தன் நேசிப்பில் நம்மை வெளிப்படுத்துதல் – தன் வெளிப்பாடு (Self Expression). இதில் மிக முக்கியமானது – Communication: தகவல், கருத்துகள், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதல் அல்லது பரிமாறிக் கொள்ளுதல்:

நம் மனம் தெளிவாக அமைதியாக இருக்கும்போதுதான் மற்றவர்களோடும் இந்தப் பிரபஞ்சத்தோடும் இதமான உரையாடலை நிகழ்த்த முடியும்.

சாதாரண நிகழ்வில், நமது கற்பனையை ஏற்றி வேறாகப் புரிந்துகொள்வதை ‘எல்லாரும் கொடுத்ததையும் வாங்கி வச்சா; எங்கிட்ட இருந்து பிடுங்கி வச்சா’ என்று எங்கள் பாட்டி ஒரு சொலவடை வழியாகச் சொல்வார்.

நாமாக மனதில் ஒன்று நினைத்துக்கொண்டு, தப்பான அர்த்தம் கற்பித்துக்கொண்டு இருந்தோமானால், எங்கும் எப்போதும் போர்க்களமாகத்தான் இருக்கும். இதற்குப் பெரிய உதாரணம் முகநூல். எழுதியவர் ஒரு மனநிலையில் எழுதியிருப்பார். அதை வாசிப்பவர் இன்னொரு மனநிலையில் வாசிப்பார். இருவருடைய வாழ்நிலை, சூழ்நிலையும் வேறு வேறாக இருக்கும். இவர் ஒன்றைச் சொல்ல, அவர் வேறாகப் புரிந்து இன்னொன்று சொல்ல – பிறகு, இவர் கருத்திற்குப் பாதிபேர், அவர் கருத்திற்குப் பாதிபேர் பிரிந்து நின்று சதா சர்வகாலமும் கருத்தியல் சண்டை நடந்துகொண்டே இருக்கும்.

‘ரிச்சி’ என்ற படத்தில், ஒரு ஸ்பானிஷ் சிறுவன் பற்றிய கதை வரும். ஒரு சிறுவன் தினமும் தன்னைக் கிண்டல் செய்வதாக, அவனது மொழி புரியாத இன்னொரு முட்டாள் முரட்டுச் சிறுவன் எண்ணிக்கொள்வான். அது கடைசியில் கொலைவரை சென்றுவிடும். ஆனால், அந்தச் சிறுவன் தினமும் அவனது பாஷையில் ‘முகமன்’ கூறி வந்தான் என்பது இவனுக்குப் பிற்பாடுதான் தெரியவரும்.

ஒவ்வொரு மனிதருமே ஒவ்வோர் உலகம்; ஒவ்வொருவரின் மனதின் மொழியும் தனித் தனியானது; தனித்துவம் வாய்ந்தது. ஒருவருக்கு மற்றவருடைய பாஷை புரிய வேண்டுமானால், அவரவர் தமக்குள் ஒலிக்கும் குரல்களை அமைதியாக இருக்கச் செய்தாலே போதுமானது. எளிதாக உணர்ந்துகொள்ள முடியும்.

ஒருவர் கோபமாக வருகிறார். அதை எதிர்கொள்ளும் நாம் அமைதியாக எதிர்கொள்ள வேண்டுமா, நாம் அவரைவிடக் கோபமாக எதிர்கொள்ள வேண்டுமா? ஒருவர் கவலையாக இருக்கிறார்; அவர் கவலை நீங்கும் படியாக நமது அணுகுமுறை இருக்க வேண்டுமா; அல்லது அவர் கவலை அதிகப்படும்படி நடந்துகொள்ள வேண்டுமா?

சிலர் இருப்பார்கள். ஒருவர் தனக்குக் காலில் அடிபட்டதைக் கவலையுடன் பகிர்ந்துகொண்டிருக்கையில், ‘இப்படித்தான் 1984ல் எங்க ரமேஷுக்கும் அடிபட்டுச்சு’ என்று விவரிப்பார்கள். ஒரு பெண் தனது கணவன் வீட்டுப் பிரச்னையைச் சொல்ல வருகையில், ‘நாங்கெல்லாம் அந்தக் காலத்தில் படாத கஷ்டமா’ என்பார்கள்.

உண்மையில் ஒவ்வொருவரின் சிரமங்களும் வேறு வேறானவை. அவரவருக்கு அவரவர் கவலைகள் பெரியவை. நாற்பது வயதுக்காரர்களுக்கு இருபது வயதுக்காரர்களின் பிரச்னைகள் புதியதில்லை; புரிவதில்லை. ஆனால், அவர்கள் இருபது வயதாக இருந்தபோது அவர்களுக்கு எப்படி இதே பிரச்னைகள் பெரிய தீர்க்கமுடியாத கவலையைத் தந்ததோ, அப்படித்தானே இப்போது அந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் இருபது வயதுக்காரர்களுக்கு இருக்கும் என்பதை உணர வேண்டும்.

சிலர் சிறு பிள்ளைகளிடம், ‘இப்படி நடந்துகொள், அப்படி நடந்துகொள்’ என்று அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்கள். நம்மால் ஒரு தட்டுச் சோற்றைப் பத்து நிமிடங்களில் சாப்பிட முடியும் என்பதால் அதே வேகத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது சரியா? அவர்கள், அவர்களது வேகத்தில்தான் வருவார்கள். நாம் பொறுமையாகக் காத்திருக்கப் பழக வேண்டும். அவரவர் அனுபவ அறிவை, அவரவர் பெற்று வர அனுமதிக்க வேண்டும். நம் வேகத்திற்கு அவர்களை இழுத்தால் நமது வேகமும் மட்டுப்பட்டு அவர்களின் இயல்பான வேகமும் வளர்ச்சியும் கெடும்.

சிலர் தன்னைத் தவிர மற்றவர்கள் எல்லாரையுமே சிறுபிள்ளைகளாக விரட்டிக்கொண்டே இருப்பார்கள்; உண்மையில், சக மனிதர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வித வேகம், ஒவ்வொரு வித அறிவு. தேவையானபோது தேவையான வழிகாட்டுதல்களை, சம்பந்தப்பட்டவர்கள் வேண்டி கேட்டுக்கொண்டால், தந்தால் போதுமானது.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்; தான் வாழ்ந்த வாழ்வைப் போதாதென்று தன் பிள்ளைகளின் வாழ்வையும் வாழப் பார்ப்பார்கள். வழிகாட்டுவதாக நினைத்துக்கொண்டு, ‘சந்தோஷ் சுப்பிர மணியன்’களாய் நடந்துகொள்வார்கள். அவரவர்கள் வாழ்வை, அவரவர் தவறுகள் செய்து கற்றுக்கொள்வார்கள். ‘சரி தவறு’ என்பவை காலத்திற்குக் காலம், நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருப்பவை.

இன்றைய தொழில்நுட்ப வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எல்லாமே நூதனமானவை. அதோடு பிறந்த பிள்ளைகளுக்கு அது தெரியுமளவு பெரியவர்களுக்குத் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எப்போதும் எல்லா விஷயத்திலும் ‘எல்லாம் தெரிந்த பெரியவர்களாகவே’ நடந்துகொள்வேன் என்று அடம்பிடிப்பது, தானாகவே நம்மைச் சிறியவர்களாக்கி விடும்.

சுய அக்கறை:


‘எவரொருவர் தனக்குத் தானே சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறாரோ, அவரே சுதந்திரமான மனிதர்’ என்பார் காந்தி.

உடல், மன ஆரோக்கியத்திற்காக நாம் நம் மேல் சுய அக்கறை (Self Care) கொள்வதும், அதற்காக சுய கட்டுப்பாட்டை (Self discipline) உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நேர மேலாண்மை ஆகியவற்றில் கடைப்பிடிப்பதும், நமது தன்னம்பிக்கையையும் (Self Confidence), சுய மதிப்பீட்டையும் (Self Value) உயர்த்தும். உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சிகளை, ஆடல் பாடல் கற்றல் கற்றுக்கொடுத்தல் என நமக்குப் பிடித்தமான முறையில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

எதுவும் செய்யாமலிருப்பதைவிட, அது உடற்பயிற்சியோ நடையோ மெல்லோட்டமோ ஏதாவது கற்றல் விஷயமோ, மிகக் குறைந்த அளவு என்றாலும் தினமும் விடா முயற்சியுடன் செய்வது என்பது அருமையான விளைவுகளைத் தரும்.

எந்த ஒரு கஷ்டமான சூழலிலிருந்தும் விடுபட வேண்டுமா, கஷ்டத்தோடு போராடுவது ஒருவகை; நம்மை உள்ளும் புறமும் ஆற்றலுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வது இன்னொரு வகை.

எவ்வளவு துன்பமான மனநிலை இருந்த போதும் ‘உடல் பயிற்சி’ செய்வது, நமது மனநிலையை மேம்படுத்தும். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் பாதிப்பவை.

தலைவலியோ காய்ச்சலோ நம்மைப் பாதித்திருக்கும்போது, நம்மால் சிந்திக்க முடியாது; இப்படி உடலுக்கு ஏற்படும் துன்பம் மனதைப் பாதிப்பது போல, மனதின் எண்ணங்களுக்கு ஏற்படும் அழற்சி உடலையும் பாதிக்கிறது; இதை நேர்மறைச் சிந்தனையாகச் சொன்னால், நாம் நமது சிந்தனைகளை நேர்ப்படுத்தப் படுத்த, நமது உடலும் நோய்மையிலிருந்து விடுபடுகின்றது.

உடல் நலம், உள்ள நலம் என்பது பசி தூக்கம் போல அன்றன்றைக்கானது. நேற்று நன்றாக இருந்தோம் என்பதற்காக இன்றை அலட்சியமாக விடலாகாது.

அதே போலத்தான், என்றோ ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒரு மாதம் நேர்மறையாகச் சிந்தித்துவிட்டு, எல்லா நாள்களும் நலமோடு இருப்பது என்பது இயலாது. சாப்பிடுவது, தூங்குவதுபோல அன்றாட செயல்களாக, உடற்பயிற்சிகளும் மனப் பயிற்சிகளும் இருக்க வேண்டும். அன்றன்றைக்கு உட்கொள்பவற்றை உட்கொண்டு, கழிப்பவற்றைக் கழிக்க வேண்டும். அதுவே ஆரோக்கிய வாழ்வு!

(தொடரும்)

படைப்பாளர்:Example Ad #2 (only visible for logged-in visitors)

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.