உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் பெண் தான் ஆணைத் தேர்ந்தெடுக்கிறது. விசித்திரமாக மனித இனத்தில் மட்டும் ஆண்கள் பெண்களைத் தேர்வு செய்கின்றனர். அதாவது ஆணாதிக்க சமுதாயம் கூட்டாகச் சேர்ந்து ஒரு பெண் எந்த ஆணுடன் வாழ வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. உண்மையில் மனிதப் பெண் தான் மனித ஆணைத் தேர்வு செய்ய வேண்டும். எல்லா உயிரினங்களிலும் பெண்ணுக்கு ஓர் இயல்பு உண்டு. அது நல்ல வீரியமிக்க ஜீன்களைத் தன் கருப்பை மூலமாக அடுத்த சந்ததிக்குச் செலுத்துவது. மனிதன் தவிர மற்ற உயிரினங்களில் ஒரு பெண் உயிரினம் உடல் ரீதியாகவும் பிழைப்பு ரீதியாகவும் நல்ல ஒரு வீரியமிக்க ஆணைத் தேர்வு செய்து, தன்னுடன் கலவிகொள்ள அனுமதிக்கும்.

மனித இனத்திலும் பல ஆயிரம் ஆண்டு காலமாக இதுவே நடந்து வந்தது. ஆனால், என்று ஆணாதிக்க சமுதாயமாக நம் சமூகம் மாறியதோ அன்றே பெண்ணுக்கு ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இதற்கு முக்கியக் காரணம் ஆண் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட வயதுள்ள பெண்ணை, குறிப்பிட்ட வயதுக்குள், தன்னுடைய சாதியில், மதத்தில் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்னும் ஆணாதிக்க மனோபாவம் ஆகும். அதைத்தான் அவனுடைய ஆண்மைத் தனமாகவும் முன்னிறுத்துகிறது. மேலும் ஒரு பெண்ணைத் தன்னுடைய சொத்தாகவும் பொருளாகவும் மட்டுமே பார்க்கும் குடும்பம் மற்றும் சாதி அமைப்பின் எண்ணமும் காரணமாகும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் மூலம் திருமணத்திற்கு முழுதாகத் தயாராகாத , திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத, திருமணத்திற்குத் தகுதியில்லாத ஆணுக்குத் திருமணம் நடந்தேறுகிறது. ஓர் ஆணின் தீய பழக்கங்களும் பொறுப்பின்மையும் தகுதியின்மையும் நிச்சயிக்கப்படும் திருமணங்களின் மூலம் மறைக்கப்பட்டு, சாதியமும் ஆணாதிக்கமும் காப்பாற்றப்படுகின்றன.  ஒரு பெண்ணுடன் பழகி, அவள் மனம் கவர்ந்து, தன் திறன்கள் நிரூபித்து ஒரு பொறுப்புள்ள உறவு முறைக்குள் ஓர் ஆண் நுழைய வேண்டும். மாறாக இங்கே நீ எப்படி இருந்தாலும் ஒரு பெண் கிடைத்துவிடுவாள் என்று நிச்சயிக்கப்படும் திருமணங்கள் குறைந்தபட்ச உறுதியை அளித்துவிடுகின்றன. இது, ‘எதற்கு ஒரு பெண்ணுடன் கஷ்டப்பட்டுப் பேசிப் பழகி, அவளுக்குத் தன் திறன் நிரூபித்து கஷ்டப்பட்டுக் கொண்டு? எப்படியும் பெற்றோர் ஒருத்தியைத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்’ என்று இணை தேடல் திறமையை, முயற்சியை மட்டுப்படுத்திவிடுகிறது.

ஓர் ஆணுடன் ஒரு பெண் பழகும் போதுதான் அவனைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். அவன் அன்பு செலுத்தவும் பிழைப்பதற்கும் (survival), வாழ்க்கைத் துணையாவதற்கும் ஏற்றவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வாள். ஆனால், இதையெல்லாம் எதையும் பார்க்காமல் வெறும் வெளி பூச்சுகளான சாதி, மதம், குடும்ப அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றைப் பார்த்து, குடும்ப உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் ஆண்கள் அந்தப் பெண்ணுக்குப் பொருத்தமில்லாதவனாகவே இருப்பான். அப்படியான திருமணத்திற்குப் பின் பெண்ணானவள் அந்தப் பொருந்தா திருமணத்தைக் கட்டிக் காக்கும் பொருட்டு எல்லா விதத்திலும் விட்டுக் கொடுத்து போக குடும்ப உறுப்பினர்களால் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறாள்.

நிச்சயிக்கப்படும் திருமணங்கள் மூலம் ஓர் ஆணுக்குப் பெண் கிடைப்பது உறுதிபடுத்தப்படுகிறது. எனவே நம் இந்தியப் பெற்றோரும் தம் மகனுடைய இல்லற வாழ்வியல் சார்ந்த பாலியல், உளவியல், உடல் ரீதியான வளர்ச்சியைக் கண்டுகொள்வது இல்லை. திருமணத்திற்காகத் தங்கள் பெண்ணைப் பிறந்தது முதல் தயார்படுத்தும் இந்தியச் சமூகம், ஓர் ஆணை அவன் திருமணத்திற்குத் தயார்படுத்துவதில் துளியும் அக்கறை காட்டுவதில்லை. பல ஏற்பாட்டு திருமணங்கள் கசப்புடன் இருப்பதற்கு இதுதான் காரணம்.   சம்பாதிப்பது மட்டுமே திருமண வாழ்விற்கான தன் மகனுடைய ஒரே தகுதியாகக் கருதுகின்றனர். மேலைநாடுகளில் தன் மகனுக்கு 18 வயதில் பெண் தோழி இல்லை என்றால் ஒரு பெண்ணால் ஈர்க்கப்படும் அளவிற்கு அவன் இல்லையே என்று வருத்தப்படுவார்கள் . ஆனால், நம் நாட்டில் முப்பது வயதிலும் சிங்கிளாக இருக்கும் தன் மகனைப் பெருமையாக நினைக்கும் பெற்றோர் நமக்கு வாய்த்து இருக்கின்றனர். மேலை நாடுகளில் Prom date, Dating, Living together, Love , Marriage என்று திருமணத்திற்கு முன் பல படிகள் தாண்டித் தான் திருமண அமைப்புக்குள் ஆண் நுழைய முடியும். ஆனால், நாம் திருமணத்திற்குள் நேரடியாக ஆண்களைத் திணிக்கிறோம். நம் நாட்டில் தன் மகனுக்குப் பெண்களுடன் தோழமையுடனும் கண்ணியத்துடனும் பேசவும் பழகவும் தெரிந்திருக்கிறதா, அன்பு செலுத்த தெரியுமா என்று எந்தப் பெற்றோரும் கவலைப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தக் காரியத்தைச் செய்யாது இருக்கவும் அவள் ‘நோ’ சொன்னால் விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று நம் பெற்றோர் தம் மகன்களுக்குச் சொல்லித் தருவதே இல்லை.

திருமணத்திற்கு அவனைத் தயார்படுத்துவதும் இல்லை, தீயப் பழக்கங்கள் உள்ள ஓர் ஆணின் திருமணத்தைத் தடை செய்வதோ தள்ளிப் போடுவதோ இல்லை. எப்படி ஒரு பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண் யாருடன் வாழ வேண்டும் என்று தாங்கள் முடிவு செய்வதைப் பெருமையாகக் கருதுகிறார்களோ, அதே போல ஆணின் பெற்றோரும் தன் மகனுடைய வாழ்க்கைத் துணையைத் தாங்கள் தேர்வு செய்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர். எனவே ஓர் ஆணுக்குத் தன் திருமணத்திற்கு முன் சக பெண்களுடன் பேசவும் பழகவும் புரிந்துகொள்ளவும் தேவையற்றுப் போகிறது.

இப்படித் திருமணத்திற்குத் தகுதியில்லாதவர்களாகத் தம் ஆண் பிள்ளைகளை வளர்த்துவிட்டு, “எல்லாம் ஒருத்தி வந்தா சரி ஆகிடுவான்” என்று அவனுடைய தீயப் பழக்கங்களையும் தகுதி இன்மையையும் மறைத்து திருமணம் செய்து வைத்து, பல பெண்களின் வாழ்வைக் காரணமே இன்றி அழித்துக்கொண்டிருக்கின்றனர் ஆண், பெண் பிள்ளைகளைப் பெற்ற நம் இந்தியப் பெற்றோர். ஆனால், எந்தப் பெண்ணும் தகுதி இல்லாதவனைத் திருமணம் செய்துகொள்ள மாட்டாள். பெண் தேர்ந்தெடுப்பாள். அது அவள் இயல்பு. Survival skill. அதற்கு ஆண் உடன்பட்டே ஆக வேண்டும்.

பெண்ணைப் பெற்ற பெற்றோரும் தன் மகள் சுயமாகத் துணையைத் தேர்ந்தெடுப்பதை ஆதரிக்க வேண்டும். மாறாகச் சாதியை ஓர் ஆணின் முதல் தகுதியாக வைத்து ஏற்பாட்டுத் திருமணங்களை நடத்தி வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

தன் மகன் காதலித்ததை ஊருக்குச் சொல்லாமல் மறைத்து, அதை நிச்சயிக்கப்பட்ட திருமணம் போல நடத்திவைத்த பெற்றோரும் உள்ளனர். “அந்தப் பெண்ணை நாங்கள் தான் தேர்ந்தெடுத்தோம், அவள் எங்கள் மகனைத் தேர்ந்தெடுக்கவில்லை” என்று மறைமுகமாகச் சமுதாயத்திற்குச் சொல்லும் செயல் அது. Love cum Arranged marriage என்ற பதத்தின் உட்பொருளும் இதுதான் – தாங்கள் யாருடன் வாழ வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை முழுதாக ஆணுக்கோ பெண்ணுக்கோ இல்லை, கடைசியில் பெற்றோருக்கு தான்.

சுய சார்பும் சுயமரியாதையும் கொண்ட ஒரு பக்குவமடைந்த பெண்ணால் சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் ஆண், பெண்களை மதிப்பவனாகவும் தன் சக உயிராக நினைப்பவனாகவும் காதலிக்கத் தெரிந்தவனாகவும், நல்ல தோழனாகவும், அந்தப் பெண்ணிற்குப் பொருத்தமானவனாகவும் வாழ்க்கைத் திறன்கள் கற்றவனாகவும் பிரியும் நிலை ஏற்படும்போது, கண்ணியத்துடன் விடைபெற்றுச் செல்பவனாகவும் இருப்பான். இவ்வாறான தகுதி கொண்ட ஆண்களை உருவாக்க வேண்டுமெனில் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெண்களுக்கே திருப்பித் தருவது தான் ஒரே வழி. அப்படிச் செய்யும் போது இந்தியப் பெற்றோர் தங்கள் ஆண் பிள்ளைகளைச் சரியாக வளர்க்கக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். இந்தியப் பெற்றோர் தங்கள் ஆண் பிள்ளைகள் ஒரு பெண்ணால் சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதையும் தங்கள் பெண் பிள்ளைகள் சுயமாகத் தேர்ந்தெடுப்பதையும் நேர்மறையாக அணுக வேண்டியது அவசியம். அதுதான் அவர்களின் ஆண் பிள்ளைகளுக்கும் நல்லது, மனித இனத்திற்கும் நல்லது.

எனவே ஆண்களைத் தேர்ந்தெடுக்கட்டும் பெண்கள்!

(பேசுவோம்)

படைப்பாளர்

ராம் குமார்

மருத்துவர், ஓர் ஆண் பிள்ளையை வளர்க்க கற்றுக்கொண்டிருக்கும் ஓர் அப்பா.