அவள் டீச்சரின் பள்ளி மாணவி அல்ல என்ற போதிலும் டீச்சருடைய வாழிடத்தில் அமைந்த ஒரு பள்ளியில் பயின்று வரும் மாணவி என்பதற்காகவும் அரசுப் பள்ளிக் குழந்தை என்பதற்காகவும் ஒப்புக்கொண்டது தான் இது. அந்த மாணவியின் பெயர் பைரவி, 9ஆம் வகுப்பு பயில்கிறாள். அவள் தங்கை அதே பள்ளியில் 6ஆம் வகுப்பு பயிலும் ஆனந்தி இருவரும் லட்சுமி டீச்சர் வீட்டிற்கு மாலை வகுப்புகளுக்காக வரத் தொடங்கினர்.

அந்தக் குழந்தைகள் இரண்டு வாரங்கள் தொடர்ந்து வந்தபோது அவர்களிடம் லட்சுமி டீச்சர் பேசப் பேச ஏராளமான சிக்கல்கள் அவர்களின் வாழ்க்கையில் இருப்பதை அறியமுடிந்தது.

இரண்டு குழந்தைகளைப் பெற்ற அந்தத் தாய், தகப்பன் இருவருமே வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். வீட்டில் பெரியவர்கள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் பைரவியிடம் மாறுபாடான உடலியல் மாற்றங்களும் உளவியல் மாற்றங்களும் நிகழ்ந்தன.

அவள் வீட்டின் அருகே ஒரு கட்டிடத்துக்கு பெயிண்ட் அடிக்க வந்த யாரோ தெரியாத ஒரு நபரின் மீது காதலாக மலர்ந்தது. இந்த விஷயங்களை அறிந்துகொண்ட பெற்றோர் அவளைக் கண்டிக்கும் விதமாக அடித்துள்ளனர். பள்ளியில் இது குறித்து ஆசிரியர்களுக்கும் தெரிந்து கண்டித்தனர். ஆனால், அறியாத பருவம் இல்லையா? பைரவி எதிர்த்து முரண்டுபிடித்தாள். பள்ளியை விட்டுப் போகச் சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர். உன்னால் மற்ற குழந்தைகளும் கெட்டு விடுவார்கள் எனக் குற்றம்சாட்டினர். வீட்டிலும் அடி, பள்ளியிலும் கெட்டப் பெயர், எல்லை மீறிப் போய் திருமணமே செய்துகொண்டு அந்த நபரின் பின்னால் சென்றுவிட்டாள் பைரவி .

ஒரு சில நாட்களில் அந்த பெயிண்ட் அடிக்கும் வாலிபன் பைரவியை விட்டுவிட்டுக் காணாமல் போய்விட்டான். பெற்றோர் தலையில் இடி விழுந்ததாகக் கருதி மீண்டும் அடித்தனர். மீண்டும் பள்ளிக்குப் போக முடியாமல் அவமானப்பட்டுப் பாதியில் நின்றுவிட்டாள் பைரவி. அக்காவின் இந்தச் செயலால் தங்கை ஆனந்தியும் பள்ளிக்குப் போக மறுத்துவிட்டாள். இப்படித்தான் அரசுப் பள்ளிகளில் இடைநிற்றல் குழந்தைகள் உருவாகின்றனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும் .

பள்ளிக்கு அருகில் குடி இருந்த லட்சுமி டீச்சர் குழந்தைகளிடையே எப்போதும் செயல்பட்டு வருவதால், அதை அறிந்து அவரிடம் இந்த உண்மையைக் கூறாமல் பாடம் சொல்லித்தர கேட்டு பெற்றோர் வந்திருந்தனர். ஆனால், பிரச்னைகளை மாணவிகளுடனான அன்றாட உரையாடல் வழியாக லட்சுமி டீச்சர் தெரிந்துகொண்டார்.

அதன் பிறகு பைரவியிடம் நிறைய பேசி, படிப்பின் மீது ஆர்வமூட்டி, மனத்தளவில் மாற்றம் கொண்டுவர முயன்றார் லட்சுமி டீச்சர்.

ஏறக்குறைய ஓராண்டு காலம் தொடர் முயற்சிக்குப் பிறகு லட்சுமி டீச்சருக்குப் பலன் கிடைத்தது. ஆமாம், பத்தாம் வகுப்புத் தேர்வில் 357 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த பைரவி, மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவைத் தேர்தெடுத்தாள்.

அதிலும் தன் கவனத்தைச் செலுத்தி தேர்ச்சி பெற்று , ஒரு வழியாகப் பட்டப்படிப்பில் சேர்ந்து, தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொண்டார் பைரவி.

தனது வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கினாள். அதற்குத் தொடர்ந்து லட்சுமி டீச்சரின் சந்திப்பும் உரையாடலும் தேவைப்பட்டன.

இது போன்றே சில மாணவியரின் வாழ்க்கையில் சவாலாக ஏற்பட்ட அனுபவங்கள் பலவற்றையும் லட்சுமி டீச்சர் வழியாக அறிந்துகொண்டு, தன் உலகத்தை விரிவாக்கிக்கொண்டு, தனது வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்த பைரவி, தற்போது சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் எண்ணற்ற பைரவிகள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரின் வழிகாட்டுதலும் தன்னம்பிக்கைக் கொடுக்கக்கூடிய உரையாடலும் அணுகுமுறையும் தேவையாக இருக்கிறது என்பது நாம் இங்கு கவனிக்கத்தக்கது .

பள்ளிக் கல்வி என்பது அறிவை மட்டும் தருவதில்லை, பைரவிகளுக்கான உடல், உள்ளம் சார்ந்த பிரச்னைகளுக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், நம்பிக்கைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதுதான் என்பதைச் சம்மந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் .

பொதுவாகப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இது போன்ற விஷயங்களைப் பொருத்தவரை மிகவும் எதிர்மறையாக இருக்கிறது என்பது கண்கூடு. விதி விலக்குகளும் உண்டு.

ஒருகட்டத்தில் அந்தப் பெண்குழந்தைகள் வழிதவறி போவதற்கும் மனம் உடைவதற்கும் பிரச்னைகளை எப்படி அணுகுவது என்று அறியாமலும் பள்ளியிலும் வீட்டிலும் அழுத்தங்கள் ஏற்படுவதனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடிய அளவிற்குப் போகிறார்கள் என்பதெல்லாம் உண்மையான தகவல்கள்.

எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க வைத்து, காப்பாற்றி, அவர்களை மிகக் கவனமாக வாழ்க்கையை நடத்தை வைக்க வேண்டி இருக்கிறது. அதுவும் பள்ளிகளின் கடமையும் பொறுப்புமாகி, ஆசிரியர்களுக்கான பொறுப்பாக மாறுகிறது என்பதை நாம் உணர வேண்டும். பெற்றோருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு என்றாலும் அவர்களைக் காட்டிலும் ஆசிரியர்களால் தான் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்கின்றனர் .

இன்னும் பள்ளிகள் பாடநூல், படித்தல், தேர்வு எழுதுதல், மதிப்பெண் பெறுதல் எனத் தங்களுக்கான எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு விரிவடையச் செய்யாமல்தான் இருக்கின்றன. அப்படிப்பட்டக் கல்வி முறை தான் இங்கு நீடிக்கிறது.

ஒரு நாளின் எட்டு மணி நேரம் பெண் குழந்தைகளாகட்டும் ஆண் குழந்தைகளாகட்டும் பள்ளியில் தான் இருக்கின்றனர். அவர்களின் எல்லாவிதமான உடல்சார், மனம் சார் மாற்றங்களுக்கும் உணர்வுகளுக்கும் பள்ளிகள் பெரும்பாலும் வழிகாட்ட வேண்டியது மிகவும் அவசியம் என்பதனை மறந்து மனநல ஆலோசகர் நியமிப்பது, உரையாடல் வகுப்புகளை வடிவமைப்பது என எதற்காகவும் திட்டமிடல்கள் இல்லை .

அவர்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்கும் வகுப்புகள் இங்கு திட்டமிடப்படுவதே இல்லை என்பதுதான் யதார்த்தம். இவையெல்லாம் மாறவேண்டும். பைரவிகளுக்கும் சேர்த்து தேவையான பாடத்திட்டங்களையும் மற்ற வகுப்புகளையும் உருவாக்க வேண்டும். கல்வி முறையில் மாற்றங்களை வரவேற்கலாம்.

(தொடர்ந்து பேசுவோம்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.