உடல், மனம், ஆன்மா அல்லது ஆற்றல் என்ற மூன்றும் சேர்ந்த சேர்க்கைதான் நாம் ஒவ்வொருவரும். இதில் மனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மனத்துக்கு வெளிமனம் (conscious mind), ஆழ்மனம் (subconscious mind), அடிமனம் (unconscious mind) என மூன்று அடுக்குகள் இருக்கின்றன. இவற்றில் ஆழ்மனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனென்றால் நம் வாழ்வில் 95 லிருந்து 99 சதவீதப் பகுதியை இந்த ஆழ்மனம் அல்லது ஆழ்மனத்தின் பதிவுகள்தாம் நடத்துகின்றன. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆழ்மனத்தில், இருக்கின்ற மொத்த பதிவுகளில் 90 சதவீதப் பதிவுகள் ஏழு வருடங்களுக்குள் நடந்து முடிந்துவிடுகின்றன.

ஒரு கம்ப்யூட்டருக்கு எப்படி ஆபரேட்டிங் சிஸ்டம் முக்கியமோ அதுபோல மனிதனுக்கு ஆழ்மனம் ஒரு முக்கிய ஆபரேட்டிங் சிஸ்டம். எளிமையாகச் சொன்னால், இந்த ஆழ்மனப் பதிவுகள் தாம், அவனுடைய வாழ்வின் ப்ளூ பிரிண்ட் அல்லது அவனது வாழ்வின் வரைபடம். ஏனென்றால் மனிதனுடைய ஆழ்மனத்தில் தான் அவனுடைய பழக்கவழக்கங்கள், கண்ணோட்டங்கள், மிக முக்கியமாக நம்பிக்கைகள், விழுமியங்கள், கற்பனைகள், உணர்ச்சிகள் பதிந்திருக்கின்றன.

எனவேதான், மனித வாழ்வில் குழந்தைப் பருவம் மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக முதல் 7 வருடங்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில், குழந்தைகளின் முதல் 7 வருடங்கள் தாம், அவர்களின் எதிர்காலத்தின் 90 சதவீதப் பகுதியைத் தீர்மானிக்கிறது.

எனவே, அவர்களை இந்தப் பருவத்தில் தண்டிப்பது, அல்லது தவறாகக் கையாள்வது, தவறான ஆழ்மனப் பதிவுகளை ஏற்படுத்தி, எதிர்மறை விளைவுகளை விளைவித்து சுயமதிப்பை குறைக்கும், வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணும். எனவே குழந்தைகள் தவறு செய்தால் நல்வழிப்படுத்த எளிமையான, முக்கியமான உத்திகளை இங்கே பார்க்கலாம்.

தொலைக்காட்சித் தொடர்களும் வீடியோக்களும் நீங்கள் தேர்வு செய்த பின்னரே பார்க்க அனுமதியுங்கள். தோழியின் 8 வயது பையனிடம் திடீரென சில மாற்றங்கள். எதற்கெடுத்தாலும் இளக்காரமாக எதிர்வாதம் செய்வது, மரியாதை குறைவான நடத்தை, வயதுக்கு மீறிய வார்த்தைப் பிரயோகங்கள், வழக்கத்திற்கு மாறான பாவனைகள் போன்ற எதிர்மறை மாற்றங்கள். திடீரென்று சில வாரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கான காரணத்தை அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. குழந்தையின் இந்த நடத்தை மாற்றத்துக்குப் பின்னால் ‘சின்சான்’ (Shinchan) கார்ட்டூன் கேரக்டர் இருந்தது.

அந்த கார்ட்டூன் 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது எனவும் அந்த கார்ட்டூன் சில நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று எனவும் பெற்றோர் அறிந்துகொண்டார்கள். அதன் பின்னர், அந்தத் தொடர் பார்ப்பதை முற்றிலுமாகத் தடை செய்த பின்னரே, குழந்தையிடம் இயல்பான நல்ல மாற்றங்களைக் காண முடிந்தது. எனவே குழந்தைகள் உபயோகப்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களில் கவனமாக இருங்கள்.

குழந்தைகளுக்கு உங்களிடம் கேள்விகள் கேட்கவும் உரையாடவும் மிகவும் பிடிக்கும். அந்த உரையாடலை எப்போதும் நேர்மறையாக எடுத்துச் செல்லுங்கள். உதாரணமாகத் தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் அதிக நேரம் செலவிடும் குழந்தையாக இருந்தால், உடற்பயிற்சியின் நன்மைகள் குறித்துப் பேசுங்கள். உடற்பயிற்சி சாதனங்கள் குறித்துப் பேசுங்கள். என்னுடன் மார்க்கெட் வருகிறாயா? அங்கு பலவிதமான கடைகள் இருக்கும் என கற்பனையைத் தூண்டி, ஆர்வத்தை உருவாக்குங்கள். புத்தகங்கள் குறித்து, வரலாறு பற்றி, உலகின் தலைசிறந்த ஆளுமைகளைக் குறித்து, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கும் எதுவாக இருந்தாலும், அது குறித்து முதலில் ஆர்வத்தை உருவாக்குங்கள். அவர்களிடம் ஆர்வத்தை மட்டுமே நீங்கள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் தானாகவே அந்தப் பழக்கத்துக்கு வந்துவிடுவார்கள். மேலும், இதைச் செய் அதைச் செய் எனக் கட்டளை இடுவதைத் தவிர்க்கலாம். சுயப் புராணத்தையும் தவிர்க்கலாம். அவர்கள் நம்மைவிட அறிவிலும் உணர்வுகளிலும் ஒரு படி முன்னேதான் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு வணிக வளாகத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய காட்சி. நேர்த்தியான உடை அணிந்த பெற்றோர், தங்கள் 4 வயது குழந்தையுடன் வணிக அங்காடியில் நுழைந்தார்கள். அங்கு குழந்தை ஒரு விளையாட்டு பொம்மையை எடுத்தது. எனக்கு இப்போது இது வேண்டும் என அடம்பிடிக்கிறது. சிறிது நேரத்தில் தரையில் விழுந்து புரண்டு அழுகிறது. பெற்றோர் பொறுமையாக, பதற்றப்படாமல், சிறிது விலகி இருந்து அந்தக் குழந்தையைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். குழந்தை, சிறிது நேரத்தில் அழுகையின் வீரியம் குறைந்து எழுந்து பெற்றோரைத் தேடத் தொடங்கியது. குழந்தையைப் பார்த்தவுடன் அம்மா மெதுவாக வெளியே நடக்க ஆரம்பித்தார். குழந்தையும் அவர்கள் பின்னால் நடக்க ஆரம்பித்தது. எவ்வளவு எளிமையாக, அழகாகக் கையாண்டிருக்கிறார்கள்!

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது, எதிர்வினையாக எதுவும் ஆற்றாமல் அவர்களுடைய நடத்தையை அமைதியாகக் கையாளுங்கள். அவர்கள் அடம்பிடிப்பதால் உங்களிடம் எதையுமே சாதிக்க முடியாது என்ற எண்ணத்தைச் சிலமுறை பொறுமையாக உணர்த்துங்கள். உங்களிடம் அடம்பிடிப்பதால் எதுவும் சாதிக்க முடியாது என்ற எண்ணம் உருவான பிறகு, அடம்பிடிப்பதைத் தானாகவே நிறுத்திவிடுவார்கள்.

குழந்தைகள் எடுத்து வைக்கும் முதல் அடி, முதல் வார்த்தை எல்லாவற்றையும் கைதட்டி உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சியைக் காட்டினோம். அந்த மகிழ்ச்சியும் பாராட்டிப் பேசும் வார்த்தைகளும் கைதட்டலும் குழந்தையை அந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.

ஆனால், ஆர்வக்கோளாறு காரணமாக, சில நேரத்தில் தவறான செயல்களுக்கும்கூட, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தவறான சமிக்ஞை கொடுத்துவிடுகிறோம். எனவே தவறான செயல்கள் எதுவாயினும் அதற்கு காரணங்கள் கண்டுபிடிக்காமல் உங்கள் மறுப்பைக் காட்டுங்கள். நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை உறுதிப்படச் சொல்லிவிடுங்கள்.

அன்புக்கும் (love) ஆடம்பரச் சலுகைக்கும் (pampering) வித்தியாசம் உண்டு. அந்த வித்தியாசத்தை உணர்ந்து, குழந்தைகளுக்கு அன்பை மட்டுமே கொடுங்கள். ஆடம்பரச் சலுகைகளை அல்ல.

இறுதியாக முதல் வார்த்தை உச்சரித்தபோது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோம்! முதலில் அம்மா, அப்பா என்று அழைத்த போது, எவ்வளவு ஆனந்தம் அடைந்தோம்! அவ்வாறு அழைப்பதற்காக எத்தனை முறை அந்தக் குழந்தையிடம் அம்மா, அப்பா என்ற வார்த்தையை உச்சரித்துக் காட்டி இருப்போம்? அதேபோல், அத்தனை முறை ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் நீங்கள் பொறுமையாகச் சொல்லித் தரவேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.

குழந்தைப் பருவம் என்பது ஒரு செழிப்பான வெற்று நிலம். எதை விதைக்கிறோமோ அதுவே அதில் விளையும். அதுவும் அசுர வேகத்தில் வளரும். அந்த வெற்று நிலத்தில், தேவையான நல்ல விதைகளை மட்டும், நிதானமாக விதைத்துவிட்டால், வரும் நாட்களில் செழிப்பான பலனை அனுபவிக்கலாம்.

நல்ல விதைகளை குழந்தைகள் மனத்தில் விதைத்து, வாழ்வைக் கொண்டாட அவர்களையும் தயார்படுத்திக்கொண்டே நாமும் வாழ்வைக் கொண்டாடலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.