பெண்களுக்கான எல்லைகள் விரிந்துள்ளன என்று தினந்தோறும் நாம் கூவிக்கொண்டிருந்தாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், வன்முறைகள், மட்டம் தட்டுதல்கள் எல்லாமே முன்பைவிட அதிகரித்துள்ளன. மாற்றம் வந்துவிட்டது என்று பெண்கள் எண்ணிக்கொண்டிருந்தாலும் முன்பைவிட அவர்களுக்கு வேலைச்சுமை பல மடங்காகியுள்ளது என்பதை அவர்கள் உணரவில்லை.                     

காலை முதல் இரவு வரை ஓய்வின்றிக்  குடும்பத்திற்காகவே உழைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் தனக்கென சிறிது பொழுதாவது கழிக்கிறார்களா என்றால் இல்லை. தனக்காகச் சற்று நேரம் ஒதுக்கி, தனக்குப் பிடித்த இசை கேட்பது, ஓவியம் வரைவது, புத்தகம் வாசிப்பது,  கைவேலைகளில் ஈடுபடுவது, நடனம் ஆடுவது, சமூக சேவையில் ஈடுபடுவது, திரைப்படம் பார்ப்பது  என்று அந்தப் பொழுதைச் செலவு செய்கிறார்களா என்றால் இல்லவே இல்லை. பெரும்பாலானோர் ஓய்வு நேரம் என்றாலே ஒரு வேலையும் செய்யாமல் படுத்துத் தூங்குவது அல்லது வெறுமனே டிவி பார்ப்பது என்றுதான் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. செக்குமாடு போல ஒரே வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் உடலும் மனமும் அலுப்பாகிவிடும். எனவே சிறிது நேரம் வேறு வேலையை அதுவும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்வதே ஓய்வு என்பதன் பொருள். இதை எத்தனை பேர் புரிந்து வைத்துள்ளார்கள்? அப்படியே புரிந்தாலும் எத்தனை பேர் செயல்படுத்த முன்வருகிறார்கள்?                    

நம் இந்தியப் பெண்களின் மிகப் பெரிய மனக்குறை எதுவென்றால் தோழமையான கணவன் கிடைக்காததுதான். மனம்விட்டுத் தன்னுடைய விருப்பங்கள், ஆசைகள், எதிபார்ப்புகள், கஷ்டங்கள், லட்சியங்களை எல்லாம் தனது கணவனிடமே பகிர்ந்துகொள்ள எண்ணுவார்கள். ஆனால், பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால் அத்தகைய தோழமை மிகுந்த, புரிதலுடன் கூடிய கணவன் 99% பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான். இதனால்தான் கருத்துவேறுபாடுகள் உருவாகின்றன.                       

‘கனவு காணுங்கள்’ என்ற சொற்றொடரைப் பிரபலமாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஆனால், இன்னும் கனவு காணும் உரிமை நம் தேசத்துப் பெண்களுக்கு மிக அரிதாகவே கிடைக்கிறது. அவர்கள் காணும் கனவுகள்கூட அவர்களது தந்தை, கணவன், சகோதரன், மகன் போன்றோரைச் சார்ந்தே இருக்கிறது. எத்தனை பெரிய அவலம் இது? எத்தனை பெரிய கனவுகள் கண்டாலும் லட்சியங்களை வளர்த்துக்கொண்டாலும் எத்தனை பெண்களுக்கு அந்த இலக்கை முழுமையாகச் சென்று எட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது? பெண்ணுக்கு என்று தனித்த அடையாளமாக எதுவுமே இருப்பதில்லை என்பது தான் உண்மை.

ஒரு திருமண விழாவில் உறவினர், தோழிகளுடன் உரையாடிக்கொண்டிருந்த போது, பெண்ணின் அடையாளம் எது என்று பேசும்போது, கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே சிந்திக்கத் தலைப்பட்டனர். “அட, ஆமா… இதுவரைக்கும் எனக்கான அடையாளம் எதுன்னு யோசிச்சதேயில்லை” என்றும், “இன்னாரோட பொண்ணு, சகோதரி, மனைவி, அம்மா, மாமியார்னு இன்னொருத்தரை அடையாளப்படுத்திதானே என்னைச் சொல்றாங்க” என்றும் அங்கலாய்ப்புகள் எழுந்தன. அதுவரை தனக்குள் கனன்றுகொண்டிருந்த சாதிக்க வேண்டும் என்ற நெருப்பு, காலப்போக்கில் திருமணம், குழந்தைகள், குடும்பம் என்று ஆனதில் நீறுபூத்துக் கிடந்ததை எல்லோருமே உணர்ந்துகொண்டனர். “இனிமேலாவது எனக்குன்னு ஒரு அடையாளத்தை உண்டு பண்ணிக்குறேன்… எனக்கே எனக்குன்னு ஒரு அரைமணி நேரத்தையாவது ஒதுக்கிக்குறேன்” என்றும் முடிவு செய்தனர். அன்றைய பொழுது நிறைவாக இருந்தது.                   

திருமணம் என்ற ஒரு சிறந்த அமைப்பு இன்று எந்த அளவில் பெண்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் பங்கு வகிக்கிறது என்ற கேள்விக்கு மனசாட்சிப்படி பதிலளிக்க நினைத்தால் வெறும் கேள்விதான் மிஞ்சும். ஏனெனில் படிக்கும் போது சாதிக்கும் கனவுகள் கண்ட பெண்கள், திருமணத்திற்குப் பிறகு தனது மூச்சுக் காற்றையே கணவன், குடும்பம் சார்ந்துதான் வெளிவிட முடிகிறது. ‘ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே’ என்ற ஆணாதிக்கச் சமூகம்தானே இது. நினைத்தவுடன் வெளியில் செல்ல ஓர் ஆணால் முடிகிறது. ஆனால், ஒரு பெண் சிறிது நேரம் வெளியில் செல்ல நினைத்தால் தண்ணீர் பிடித்து வைத்து, காஸ் சிலிண்டர் வந்தால் வாங்கி வைக்க ஏற்பாடு செய்துவிட்டு, வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்குச் சாப்பிட ஏதேனும் சமைத்து வைத்து, இன்னும் சில பல சில்லறை வேலைகளை முடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. வெளியில் சென்றாலும் நிம்மதியாக இருக்கிறார்களா? மழை வருவது போல் இருந்தால் எடுத்து வைக்க மறந்துவிட்ட கொடியில் உள்ள துணிகளுக்காகக் கவலைப்படுகிறார்கள்.                  

வீட்டுவேலைகளில் மனைவிக்கு உதவி செய்ய இந்தியக் கணவர்கள் வெட்கப்படுகிறார்கள். வீட்டுவேலை, சமையல் வேலை என்பது முழுக்க முழுக்கப் பெண்களுக்கு மட்டுமேயானது என்பது அவர்களது ரத்தத்திலேயே ஊறிவிட்ட விஷயம். இதை மாற்றுவது என்பது பெண்களின் கையில்தான் உள்ளது. தப்பித் தவறி உதவி செய்யும் கணவர்களை ஏதோ அற்பப் புழுவைப் பார்ப்பது போலவே இந்தச் சமூகம் பார்க்கிறது. கேலி, கிண்டல் செய்கிறது. இதற்குப் பயந்தே பெரும்பாலானோர் மனைவிக்கு உதவுவதில்லை. இந்த நிலை மாறவேண்டும். வீட்டின் பொருளாதாரத் தேவையில் பெண்கள் பங்கெடுத்துக்கொள்ளும் போது அவர்களது வீட்டுவேலைகளிலும் ஆண்கள் பங்கெடுப்பது தவறில்லை. உடல்நிலை சரியில்லாத கணவனை வேலைக்குச் செல்லும் மனைவி, தனது வேலையைக்கூட தியாகம் செய்து விட்டுக் கவனித்துக்கொள்கிறாள். ஆனால், அது போன்ற நிலை வரும்போது எத்தனை கணவர்கள் தனது மனைவியை விடுமுறை போட்டு கவனித்துக்கொள்கிறார்கள்?                  

பொது இடத்தில் தனது மனைவியை அன்பாக அணைத்துக்கொள்ளவோ நேசத்தை வெளிப்படுத்தி தோளோடு சேர்த்துக்கொள்ளவோ ஆதரவாகத்  தலையை வருடிவிடவோ நம் தேசத்து ஆண்கள் முன்வருவதில்லை. பொது இடத்தில் இதுபோல் நடந்துகொள்வது நம் கலாச்சாரம் இல்லை என்பது அவர்களது வாதம். ஆனால், இதே ஆண்கள் பொது இடத்தில் தனது மனைவியைக் கைநீட்டி அடிப்பதை நினைத்து வெட்கப்படுவதில்லை. சொல்லப் போனால் நிறையப் பேர் அவர்களது மனைவியை நாலுபேர் முன்னால் திட்டும்போதும் அடிக்கும்போதும்தான் அவர்களது பெருமிதம் வெளிப்படுவதாக எண்ணுகிறார்கள். இது எத்தனை கேவலமான ஒன்று. இதை எதிர்த்துக்  குரல் கொடுக்கும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கிறது?                   

காலங்காலமாக அடுப்படியிலேயே வெந்துகொண்டிருந்த நமது பெண்கள் சமீபக் காலமாகத்தான் வெளிக் காற்றைச் சுவாசிக்கிறார்கள். ஆனால், அதற்கும் எத்தனை முட்டுக்கட்டைகளை இந்த ஆணாதிக்கச் சமுதாயம் ஏற்படுத்தி வருகிறது! பாலியல் வன்முறைகள், அடக்குமுறைகள், குடும்ப வன்முறைகள் என்று பெண்கள் மீதான சுமைகள் இன்னும் அதிகமாகவே ஏற்றப்படுகின்றன. இனிப்பு தடவிய வார்த்தைகளால் பசப்பு மொழிகளைப் பேசி மயக்கவும் வேண்டாம்; சுடுசொற்களால் சுட்டெரிக்கவும் வேண்டாம். பெண் என்று சொல்லியே தனிச் சலுகைகள் தந்து அவமானப்படுத்தவும் வேண்டாம். எங்களையும் சக உயிராக, சக மனிதராக, சக தோழியாக மதியுங்கள். அது மட்டும் போதும். எங்களுக்கான உரிமைகளை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். எங்களுக்கும் சுயம் உண்டு. தனிச் சிந்தனை உண்டு. எங்களை மதிக்கவும் வேண்டாம்; ஏறி மிதிக்கவும் வேண்டாம். அனுசரணையோடு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வாழலாம் என்பதே இன்று எண்ணற்ற பெண்களின் எண்ணம்.                 

பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கற்பிதங்கள் ஆண்களால் தாம் உருவாக்கப்பட்டன. அதனால்தான் பெண் என்னும் பிம்பம் புனிதமாகக் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அந்த அளவுக்குப் பெண்ணை தெய்வமாக உயர்த்திவிட்டு, பலிபீடத்தில் அவளைத்தான் வெட்டுகிறார்கள். இது புரியாத பெண்கள், ஆண்கள் தங்களுக்குச் சம உரிமை கொடுத்தாகச் சிலாகிக்கிறார்கள். உரிமை என்பது ‘கொடுத்து’ பெறுவதல்ல என்ற உண்மை இன்னும் இவர்களுக்குப் புரியவே இல்லை.                     

நமக்கு உரிமை கொடுக்க ஆண்கள் யார்? அவர்களிடம் யாசித்து நாம் பெரும் உரிமை நமக்கான வெற்றியா? நமது கடமைகள், உரிமைகள் எதுவென்பது நமக்குத் தெரியும். அதனை நாம் செயல்படுத்தினாலே போதும். முதலில் நமக்கான உரிமை என்ன என்பதை நாம் உணர்வோம். அதனை நம் வாழ்வில் செயல்படுத்துவோம்.                   

கலாச்சார, பண்பாட்டுக் குவி மையமாகப் பெண்ணுடல் (ஆம்… பெண்ணின் உடல் மட்டும் தான்… மனம் அல்ல) இங்கு பவித்திரப்படுத்தப் படுகிறது. தன்னம்பிக்கை மிகுந்த பெண்கள் ‘திமிர் பிடித்தவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். அதுவும் யாரால்? ஆணாதிக்க சிந்தனையைத் தனது மூளைக்குள் புகுத்திக்கொண்ட பெண்களாலேயே தான் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.             

ஒழுக்கம் என்பதற்கு வரையறை தான் என்ன? ஆண் தன் மனம் போல் திரிந்துவிட்டுப் பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கக் கோட்டை வரைந்து கட்டுப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?                  

பெண் குழந்தை செலவு, ஆண் குழந்தை வரவு என்ற கண்ணோட்டம் இன்னும் இங்கு மாறவில்லை. திருமணம் என்ற ஒன்று இருமன இணைவாக இன்னும் இங்கு அமையவில்லை. அது வரவு, செலவு கணக்காகவே இருக்கிறது.                 

செய்தி ஊடகங்களின் விரல்கள் எந்த ஒரு நிகழ்விலும் பெண்ணைக் குறி வைத்தே நீளுகின்றன. “ஒரு பெண்ணாக இருந்து கொண்டு..” “ஒரு பெண் இப்படிச் செய்யலாமா?” என்றெல்லாம் கேட்பதால் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று மறைமுகமாக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் ஒரு பெண் தனது கருத்தை வெளியிட்டால் அதற்கு ஆபாசமான பின்னூட்டங்களை இட்டு தரமற்ற செயல்களால் அவர்களைப் பொதுவெளியில் செயல்படாமல் ‘அடக்கி’ வைக்கத்தான் இந்தச் சமுதாயம் நினைக்கிறது.

எத்தனையோ இருண்ட நூற்றாண்டுகளைக் கடந்து இப்போதுதான் பெண்கள் வெளியே வரவும் குரல் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறார்கள். ஆண்கள் அவர்களுக்கு ஆதரவு எல்லாம் கொடுக்க வேண்டாம். அவரவருக்கான இடத்தை இயல்பாக எடுத்துக்கொள்ளும் வகையில் சமுதாயம் இருந்தாலே போதும். இதர மாற்றங்கள் எல்லாம் தன்னாலே நிகழும்.

சிறகுகள் இப்போதுதான் முளைக்கத் தொடங்கியுள்ளன. நம்மைப் பிணைத்துள்ள விலங்குகள் இப்போதுதான் ஒவ்வொன்றாகக் கழன்று விழத் தொடங்கியுள்ளன. நம்மைச் சிறை வைத்த கூ(வீ)ட்டுக் கதவுகள் இப்போதுதான் மெல்லத் திறக்கத் தொடங்கியுள்ளன. நம் கூட்டுப்புழுப் பருவம் முடிந்து நாம் அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறத் தொடங்கியுள்ளோம். நம் இலக்குகளை நோக்கிச் சிறகடிக்கும் காலம் தொடங்கப் போகிறது. தயக்கத்தை உதறி, தைரியமாக வாடி ராசாத்தி… புதுசா இளசா ரவுசா போவோம்… வாடி வாலாட்டி…!

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.