மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் சவால் மிக்கவர்கள், பார்வை சவால் உடையோர், பேசுதிறன் சவால் உடையோர், கைகால் திறன் சவால் உடையோர் என்று மரியாதையுடன் விழிக்க ஒருபுறம் பரப்புரைகள் நடைபெற, இன்னும் உவமைகள், பழமொழிகள் மூலம் மாற்றுத்திறனாளிகளைத் தரக்குறைவாக விமர்சிப்பது நின்றபாடில்லை .இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கும் பார்வையில் உள்ள குறைபாடுகளைப் பேசும் போது, மாற்றுத்திறனாளிகள் குறித்த பாலினசமத்துவப் பார்வை அறவே இல்லை என்பதும் பொதுச் சமுகம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுஇடங்கள் என அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கழிப்பறைகள் உள்ளன. போராட்டங்களுக்குப் பிறகே பொதுஇடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை இரு பாலினத்தவருக்கும் இருப்பதில்லை.

ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என்றே அமைந்துள்ளன. எங்கும் ஆண் மாற்றுத்திறனாளிக்குத் தனி கழிப்பறை, பெண் மாற்றுத்திறனாளிக்குத் தனி கழிப்பறை என்று இருப்பதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறைகொள்பவர்கள்கூட இந்த விஷயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பாலின ரீதியாகத் தனி கழிப்பறை எனச் சிந்திப்பதில்லை என்பதை வருத்தத்துடனே பகிர்கிறார்கள்.

பொதுஇடங்களில் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்றுவரக்கூடிய சாய்தளங்கள், நான்குசக்கர வண்டிகள் செல்லக்கூடிய அளவிற்கான வசதிகள் என்பதை கவனத்தில்கொள்ளாமல் தான் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனை மாற்றுவதற்கே பெரும் போராட்டமாக உள்ளது. இப்போதுதான் பொது இடங்களில் கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. பொதுப் போக்குவரத்துகளில் குறிப்பாகப் பேருந்துகள், ரயில்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில்நிலையங்களில் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு உடை மாற்றும் அறை, பாலூட்டும் அறை என்று எதுவுமே இல்லை என்பது தான் யதார்த்தமாக உள்ளது. இதனால் பெண் மாற்றுத்திறனாளிகள் பேருந்து, ரயில் நிலையங்களில் கூடுதல்அவதிக்குள்ளாகும் சூழல் உள்ளது. இயல்பாகக் குழந்தை வளர்ப்பிலயே ஆண் குழந்தை என்றால் சற்றுக் கூடுதல் அக்கறையோடும் பெண் குழந்தைகள் மீதான அக்கறை சற்றுக் குறைவாகவும் வளர்க்கும் சூழல் இன்றும் உள்ளது. இந்நிலையில் பெண் குழந்தை மாற்றுத்திறனாளியாகப் பிறந்தால், பெற்றோர் அந்தக் குழந்தைகளைக் கூடுதல் சுமையாகவே வளர்க்கும் அவல நிலை தொடர்கதையாக உள்ளது.

மாற்றுத்திறனாளிகளாகப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கப் பெரிதும் பெற்றோர் யோசிக்கின்றனர். நடுத்தர, மேல்தட்டுப் பொருளாதார சூழல் உள்ள குடும்பங்களில் பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர் முன்வந்தாலும் அவர்கள் படிப்பதற்கு ஏதுவான சூழல் கல்வி நிறுவனங்களில் இல்லை. பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள் இயல்பாகச் சென்று வரும் சூழலில் பள்ளி வளாகங்கள் இருப்பதில்லை. முதல் மாடி, இரண்டாவது மாடியில் வகுப்பறைகள் இருக்கும்போது நடக்கும் சவால் திறன் கொண்ட குழந்தைகளால் வகுப்பறைக்குச் செல்வதே சவாலாக இருக்கிறது. நான் படித்த பள்ளியில் தன் வகுப்பில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவியை நாங்கள் அனைவரும் சேர்ந்து காலையும் மாலையும் இரண்டுமாடி தூக்கிச் செல்லும் நிலைதான் இருந்தது. படிக்கட்டுகள் இருக்கும் இடங்களில் எல்லாம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான ஏதுவான சாய்தளங்கள், சக்கரநாற்காலிகள் செல்வதற்கான சூழலே இல்லாத நிலை தான். இதனால் பல மாணவிகளால் தொடர்ந்து கல்வி கற்கும் சூழல் இல்லை. அப்படியே தரைதளத்தில் வகுப்பறைகள் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான கழிப்பறைகள், சோதனைக் கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை இருப்பதில்லை. அதனால் அவர்கள் பாதியிலயே கல்வியைவிடக்கூடிய சூழல்தான் உள்ளது.

பருவம் எய்ததும் மாதவிடாய் காலத்தில் பள்ளி வளாகக் கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருப்பதால், அவர்களின் கல்வியைப் பாதியிலயே நிறுத்தும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லாத நிலையால் மாணவிகளே பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிலும் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு உகந்த கழிப்பறைகள் பள்ளி, கல்லூரிகளில் இல்லாததால் அது கூடுதல் அவதியாக மாறிவிடுகிறது. இத்தகைய சவால்களைத் தாண்டி படித்து முடித்த பிறகு, பணி கிடைப்பதில் மிகப் பெரிய போராட்டம். பெரும்பாலான நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளைப் பணிக்குச் சேர்ப்பதில் தயக்கம் காட்டுகின்றன. அரசு நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள்அரசு பணியையே ராஜினாமா செய்த நிலையெல்லாம் உண்டு. கழிப்பறைக்கு மாடிப்படி ஏறிப் போக முடியாமல் அல்லது மாடியில் இருக்கும் பணி இடத்தில் இருந்து கழிப்பறைக்குச் செல்வது கடினமாக இருக்கும்பட்சத்தில், காலை முதல் சிறுநீர் கழிக்கச் செல்ல முடியாமல் சிறுநீர் உபாதைகள் ஏற்படுவதோடு, சிறுநீரகமே செயலிழக்கும் அபாயம் உள்ளது. இத்தகைய உபாதைகளால் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அரசுப்பணி என்பது வாழ்வில் எத்தகைய பாதுகாப்பான ஒன்று என்று அறிந்திருந்தும் அரசு பணியைவிடக் கூடிய சூழல் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிறார் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினரும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் செயலாளருமான மகேஸ்வரி.

மகேஸ்வரி

இதனைத் தொடர்ந்து பணி நிமித்தமாகப் பெண் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் அவலங்களையும் குறிப்பிட்டார் மகேஸ்வரி. “அரசு நிறுவனங்களில் 4 சதவீத வேலைவாய்ப்பையும், தனியார் நிறுவனங்களில் 5 சதவீத வேலைவாய்ப்பையும்  மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதிசெய்ய வேண்டியது அவசியம். ஆனால், அப்படி முழுவதும் நிரப்பப்படுவதில்லை. கை, கால்திறன் சவால் உள்ளவர்கள் ஓரளவுக்கு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய சூழல் உள்ளது. அப்படியே பணி அமர்த்தினாலும் அவர்களுக்கு இசைவான பணிச்சூழல் இருப்பதில்லை. பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பணியாற்ற, படிப்பதற்கென்றே கணிப்பொறிகள் பெரிய திரையோடு செயல்பட வேண்டும். செவித்திறன் சவால் உள்ளவர்களைப் பணி அமர்த்தினாலே செய்கைமொழி (சைனிங்லாங்குவேஜ்) அந்த மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் இத்தகைய சூழல் எல்லாம் எந்த அலுவலகங்களிலும் பின்பற்றப்படுவதில்லை. செவித்திறன் சவால் உடையவர்கள் பெரும்பாலும் dataentry அல்லது packing துறையில்தான் பணி அமர்த்தப்படுகிறார்கள். டிஎன்பிசி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று டெபிட்டி தாசில்தார் பொறுப்பிற்கு வரும் மாற்றுத்திறனாளிகளை, அவர்களது உடற்குறைவு காரணம் காண்பித்து, அரசு telecaller வேலையில்தான் பணியமர்த்துகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்று அரசே தனியாக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அதிலும் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பிரத்யேகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சாதகமான பணிச்சூழல்அமைத்து தர அரசு முன் வரவேண்டும்” என்கிறார் மகேஸ்வரி.

பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமணம் என்னும் பெருங்கனவு:

மாற்றுத்திறனாளி பெண்களுக்குத் திருமணம் அடுத்த சவாலாக உள்ளது. பெரும்பாலும் வீடுகளில் மாற்றுத்திறனாளி பெண்களுக்குத் திருமணம் செய்ய முன்வருவதில்லை. அப்படியே திருமணம் செய்ய முற்பட்டாலும் இரண்டாவது திருமணம் தான் நடக்கிறது. மாற்றுத்திறனாளி பெண்ணைத் திருமணம் செய்ய முன்வரும் ஆண்கள், அவர்களுக்கு உடல்ரீதியாக எய்ட்ஸ் உட்பட பல நோய்களுடன் வருகிறார்கள். அல்லது அந்த நோய்களை மறைத்து மாற்றுத்திறனாளி பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் நிலையும் உள்ளது. குடும்பங்களில் மாற்றுத்திறனாளி பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவதிலும் சிக்கல் உள்ளது. சொத்திற்காகவே திருமணம் செய்யாமல் மாற்றுத்திறனாளி பெண்களைக் கூடவே வைத்துக்கொள்ளும் நிலை தான் பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது.

மாற்றுத்திறனாளிகளைத் திருமணம் புரிய வரும் நபர்களை ஊக்குவிப்பதற்காகத் தமிழக அரசு திருமண நிதியுதவி வழங்குகிறது. பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்துகொள்வது, காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரை நல்லநிலையில் உள்ள நபர் திருமணம் செய்துகொள்வது, கை அல்லது கால் இழந்தோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்துகொள்வது, மாற்றுத்திறனாளிகளை மாற்றுத் திறனாளிகளே திருமணம் செய்துகொள்வது ஆகிய 4 வகைகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. திருமணம் ஆகும் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு குழந்தை பேறு அடுத்த சவாலாக உள்ளது. கை, கால் செயல்திறன் சவால் என்றால் பரவாயில்லை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். பார்வை சவால் உள்ளவர்கள் அல்லது அடுத்தவர் துணையுடன் அன்றாட வாழ்வியலை நகர்த்த முடியும் என்ற சூழலில் உள்ளவர்களுக்குக் குழந்தை பேறு என்பது எட்டாக் கனவாகிவிடுகிறது.

1999ஆம்ஆண்டு மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணுக்குக் குழந்தை வளர்க்க தகுதி இல்லை என்று பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய அறக்கட்டளை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் இம்மண்ணில் பிறந்த அனைத்துப் பெண்களுக்கும் தாயாகும் உரிமை உண்டு. மனவளர்ச்சி குன்றியதைக் காரணம் காண்பித்து, அத்தகைய பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு குழந்தைபெறும் உரிமையைப் பறிக்கக் கூடாது. அவர்கள் குழந்தைகளை வளர்த்து, பராமரிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. தேசிய அறக்கட்டளை தாங்கள் அந்தப் பயிற்சியை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறி தான் மேல்முறையீட்டுக்கே வழக்கை எடுத்துச் சென்றது. ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்குக் கர்ப்பப்பையை நீக்கிவிடுகின்றனர். மாதவிடாய் காலத்தில் அவர்களை அவர்களே பராமரித்துக்கொள்ள முடியவில்லை என்ற காரணத்திற்காக, குழந்தை பெறுவது கடினம் என்று கூறி, கர்ப்பப்பை நீக்குவது என்பதை தீர்வாக முன்வைக்கிறார்கள். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்போ மாற்றுத்திறனாளிகள், முழுத் தகுதியுடைய ஒரு நபர், இருவரும் சட்டத்தின் முன் சமம் என்கிறது. பேச்சுத்திறன் சவால் உடைய பெண்கள், செவித்திறன் சவால் உடைய பெண்கள், பார்வைசவால் உடைய பெண்கள், மனவளர்ச்சி குன்றிய பெண்கள் இவர்கள்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் ஏராளம். இவர்களைக் குறிவைத்துப் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் எப்போதும் இவர்களைக் கண்காணிப்பது கடினமாக இருப்பதால் கர்ப்பப்பை நீக்குவதாகக் கூறப்படும் காரணங்கள் கூடுதல் அதிர்ச்சித்தரக் கூடியவையாக உள்ளன. இத்தகைய பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு நீதி கிடைப்பதிலும் பல்வேறு சவால்கள் உள்ளன. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பே பாதிப்புக்குள்ளான பெண்களுக்கான நீதியைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்கிறார் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் பேராசிரியர் தீபக்.

தீபக்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் அதிகாரம்:

உலகிலுள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்பது மிகவும் குறைவு தான். இதற்கு மக்கள் மாற்றுத்திறனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது பொருளல்ல. அரசியல் கட்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு எவ்வளவு வழங்குகிறார்கள்? மாற்றுத்திறனாளிகளைத் தங்களது அரசியல் கட்சிகளுக்குள் சேர்த்துக்கொள்ள முனைவது எனப் பலவற்றிலும் அரசியல் கட்சிகள் சிறுதயக்கத்துடனே தான் மாற்றுத்திறனாளிகளை அணுகுகிறார்கள். தமிழ்நாடு முதல் உலகம் முழுவதும் இந்த நிலை தான் .மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, வயது முதிர்வில் மூத்த அரசியல் தலைவராக, முதலமைச்சராக தமிழ்நாடு தொடங்கி டெல்லிவரை சூழன்று சுழன்று பயணித்து அரசியல் செய்ததைப் பல்வேறு கேலிகளும் கிண்டல்களும் செய்தனர். ஆனாலும் அவர்தன் உடல்ரீதியான கேலிக்குச் செவிசாய்க்காமல் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் என்ற மரியாதையான பெயரை முன்வைத்ததோடு மாற்றுத்திறனாளிகளுக்கான வாரியம் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் அரசியல் அரங்கில் தன்னைச் சக்கரநாற்காலி என விமர்சித்தவர்களுக்குச் சமூகத்தில் மிகவும் நலிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நன்மை செய்து பதிலடி கொடுத்தார். இருப்பினும் தமிழக அரசியல் கட்சிகளில் எத்தனை பேர் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுகிறது என்பது எல்லாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியதுதான்.

மாற்றுத்திறனாளிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக  ஜப்பான், கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில்  பதிமூன்று எம்.பி.கள் மட்டுமே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மாற்றுத்திறனாளிகள் தங்களின் குரல், மக்கள் அரங்கங்களில் ஒலிக்க வேண்டும் என்று பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர். செவித்திறன் சவால் மற்றும் பேச்சுத்திறன் சவால் உடைய அத்தனை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரே பிரிதிநிதியாக, உலகிலேயே இந்தச் சமுகத்தின் முதல் பிரதிநிதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் இஸ்ரேலைச் சேர்ந்த சைகை மொழிபேசும் ஷெர்லி பின்டோ. “மாற்றுத்திறனுடையோருக்கு அரசியல் பிடித்தம் உண்டு” என்பதை உலகுக்கு ஷெர்லி பின்டோ தான் பறைசாற்றினார். சமூகநீதியைத் தங்கள் கொள்கையாக வைத்திருக்கும் கட்சிகள், மாற்றுத்திறனுடையோருக்கு அரசியல் பங்களிப்பைத் தரவும் ஒதுக்கப்பட்டோர் தனியாகவே பங்களிப்பைச் செலுத்தவும் ஏன் வாய்ப்பினை அளிக்க மறுக்கின்றன? மாற்றுத்திறனாளிகளைத் தனி அணியாக வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், ஏன் மாற்றுத்திறனுடையோர் பிரச்னைகளை அக்கட்சி மாற்றுத்திறனுடையோரைக் கொண்டு பேசுவதில்லை?மாற்றுத்திறனுடையோர் தினத்தன்று வாழ்த்து அறிக்கைகூடக் கொடுக்கச் சில கட்சிகள் தயங்குவது ஏன்? அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்களை எடுத்துக்கொண்டால், அரசியல் கூட்டத்தில் செவித்திறன் சவால் உடையோர் இருப்பார்களேயானால், தலைவர்கள் பேசும் கருத்துகள் எவ்வாறு அனைவரையும் சென்றடையும்? அதைப் பற்றி எவரேனும் சிந்திக்கிறார்களா?மாற்றுத்திறனாளிகளும் நாட்டு நடப்பை அறிந்துகொள்ள உரிமையுள்ளவர்கள் என்பதை இங்கே மறந்துவிடுகிறார்கள் . அவர்களுக்கு, தான் பேசுவதை சைகை மொழிபெயர்ப்பு செய்ய, சைகை மொழிப்பெயர்ப்பாளர்களை நிகழ்விற்கு ஏற்படுத்த வேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை? ஒவ்வொரு கட்சிக்கும் இணையதளம் உண்டு. எல்லா இணையதளங்களும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென்று பயன்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறதா?

பார்வை மாற்றுத்திறனாளிகள் கட்சிகளில் இல்லை என்றாலும் கட்சிகளைப் பற்றிய புரிதல் வேண்டி இணையதளங்கள் அவர்களுக்கு ஏற்ப அமைத்தால் தானே கட்சிகளில் சேர முடியும்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான பேராசிரியர் தீபக், ஐ.நா. மாற்றுத்திறனாளி உரிமை உடன்படிக்கை சரத்து29(1)(2)ன்படி எல்லாக் கட்சிகளும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்தியேகமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். இதிலும் ஆண், பெண் பாலின பேதமின்றி மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதையே மிகப் பெரிய கோரிக்கையாக வைக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதரணமாக மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் தொடங்கியது முதல் இன்று மாற்றுத்திறனாளிகள் பெறும் உரிமைகள், நலத்திட்டங்கள் என அனைத்திலும் அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மறுசீரமைக்கப்பட்டு, புதியதாக நியமிக்கப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு இயல்பாகச் செல்லும் பாதை உருவாக்கி தந்தது, மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நடத்திய அருங்காட்சியகம், அதில் 21 விதமான மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழிநுட்ப ரீதியான உபகரணங்கள் கிடைக்க ஏற்பாடுகள் என்பதை எல்லாம் தாண்டி முதலமைச்சரே, “நலத்திட்டங்கள் செய்தோம், உதவிகள் செய்தோம் என்றில்லாமல் நம்பிக்கை கொடுத்துள்ளோம்” என்று கூறியது மாற்றத்திறனாளிகளிடையே நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்தத் துறையை மேம்படுத்தவது என்பது, முதலமைச்சர் பாலின சமத்துவத்தோடு மேம்படுத்த வேண்டும் என்பதுதான் ஆகச் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

படைப்பாளர்

சுகிதா சாரங்கராஜ்

15 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியராகவும் அதன் டிஜிட்டல் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். அரசியல், சமூகம் சார்ந்த விவாத நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து வருகிறார். இவர் எழுதிய பாலின சமத்துவம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளுக்கு 4 முறை laadli விருதினை தேசிய அளவில் பெற்றுள்ளார். இவர் பங்கேற்று ஒளிபரப்பான 33 % என்ற பெண்களின் அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ்ச்சிக்காகவும் laadli விருதினைப் பெற்றுள்ளார். குழந்தைகள் உரிமை தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளுக்காக Unicef fellowshipக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் பாலின சமத்துவம் தொடர்பான கட்டுரைகளுக்காக 2022 ஆம் ஆண்டுக்கான laadli media fellowship க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.