பொருள் 30 : பொம்மை

உலகிலுள்ள எல்லாச் சமூகங்களையும்போல் மெக்ஸிகோவில் உள்ள அஸ்டெக் சமூகமும் ஒரு கட்டத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. ஆண்களையும் பெண்களையும் ஒன்றுபோல் நடத்தும் அசட்டுத்தனத்தை இனியும் தொடரக் கூடாது, நாம் அடுத்த கட்ட வளர்ச்சியை அடையவேண்டும் என்று அவர்கள் முடிவுசெய்தார்கள். ஆண், பெண் இருவருமே நிலவுடைமையாளர்களாக இருக்கலாம் என்னும் விதி உடைக்கப்பட்டது. ஒரு பெண் தான் நினைத்த எந்தப் பணியிலும் ஈடுபடலாம் என்னும் தாராளவாதம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. 1430 வாக்கில் அரசியல் மாற்றமொன்று நிகழ்ந்தது. பெண்களுக்கு இனி ஆட்சியதிகாரம் அளிக்கவேண்டியதில்லை என்றும் ஆண்களே அரசகுல வாரிசாக நியமிக்கப்படவேண்டும் என்றும் அஸ்டெக் மன்னர்கள் முடிவெடுத்தனர்.

நிலம் மன்னருக்குச் சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அதில் பணிபுரியலாம், ஆனால், உரிமை கொண்டாட முடியாது. பெண்களுக்கும் நிலத்துக்கு இனி எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆண்களும் பெண்களும் மன்னருக்குக் கட்டுப்பட்டவர்கள். பெண்கள் மன்னருக்கும் ஆண்களுக்கும் கட்டுப்பட்டவர்கள். இதுவே புதிய சமூக விதியாக மாறியது. அடுத்ததாக எண்ணிக்கையில் மிகுந்திருந்த அஸ்டெக் கடவுள்களை ஒழுங்குபடுத்தி ஒரே கடவுள் முன்னிறுத்தப்பட்டார். ஒரு சமூகத்தை ஆள ஒரு மன்னர், ஒரு கடவுள், ஒரு விதி போதும் என்று கருதப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகளால் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். நிலம் இல்லை, வீடு இல்லை, சொத்து இல்லை. மிக முக்கியமான சுயமரியாதை இல்லை. இனி புதிய வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். புதிதாக வாழ்வைக் கட்டமைத்துக்கொள்ளவேண்டும்.

முதலில் செய்வதற்கு ஒரு தொழில் வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு அங்கிருந்து ஆரம்பித்தார்கள். வயதான பெண்கள் திருமணத்துக்குத் துணை தேடுபவர்களாக மாறினார்கள். இன்னும் சிலர் கடவுளிடம் இருந்த அருள் பெற்று நோயைக் குணமாக்கத் தொடங்கினார்கள். இந்தக் கலை கைவராதவர்கள் பச்சிலை மருத்துவம் பார்த்தனர். துணி வேலைப்பாடுகள் செய்யத் தெரிந்தவர்கள் அதையே ஒரு தொழிலாக மாற்றிக்கொண்டனர். ஆடம்பரமான, வேலைப்பாடுமிக்க துணிமணிகளை உயர்குலப் பெண்கள் மட்டும்தான் உடுத்தமுடியும் என்றொரு விதியும் அப்போது இருந்தது. இந்தப் பணிகளையெல்லாம் பெண்கள் முன்னரே செய்துவந்திருக்கின்றனர். ஒரு தாய் தேவைப்படும் பொழுது மருத்துவராக மாறுவதும் வீட்டுத் தேவைக்குத் துணி தைப்பதும் இயல்பானதுதான். ஆனால், இப்போது இவையெல்லாம் பிரத்தியேக தொழில்களாக வளர்ச்சிபெற்றன. என்னிடமிருந்து நிலத்தைத்தான் பறிக்கமுடியும், திறன்களைப் பறிக்க முடியாது என்பதை உணர்த்தவே இத்தொழில்களை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். அதுநாள் வரை பொழுதுபோக்காகக் கருதப்பட்ட பணிகள் இப்போது வருமானமீட்டும் தொழில்களாக மாறிப்போயின.

பெண்களின் இந்தத் திடீர் வளர்ச்சியை ஆண்கள் தமக்கே உரித்தான முறையில் எதிர்கொண்டனர். மதச் சடங்குகளில் பங்கேற்பதில் இருந்து அவர்கள் விலக்கிவைக்கப்பட்டனர். கடவுளுக்கு அருகில் செல்லக் கூடாது, கடவுளுக்குத் தொண்டு செய்யக் கூடாது, பூசாரிகளாக ஆகக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வழக்கத்துக்கு வந்தன. இந்தப் பிறவியில் மட்டுமல்ல, அவர்கள் இறந்து மறுபிறவி எடுத்தாலும் கடவுளை நெருங்கக் கூடாது என்று எச்சரித்தது இன்னொரு விதி. வதை தொடங்கி மரணம் வரை பலவித தண்டனைகள் வழக்கத்தில் இருந்ததால் சமூக நியதி குலையாமல் ஆண்களும் பெண்களும் நடந்துகொண்டனர்.

ஆணாதிக்கச் சமுதாயம் ஒன்றை மெல்ல மெல்ல கட்டமைக்கத் தொடங்கியது அஸ்டெக் நாகரிகம். சொத்துரிமை ஆண்களுக்கு மட்டுமே, எக்காரணத்தை முன்னிட்டும் பெண்களின் கரங்களுக்குச் சென்றுவிடக் கூடாது என்று ஆண்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆணைப் போல் தனக்கும் சொத்து வேண்டும் என்று கருதும் பெண்ணுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. செல்வந்தர் ஒருவரை மணந்துகொள்வது அல்லது அவருடைய வீட்டில் காதலியாகத் தங்கிவிடுவது. புதிய தொழில் முயற்சிகள்மூலம் தங்களை உருமாற்றிக்கொள்ள முடியாத பெண்களுக்கும் இதே பணி சிபாரிசு செய்யப்பட்டது. குறிப்பாக, கணவனை இழந்த பெண்களுக்கு ஒரே ஒரு வேலைதான் அனுமதிக்கப்பட்டிருந்தது, பாலியல் தொழில். ஒரு சமூக ஏற்பாடாகவே இது நிலவியதால் பெண்கள் இதனைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை.

இந்த நெறிமுறைகளை அஸ்டெக் சமுதாயம் தங்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டுசேர்த்தது. குழந்தைகளாக இருக்கும்போதே இந்தச் சட்டத்திட்டங்கள் தெளிவாகப் போதிக்கப்பட்டன. ஆண்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தார்கள். காடுகளைத் திருத்தியமைக்கவும் வேட்டையாடவும் விவசாயம் செய்யவும் கற்றுக்கொடுத்தார்கள். உடற்பயிற்சி செய்யவேண்டும், உடலைக் கட்டுறுதியாக வைத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். இரும்பை எப்படி வளைப்பது, எப்படிக் கருவிகள் செய்வது போன்றவை கற்றுக்கொடுக்கப்பட்டன. பெண்களுக்கு வீட்டு வேலைகளின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. சமையல் கலை விரிவாகக் கற்றுக்கொடுக்கப்பட்டது. துணி தைப்பது எப்படி என்றும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது எப்படி என்பதும் கற்றுக்கொடுக்கப்பட்டன. ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்குப் பெண்களும் வகுப்பெடுத்தனர்.

புதிதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தால் அதை அள்ளியெடுத்து வந்து வெயிலில் காட்டுவார்கள். நான்கு முறை இவ்வாறு செய்யவேண்டும். பிறகு ஒரு கேடயத்தையும் நான்கு அம்புகளையும் கொண்டுவருவார்கள். இதோ பார், இதோ பார் என்று குழந்தையின் கவனத்தை இழுத்துப் பிடித்து இவற்றைக் காட்டுவார்கள். பிறகு அந்தக் குழந்தை கேட்கும்படி பின்வருமாறு சொல்வார்கள். ‘நீ ஒரு பறவை. நீ தங்கியிருக்கும் வீடு என்பது உண்மையில் ஒரு கூடு. நீ உலகைக் காணவேண்டும். உலகின் ஒளியைத் தரிசிக்கவேண்டும். உன் எதிரிகளைக் கொன்று அவர்கள் ரத்தத்தைக் கொண்டு கதிரவனுக்கு நீ மகிழ்ச்சியூட்டவேண்டும். அதற்காகத்தான் நீ பிறப்பெடுத்திருக்கிறாய்.’ பிறந்த பெண் குழந்தைக்கு வீரத்தை உணர்த்தும் எந்தவொரு பொருளையும் காட்டக் கூடாது. சூரியனைக் காட்டும் சடங்கும் கூடாது. மரச் சாமான், விளையாட்டுப் பொருள் எதையாவது கொண்டுவந்து காட்டலாம். பிறகு குழந்தையின் காதில் நுழையுமாறு பின்வரும் வார்த்தைகளைச் சொல்லவேண்டும். ‘உடலிலுள்ள இதயம்போல் நீ இருக்கவேண்டும். நீ வீட்டைவிட்டு வெளியில் போகவே கூடாது.’

அடித்தட்டுப் பெண்களுக்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் என்றால் அஸ்டெக் இளவரசிகளுக்கு வேறு மாதிரியான நிலை. பட்டாடை, ஆபரணம், தங்கம் போல் இளவரசியும் ஒரு விலையுயர்ந்த பொருள்தான். அந்தப் பொருளை எதுநாள் வரை அரண்மனையிலேயே பாதுகாக்க வேண்டும், எப்போது கைமாற்றியளிக்கவேண்டும் என்பதை மன்னர் முடிவுசெய்வார். யாருக்கு என்பதையும்தான். பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே அரண்மனை பெண்கள் பயன்படுத்தப்பட்டுவந்தனர். வெல்ல முடியாத ஓர் எதிரியை மடக்கவேண்டுமானால், இந்தா எடுத்துக்கொள் என்று பெண்ணை எதிரி வீட்டு இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்து அனுப்பிவைப்பது பிரபலமான ஒரு வழக்கமாக இருந்தது. இதை இளவரசி மறுக்க முடியாது. இளவரசனும்தான் என்றாலும் அவனைப் பொருத்தவரை திருமணம் என்பது நீண்டு தொடரும் ஒரு சடங்கு. ஒரு பெண்ணோடு முடித்துக்கொண்டுவிடவேண்டிய அவசியமில்லை.

எப்படிப் பார்த்தாலும் ஆண் வேறு, பெண் வேறு. ஆணின் இயல்புகளும் பெண்ணின் இயல்புகளும் வெவ்வேறாக இருக்கவேண்டும். அதைவிடமுக்கியம் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கவேண்டும். வீரம் ஆணுக்கு அழகு என்றால், வீரமாக இல்லாமல் இருப்பது பெண்ணுக்கு அழகு. கூட்டில் தங்கியிருக்கக் கூடாது என்பது ஆணுக்கான விதி என்றால் கூட்டில் அடைபட்டிருக்கவேண்டும் என்பது பெண்ணுக்கான விதி. ஒழுக்கம் என்பது பெண்ணுக்கான இயல்பு என்னும் ஒரே காரணத்துக்காக ஒழுக்கத்தை ஆண்மீது திணிக்காமல் தள்ளிவைத்திருந்தார்கள். இந்த முரண்பாடு தொடரும்வரை ஒரு சமூகம் சீராகச் செயல்படும் என்று அஸ்டெக் நம்பினார்கள். எனவே கேடயத்தை விரும்பும் பெண் குழந்தையையும் பொம்மையை நேசிக்கும் மகனையும் கண்டு அவர்கள் துணுக்குற்றார்கள். இந்தத் தவறு விபரீதமானது அல்லவா?

பொருள் 31 : வன்முறை

பெண்களிடமிருந்து ஆண்களைப் பிரித்தெடுத்துக் காட்டும் முக்கிய விஷயம் வன்முறை என்பது அஸ்டெக் சமூகத்தின் நம்பிக்கை. உணவைவிட வன்முறையை ஊட்டி வளர்ப்பதன்மூலம்தான் ஓர் ஆண் குழந்தையை நிஜ வீரனாக மாற்றமுடியும் என்று அவர்கள் நம்பினர். பிறந்தவுடன் ஆயுதத்தைக் காண்பிப்பதில் இருந்து தொடங்குகிறது பயிற்சி. குழந்தை வளர வளர வெறுப்பும் சினமும் அவனுக்குள் மூட்டி வளர்க்கப்படுகின்றன. ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. உன்னைத் தற்காத்துக்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் எதிரியை ரத்தம் சிந்த வைப்பதும் என்னும் நீதிநெறி அவனுக்குப் புகட்டப்படுகிறது. எதைக் கண்டும் அஞ்சாதே! எதையும் அழிக்கத் தயங்காதே! இரக்கம் என்பது உனக்கான குணம் அல்ல.

எப்படி ஆதிக்கம் செலுத்துவது, எப்படிக் கொல்வது என்பதை வார்த்தைகளால் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது என்பதால் செயலளவிலான பாடங்களும் அளிக்கப்பட்டன. இளவரசர்களும் செல்வந்தர் வீட்டு மகன்களும் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொண்டனர். முதலில் பழங்குடி இன மக்களின் தலைவர்களிடம் அல்லது அரசர்களிடம் சென்று பேசுவார்கள். என் மகனுக்குப் போர் பயிற்சி அளிக்கப் போகிறேன், அவனுடன் போரிட நீ வரமுடியுமா என்று கேட்பார்கள். அந்த மன்னர்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள். குறிப்பிட்ட தினத்தன்று போட்டி நடைபெறும். பயிற்சி பெறும் ஆண் மைதானத்தில் இறக்கிவிடப்படுவான். எதிரில் பழங்குடி மன்னன். இரு மன்னர்களுக்கு இடையிலான போர் என்று அறிவிக்கப்படும். மோதல் தொடங்கும்.

பழங்குடி மன்னன் வாள், அம்பு என்று தன்னிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டு சிறுவன் மன்னனிடம் மோதுவார். அவனுக்குக் கோபமூட்டுவார். அவனது பகையுணர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் சீண்டுவார். சிறுவன் மன்னன் கோபம் கொண்டு தன்னிடமுள்ள ஆயுதங்களால் பழங்குடி மன்னனை வெறியுடன் தாக்கத் தொடங்குவான். உள்ளுக்குள் வெறுப்பு பெருந்தீயாக வளர்ந்து செழிக்கும். கத்தியால், ஈட்டியால் குத்தி பழங்குடி மன்னனை அவன் காயப்படுத்துவான். எதிரியைத் தாக்கு, பிறகு ரத்தம் சிந்த வை, இறுதியில் சிறுகச் சிறுகக் கொல் என்னும் பாடத்தைச் செயலில் நிரூபிப்பதற்கான தருணம் அது. பலத்த கரவொலிகளுக்கு மத்தியில் சிறுவன் மன்னன் அதை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பான். அவனுடைய வாழ்க்கை அன்றிலிருந்து தொடங்குகிறது. இனி அவன் எதிரியைக் கண்டு அஞ்ச மாட்டான். ரத்தத்தைக் கண்டு அருவருப்படைய மாட்டான். கொல்வதில் சிக்கல் ஏதும் இராது.

சில நேரம் பழங்குடி மன்னன் படையுடன் திரண்டுவருவான். சிறுவன் மன்னனும் படையுடன் மோதுவான். சில நேரம் பழங்குடி மன்னன் சிறுவனால் கைது செய்யப்படுவான். பிறகு ஊர் கூடி நிற்க தன் கைதியைச் சிறுவன் நரபலி கொடுப்பதும் உண்டு. போரில் கொல்வதா நரபலி கொடுப்பதா என்பதில் மட்டும்தான் வேறுபாடு இருக்கும். வன்முறையில் மாற்றம் எதுவும் இருக்காது. கைதிகளையும் எதிரிகளையும் கொல்வது கடவுளைத் திருப்திபடுத்தும் செயல் என்று அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. வன்முறையே அவனை வாழவைக்கும். வன்முறையே அவனுக்குப் புண்ணியத்தைத் தேடித்தரும். வன்முறையே அவனை ஓர் ஆண் என்று அறிவிக்கும்.

சரி, ஒருவேளை பழங்குடி மன்னன் சிறுவன் மன்னனைக் கொன்றுவிட்டால் என்னாகும்? அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. சிறுவனுக்கு அந்த அளவுக்குத் தீவிரமாகப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்பதல்ல காரணம். சிறுவன் தோற்பதற்கான வாய்ப்பு அங்கே ஒருபோதும் எழாது என்பதே முக்கியம். காரணம் இது ஓர் ஏற்பாடு. மன்னர்களும் செல்வந்தர்களும் பழங்குடியிடம் பேசும்போதே இதையும் சொல்லிவிடுவார்கள். நீ என் மகனுடன் மோதவேண்டுமே தவிர, அவனை ஒருபோதும் கொல்லக் கூடாது. போரிடுமாறு நீ நடிக்கவேண்டும். உன்னைக் கொன்றாலும் நீ அமைதியாகவே இருக்கவேண்டும்.

ஆண் வீரம் என்பது மேல்தோற்றத்துக்குப் பளபளப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டாலும் உள்ளுக்குள் அது செயற்கையாக வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் ஏற்பாடுதான் என்பதை விளக்க இதைவிட வெளிப்படையான ஓர் உதாரணம் வரலாற்றில் இருக்க முடியாது. நான் ஒரு வீரன், நான் வன்முறையை விரும்புபவன், இதுவே என் இயற்கையான இயல்பு என்று அந்தச் சிறுவன் மன்னன் தந்திரமாக நம்ப வைக்கப்படுகிறான். இது ஓர் ஏற்பாடு என்பது அவனுக்கு நீண்ட காலம் தெரியாமல்தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவன் வளர்ந்து சிந்திக்கத் தொடங்கும்போது இந்த உண்மையை அவன் தெரிந்துகொண்டிருக்கத்தான் வேண்டும். அப்போது அவன் அதிர்ச்சியடைந்தானா? வெறுப்பு கொண்டானா? இது ஒரு மாயை என்பதை உணர்ந்துகொண்டானா? இந்தப் பொய்யில் இருந்து விடுபடவேண்டும் என்று துடித்தானா?

அதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், அந்தப் பொய் அதற்குள் கெட்டிப்பட்டுப் போய்விடுகிறது. அவனுடைய ஒரு பகுதியாகவே அது மாறிவிடுகிறது. ஆண்மை, வீரம் ஆகிய உயர்ந்த பண்புகளோடு அது ஒன்றுகலந்துவிடுகிறது. இனி அதை அவனிடமிருந்து பிரிக்க முடியாது என்பதால் அவன் சமரசம் செய்துகொள்கிறான். நீ இனி பொய் இல்லை, நீயே உண்மை என்று அந்தப் பொய்யை நோக்கி அவன் அறிவிக்கிறான். ஒரு தலைகீழ் மாற்றம் அங்கே ஏற்பட்டுவிடுகிறது. பொய் களத்தில்தான் அவன் வீரம் முளைவிடுகிறது என்றாலும் அதற்குப் பிறகு அவன் நிஜமாகவே தன் எதிரிகளைக் கண்டுபிடித்து கொல்லத் தொடங்குகிறான். முதலில் அவன் ஈட்டி வெளிக்கொண்டுவந்த ரத்தம் செயற்கையானதுதான் என்றாலும் நாளடைவில் அவன் நிஜ ரத்தத்தைக் கண்டுகொண்டுவிடுகிறான். இப்போது அவன் மெய்யாகவே வன்முறையை விரும்புகிறான். போரை ஏற்றுக்கொள்கிறான். வீரத்தைக் கொண்டாடுகிறான். வளர்ந்து பெரியவனானதும் தன் சிறுவன் மன்னனை அவன் போர்க்களத்துக்கு அனுப்பிவைக்கிறான். அதற்கு முன்பு பழங்குடி மன்னனிடம் சென்று பேசி ஓர் ஏற்பாட்டைச் செய்துமுடிக்கிறான். ஒரு மாய சுழற்சி தொடங்குகிறது.

(தொடரும்)

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.