உடல் நலம், குடும்பம், வேலை, நட்பு வட்டம், சமூக வாழ்க்கை, வருமானம், உறவுகள் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியதுதான் வாழ்க்கை. இந்த அம்சங்கள் எல்லாமும் எல்லாருக்கும் நூற்றுக்கு நூறு அமைந்து விடுகிறதா?

சிலருக்கு நல்ல உடல் நலமும் அமைதியான குடும்பச் சூழலும் இருக்கும். ஆனால், குழந்தைகளுக்கு நினைத்த கல்வியைக் கொடுக்கும் அளவுக்கு வருமானம் இருக்காது. சிலருக்கு வருமானம் இருக்கும், ஆனால் குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து உணவருந்தகூட வாய்ப்பு இருப்பதில்லை. சிலருக்குக் குடும்பம், வருமானம் இருக்கும். ஆனால், நட்பு வட்டம் இருக்காது.

எல்லாம் இருக்கும் திருமணம் அமையாது. வேறு எல்லாம் இருக்கும் உடல்நலம் மட்டும் இருக்காது. இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒன்று…

ஏன் இப்படி?

பொதுவாக எவ்வளவு நிறைகள் இருந்தாலும், நம் வாழ்வில் இல்லாத ஒன்றுதான், நமக்குக் கிடைக்காத ஒன்றுதான் நம்மை, நாம் குறைகளோடு இருக்கிறோம், நாம் பெர்ஃபெக்ட் அல்ல எனச் சொல்லி உறுத்திக்கொண்டே இருக்கும்.

இங்கு இயற்கையே குறைகளோடுதான் இருக்கிறது. ஆனால், அந்தக் குறைகளை அவற்றின் தன்மைகளாக ஏற்றுக்கொள்கிறோம்.

இங்கு இரவும் பகலும் சேர்ந்த ஒன்றை ஒரு நாளாக ஏற்பது, நமக்கு எளிதாகத்தான் இருக்கிறது.

வசந்தம், கோடை, மழை, இலையுதிர் பருவங்களை உள்ளடக்கிய காலத்தை ஒரு வருடமாக ஏற்றுக்கொள்வது எளிதாகத்தான் இருக்கிறது.

கடலின் அடி ஆழமும் மலை உச்சியும் சேர்ந்த ஒன்றை பூமி என்று அழைத்து அதன் மேல் வாழ்வதும் எளிதாகதான் இருக்கிறது.

தேயும் வளரும் நிலவை ரசிப்பதில் இங்கு மனத்திற்குத் தடையேதும் இல்லை. அது குறையாகத் தெரிவதில்லை. மாறாக நிலவின் தன்மையாகவே தெரிகிறது.

இவற்றின் முழுமையை, பூரணத்துவத்தை ஏற்றுக்கொள்வதிலும் இவற்றிற்காக நம்மைத் தகவமைத்துக்கொள்வதிலும் சிரமம் இருப்பதில்லை. பழகிக்கொண்டோம்.

வாழ்க்கையின் டிசைனும் அப்படித்தான். இந்த இயற்கையைப் போலவே குறைகளோடு முழுமையாகவே இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் குறைகளோடு இருந்தாலும் பூரணத்துவம் நிறைந்ததாகவே, முழுமையானதாகவே இருக்கிறது.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரையில் ‘குறைபாடற்றது’ என்ற ஒன்று கிடையாது. வசந்தம்தான் நல்லது, அதுதான் எப்போதும் வேண்டும் என்றால் வசந்தம் எது என்பதே நமக்குத் தெரியாமல் போயிருக்கும். கோடை இருப்பதாலேயே வசந்தத்தின் மகத்துவம் புரிகிறது.

குறை நிறைகளோடு இருக்கின்ற இயற்கையை எளிதாக ஏற்றுக்கொள்ளும் நம்மால், ஏன் நம்மையும் நம் வாழ்க்கையையும் பூரணத்துவம் மிக்க ஒன்றாக, முழுமையான ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

கொல்கத்தாவில் தோட்டக்கலை பூங்காவிற்கு (Horticultural Garden) சென்றிருந்தேன். அங்கு விசித்திரமான மரம் ஒன்று இருந்தது.

பொதுவாக மரத்தின் இலைகள் எல்லாம் ஒரே வடிவத்தில் தானே இருக்கும்? மாமரத்தை எடுத்துக்கொண்டால், அதன் இலைகளுக்கு என்று தனி வடிவம் இருக்கும். பார்த்தவுடன் நம்மால் மாமரத்தின் இலை என்று சொல்ல முடியும்.

ஆனால், அந்த விசித்திர மரத்திற்கு, அதன் இலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தது. அதற்கென்று தனி வடிவம் எதுவும் இல்லை. உண்மையில் அந்த மரத்தின் சிறப்பு குணம் அதுதான். ஆனால், அதற்கு நாம் வைத்த பெயர் ‘அறிவு கெட்ட மரம்’ (Mad tree). ஏனென்றால் அது நமது வரையறைகளைப் பூர்த்தி செய்யவில்லை . (https://outreachecology.com/landmark/lti_e029/)

தோழி ஒருவர் படிப்பில் படு சுட்டி. நல்ல வேலையில், நல்ல ஊதியத்தில் இருக்கிறார். அவருடைய மகன் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. பத்தாம் வகுப்பு ஃபெயில் ஆகிவிட்டான். அவருக்கு அது பெரிய மனச்சுமையாகவும் அவமானமாகவும் ஆகிவிட்டது. தான் ஒரு புத்திசாலி, ஆனால் தன் மகன் ஃபெயில் ஆகி விட்டான் என்பதுதான் கவலையின் காரணம். தனக்குப் படிப்பதில் ஆர்வம் என்றால், தன் மகனுக்கும் படிப்பில் ஆர்வம் இருக்க வேண்டுமா என்ன?

நான் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கைத் துணை இப்படித்தான், இந்த குணங்களுடன்தான் இருக்க வேண்டும் என வரையறைகளும் எதிர்பார்ப்புகளும்.

இதே போல்தான், நமக்கும் நம் வாழ்க்கையின் அங்கங்களுக்கும், சில எதிர்பார்ப்புகளையும் வரையறைகளையும் வைத்திருக்கிறோம். அந்த வரையறைக்குள் அடங்கவில்லை என்றால், உடனே அதைக் குறையாகப் பார்க்க ஆரம்பிப்போம். அது நம் வாழ்க்கையின் தனித்துவம் என்பதை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்.

குறைகள் ஒவ்வொன்றும் அதற்கான தனிச் சிறப்புகள். ஏனென்றால், பிரபஞ்சத்தில் இருக்கின்ற எல்லாரும் எல்லாமுமே perfectly imperfect.

அப்படியானால் குறைகளோடுதான் வாழ வேண்டுமா?

அதைக் குறைகளாக அல்லது பிரச்னைகளாகப் பார்ப்பதைவிட சவால்களாகப் பார்க்கலாம். ஏனென்றால், இந்தச் சவால்கள்தாம் நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்தி செல்கிறது.

உதாரணமாக, பணக்கஷ்டம் வந்த வந்த பின்னர்தான், எப்படிப் பணம் சம்பாதிப்பது, எப்படிச் சேர்த்து வைப்பது, எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து கற்றறிந்து இருப்போம். உடல் நிலையில் ஏதோ பிரச்னை வந்த பிறகுதான், தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்தி இருப்போம்.

இதே போல்தான் ஒவ்வொரு பிரச்னையையும் சவால்களாகக் கையாளும்போது, அடுத்த நிலைக்கு முன்னேற்றிச் செல்லும். குறைகளாக, பிரச்னைகளாகப் பார்த்தோமேயானால் குழப்பங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும்.

வாழ்க்கையில் சவால்கள் இருக்கவே செய்யும். அதுதான் வாழ்வின் குணம். ஆனால், அவற்றின் தன்மையே உங்களை மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இட்டுச் செல்வதுதான்.

சவால்களில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டு, உங்களை எதிர்கால சவால்களுக்குத் தயார்படுத்திக்கொள்ளலாம்.

சில நேரத்தில் நம் வாழ்க்கையின் சவால்களை நாம் தேர்ந்தெடுக்கவும், நிர்ணயிக்கவும் வாய்ப்புகள் இருப்பதில்லை. ஆனால், வளர்ச்சிப் பாதையின் திசையை நாம் கண்டிப்பாக நிர்ணயிக்க முடியும். வளர்ச்சியாக மாற்றிக்கொள்வதும் தளர்ச்சியாக ஆக்கிக்கொள்வதும், நம் கையில்தான் உள்ளது.

சரி, சவால்கள் இல்லாதவர்களே இல்லையா? ஏன் இல்லை, அவர்கள் கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள், வாழ்க்கை கொடுத்த சவால்களை எல்லாம் சந்தித்த பின்னர்.

அப்படி என்றால் துன்பமும் பிரச்னைகளும் நிறைந்ததுதாம் வாழ்க்கையா?

உண்மையில் ஆசீர்வாதங்கள் நிறைந்ததுதாம் வாழ்க்கை. ஒவ்வொரு காலகட்டத்திலும், வாழ்க்கை தந்த கொடைகளும் நன்மைகளும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. மாறாக, குறைகளே உறுத்தலாக தெரிந்துகொண்டிருக்கும்.

கொஞ்ச நேரம் கண்களை மூடிச் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் காலம், இப்போது வாழ்க்கையில் நீங்கள் நின்றுகொண்டிருக்கிற இந்த இடம், உங்கள் வாழ்க்கையின் மிகச் செழுமையான, இதுவரை கடந்து வந்த பாதையின் செழிப்புமிக்க பகுதியாகவே இருக்கும்.

மிகவும் எளிமையாகச் சொல்லப்போனால், நம் முன்னோர்கள் அனுபவித்திராத எவ்வளவோ வசதிகளையும் ஆடம்பரங்களையும் வாழ்க்கை, இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்குத் தந்திருக்கிறது. அவையெல்லாம் வாழ்க்கையின் கொடைகள் தாமே?

மகிழ்ச்சிக்கான காரணங்கள் நிறைந்த வாழ்க்கையில் சில சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால், நாம் எல்லாருமே, எல்லாருடைய வாழ்க்கையுமே perfectly imperfect. அதுவே வாழ்க்கையின் பூரணத்துவம். அதுதான் முழுமையானதும் கூட!

எனவே, நிறைகளைப் பாராட்டி, குறைகளைச் சவாலாக ஏற்று, சவால்கள் அனைத்தும் நம்மை வளர்ச்சி பாதைக்குக் கைப்பிடித்து அழைத்து செல்ல வந்த நம்பகமான வழிகாட்டிகள் என்பதை உணர்ந்து, சவால்களுடனே வாழ்வை, வாழ்க்கையின் பூரணத்துவத்தைக் கொண்டாடலாம் வாங்க!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.