கடந்த வாரம் எனது பேராசிரியையுடன் ஒரு சுவாரசியமான உரையாடல் நடந்தது. அவர் கனடாவைச் சேர்ந்தவர். இந்தியாவைப் பற்றி அதிகம் தெரியாது. அவருடைய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில், ஆரியம் மற்றும் திராவிடப் போர் குறித்து உரையாடல் நகர்ந்தது. அப்போது தான் ஆரிய திராவிடப் போர் என்பது இனம் மற்றும் கலாச்சார அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை உணர்ந்தேன். ஆனால், இந்த உரையாடலை இன ரீதியாக அணுகுவது சரியானதாக இருக்குமா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. வாருங்கள்! இந்த கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

ஓர் ஆய்வுக்காக நானும் என் பேராசிரியரும் கடந்த வாரம் ஓர் அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது எங்கள் ஆய்வு குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் மொழி பற்றிய பேச்சு வந்தது. தமிழ் மொழி குறித்து நான் பேசிக்கொண்டிருந்த போது, அவர் யதார்த்தமாக ஒரு தமிழ்ப் பாடகி தமிழர்களின் உரிமைகள் குறித்து டொரொண்டோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியதை நினைவுகூர்ந்து, “தமிழர்கள் உரிமை என்றால் என்ன? ‘இந்தி உரிமை’ அல்லது ‘தெலுங்கு உரிமை’ என்று யாரும் பேசாத போது ‘தமிழ் உரிமை’ குறித்து மட்டும் ஏன் நீங்கள் பேசுகிறீர்கள்” என்று கேட்டார். அதாவது, தமிழர்கள் எதன் அடிப்படையில் அவர்களின் உரிமையைக் கோருகிறார்கள், யாரிடம் கோருகிறார்கள் என்ற அர்த்தத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டார். இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், அதிக கவனத்தோடு பதிலளிக்க தொடங்கினேன்.

தற்போதைய இந்திய அரசியல் குறித்து அவர் பெரிதாக அறிந்திருக்காததால், இந்தியச் சமூகக் கட்டமைப்பை முதலில் விளக்கினேன். பெரும்பான்மையான இந்திய மக்கள் மதத்தின் பெயரால், சாதிகளால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த இரு சாதிகளும் ஒன்றுக்கு இன்னொன்று சமம் கிடையாது. சாதி அமைப்பு என்பது ஒரு ‘தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை’ என்று டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கூறுகிறார். எனவே, இந்தச் சாதிய அமைப்பில் மேலே இருப்பதாக நம்பப்படும் ஒரு குறிப்பிட்ட கும்பலால் (மேல் சாதி) மற்ற சாதிகள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த அதிகாரமும் பணமும் இந்த மேல் சாதிகளிடம் தான் பல நூறாண்டுக் காலமாகக் குவிந்திருக்கிறது. இந்தத் தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையைக் கடைப்பிடிக்கும் மேல் சாதிய மனப்பான்மையைப் பார்ப்பனியம்/ஆரியம் என்று கூறுகிறார்கள். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் இந்தியாவின் அரசியலையும் சமூகக் கட்டமைப்பையும் பார்பனியம் தான் முடிவுசெய்கிறது.

இந்நிலையில், தமிழர்கள் எதன் அடிப்படையில் உரிமை கேட்கிறார்கள் என்று பார்ப்போம். தமிழ்நாடு எனும் மாநிலம் கடந்த நூறு ஆண்டுகளாக இந்தியாவின் பொது நீரோட்ட அரசியலில் இருந்து விலகி வேறுப்பட்டிருந்தது. தேசிய அளவில் மற்ற மாநிலத் தலைவர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிக்கொண்டிருந்த போது, தமிழ்நாட்டுப் போராளிகள் இந்திய மக்களின் சமத்துவத்திற்காகவும் சேர்த்து பார்ப்பனியத்தை (சாதியை) எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். இந்தியாவில் நிலவும் பல அடக்குமுறைகளுள் மிகக் கொடுமையான அடக்குமுறை சாதிய வன்கொடுமைகள். சாதியைத் தூக்கிப் பிடிக்கும் பிழைப்புவாதிகளான பார்ப்பனிய சக்திகளின் ஒடுக்குமுறைகளை எதிர்பவர்கள் கண்டுபிடித்த எதிர் சித்தாந்தம் தான் திராவிடம்.

திராவிடம் என்ற சொல் இனம், மொழி, கலாச்சாரம் என்று மூன்று வகையான அடையாளங்களைக் குறிக்கிறது. திராவிடம் என்ற சொல்லுக்கான எதிர்ச் சொல் ஆரியம். இந்த ஆரிய, திராவிட வேறுபாடு என்பது இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நான் உரையாடிக்கொண்டிருந்த வேகத்தில் கூறிவிட்டேன். இதைச் சொன்னவுடன் நிதானித்து சிந்தித்தேன். அப்போது தான் இனம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பு தானே தவிர, இயற்கையானது கிடையாது என்று. ‘இனம் மற்றும் இனவாதம்’ எனும் மானிடவியல் வகுப்பு ஒன்றில் படித்தது என் நினைவுக்குச் சட்டென்று வந்தது. உடனே நாக்கைக் கடித்துக்கொண்டு என் தவறை உணர்ந்தேன். பார்ப்பனிய சக்திகளால் ஒடுக்குமுறைகள் இனம், மொழி, கலாச்சாரம், பாலினம், உணவு, பிறப்பு, ஆன்மிகம் என்று பல வகையில் நடத்தப்படுகின்றன. இருப்பினும், அரசியல் ரீதியாகப் போராடும் போது கலாச்சார அடிப்படையில் தான் இந்த ஆரிய திராவிடப் போர் நிகழ்கிறது. ஏன் என்றால் கலாச்சாரத்துக்குள் மொழி, உணவு என மற்ற அம்சங்களும் அடங்குகின்றன. எனவே, ஆரிய-திராவிடப் போர் என்பது கலாச்சாரப் போர் என்று கூறினேன்.

ஒரு நூற்றாண்டுக் காலமாக நிகழும் இந்த ஆரிய-திராவிடப் பிரச்சினை குறித்த அரசியல் பரப்புரையால், தமிழ்நாட்டின் அரசியல் தேசிய அளவில் இருந்து வேறுபட்டிருந்தது. எனவே, எந்த ஒரு பிரச்சினையையும் இந்த அரசியல் கண்ணோட்டம் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த முற்போக்குவாதிகள் அணுகுவார்கள். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு என்றைக்கும் தன்னுடைய மொழி அடையாளத்தை விட்டுக்கொடுக்காத மாநிலம். இந்திய ஒன்றிய அரசு பல முறை இந்தி மொழியைத் தேசிய மொழியாக்கவும், மற்ற மொழி பேசும் மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கவும் தொடர்ந்து முயல்கிறது. இந்தி மொழி பேசாத மற்ற மாநிலங்கள், ஆரிய-திராவிட அரசியல் குறித்த சரியான புரிதல் இல்லாததால் தங்கள் மாநில அடையாளங்களை, குறிப்பாக மொழியை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் 250 மொழிகளை இந்தியா இழந்துள்ளதாக Pragmatic Language Skills Inventory (PLSI) என்னும் பொது ஆலோசனை மற்றும் மதிப்பீட்டு மன்றம் நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்த மொழிகளின் அழிவுக்கு முக்கியக் காரணமாக இந்தியை வலிந்து திணித்தது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில், மொழி ரீதியாக ஒன்றிய அரசால் ஏற்படும் அடக்குமுறைகளை மிகத் தீவிரமாகத் தமிழர்கள் எதிர்த்து வருகிறார்கள். தமிழ்மொழியின் மீது நடத்தப்படும் ஒவ்வோர் அடக்குமுறையையும் எதிர்த்து #இந்தி_தெரியாது_போடா என்னும் hashtag சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படும். எனவே, தமிழ்மொழி ஒடுக்கப்படும் போதும், தமிழர்கள் மொழி ரீதியாக ஒடுக்கப்படும் போதும் அவர்கள் தங்கள் உரிமைகளை உரக்கக் கேட்பார்கள். தமிழ்நாடு சந்திக்கும் அதே அடக்குமுறைகளை மற்ற மாநிலங்களும் சந்திக்கும். ஆனால், தமிழ்நாடு போல் மற்ற மாநிலங்கள் திராவிட-ஆரிய கலாச்சாரப் போர் குறித்த புரிதலோடு தீவிரமாக அந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில்லை. அதனால் தான் ‘தமிழர்களின் உரிமை’ என்று பேசப்படுவது போல் ‘தெலுங்கர்களின் உரிமை’ அல்லது ‘இந்தி பேசுபவர்களின் உரிமை’ என்று பேசப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது என்று பேசினால் பிரிவினைவாதிகள் என்ற முத்திரை குத்தப்படும். ஒடுக்குமுறையை எதிர்த்து மிகச் சரியான கேள்வியைக் கேட்போரைத் தேசத் துரோகி என்றும் பிரிவினைவாதி என்றும் ஆளும் வர்க்கம் அடையாளப்படுத்துகிறது.

இந்த உரையாடல் மூலம் எனக்கு மிகப் பெரிய தெளிவு ஒன்று கிடைத்தது. மானுடவியல் ரீதியாகப் பார்த்தால், இனம் என்பது மனிதனால் உருவாக்கப்படட ஒரு சமூகக் கட்டமைப்பாகும். மேலும், மனிதர்கள் இடையே இனவேறுபாடு உள்ளது என்னும் கருத்து, அறிவியல் ரீதியாகப் பொய் என்று நிரூபித்தாயிற்று. எனவே, இனம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இரண்டு அம்சங்கள் அடிப்படையிலும் அடக்குமுறைகள் நடந்தாலும், கலாச்சார வேறுபாட்டின் அடிப்படையில் ஒடுக்குமுறையாளரை எதிர்த்துப் போராடுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, ஆரிய-திராவிடப் போர் என்பது கலாச்சார அடையாளத்தின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனது இந்த நீண்ட விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்ட என் பேராசிரியை, இந்தப் பிரச்சனையின் சாராம்சங்களை ஆழமாகப் புரிந்துகொண்டதாகக் கூறினார். கூடுதலாக, அவர் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறை குறித்தும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் கேட்டார். வழக்கம் போல் இந்தக் கேள்வியை நான் எதிர்பார்கவில்லை. இருப்பினும், அவருக்குப் பதிலளிக்க எனது மூளை இயந்திரமானது ஏற்கெனவே எனது அனுமதியின்றி ‘பீஸ்ட் மோடில்’ இயங்கத் தொடங்கிவிட்டது. இது குறித்து நாங்கள் பேசிக்கொண்ட விஷயங்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.

(தொடரும்)


படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ