“அலோ… றமா… எப்படி சுகமா இருக்கறியளா? உங்கட பெடியனும் பெட்டையும் சுகந்தானே? றமாவோட கதைச்சி கனகாலம் ஆச்செண்டு தான் இண்டைக்கு கால் எடுத்தனன். நான் எப்பிடி இருக்கிறன் எண்டு கேக்கிறியளா… ஏதோ பறவாயில்ல, இருக்கிறன். என்ர வாழ்க்கையில் சில மறக்க முடியாத மாற்றங்களும் இந்த கொரானாவினால நடந்து போச்சு. அதெல்லாம் என்னெண்டு விளாவாரியாப் பிறகு தெரியப்படுத்திறனே… உங்கட நாட்டுக்குக் கூப்பிடறியளா? எனக்குப் பிடிச்ச நாடு உங்கட தானெண்டு உங்களுக்கும் தெரியும்தானே? இந்தியாக்கு வரோனும் எண்டு விருப்பம் நிறம்ப இருக்குத்தான், வரத்தான் ஏலாமக் கெடக்கு, எங்கட நாட்டில் சாமானுகளின்ர தட்டுப்பாடு ஒருபக்கம் கூடிக்கொண்டு கிடக்கு, விலையும் இன்னொரு பக்கம் கூடுறது எண்டு நாடு போய்க்கொண்டு கிடக்கு, எப்படி நாட்கள கடத்தப் போறோமெண்டுப் புரியாமக் கிடக்கினம்” என்று யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர் சங்கத்தோழியின் தேன்தமிழ்க்குரல் வெகு நாட்களுக்குப் பிறகு பாய்ந்து வந்தது. அந்தச் செய்தியின் கரு மனதைக் கனக்கச் செய்தாலும் பாரதிதாசன், “தமிழுக்கு மதுவென்று பேர்” சொன்னதாலோ என்னவோ, அந்தத் தமிழின் இனிமை கேட்கும்போதே போதையாகத்தான் இருக்கிறது.

மொழி ஒன்றென்றாலும் பேச்சு வழக்குகள் முற்றாக மாறிக்கிடக்கின்றன இந்து சமுத்திரத்தின் இருபுறமும். நீண்ட காலம் தமிழகத்தில் இருந்து கடலால் பிரிக்கப்பட்டிருப்பதும் வேறுபட்ட வரலாற்று, அரசியல் சூழல்களும் மாறுபட்ட பண்பாட்டுத் தாக்கங்களுமாகப் பல்வேறு கூறுகள் இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம். நாம் தூயத் தமிழைப் பழைய சினிமாக்களில் மட்டுமே ஆவணப்படுத்திவிட்டு, ‘தமிங்கிலிஷ்’ நோக்கிக் கெதியாகப் போய்விட்டோம். ஆனால், இலக்கணத் தமிழுடன் ஒத்ததாக இலங்கைத் தமிழரின் வார்த்தை உச்சரிப்புக்கள் இன்றைக்கும் இருக்கின்றன. நாம் பயன்படுத்தாத தூயத் தமிழ் வார்த்தைகள் சரளமாகப் புழக்கத்தில் உள்ளன. பெரியவர் முதல் சிறுவர் வரை, அவர்களின் மொழி ஆளுமை வியக்க வைக்கிறது. நான்காம் ஆண்டு (வகுப்பு) பயிலும் அபிஷக் உடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் பயன்படுத்தும் தூயத் தமிழ்சொற்களும் இலக்கண அறிவும் அசரடித்தன.

முதன்முதலில் இலங்கைத் தமிழ் நமக்கு வானொலி வழியாகவே பரிச்சயமானது. இலங்கை அறிவிப்பாளர்களின் குரலுக்கும் தமிழுக்கும் மனதைப் பறிகொடுத்து பித்தாய் அலைந்தார்கள். தொலைக்காட்சிகளும் தமிழ்த் திரைப்படங்களும் நாமறிந்த இலங்கைத் தமிழின் வட்டத்தைச் சற்றே பெரிதாக்கின. யூ டியூப் காணொளிகளால் மேலும் சற்று அதிகப்படியாக அறிந்துகொண்டோம். ஆனாலும் நமக்குத் தெரிந்த அப்துல்ஹமீதும் தெனாலி கமலும் கன்னத்தில் முத்தமிட்டால் நந்திதா தாஸும் பிக்பாஸ் தர்ஷனும் லொஸ்லியாவும் யூ டியூபில் வரும் ஆளுமைகளும் பேசுவது ஒரே தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் நாம். ஆனால், அப்துல்ஹமீது பேசுவது இஸ்லாமிய உச்சரிப்புடன் கூடிய தமிழ் என்றும் கன்னத்தில் முத்தமிட்டால் நந்திதாதாஸ் பேசும் தமிழ் வன்னித்தமிழ் என்றும் பிக்பாஸ் தர்ஷன் தமிழில் யாழ்ப்பாண வட்டார வழக்கு கலந்திருப்பதாகவும் லொஸ்லியாவின் தமிழில் கொழும்புப் பேச்சும், அவர் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவராதலால், அது சார்ந்த உச்சரிப்பும் கலந்திருப்பதாகவும் தெனாலி கமல் பேசும் தமிழில் இஸ்லாமிய உச்சரிப்பின் சாயல் இருப்பதாகவும் (அவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் அப்துல்ஹமீது என்பதால் இருக்கலாம்) விரிவாகக்கூறி மிரள வைக்கிறார் நண்பர் மடுதீன்.

ஆம், தமிழகத்தில் பல்வேறு வட்டார வழக்குகள் இருப்பது போலவே, இலங்கையிலும் யாழ்ப்பாணத்தமிழ், மட்டக்களப்புத்தமிழ், வன்னித்தமிழ், மலையகத்தமிழ், இஸ்லாமியத்தமிழ் எனப் பேச்சுத்தமிழ் வேறுபடுகிறது. உலகளவில் தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக எத்னொலோக் (Ethnologue) என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. இலங்கையில் பேசப்படும் எல்லாத் தமிழ் வழக்குகளிலும், அதிகம் இலக்கியத் தன்மை வாய்ந்தது மட்டக்களப்புப் பேச்சுத்தமிழ் தான் என்கிறார் கமில் சுவெலபில் என்ற மொழியியலாளர்.

“மிகப் பழமையானது, புராதன தமிழுக்கு நெருக்கமானதுமான யாழ்ப்பாணத்தில் கதைக்கும் தமிழ், உங்கட தமிழுக்குப் புரியக்கூடிய மாதிரி இருக்காது, இந்தியத் தமிழ் பேசும் உங்கட சனங்க அதை மலையாளமெண்டே பிழையாக விளங்கிக்கொள்வதுண்டு” என்கிறார் யாழ்ப்பாணத்து வசந்தி. “ஓம், ஓம், எங்கட சனத்துக்கு யாழ்ப்பாணத்துக்காரா மாதிரி இழுத்து இழுத்துக் கதைக்க ஏலாது தான்” என்று பகடி செய்யும் வன்னிவாசியான ஷர்மிளா, “யான் அறிந்த தமிழ்மொழிகளிலே வன்னித்தமிழ்ப் போல வளமான தமிழ் இல்லை” என்று அடித்துக் கூறுகிறார். திரிகோணமலை வாசிகள் சிங்களவர்களுடன் கலந்து வாழ்வதால், அவர்களது தமிழ் உச்சரிப்புகள், சிங்கள உச்சரிப்புகள் போலவே இருக்கிறதாம். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த அக்காக்கள் பேசிய கண்டித் தமிழ் ஏறத்தாழ நமது இந்தியத் தமிழ் போலவே எனக்குத் தோன்றியது. மட்டக்களப்புத் தமிழை (மட்டக்களப்ப்பு, அம்பாறை மாவட்டங்கள் இணைந்தது) மெய்மறந்து கேட்கலாம், புதுப்புது வார்த்தைகள் கற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். கொழும்புத் தமிழ் (சென்னைத்தமிழ் போல) அனைத்து உச்சரிப்பும் கலந்து கட்டி கூட்டாஞ்சோறு போல் இருக்கிறது.

எத்தனை விதமாகத் தமிழ் பேசினாலும், நாம் தொலைத்துவிட்ட தமிழ் வார்த்தைகளை அவர்கள் வாயிலாக கேட்கும்போது மகிழ்வாகத்தான் இருக்கிறது. காணும் (போதும்), திகதி, பெட்டை, பெடியன், வளவு (வீட்டு நிலம்), பாவித்தல் (பயன்படுத்து) ஆறுதலா (மெதுவாக,) கெதியாக (விரைவாக), திறப்பு (சாவி) கொச்சிக்கா (மிளகாய்), மனுசி (மனைவி), ஒள்ளுப்பம், பாடசாலை, ஏலுமோ, நித்திரை, வடிவு, பகடி எனத் தமிழ் சொற்கள் இயல்பாக விரவிக்கிடக்கின்றன அவர்களது உரையாடல்களில். புகையிரத நிலையம், வெதுப்பகம், வைப்பகம், அழகுமாடம், வெதும்பி, குளிர்களி எனப் போகுமிடமெங்கும் தூயத் தமிழ் பெயர்ப்பலகைகளைக் காண முடிகிறது. பேச்சுவழக்கில் வராத நிறைய தமிழ்ச் சொற்கள் எழுத்து வழக்கில் பயன்படுத்துகிறார்கள். அரசு ஆணையையோ அலுவலக கடிதத்தையோ வாசிக்க முயன்றால், “இது சலாமிய பாஷை… சத்தியமாகப் புரியல” என ஓடத் தோன்றுகிறது. தமிழீழக் காவல் துறையின் அணிவகுப்பை ஆவணப்படுத்திய பி.பி.சி., அணி நடையைக்கூட (March Past) தமிழ்க் கட்டளைகள் மூலம் நடத்தியதைச் சிலாகித்து பதிவு செய்திருக்கிறது.

பிறமொழிக்கலப்பு என்பது இயற்கை ஆகையால், இலங்கைத்தமிழும், அதை இயல்பாக உள்வாங்கியுள்ளது. போர்த்துக்கீசியரின் செல்வாக்கின் கீழும், நேரடி ஆட்சியிலும் இருந்ததால் அன்னாசி, பீங்கான், கடுதாசி, கோப்பை அலவாங்கு (கடப்பாரை, ஆசுபத்திரி, கதிரை, குசினி, சப்பாத்து (காலணி), தாச்சி, (இரும்புச்சட்டி, பாண் (றொட்டி) போன்ற போர்த்துகீசிய மொழிச்சொற்கள் கலந்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. டச்சு மொழியிலிருந்து கேத்தல், போத்தல், வங்குரோத்து (நொடிப்பு நிலை) போன்ற சொற்களும் இலங்கைத் தமிழுடன் இரண்டறக்கலந்து விட்டது. ஓரன்ஜ், கோப்பி, ஓஸ்பிட்டல் என மலையாளிகள் போலவே ஆங்கில உச்சரிப்புகள் உள்ளன. குத்துமதிப்பு, அகராதி பிடிச்சவன், சீனி, பைய (மெதுவாக) வெள்ளனே (அதிகாலையிலேயே), கருக்கலில் (மாலையில்) உசுப்பு, ஒசக்க, சாத்தி வை, களவு என மதுரைப்பேச்சு வழக்கிலுள்ள தனித்துவமான சொற்கள் மட்டக்களப்பிலும் காணப்படுவது ஆச்சர்யம்தான்.

எனக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்த பத்தாம் வகுப்பு லட்சுமி டீச்சர் உவன், உவள், உது, உவை, உங்கை, உந்தா போன்ற சுட்டுச் சொற்களெல்லாம், புழக்கத்தில இல்லை என்று சொன்னதை நம்பியிருந்த நான், யாழ்ப்பாணத்தில் சுட்டுச் சொற்களைப் பயன்படுத்துவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். (உவன் நித்திரையாலை இன்னும் எழும்பேலை, நான் வாறன் இப்ப… உவனுக்கு மோனைக் கொஞ்சம் தண்ணி, வாளியோடை கொண்டே ஊத்தினனெண்டா எல்லா நித்திரையும் இப்ப போகும்).

‘ஓ’ என்ற ஒற்றைச்சொல்லிலேயே பலதும் பேசிவிடும் மெரினா எனக்கு எப்போதும் வியப்புதான். அவரது ‘ஓ’ என்ற பதத்திற்குள் ஆம், அப்படியா, ஏன் எனப் பல பொருள்களும், சம்மதம், அதிர்ச்சி, இகழ்ச்சி, கோபம் எனப் பல உணர்வுகளும் பொதிந்திருக்கும். காரணம் கேட்டால், “ஏன் தேவையில்லாம இந்தியாக்காராப் போல வளவளவெண்டு ஒரு கதைக்கு ஒம்பது கதை கதைக்கணும்?” என்ற அவரது பதில் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. (இந்தியாவில் பல ஆண்டுகள் இருந்த அனுபவம்).

இலங்கைத் தோழிகளுக்கு நான் எப்போதும் றமா தான். றமா, றஞ்சித், ற்றொரோன்றோ (Toronto), றோக்கிற், கிரிக்கெற். பிரென்ற் (பிரெண்ட்), பெற்றோல், ஜூவலறி, என ‘ற’ கரத்தின் மீது அப்படியொரு பாசம். அதுபோல் ழகரம் பற்றி பெரிதாகக் கவலையில்லை, வாளைப்பழம் தான், மளை (மழை) தான்.

அழைக்கும் உறவுமுறைகளும் அழகுத்தமிழில் வசீகரிக்கின்றன. யாழ்ப்பாணத் தமிழர்கள் அப்பாவை அப்பு என்றும் அம்மாவை ஆச்சி என்றும் அழைத்த நிலை இன்று மாறிவிட்டது. அம்மா, அப்பா தான். அம்மப்பா, அம்மம்மா, அப்பப்பா, அப்பம்மா என தாத்தா, பாட்டிகளை அழைக்கிறார்கள். அத்தை என்ற வழக்கு இல்லை, மாமி தான். பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா எல்லாம் நம் போலவே. அக்காவின் கணவர் அத்தான், தங்கையின் கணவர் மச்சான், தம்பி மனைவி மச்சாள், மாமா மகளும் மச்சாள் (இளையவராக இருந்தாலும்கூட). தமிழ்நாட்டு பெண்கள் (கணவரை) வாடா, போடாவுக்கு மாறிவிட்டாலும், இலங்கைப் பெண்களுக்கு கணவர் ‘இஞ்சாருங்கோ… இஞ்சாருங்கோ…’ தான். கணவனும் மனைவியும் ஒருவரை இன்னொருவர் அப்பா என அழைத்துக்கொள்கின்றனர். இளையோர் எவரையும் ‘தங்கச்சி’ என்று விளிக்கும்போது அத்தனை அழகாக இருக்கிறது. சம வயது ஆண்கள் ஒருவரை இன்னொருவர் மச்சான் தோது என அழைக்கின்றனர். வயதானவர்களை ஐயா, அம்மா, குழந்தைகளைப் ‘புள்ள’ இப்படிச் செல்கிறது உறவு முறைப் பெயர்கள். என்னை மிகவும் கவர்ந்தது மனைவியையும் குழந்தைகளையும்கூட மரியாதையுடன் அழைக்கும் பாங்குதான். நீ, நான், வா, போ வென ஒருமைச் சொற்கள் எல்லாம் கிடையாது.

உங்க தமிழிலும் இப்போது ஆங்கிலம் கலந்து பேச்சு மாறிவிட்டதோ என்ற கேள்விக்கு வசந்தி கெதியாகச் சொல்கிறார் “இப்ப ஒள்ளுப்பம் இங்கிலிஷ் சேர்ந்திட்டு என்றது உண்ம தான், ஆனாலும் நாங்க கதைக்கிற வழக்குல ஒரு மாத்தமும் இல்ல, உலகத்தில எந்த இடத்தால இருந்தாலும் யாழ்ப்பாணத் தமிழ் ஆக்கள் அவையள்ட வழக்கில தான் கதைக்காங்க. மட்டக்களப்பி தமிழ் ஆக்களும் அவங்கட வழக்கில் தான் கதைக்காங்க. மலயகத் தமிழ் ஆக்களும் அவங்கட தமிழ்ல தான் கதைச்சிக்கொள்றாங்க. அது எங்கட அடையாளங்கள்ல ஒண்டு இல்லா…”

இலங்கையிலிருந்து யுத்த காலத்திற்குமுன் ‘டாலரை’ நேசித்து புலம் பெயர்ந்தவர்களும் யுத்த காலங்களில் நிர்ப்பந்தத்திற்காகப் புலம் பெயர்ந்தவர்களும் எத்தகைய இக்கட்டான சூழலிலும் எத்தனையோ இழப்புகளுக்கிடையில் இழக்காதிருந்தது தங்கள் மொழியை மட்டுமே. “நாங்கள் வெளியில் ஐரோப்பிய வாழ்க்கை வாழ்ந்தாலும், உள்ளுக்குள் யாழ்ப்பாண, வன்னி, மட்டக்களப்பி வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கினம், எங்கட தாய்மொழியைச் சுமந்துகொண்டேதான நாடு நாடாக அலைந்து திரிந்தனம்” என்கிறார் லண்டனில் வாழும் புலம்பெயர்தோழி நோயலா.

என் இலங்கைப் பயணங்களில் இந்த அழகிய குட்டித்தீவுக்குள் விதவிதமாக, அழகழகாகப் பேசும் தீந்தமிழை… என் தாய் மொழியை… புரியாமல் விழித்திருக்கிறேன். கொழும்பிலிருந்து வன்னிக்குப் போகும் ஆட்களே புதுபுதுச் சொற்களை எதிர்கொள்ளும்போது நான் எம்மாத்திரம் என்று என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

“அங்கால அவையள் கதைக்கறது ஒய்யாரமாத்தான் இருக்கு, நம்மட சனங்களும் விசரன்போல இங்க்லிஷ் கலந்து கதைக்காம நல்ல தமிழ்ல்ல கதைக்க வடிவாகத்தான் இருக்கும், இவையள சொல்லிச் சொல்லித் திருத்தேலாது, நடக்கிறபாட்டுக்கு விடுவம். மண்டைல ஏறிட்டா…”

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.