மூக்கணி

பெண்கள் பன்நெடுங்காலமாகவே மூக்கின் இருபுறமும் மூக்குத்திகள் அணிந்து இருக்கிறார்கள். மூக்கின் நடுவில் புல்லாக்கு அணிந்திருக்கின்றனர்.

என் அம்மா வயதை ஒத்த பெண்களில் மிகச்சிலர் மட்டுமே ஒரு பக்கம் மூக்குத்தி அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மற்றபடி அந்த வழக்கம் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால், காதுகளில் வாளி போட்டு முடி இறக்கி நேர்ச்சை செய்வது போல சிலர் வாளியை மூக்கில் போடுவார்கள். அவர்களுக்கு மூக்கி, மூக்கு பூரி (பூருதல் – துளையிடுதல்) போன்ற பட்டப்பெயர்கள் காலத்திற்கும் ஒட்டிக்கொள்ளும்.

இன்றும் மூக்கையூர் போன்ற கடற்கரை கிராமங்களில் இந்த வழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல்களில் வேலை செய்தவர்கள் இதை அடையாளத்திற்காக அணிந்திருக்கலாம்.

கழுத்தணிகள்

என் அப்பம்மா சுத்துரு என ஒரு நகையின் பெயர் சொல்வார்கள். அது கழுத்தை ஒட்டி அணியும் ஓர் அணிகலன் என நினைக்கிறேன். அதன் பின் அதே மாதிரி கழுத்தை ஒட்டிய அணிகலனாக அட்டியல் பதக்கம் வந்தது.

அதன் பின் வெட்டிங் என ஓர் அணிகலன் வந்தது. அது முழுக்க முழுக்க கல் இல்லாமல் தங்கத்தினால் செய்யப்பட்ட நகை. கழுத்தை ஒட்டி ‘V’ வடிவத்தில், நடுவில் நீளமாகவும் கழுத்தை நோக்கிச் செல்லும் சங்கிலிகள் குறுகிக் கொண்டும் போகும். ஓரளவு பெரிதாக, குறைந்தது ஐந்து பவுனாவது அது இருக்கும்.

அதன்பின் விதவிதமான நெக்லஸ்கள் வந்தன. காசு மாலை வைத்திருந்தவர்கள், அதற்கு இணையாக காசு நெக்லஸ் வைத்திருந்தார்கள்.

நெக்லஸிற்கு கீழே வருமாறு செயின்கள் போட்டார்கள். மாங்காய் மாலை, பிச்சிப்பூ மாலை, மல்லிகை மொட்டு மாலை, பன்னீர் செம்பு மாலை எனப் பலவகையில் அவை இருந்தன.

அதே போல நெக்லஸிற்கு கீழே வருமாறு கொத்து செயின்கள் வந்தன. சில இடங்களில் வடம் என அழைக்கப் பட்டாலும் அவை கொத்து செயின்கள் என எங்கள் பகுதியில் அழைக்கப்பட்டன. கொத்து என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கிலிகள், ஒரு முகப்பில், இணைக்கப்பட்ட தொகுப்பு சங்கிலி. சிலர் அந்த முகப்பில், பெயர் பொறித்துக் கொள்வார்கள். அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப இரண்டு, மூன்று, ஐந்து கொத்து செயின்கள் செய்தனர். கொத்து செயின் செய்வதற்குத் தங்கம் கொஞ்சம் கூடுதல் தேவைப்படும். மேலும் பெரிய அளவில் வேலைப்பாடு இல்லாததால், செய்யும் போது சேதாரம் குறைவாக இருக்கும். அதே போல விற்கும் போதும் / அடகு வைக்கும் போதும் பணம் கொஞ்சம் கூடுதல் கிடைக்கும். அதனால் கொத்து செயின் ஒரு முதலீடாகக் கருதப்பட்டது.

இரண்டு கொத்து முத்து மாலையும் உண்டு. முத்து உள்ளீடற்றது என்பதால், குறைந்த அளவு தங்கத்தில் பார்வையாகச் செய்யலாம். இதில் வரும் முத்து என்பது முத்து வடிவத்தில் இருக்கும் தங்க உருண்டைகள்.

கொத்து செயின்களுக்கு கீழே டாலர் செயின்கள் போட்டார்கள். டாலர்கள் சிறியது முதல் பெரியது வரை பல வகையில் இருந்தன. எங்கள் பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்தவை ஓம் போட்ட முருகர் டாலர் தான். மிகச்சிலர் லட்சுமி டாலர் செயின் போட்டிருந்தனர். அதை லெட்சுமி அத்தனம் எனவும் அழைக்கின்றனர். அத்தனம் என்பதற்கான பொருள் எனக்குத் தெரியவில்லை. மேலும் தாமரைப்பூ, இரட்டை அன்னம், மயில் பூங்கொத்து போன்ற வடிவ டாலர்களும் பிரபலமாக இருந்தன.

செயின் என எடுத்துக்கொண்டால், கோதுமை செயின், மைனர் செயின் எனப் பெயர்கள் இருந்தன.

90 களுக்குப் பின் கல்மாலை பரவலாக வந்தது. ஏனென்றால் அதன் பிறகு தான் வரதட்சணைக்கான அளவு கூடத் தொடங்கியது. இன்றும் அது கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

திருமணமான பெண்கள் தாலிக்கொடி போட்டிருந்தனர். தாலிக்கொடி பொதுவாக முறுக்கு செயினாகவே இருந்தது; இருக்கிறது. தங்கம் குறைவாக இருப்பவர்கள் புழுக்கூடு செயின் செய்தார்கள்.

கை நகைகள்

கையுக்குள் நுழையும்படியான நகைகள் காப்பு எனப்பட்டன. காப்பு என்ற சொல்லுக்குப் பாதுகாத்தல் என்பது பொருள். போரின் போது வாள்வீச்சு நேரடியாகக் கையில் படாமல் இருப்பதற்காக உலோகங்களில் போட்ட வளையம் பிற்காலத்தில் அணிகலனாக மாறியிருக்கிறது என்கிறார்கள்.

அவர்களின் காலத்தில் வசதியானவர்கள் தோள் காப்பு, கொந்திக்காய் காப்பு என மணிக்கட்டுக்கும் மேலே பெண்கள் அணிந்ததாக என் அப்பம்மா சொல்லியிருக்கிறார்கள். பிற்காலத்தில் ஏறக்குறைய வழக்கொழிந்து போய்விட்டது. இப்போதும் நடனம் தவிர, வேறு நிகழ்வுகளில் இவை பெரிதாக அணிவதில்லை.

சில காப்புகள் சிறுசிறு அலங்கார வேலை கொண்டவையாகவும் சில நெளியாக வளைந்து காணப்படும் நெளிவுகாப்புகளாகவும் இருந்தன.

80 களுக்குப் பின் தான் கல் காப்பு / முத்து காப்பு போன்றவை பரவலாக வந்தன. அதே போலத்தான் மோதிரங்களும் கல், முத்து, பவளம், நெளிவு எனப் பல வகையில் மக்கள் அணிந்தார்கள். சில மோதிரங்களில் பெயர் எழுதப்பட்டிருக்கும்.

இடுப்பிற்குக் கீழே அணியக்கூடிய அணிகலன்கள் பொதுவாக வெள்ளியாகவே இருந்தன. குழந்தைகளுக்குப் போடும் அரைஞாண் கயிறு (அரணாகயிறு), தண்டை முதல் பரவலாக அனைத்துப் பெண்களும் போட்டிருந்த கொலுசு வரை தங்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை. திருமணமான பெண்கள் மட்டும் மெட்டி அணிந்திருந்தனர்.

நகைகளைப் பற்றி இவ்வளவு விவரிப்பதால், ஏதோ எல்லோரும் நகை அணிந்த அலங்காரப் பதுமைகளாக இருந்தனர் எனக் கொள்ளவேண்டாம். காதில் பொட்டுக் கம்மல்கூடப் போட வசதியில்லாது, வேப்பம் வாளியை (வேப்ப இலைகளைத் தாங்கியிருக்கும் தண்டு) குத்தி வைத்து காதின் ஓட்டை தூர்ந்து விடாது பாதுகாத்தவர்கள் பலர். தொடர்ச்சியாகக் காதில் கம்மல் போடாதிருந்தால் காதின் துவாரம் அடைபட்டு விடும். மீண்டும் கம்மல் போடுவது சிரமம் அல்லது இயலாது.

தங்கம் வாங்க வேண்டுமா வேண்டாமா என்பது அவரவர் குடும்பம் சார்ந்தது. வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் தராத காலகட்டத்தில் பெருமளவிற்கு உதவியது நகை தான். ஒரு 70-80 விழுக்காடு பணம் சேர்ந்தால் வீடு வாங்குவது குறித்து யோசிப்பார்கள். சிலர் நகையை வங்கிகளில் அடகு வைப்பார்கள்; சிலர் விற்பார்கள். இதற்கெனவே சிலர் நல்ல நம்பிக்கையான நகைத்தொழிலாளர் கிடைத்தால், அவர்களிடம் அழித்து மாற்றி செய்வதற்கென வரும் நகைகளைச் சிறுகச் சிறுக வாங்கி சேமிப்பார்கள். பணம் தேவைப்படும் போது விற்பார்கள். அதேபோல எதிர்பாராத செலவுகளை ஈடுகட்டவும் உதவியது நகை தான்.

நகை போட்டால் தான் ஊரில் மதிப்பார்கள் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைத் தெரிந்தவர்கள், நாலு தடவை நகை போட்டு வரவேண்டியது தானே என்பார்கள். பின் இவள் இப்படித்தான் எனக் கடந்து போய்விடுவார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கென்றே இப்போது ஓராயிரம் ஆபரணங்கள் வருகின்றன. அவற்றை அணிந்து பாதுகாப்பாகப் பயணிப்போம்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.