காதணிகள்

‘ஒத்த ரூவா தாரேன் ஒரு ஒணப்பத்தட்டும் தாரேன்’ என ‘நாட்டுப்புறப் பாட்டு’ திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். இதில் வரும் ‘ஒணப்புத்தட்டு’ காதணி வகையில் ஒன்று. இந்தப் படம் வலைத்தளத்தில் வந்தது. இதில் கோப்பு எனச் சொல்லப்படுவதை என் அப்பம்மா ‘பூடி’ என்பார்கள். அதே போல மூக்கில் போடும் அணிகலனைத் தான் புல்லாக்கு என்பார்கள். ஊருக்கு ஊர் பெயர்களில் மாற்றம் இருக்கிறது.

காதணி என எடுத்துக்கொண்டால், எங்கள் பாட்டிகளில் பெரும்பாலானோர் தடையம் என எங்கள் ஊரிலும், பாம்படம் எனப் பொதுவெளியிலும் அழைக்கப்படும் காது அணிகலனை அணிந்திருந்தனர்.

தடையம் என்றதும் முதன் முதலில் எனக்கு நினைவுக்கு வருவது இந்தப் படம் தான்.

தடையம் போடுவதற்கென காதுகளை ஆயத்தம் செய்வதைக் ‘காது வடிப்பு’ என்கிறார்கள். புத்தரின் சிலைகளைப் பார்த்தால், அவர் காது வடித்திருப்பார். சமண முனிவர்களின் சிலைகளும் அவ்வாறே உள்ளன. அதனால் இது பன்நெடுங்காலமாகவே உள்ள ஒரு வழக்கம் என எடுத்துக்கொள்ளலாம்.

காது வடிப்பதற்கென கைராசியான பொற்கொல்லர்களைத் தட்சணை எல்லாம் கொடுத்துக் கூப்பிடுவார்கள். காதுகளைச் சிறிது கீறி உள்ளே சிறிது பஞ்சை வைத்தால், சில நாட்களில் கீறல் பெரிதாகும். பிறகு பெரிய பஞ்சை வைப்பார்கள். குறிப்பிட்ட அளவிற்கு காது கீறலின் நீளம் பெரிதானதும், ‘குணுக்கு’ போடுவார்கள். குணுக்கு என்பது பார்க்கச் சிறிதாகத் தெரிந்தாலும் நல்ல கனமாக இருக்கும் ஈயத்தால் செய்யப்பட்ட காதணி. (பார்க்கச் சிறிதாக ஆனால் கனமானதாக இருந்தால், ‘நல்ல குணுக்கு போல இருக்கிறது’ என மிக இயல்பாகச் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்). குணுக்கின் கனத்தினால் காதின் கீறல் இன்னமும் நீளும். குறிப்பிட்ட நீளம் வந்ததும் தடையம் போடுவார்கள்.

தடையம் சதுரம், செவ்வகம், முக்கோணம், அரைவட்டம், கோளம் என வடிவியல் அமைப்புகளின் தொகுப்பான ஓர் அணிகலன். பொருளாதார நிலைக்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். பொருளாதாரம் குறைய குறைய ஒவ்வொன்றாகக் கழற்றி விற்கப்படும். வடிவியல் அமைப்புகள் அனைத்தையும் சேர்த்து, காதினுள் மாட்டி இரு முனைகளையும் இணைத்துப் பூட்டிவிடுவார்கள். இவை அனைத்துமே என் அப்பம்மா சொன்னதில் எனக்கு நினைவு உள்ளவை.

பாம்படம் அணிந்துகொண்டு இரு பாட்டிகள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தபோது, திருடர்கள் காதில் போட்டிருந்த பாம்படங்களைக் கழற்றிவிட்டு விரைவில் சென்று யாரையும் கூட்டி வந்துவிடக் கூடாதென, ஒரு பூட்டை எடுத்து பாட்டிகளின் இரு காதையும் சேர்த்தவாறு பூட்டுப் போட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதான கதை ஒவ்வொரு வட்டாரத்திலும் உண்டு. எங்கள் பகுதியில், ‘தன்னை ஏளனமாகத் திட்டிய இரு பெண்களின் காதுகளை செம்புலிங்கம் இவ்வாறு இணைத்துப் பூட்டுப் போட்டார்’ எனக் கதை உண்டு.

அப்பம்மா தண்டட்டி, பாம்படம், முடிச்சி போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்துவார்கள். எல்லாம் ஒன்றா அல்லது வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

என் அப்பம்மா பேச்சிலிருந்து, அவர்கள் காலக்கட்டத்தில், காதிதுக்குத் தடையம், செவிப்பூ அல்லது பூக்கள் அணிந்திருக்கிறார்கள். செவிப்பூ என்பது காதின் மேற்பக்கம் இப்போது பல கம்மல்கள் போடுகிறார்களே அது போன்று போடப்பட்ட கம்மல். தினைகளைக் கொய்ய வரும் பறவைகளை விரட்டுவதற்காகப் பெண்கள் தமது காதணிகளைக் கழற்றி எறிந்தார்கள் எனச் சங்ககாலப் பாடல்கள் குறிப்பிடுவது இந்தச் செவிப்பூ தான். பூடி என்பது மேற்காதில், நடுப்பகுதியில், பூவடிவத்தில் அணிவது.

ஆண்கள் கல் பதித்த கடுக்கண் அணிந்திருக்கின்றனர். ‘குழை’ என்ற அணிகலனை அணிந்துள்ள தென்திருப்பேரை பெருமாள் ‘குழைக்காதர்’ என்று தான் அழைக்கப்படுகிறார். கப்பல்களில் வேலை செய்யும் ஆண்கள் அடையாளத்திற்காக அணிந்திருக்கின்றனர். கடலில், இறந்து போனால் அடையாளம் கண்டுபிடிக்க இது உதவியாக இருந்திருக்கிறது.

ஆண் குழந்தைகள் ‘வாளி’ அணிந்திருக்கின்றனர். வாளி என்பது சிறு வளையம். அதன் தொடர்ச்சியாகவே இன்றும் கோயிலில் வைத்து காது குத்தும் விழா ஆண்களுக்கும் நடைபெறுகிறது. எங்கள் ஊரில் அந்தோணியார் கோயிலில் வைத்து அந்தோணியார் பட்டம் வைத்து வாளி போடுவார்கள். அந்தோணியார் பட்டம் என்பது தலையின் வெளிப்புறம் மட்டும் சிறிது முடி வைத்து, மற்ற இடங்களின் மொத்த முடியையும் அகற்றும் வகையிலான மொட்டை. பொதுவாக அந்தோணியார் சொரூபம் இப்படியான தலையுடன் தான் இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அந்த வாளியைக் கழற்றி உண்டியலில் போடுவார்கள். அதற்கு ‘வாளி இறக்குதல்’ என்று பெயர். இரு நாள்களிலும் உறவினர்களை அழைத்து ஏழைகளுக்குப் புண்ணியம் அல்லது அசனம் கொடுப்பார்கள். இப்போது அந்த வழக்கம் உள்ளதா எனத் தெரியவில்லை.

பிற்காலத்தில் பல பாட்டிகள், வடித்த காதுகளை மருத்துவர்களிடம் சென்று அறுவை சிகிச்சை செய்து ஒட்ட வைத்து, கம்மல் போட்டுக் கொண்டதையும் பார்த்திருக்கிறேன்.

நாகரிகம் என்பது அவ்வப்போது மாறுவதும், பின் பழைய கால பாணி நாகரிகமாக மாறுவதும் உண்டு. இப்போது பலர் தோள் வரையிலான காதணிகள் அணிவதுகூடப் பாம்படத்தின் நீட்சி போலவே உள்ளது.

40 களுக்குப் பின் இவ்வாறு காது வடிப்பது மிகவும் குறைந்து விட்டது. இவ்வாறு பாம்படம் வழக்கொழிந்த காலக்கட்டத்தில் நீளமான லோலாக்குகள் (டோலாக்குகள்) வந்தன. 50 களின் புகைப்படங்களைப் பார்த்தால் பெண்கள் பெரிய கம்மல் அதன் கீழே தொங்கும் தொங்கட்டான் எனப் போட்டிருக்கிறார்கள். கம்மல், தங்கம் மட்டும் உள்ள கம்மலாகவோ கல் பதித்த கம்மலாகவோ இருந்தது. கல் கம்மலுக்குக் கீழே கல் தொங்கட்டான், தங்க கம்மலுக்குக் கீழே தங்கத் தொங்கட்டான் என இருந்தன. சிலவற்றில் கம்மல் தொங்கட்டான் இரண்டும் தனித்தனியாகப் பிரிக்கும்படியாக இருக்கும். அப்படி இருந்தால் விழாக்களின் போது மட்டும், தொங்கட்டான், மற்ற நாட்களில் கம்மல் மட்டும் எனப் பலர் அணிந்தனர். அதற்குப் பின் உலகப்புகழ் வாய்ந்த ஜிமிக்கி கம்மல், நடுவில் கல் பதித்த நீள சங்கிலியுடன் வந்தது. இந்த ஜிமிக்கியில் மேலே உள்ள கம்மல் சிறிதாகவும் கீழே உள்ள ஜிமிக்கி அளவில் பெரிதாக இருந்தது.

60களில் நன்கு பெரிய அளவிலான கம்மல்கள் வந்தன. தேன்கூடு கம்மல், இலைக்கம்மல், கல்வைத்த / வைக்காத பூக்கம்மல்கள் என விதவிதமான பெரிய கம்மல்கள் வந்தன. வெள்ளைக்கல், பாசி, கருகமணி, முத்து பதிக்கப்பட்ட கம்மல்கள் வந்தன.

அந்தக் காலக்கட்டத்தில் இளம் பெண்களாக இருந்தவர்கள், பெரிய அளவில் டோலாக்கு, தொங்கட்டான் போன்றவற்றை இன்றும் பெரிதும் போடுவதில்லை. நீளமாகச் சங்கிலி இருந்தால் ‘தடையம் போல இருக்கிறது’ வேண்டாம் என்பார்கள். இன்று வயதான பின், காது இழுத்து, கம்மல்கள் குடை சாய்வதால், அவர்கள் காதைச் சுற்றி மாட்டி மாற்றியிருக்கிறார்கள்.

70களுக்குப் பின் தான் இப்போது பரவலாக இருக்கும் கம்மல், ஜிமிக்கி இரண்டும் ஒரே அளவிலான கம்மல் ஜிமிக்கி வந்தது. வளையம் மிகப் பிரபலமானது. மேலே நீலக்கல் வைத்த வளையம், மேலே சிறு தங்க உருண்டை வைத்த வளையம், வெறுமனே வட்டமாக இருக்கும் வளையம் என விதவிதமான வளையங்கள் வந்தன. மிகச் சிலர் மிகப்பெரிய வளையங்களைப் போட்டிருந்தார்கள். கையில் போட வேண்டியதைக் காதில் போட்டிருக்கிறாள் என அவர்கள் மீது விமரிசனம் இருந்தது. இரண்டு கம்மல் இருந்தவர்களிடம் கம்மல், ஜிமிக்கி, வளையம் கண்டிப்பாக இருந்தது.

80களில் ஒன் டூ த்ரீ எனக் கம்மல் வந்தது. காதில் ஒரு குண்டு கம்மல். தொங்கட்டானாக மெல்லிய சங்கிலியில் ஒன்றின் கீழ் ஒன்றாக இரண்டு, மூன்று குண்டுகள், என்பது தான் இந்த ஒன் டூ த்ரீ. பின் இரண்டு சங்கிலியில் இரண்டு குண்டு, மூன்று சங்கிலியில் மூன்று குண்டு என வந்தன. ஜிமிக்கி, கிளிக்கூண்டு ஜிமிக்கியாக மாறியது. இந்தக் காலகட்டத்தில் கையால் நகை செய்யப்பட வேலை குறைந்து இயந்திரங்கள் மூலம் செய்யும் வேலை மிகுதியானது. அதனால் இப்போது வரக்கூடிய ரகங்கள் பலவும் அப்போதிலிருந்தே வரத் தொடங்கின. காதுக்கும் முடிக்கும் இடையிலான மாட்டிகள் வந்தன. கம்மலுக்கு மேலே காது குத்தாமலேயே கிளிப் போல கம்மல் போடும் முறை வந்தது.

இயந்திர வேலைப்பாட்டிற்கும் கை வேலைப்பாட்டிற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. கையால் பாதிக்கப்படும் கற்கள் கீழே விழுந்து நான் பார்த்ததே இல்லை.

90கள் வரை தங்கக் கம்மல் இருப்பவர்கள் கம்மல்கள், தங்கமல்லாது நகைகள் பெரியளவில் போட்டதில்லை. அதன்பிறகு விதவிதமாக ஆடையின் நிறத்துக்கு இணையான நிறத்தில் கம்மல்கள் அணியத் தொடங்கினர். அந்த நல்ல வழக்கம் இன்றும் தொடர்கிறது.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.