட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லரின் லூஸ்கந்து எஸ்டேட் தான் இலங்கையின் முதல் தேயிலைத் தோட்டமாக மலர்ந்தது. இலங்கை தேயிலைத் துறையின் விரைவான வளர்ச்சி பெரிய தேயிலை நிறுவனங்களைக் கையகப்படுத்த அனுமதித்தது. 1893இல் சிகாகோ உலகக் கண்காட்சியில் லண்டனில் முதன் முதலாக சிலோனின் தேநீர் பாக்கெட்டுகள் விற்கப்பட்டன. உலகின் மிகச் சிறந்த தேயிலை இலங்கைத் தேயிலை என்ற பெயரைப் பெற்றதால், உலகின் தேயிலை உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் நான்காவது இடத்தில் உள்ளது. இன்று இலங்கையின் 187,309 ஹெக்டேர் நிலத்தில் தேயிலைப் பயிரிடப்படுகிறது.

1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. புதிய குடியுரிமைச் சட்டமானது, இலங்கைக் குடியுரிமைக்கான தகுதிகளாக, ”1948 ஆம் ஆண்டு, நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும், ஒருவருடைய மூத்த இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும்” என அறிவித்தது. அதன் விளைவாக, இரண்டு நூற்றாண்டு காலம் லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து, அடிமைகளாக உழைத்து இலங்கையைச் செல்வங்கொழிக்கும் தேசமாக்கியவர்கள் ஒரே நாளில் நாடற்றவர்களாகிப் போனார்கள். ஏனெனில், இலங்கையில் பிறந்ததற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. இந்திய அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஒப்பந்தங்களின் மூலம் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை முயன்றது. 1964 ஆம் ஆண்டு சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தமும், 1974 சிறீமாவோ – இந்திரா ஒப்பந்தமும் மலையக மக்களை குரங்குகள் பூமாலைகளைப் பிய்த்தெறிந்தது போல இரு நாடுகளும் பகிர்ந்துகொள்வது என்று முடிவானது. 9,75,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் 5,25000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 3,00,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும், முடிவுசெய்து இருநாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கி, கட்டியணைத்துக்கொண்டனர். மீதி 1,50,000 பேர் விடுபட்டு நாடற்றவராயினர். இலங்கை குடியுரிமை பெற்ற மூன்று லட்சத்திலும் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். அரசியலில் மலையகத் தமிழர்களின் செல்வாக்கையும் பிரதிநிதிகளைக் குறைப்பதற்கான அரசியல் சூழ்ச்சியாகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இலங்கையின் இனவாத ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே இந்தியாவும் நடந்துகொண்டது. இலங்கையில் சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மக்கள் தொகையாக இருந்தது இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களே. மலையும் காடுமாக இருந்த இலங்கையைத் தோட்டங்களாக, எஸ்டேட்டுகளாக, ரயில்பாதைகளாக, பாலங்களாக, அணைகளாக மாற்றி நாடாக்கியவர்கள், நாடற்றவர்களாக மாற்றப்பட்டுச் சொந்த நாட்டிற்கு ஏதிலிகளாகத் திரும்பினர்.

உலகிற்கே தேநீர் அளிக்கும் இந்த உழைப்பாளிகளுக்கு இன்றும் ஒரு கோப்பை பால் தேநீர்கூட ஆடம்பரம்தான். அரசாங்கங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். பெருந்தொற்றுக் காலம் முன்புவரை இப்பெருந்தோட்ட மக்கள் தங்கள் உழைப்பின் ஊடாக ஆண்டொன்றுக்குச் சுமார் 1.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்தனர். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த இதுவரை எந்தத் தேவதூதனும் வந்துவிட வில்லை. இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலை இழிவாக இருப்பதாக ஐ.நா. சபையின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா வேதனை தெரிவித்துள்ளார். மிகச் சொற்பமான சம்பளம், நிரந்தர வருமானமின்மை, வசிப்பிடமின்மை, போக்குவரத்து இன்மை, மருத்துவர்கள் இன்மை, அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கள் இன்மை, போதுமான பாடசாலைகள் இன்மை, 2 சதவீத மாணவர்களுக்கே உயர்கல்வி வாய்ப்பு என்றே தலைமுறைகள் கடந்தும் வாழ்க்கை நகர்கிறது. மழை, வெயில், காற்று, அட்டை, புழுக்கள், பாம்புகள் மண்சரிவு என இயற்கையும் தன் பங்குக்கு வஞ்சித்தே வருகிறது. 180 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 8 க்கு 8 அடி அளவுடைய பொத்தலான லயன் வீடுகளில்தாம் இன்னமும் வாழ்க்கை. கூடையில் நிரப்பும் கொழுந்துகள்தாம் அவர்கள் சம்பளத்தை நிர்ணயிக்கும் தெய்வங்கள். தேயிலையின் மூலமாக மட்டும் 60 சதவீத அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இந்த மக்களுக்காக பட்ஜெட்டில் 10 சதவீத பணம் ஒதுக்கக்கூட அதிகார மையங்களுக்கு மனமில்லை.

மலையகத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், இந்தியத் தமிழர் என்றெல்லாம் அழைக்கப்படும் இவர்கள், இலங்கைக் குடிசனக் கணக்கின்படி மொத்த மக்கள்தொகையில் 5.5 சதவீதம் உள்ளனர். மலையகத் தமிழர்களிடையே இந்தியா குறித்த சிந்தனைகள் பெரிதாக இல்லை. இந்திய உறவுகளுடனான உறவு துண்டிக்கப்பட்டு விட்டது. இந்தியாவிலிருந்த நிலம், சொத்துகளையும் இழந்து விட்டனர். ஆனால், மனதின் ஓரத்தில் இந்தியாவிற்கான ஈரம் இன்னும் மிச்சமிருக்கிறது. “இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததற்காகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு சிங்களவர்களிடம் அடிவாங்கிய சம்பவங்களும் உண்டு” என்கிறார் வர்க்க எழுத்தாளர் அரசியல் விமர்சகர் தோழர் பெ. முத்துலிங்கம்.

இலங்கை பேரினவாதத்தின் கண்களுக்குத் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள்தாம். இலங்கையின் அத்தனை இனக் கலவரத்திலும் மலையகத் தமிழர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உரிமைக்காகப் போராடும் வடகிழக்கு தமிழர்கள், உணவுக்காகப் போராடும் மலையகத் தமிழர்கள் எனத் தமிழர்கள் வாழ்வு எப்போதும் போராட்டம்தான். ஆனால், வடகிழக்கு மக்களுக்காக வரிந்துகட்டி பேசும் தமிழ் அமைப்புகள்கூட மலையக மக்களுக்கான விடயங்களில் வாய்முடி மௌனித்திருப்பதால், விரக்தி நிலையில் உள்ளனர். மலைகளின் மீது வாழ்ந்தாலும் இவர்களது ஓலக்குரல் இன்னமும் உலகின் செவிகளுக்குப் போய்ச் சேரவே இல்லை.

மனதை மயக்கும் அந்த பச்சைத் தேயிலைத் தோட்டங்களின் வேர்களில் ஓடிக்கொண்டிருப்பது மலையகத் தமிழர்களின் ரத்தம் என்பதை அறிந்தபோது, சற்றுமுன் சுவைத்திருந்த தேநீரின் கசப்பு மனதிலும் படரத் தொடங்கியது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.