பண்பாடு என்பது பகிரப்படும் ஒன்று. எனவே, எந்தப் பண்பாடும் மாறாமல் இருக்கப்போவது கிடையாது. காலத்திற்கு ஏற்றவாறு பண்பாடு தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், அப்படி மாறும் பண்பாடானது பெரும்பான்மையான நேரத்தில் மற்ற பண்பாட்டின் கூறுகளைத் தன் பண்பாட்டிற்குள் உள்வாங்கிக்கொள்கிறது. இந்த உள்வாங்குதல், ஆரோக்கியமானதாக நிகழ்கிறதா இல்லையா என்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் மற்ற பண்பாட்டில் உள்ள அம்சங்களைத் தங்கள் பண்பாட்டில் உள்வாங்கிக்கொள்ளுதல் என்பது மிகவும் சிக்கலானது. இந்தப் பண்பாட்டுக் கைப்பற்றலால் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகளைப் பற்றியும் அதை எவ்வாறு களையலாம் என்றும் விரிவாகக் காண்போம்.

உரிமையாளரின் அனுமதியின்றி ஒருவரின் பயன்பாட்டிற்காக எதையாவது எடுக்கும் செயல், ஆங்கிலத்தில் appropriation எனப்படும். அதேபோல், பண்பாட்டுக் கைப்பற்றல் (cultural appropriation) என்பது ஒரு மேலாதிக்கப் பண்பாட்டின் உறுப்பினர், விளிம்பு நிலை மக்களின் பண்பாட்டின் அம்சங்களை உரிய மரியாதை வழங்காமல் வெறும் பொழுதுபோக்கு மதிப்புக்காக மட்டும் பயன்படுத்துவதாகும். இதனால், கைப்பற்றப்படும் பண்பாட்டு அம்சங்களின் உண்மையான அர்த்தங்கள் காலப்போக்கில் அழிந்து போகும் அபாயம் ஏற்படக்கூடும். உதாரணத்திற்கு, இந்தியாவில் தோன்றிய யோகக் கலையைப் பல மேற்கத்திய நாடுகள் தங்கள் பண்பாட்டிற்குள் மெதுவாகக் கைப்பற்றி வருகிறது. இந்தக் கைப்பற்றல், பெரும்பான்மையான நேரங்களில் வணிக நோக்கில் நடப்பதால், யோகக் கலையின் உண்மையான நோக்கமான உளவியல் நன்மைகளை விடுத்து வெறும் உடற்பயிற்சியாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, ஹாட் யோகா, பீர் யோகா, கோட் யோகா என்றெல்லாம் புதிதாக உருவாக்கப்படுவதல்லாமல் யோகக் கலையின் பெயரில் பெரிய அளவில் பண்டமாக்கப்படுகிறது. யோகாவின் பண்டமாக்கலால் அந்தக் கலையின் உண்மையான மதிப்பு மெதுவாக அழிந்துவருகிறது. எனவே தான் பண்பாட்டு கைப்பற்றல் என்பது மிக ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது.

சிலர் இந்தப் பண்பாட்டுக் கைப்பற்றலை வெறும் பண்பாட்டுப் பரிமாற்றமாகக் கருதி கடந்து செல்கிறார்கள். காரணம், இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிய சரியான புரிதலின்மை. பண்பாட்டு பரிமாற்றம் என்பது சமமான பகிர்வு மற்றும் பரஸ்பர மரியாதை மூலம் ஒருவரை இன்னொருவர் நன்கு புரிந்துகொள்வதற்காக இரு தரப்பினரின் பண்பாட்டையும் பரிமாறிக்கொள்வதாகும். இந்தப் பரிமாற்றமானது இன்றியமையாதது. ஓர் இடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்பாடுகள் பின்பற்றப்படும்போது, கலாசாரங்களின் பரிமாற்றத் தன்மையைக் கட்டுப்படுத்துவது தவிர்க்க முடியாதது. உதாரணத்திற்கு, கோதுமை உணவுகளை அதிகம் உண்ணாத தென்னிந்திய மக்கள், வடஇந்தியர்களின் உணவு பழக்க வழக்கங்களில் சிலவற்றின் தாக்கத்தால் காலப்போக்கில் கோதுமை உணவுகளைத் (சப்பாத்தி, நான், ரொட்டி) தங்கள் உணவுமுறையின் ஓர் அங்கமாக்கிக்கொண்டனர். அதே போல், வடஇந்தியர்களும் தென்னிந்திய உணவுமுறையின் தாக்கத்தால் அரிசி உணவுகள் சிலவற்றை (இட்லி, தோசை) தங்கள் உணவுமுறையின் ஓர் அங்கமாக்கிக்கொண்டனர்.

பண்பாடுகளுக்கு நடுவே நடக்கும் இதுபோன்ற உணவுப் பரிமற்றங்களால் ஒரு பண்பாடு மற்றொரு பண்பாட்டின் உணவுப் பழக்கத்தை முற்றிலுமாக அழிப்பதில்லை. மாறாக, இரண்டு பண்பாடுகளும் புதிதாகச் சில உணவுகளைச் சேர்த்து சமமான பகிர்வு மற்றும் பரஸ்பர மரியாதையோடு வளர்ந்துவருகின்றன. எனவே, பண்பாட்டுப் பரிமாற்றம் என்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. மறுபுறம், பண்பாட்டுக் கைப்பற்றல் என்பது ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் பண்பாட்டை எடுத்துக்கொண்டு, அதன் உண்மையான அர்த்தத்தை மதிக்காமல் அல்லது அறியாமல் அதைப் பயன்படுத்தி பயன் பெறுவதாகும்.

இந்தியாவில், கடந்த 2000 ஆண்டுக்கால வரலாறு முழுவதும் ஆதிக்கச் சமுதாயத்தினரால் விளிம்பு நிலை மக்களின் கலாசாரங்கள் தொடர்ந்து கைப்பற்றப்படுகிறது. புத்த மதத்தின் காவி உடை, தாமரைச் சின்னம், புலால் மறுத்தல் கோட்பாடு முதல் சமீபத்தில் நிகழ்ந்த தமிழ்த் தாயின் உருவப் பட சர்ச்சை வரை எண்ணற்ற பண்பாட்டு அம்சங்களை இந்தியாவின் ஆதிக்கப் பண்பாடான பார்ப்பனியம், தொடர்ந்து கைப்பற்றிவருகிறது. குறிப்பாக, தமிழ்த் தாயின் உருவப் படத்தின் பண்பாட்டுக் கைப்பற்றலால் பல அடுக்குகளில் ஒடுக்குமுறை நிகழ்கிறது.

ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு படத்தை, இசையமைப்பாளர் எ. ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து பல சர்ச்சைகளும் விவாதங்களும் உருவெடுத்தது. இப்படத்தில், தமிழ் தாயைக் கறுப்பாகத் தலைவிரி கோலத்தில் தாண்டவம் ஆடுவதுபோல் சித்தரித்துள்ளார் சந்தோஷ். தமிழர்கள் மீது வேறொரு மொழியை வழுக்கட்டாயமாகத் திணிக்கும்போது தமிழ்த் தாய் கோபத்தோடு தன் மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதற்காக ஆடும் ருத்ர தாண்டவம் என்று இந்தப் படத்திற்கான விளக்கமாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு, மொழித் திணிப்பை எதிர்க்கும் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இந்தத் தமிழணங்கு படத்தில், தமிழ்த் தாயை இழிவுபடுத்தி விட்டதாக வைதீகப் பண்பாட்டுக் கோட்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஆதிக்கச் சக்திகள் கருதினர். அவர்களின் நம்பிக்கையின்படி பெண் தெய்வங்கள் சாந்தமாக, வெள்ளை நிறத்தில், தலைமுடியை அல்லி முடித்தபடி, அடக்கமாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். பெண் தெய்வங்களுக்கு மட்டுமின்றி பெண் அழகியல் சார்ந்த அவர்களுடைய கருத்தும் அவ்வாறு தான் உள்ளது. எனவே தான், அவர்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் எதிரான வகையில் உள்ள இந்தத் தமிழணங்கு படத்தை எதிர்க்கிறார்கள்.

உண்மையில் தமிழ்த் தாயை வைதீகப் பண்பாடு கைப்பற்றுவது என்பது புதிதாக நிகழவில்லை. இதுவரை வரையப்பட்ட தமிழ்த் தாய் படங்கள் அனைத்தும் வைதீகப் பண்பாட்டு நம்பிக்கையின்படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிகழ்ந்த இந்தப் பண்பாட்டுக் கைப்பற்றலில் இருந்து தமிழர்களின் பண்பாட்டு நம்பிக்கையின்படி தமிழ்த் தாயின் உருவத்தை மீட்டுருவாக்கும் முயற்சி தான் இந்தத் தமிழணங்கு படம் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்த மீட்டுருவாக்கத்தைத் தடுக்கும் நோக்கத்தில் மீண்டும் வைதீகப் பண்பாடு தமிழ்ப் பண்பாடு மீது ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, பண்பாட்டுக் கைப்பற்றலால் சமூகத்தில் இது போன்ற அடக்குமுறைகள் நிகழ்கின்றன என்று இந்தத் தமிழணங்கு சர்ச்சை மூலம் நாம் அறியலாம்.

அதுமட்டும் இல்லாமல், தமிழ் மக்கள் இனிமேல் தங்கள் பண்பாட்டுக் கூறுகளை வைதீகப் பண்பாடு கைப்பற்றுவதை அனுமதிக்கமாட்டார்கள் என்றும் இந்தச் சர்ச்சையினால் அறிய முடிகிறது. ஏனெனில், வைதீக ஆதிக்கச் சக்திகளின் பரப்புரைப் பொதுமக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. தமிழ்த் தாய் தங்கள் தாய் போலவே கறுப்பாக இருப்பதினால் பெரும்பான்மையான தமிழர்களால் தமிழணங்கு படத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது. குறிப்பாக, தமிழர்களின் பண்பாட்டு அம்சங்களை இந்தப் படம் மிக நெருக்கமாக, எளிதில் தொடர்புபடுத்தக்கூடிய வகையில் இருப்பதால் தான், இது போன்ற வைதீக ஆதிக்க சக்திகளின் பரப்புரைகள் பொதுமக்கள் மத்தியில் எடுபடாமல் போனதற்குக் காரணமாகும். கூடுதலாக, தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டு வரும் இந்தக் காலக்கட்டதில் இது போன்ற பண்பாட்டுக் கைப்பற்றல் எளிதில் நிகழ்வதில்லை. இருப்பினும், இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தொடர்ந்து நிகழவில்லை என்றால் இது போன்ற அடக்குமுறைகள் தொடர்ந்து நம் சமூகத்தில் நிலவும். எனவே, பண்பாட்டுக் கைப்பற்றல் பற்றிய விழிப்புணர் மிக அவசியமாகிறது.

பண்பாட்டுக் கைபற்றலை, அதற்கு நேர்மாறான பண்பாட்டுப் பாராட்டுதல் என்னும் பரஸ்பர பகிர்வு கொண்டு நாம் எதிர்கொள்ளலாம். பண்பாட்டுப் பாராட்டு என்பது நம் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கலை மற்றும் பண்பாட்டை, உண்மையிலேயே மதித்துப் பாராட்டுவதாகும். இது ஒரு பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலானது. இந்தப் பரஸ்பர புரிதலுக்கு, மற்ற பண்பாட்டின் வரலாற்றைக் கொஞ்சமேனும் அறிய வேண்டியது அவசியமாகிறது. இது ஒருவரின் சொந்த அல்லது மற்றவர்களின் வரலாற்றை அறிந்துகொள்வது என்று மட்டும் அர்த்தமல்ல. இது நமது அனைவரின் வரலாற்றையும் சேர்த்துக் குறிக்கிறது. இதன் மூலம் நாம் எங்கிருந்து வருகிறோம், எதன் அடிப்படையில் ஒன்றாகச் சேர்கிறோம் என்பதை நாம் புரிந்துக்கொண்டு சமத்துவத்தோடு வாழலாம்.

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ