சமூகமயமாக்கல் (socialization) என்ற சொல் சமீபத்திய ஆண்டுகளில் மிகப் பிரபலமானது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்குப் பின் இந்தியாவில் சமூகமயமாதலின் முக்கியத்துவம் அதிகரித்தது. ஏனெனில், அந்தத் துறையில் வளர்ச்சி அடைய ஊழியர்களுக்கு இத்திறன் அடிப்படையாக தேவைப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான மக்கள் மத்தியில் மற்றவர்களுடன் சமூக ரீதியாகக் கலப்பதில் இன்றும் பல சிக்கல் உள்ளன. இந்தச் சிக்கல் குறித்துப் பல்வேறு துறையினர் பல்வேறு கோணங்களில் அணுகி விளக்கங்கள் கூறுகிறார்கள். அவற்றுள், சமூக மானுடவியலாளர்களின் பார்வை கொண்டு சமூகமயமாக்கல் சார்ந்த சிக்கலுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்றும் இந்தச் சிக்கல் எவ்வாறு இனப்படுகொலைக்கு வழிவகுக்கிறது என்றும் விரிவாக காண்போம்.

சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பது அல்லது மற்றவர்களுடன் சமூக ரீதியாகக் கலப்பது போன்ற நடைமுறையை, சமூகமயமாக்கல் என்று அழைக்கிறார்கள். அந்தந்த சமூகங்களால் நிறுவப்பட்ட நடத்தை விதிகளைச் சமாளிக்கும் செயல்முறைகளைப் பின்பற்றி நடப்பது மிக அவசியமாகிறது. அதேபோல், தகவல் தொழில்நுட்பத் துறையில் சமூகமயமாகும் போது, பெரும்பாலும் கார்ப்பரேட் பண்பாட்டிற்கு ஏற்றவாறு ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஒரே மதிப்பு, குறிக்கோளுடன் இணைந்து பணியாற்றும் நபர்களை ஒரு நிறுவனத்தில் வைத்திருந்தால், அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதோடு இணக்கமாக வேலை செய்வார்கள் என்று கருதுவது கார்ப்பரேட் பண்பாட்டின் ஓர் உதாரணம். இது போன்ற ஒத்திசைந்த செயல்பாடுகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்கு மத்தியில் நிகழ்ந்தால் தான் அது அரோக்கியமானதாக இருக்கும். ஆனால், நம் இந்தியச் சமூகத்தில் மற்றவர்களுடன் ஒத்திசைந்து செயல்படுவதற்கு ஒருவர் பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து வரவேண்டும்.

இனம், மொழி, மதம், சாதி, பாலினம், வர்க்கம் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுடன் பாகுபாடின்றி பழகுவது தான் மிக ஆரோக்கியமான சமூகமயமாக்கல். ஆனால், உண்மையில் இந்தியாவில் ஆரோக்கியமான முறையில் சமூகமயமாக்கல் நிகழ்வதில்லை. இந்திய மக்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்த பிரிவினர்களுடன் மட்டுமே பழகும் அக சமூகமயமாக்கலைப் பின்பற்றுகிறார்கள். அதிலும் குறிப்பாக, மொழி அடிப்படையில் நிகழும் அக சமூகமயமாக்கலை மிக எளிதில் காணலாம். உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் பல்வேறு மொழி பேசக்கூடிய மக்கள் பணிபுரியும் போது அவர்கள் தங்கள் மொழி சார்ந்த நபர்களுடன் மட்டும் பழகுவது. ஊழியர்கள் பணிபுரியும் போது அவர்களை இணைக்கும் ஆங்கிலம், பணியிடம் தவிர்த்து மற்ற இடங்களில் அவர்களை இணைக்கவில்லை. மற்ற சமூக நிகழ்வுகளில் அவர்கள் தங்கள் மொழி பேசுபவர்களுடன் மட்டுமே பழகுவார்கள். இதுபோன்ற தனிப்பட்ட சமூகமயமாக்கலின் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம் மக்களின் இனச்சார்பு (ethnocentric) மனநிலை.

தங்கள் பண்பாடு என்னவோ அது மட்டுமே உலகில் வாழ்வதற்குச் சிறந்த பண்பாட்டு முறை என்ற எண்ணம் மனிதர்களுக்கு இருப்பது பொதுவானது. மனிதர்களின் இந்தப் பொதுவான எண்ணத்தை இனச்சார்பு என்று மானுடவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த எண்ணமானது பல நேரத்தில் ஒருவரின் சொந்த வாழ்க்கை முறை அல்லது பண்பாடு தான் மற்றவையைவிட உயர்ந்தது என்ற எண்ணத்திற்கு வழிவகுக்கும். நம் பண்பாட்டு முறைகள் தாம் சரியானது என்று கூறும்போது, மற்றவர்களின் பண்பாட்டு முறைகள் தவறாகத்தான் இருக்கும் என்று கூறுவது போல் ஆகிவிடுகிறது. இந்த இனச்சார்பு மனநிலை தான் மக்களை அவர்கள் சார்ந்த குழுக்களுடன் மட்டும் சமூக அளவில் பழகவைக்கிறது. இந்திய மக்களின் இந்த இயல்பான இனவாதப் போக்கு சமூக வளர்ச்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.

சமகாலத்தில், இந்தியச் சூழலில் தற்போது நிகழும் எண்ணற்ற இனவாதப் பிரச்னைகளுக்கு இனச்சார்பு மனநிலை தான் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தச் சார்பு மனநிலை சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இனச்சார்பு மனநிலை சமூக நல்லிணக்கதிற்குத் தடையாக இருப்பதோடு, பல்வேறு சமூகச் சிக்கலுக்கு வழிவகுக்கும். இந்தச் சமூக சிக்கல் பல நிலைகளில் நிகழ்கின்றன. முதலில், இனசார்பு மனநிலை உடைய, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் மற்ற சமூக பழக்கவழக்கங்களின் சரி தவறுகளை இனவாத அடிப்படையில் அணுகுவார்கள். அடுத்ததாக, அவர்கள் கவனிக்கும் முரண்பாடுகளை அகற்ற ஏதாவது செய்ய முடிவு செய்வார்கள். மற்ற வாழ்க்கை முறை தவறானதாகவே இருந்தாலும், அடிப்படையில் தீயவை அல்ல என்று கருதும்போது, மற்ற குழுவின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த வழிக்கு மாற்றப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்வார்கள். இருப்பினும், மற்றவர்கள் தங்கள் வழியை மாற்ற விரும்பவில்லை என்றால், அவர்கள் அடுத்த கட்டமான ‘நாம்’ அல்லது ‘அவர்கள்’ (us vs them) என்ற இரட்டைவாதத்தைக் கையில் எடுப்பார்கள். இந்த இரட்டைவாதம் பெரிதாக வெடித்து இனம், மதம், மொழி, சாதி, தேசியம், பண்பாட்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முழுக் குழுவையும் அழித்தொழிக்க வேண்டுமென்ற மிக ஆபத்தான எண்ணத்தை உருவாக்கும். இறுதியில் இந்த எண்ணம் போர் அல்லது இனப்படுகொலைக்குக்கூட வழிவகுக்கும்.

தற்போது இந்தியாவில் நிகழும் பல்வேறு ஒடுக்குமுறைகள் இது போன்ற படிநிலைகளைக் கடந்து தான் வருகின்றன. உதாரணத்திற்கு, மாட்டிறைச்சி தடை குறித்துப் பார்ப்போம். இந்தியாவின் ஆதிக்க சித்தாந்தமான பார்ப்பனிய சிந்தனை உடையவர்கள் சைவ உணவு உண்ணுவதை மேன்மையாகக் கருதுவதால் அசைவ உணவு உண்ணுபவர்களை மேன்மை குறைந்தவர் என்று கருதுகின்றனர். இந்த இனச்சார்பு எண்ணத்தினால் மற்ற சமூகத்தின் உணவு பழக்கங்களின் சரி தவறுகளை ஆதிக்கவாதிகள் நிர்ணயம் செய்கின்றனர். இதன் அடிப்படையில் தான் மாட்டிறைச்சி உண்ணுபவர்களை, சமூகத்தில் மிகத் தீவிரமாக ஒடுக்குகின்றனர். ஒடுக்குவதோடு இல்லாமல் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை முற்றிலுமாக நம் சமூகத்தில் இருந்து அகற்ற முயன்று வருகின்றனர். எனவே தான் மாட்டிறைச்சி உண்ணுவதை இழிவானது என்றும் உடலுக்குத் தீங்கானது என்றும் தொடர்ந்து தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகத் தான் மாட்டிறைச்சி தடை அமல் படுத்தப்பட்டது. தங்களின் விருப்பப்படி மாட்டிறைச்சி உண்ணுவதை மக்கள் கைவிட விரும்பவில்லை என்றால் சமூகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் மக்களைத் தனிமைப்படுத்தி சமூகத்தில் பிரிவினையை உருவாக்குகின்றனர். இந்த இனச்சார்பு நிலையின் உச்சகட்டமாக வன்முறையைக் கையில் எடுத்து அம்மக்களைத் தாக்குகின்றனர். இந்தச் சூழல் மேலும் நீடித்தால் இனப்படுகொலைக்குக்கூட வழிவகுக்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் ஓர் இனப்படுகொலை நிகழப்போகிறது. இனப்படுகொலை கண்காணிப்பின் நிறுவனரும் இயக்குநருமான கிரிகோரி ஸ்டாண்டன், அமெரிக்க காங்கிரஸ் மாநாட்டின் போது, இந்திய மாநிலமான அசாம், இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் இனப்படுகொலைக்கான ஆரம்ப அடையாளங்கள் மற்றும் செயல்முறைகள் இருப்பதாகக் கூறினார். “இந்தியாவில் இனப்படுகொலை நிச்சயமாக நடக்கக்கூடும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்” என்று சொன்னதோடு, இந்தக் குற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் இந்தப் பிரச்னைக்குப் பொறுப்பேற்கவும் வலியுறுத்தினார் ஸ்டாண்டன். அடிப்படையில் அவர் மானிடவியலாளர். இனப்படுகொலை எப்படி நிகழ்கிறது என்பதற்குப் பத்து நிலைகள் உள்ளன என்று அவர் நிறுவியுள்ளார்.

“இனப்படுகொலையின் பத்து நிலைகள்”:

வகைப்பாடு, அடையாளப்படுத்தல், பாகுபாடு, மனிதாபிமானம், அமைப்பு, துருவப்படுத்தல், தயாரிப்பு, துன்புறுத்தல், அழிப்பு, மறுப்பு. மேலே சொன்ன மாட்டிறைச்சி உதாரணத்தை ஸ்டாண்டன் வகைப்படுத்திய பத்து நிலைகளுடன் பொருத்திப் பார்த்தால், வகைப்படுத்தல் முதல் துன்புறுத்தல் வரை எட்டு நிலைகளை இந்த விவகாரம் கடந்துள்ளது. உலகில் நடந்த பல இனப்படுகொலைகளை அவை நடப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னதாகவே கணித்தவர் ஸ்டாண்டன்.

இனப்படுகொலைகளைக் கண்டுபிடிப்பதோடு மட்டும் இல்லாமல் அதைத் தடுத்து நிறுத்தவும் பல முயற்சிகளைச் செய்துள்ளார். எனவே, ஸ்டாண்டனின் இந்த எச்சரிக்கைக்கு நாம் மிகுந்த முக்கியத்துவம் தந்தாகவேண்டும்.

இத்தகைய கொடிய விளைவுகளை உருவாக்கக்கூடிய இனச்சார்பு மனநிலையில் இருந்து மாறவேண்டியது மிக அவசியமாகிறது. ஆனால், இந்த மனமாற்றம் சாத்தியமா என்று கேட்டால், உடனடி மனமாற்றம் சாத்தியமில்லை என்பது தான் உண்மை. இது குறித்த தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் படிப்பினைகளும் படிப்படியாக இனச்சார்பு மனநிலையில் இருந்து நம் சமூகத்தை, சமத்துவ பாதையை நோக்கி வழிநடத்தும். இந்தச் சிக்கலை எதிர்கொள்ள மானிடவியலாளர்கள் பண்பாட்டு சார்பியல் (cultural relativism) என்ற பதத்தை உருவாக்கினர். பண்பாட்டு சார்பியல் என்பது ஒரு பண்பாட்டின் பார்வையில் இருந்து அந்தப் பண்பாட்டின் நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு மதிப்பிடுவது, அவசர முன்முடிவுகளைத் தவிர்ப்பது.

உதாரணத்திற்கு, மற்ற பண்பாட்டினர் மாட்டிறைச்சி விரும்பி உண்ணுவது ஏன் என்று அவர்கள் பக்கம் நின்று சிந்தித்து பார்த்தால் அம்மக்களின் உணவு பழக்கத்தின் முக்கியத்துவத்தை ஆதிக்கவாதிகள் அறிந்துகொள்ளலாம். மாட்டிறைச்சியைச் சுவைக்காக மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் அவர்கள் உட்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் ஊட்டசத்து மற்றும் உடல் ஆற்றலுக்கான ஆதாரமாக உள்ளதால் மாட்டிறைச்சி தடையால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆதிக்கவாதிகள் உணர்வார்கள். இதன் மூலம் இரு பண்பாட்டினரும் பரஸ்பர புரிதலோடும் சமத்துவத்தோடும் வாழலாம். எனவே, எந்தச் சமுதாயத்தில் வெவ்வேறு பண்பாட்டினர் மத்தியில் பரஸ்பர புரிதல் இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தில் சமூகமயமாகல் மிக எளிதில் நிகழும்.

வாங்க பழகலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ