என்.ராமதுரை மிகச்சிறந்த அறிவியல் எழுத்தாளர். அவரது எளிமையான எழுத்துமுறையே அனைவரையும் வாசிக்க செய்தது. தினமணி சுடர் முதல் இதழில் அவர் எழுதிய ‘விண்ணிலிருந்து மண்ணை அளக்கும் செயற்கைகோள்’ கட்டுரை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றும் நான் ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்தில் அறிவியல் வகுப்பில் வாசிக்கும் கட்டுரையாக அது உள்ளது.

என்.ராமதுரை எழுதிய ‘பருவநிலை மாற்றம்’ என்ற நூல் க்ரியா வெளியீடாக வந்துள்ளது. இந்நூலை வாசித்து நான் பெற்ற புரிதலே இந்தக் கட்டுரை.

இன்றைய சூழலில், பெருந்தொற்றால் உலகமே நோயின் கோரப் பிடியில் உள்ளது. அவ்வப்போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள், அரசால் ஏற்படுத்தப்படும் பொருளாதார நெருக்கடி போன்றவை ஒருபுறம் இருக்க, அதனைத் தாண்டி எல்லாவற்றிலும் முன்னுக்கு வரும் பிரச்னை – பருவநிலை மாற்றமே.

மேற்கண்ட பிரச்னையெல்லாம் வந்து போகக்கூடியவையே. பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பிரச்னை அப்படி அல்ல. அது மனித குலத்தேயே அழித்து விடக்கூடியது. அல்லது அதன் விளைவுகள் கற்பனை செய்ய முடியாதது. புவி வெப்பமாதல் குறித்து அண்மைக் காலமாக நிறையவே பேசப்படுகிறது. பூமி வெப்பமடைவதைத் தடுக்காவிட்டால் தங்கள் நாடே கடலில் மூழ்கிவிடும் என்று மாலத்தீவுகளின் அரசு அலறிக் கொண்டிருக்கிறது. ஏதாவது செய்யுமாறு ஐ.நா.வைத் தீவு நாடான  கிரிபாட்டி வற்புறுத்துகிறது.

பூமிக்கு திடீரென அப்படி என்ன ஏற்பட்டு விட்டது? பூமியின் வெப்பம் அதிகரித்துள்ளதாக எப்படி கூறுகிறார்கள்? பூமியின் உட்புறத்தில் வெப்பம் அதிகரித்துவிட்டதா? அல்லது மேற்புறத்தில் அதிகரித்துள்ளதா? பூமியின் மேற்புறத்தில் தானாக வெப்பம் எப்படி அதிகரிக்கும்?

பூமிக்கு காய்ச்சல் வந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுவது சரிதான். அவர்கள் கூறும் கணக்குப்படி பூமியின் சராசரி வெப்பநிலை உயர்ந்துதான் வருகிறது. இந்த அதிகரிப்பு, பொதுவாக அரை டிகிரி, கால் டிகிரி அளவில்தான் இருக்கிறது. சொல்லப்போனால் 1880 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரையிலான காலத்தில் பூமியின் சராசரி வெப்பம் 0.85 டிகிரி தான் உயர்ந்துள்ளது. எனவேதான் இந்த அதிகரிப்பை நம்மால் உணரமுடியவில்லை. உலகில் சராசரி வெப்பநிலை அரை டிகிரி, கால் டிகிரி வீதம் உயர்ந்தால் முப்பது, நாற்பது ஆண்டுகளில் மொத்தத்தில் இது கணிசமான உயர்வாக அமைந்துவிடும்.

இதுதான் கடல் மட்டம் உயர காரணம் ஆகும். சராசரி வெப்பம் உயரும் போது, கடல் நீரும் வெப்பமடையும். இதன் விளைவாக கடல்கள் வீங்கும். இதன் விளைவாக கடல் நீர்மட்டம் உயரும். இதன் விளைவு துருவப்பகுதியிலும் பிரதிபலிக்கிறது. வட, தென் துருவ பனிக்கட்டிகள் உருகுவதால், கடல்நீர் மட்டம் கணிசமாக உயரும் வாய்ப்பும், அதனையொட்டி கடற்கரை நகரங்கள் மூழ்க வேண்டிய சூழலும் ஏற்படும். மலைப்பாங்கான நாடுகளில் இது வெவ்வேறான பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கரியமில வாயு என்ன நிறம்?

Photo by veeterzy on Unsplash

இதற்குக் காரணம்தான் என்ன? அடிப்படையில் கரியமில வாயுதான் இதற்குக் காரணம். அதாவது எப்போதும் இல்லாத அளவில் காற்று மண்டலத்தில் கரியமிலவாயு நிறைய சேர்ந்துவிட்டதுதான் இதற்கான காரணம்.   உயரே செல்லும் கரியமில வாயு பூமியை எவ்விதம் சூடாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். கரியமில வாயு பயன்பாடு இல்லாமல் நாம் வளர முடியாது.

கரியமில வாயு கறுப்பு நிறம் கொண்டது என்பது தவறான எண்ணமாகும். புவி வெப்பமடைவது குறித்த எந்தச் செய்தியானாலும் பத்திரிக்கை, தொலைக்காட்சி படங்களில் கரும்பு புகையைக் கக்கும் ஆலைகளின் படங்கள்தான் காட்டப்படுகின்றன. உண்மையில் கரியமில வாயுவுக்கு நிறம் கிடையாது, வாசனையும் கிடையாது!

கரியமில வாயு மட்டும் கறுப்பு நிறம் கொண்டதாக இருக்குமானால், நாம் வெளியே விடும் மூச்சுக் காற்று கரிய நிறத்தில் இருக்க வேண்டும். ஆக்சிஜன் எரியக்கூடியது அல்ல. ஆனால் எரிதலுக்கு ஆக்சிஜன் தேவை. எரிதலின்போது இரு ஆக்சிஜன் அணுக்களும் ஒர் கார்பன் அணுவும் சேருவதுதான் கரியமில வாயு. எனவேதான் இதனை Co2 என்று குறிப்பிடுகிறார்கள்.

இவ்விதம் உருவான கரியமில வாயு இயல்பாக மறுபடியும் கார்பனாகவும், ஆக்சிஜனாகவும் தானாகப் பிரிவது கிடையாது. கரியமில வாயுவை நம்மால் தனித்தனியாகப் பிரிக்க முடியும் என்றால் புவி சூடாகிறது என்ற பிரச்சனைக்கே இடமிருக்காது. அடுத்து கரியமில வாயுவுக்கும் காற்று மண்டலத்துக்கும் உள்ள தொடர்பு புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

பூமியைச் சுற்றிலும் சுமார் 300 கிலோமீட்டர் உயரம் வரை காற்று உள்ளது. பூமியைச் சூழ்ந்துள்ள இக்காற்று மொத்தத்தையும் ‘காற்று மண்டலம்’ என்கிறார்கள். உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைகிறது. பல அம்சங்களை வைத்து, இக்காற்று மண்டலத்தைப் பல அடுக்குகளாகப் பிரித்துள்ளனர். பல அடுக்குகளைக் கடந்து வரும் சூரிய ஒளி நம்மை வந்தடைகிறது. அப்படி வரும்போது சூரிய ஒளி, காற்றைக் சூடாக்குவதில்லை. சூரிய ஒளி பூமியை வந்தடைந்தபின் எதன் மீது படுகிறதோ அதனை சூடாக்கும்.

கடந்த 150 ஆண்டுகளில் மனிதனின் செயல்களால் காற்று மண்டலத்தில் கரியமில வாயுவின் சேர்மானம் பயங்கரமான அளவுக்கு அதிகரித்துவிட்டது. கரியமில வாயுவுக்கும் பூமி சூடாவதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். அதற்கு பசுமைக்குடில் பற்றிய அறிவும் அவசியம். அதன் வழியே கரியமில வாயு ஆற்றும் பங்கினை அறியலாம். 

பசுமைக்குடில்

குளிர்பாங்கான இடங்களில் சுற்று வட்டாரம் முழுவதும் பனி மூடியிருக்கும். அதே சமயத்தில் கூடாரத்துக்குள் பனிப்பொழிவு இருக்காது. இந்தக் கூடாரத்துக்குள் பசுமையான பயிர்கள் காணப்படுகின்றன என்பதால் இவ்விதம் பயிர் வளர்க்கப்படும் கூடாரத்துக்குப் பசுமைக்குடில் என்று பெயர். இவ்விதப் பசுமைக் குடில் ஏதோ வீட்டுத் தோட்டம் போல சிறியதாக இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம். அமெரிக்காவில் ஒரு பசுமைக்குடில் 92 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பிரிட்டனில் தானெட் தீவில் மொத்தம் 220 ஏக்கர் பரப்பளவில் ஏழு பசுமைக்குடில்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டில் எண்ணற்ற பசுமைக்குடில்களின் மொத்த நிலப்பரப்பு 64 ஆயிரம் ஏக்கர்.

பசுமைக்குடிலில் உள்ள மாதிரியில், பூமியைச் சுற்றிலும் இயற்கையாகவே இப்படியான ஒரு கண்ணாடிக் கூரை அமைந்துள்ளதாக கூறலாம். கரியமில வாயு, ஆவி வடிவிலான நீர், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட் வாயு முதலியவை நம் தலைக்கு மேலே வானில் கண்ணாடிக் கூரை அமைந்துள்ளது போன்ற விளவை ஏற்படுத்துகிறது.

பூமி சூரியனிடமிருந்து வெப்பத்தைப் பெறுகிறது. இதனால் பகலாக உள்ள பகுதியில் தரை சூடேறுகிறது. பின்னர், இரவு வந்ததும் தரையிலிருந்த வெப்பம் உயரே செல்கிறது. இந்த வெப்பம் முற்றிலுமாக விண்வெளிக்குச் சென்றுவிட்டால், பூமி முழுவதும் கடுமையாகக் குளிர்ந்து விடும். பூமியில் கடும் குளிர் வீசாதபடி கரியமில வாயுவும் மற்ற வாயுக்களும் தடுக்கின்றன. அதாவது, உயரே செல்லும் வெப்பத்தின் ஒரு பகுதியை இந்த வாயுக்கள் கீழ் நோக்கிப் பூமிக்குத் திருப்புகின்றன. இதன் விளைவாக பூமியின் இரவாக உள்ள பகுதி கடும் குளிரால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

Photo by Abigail Lynn on Unsplash

கண்ணாடியில் ஆன பசுமைக்குடிலில் நிகழ்வது போன்ற விளைவை இந்த வாயுக்கள் உண்டாக்குவதன் காரணமாகவே இந்த வாயுக்கள் பசுமைக் குடில் வாயுவுக்கள்( Green House Gases) என்று குறிப்பிடுகின்றனர். கரியமிலவாயு உட்பட பசுமைக்குடில் வாயுக்கள் இவ்விதம் நன்மை பயப்பவையாக உள்ளன. நன்மை செய்யும் பசுமைக் குடில் வாயுக்கள் இப்போது மட்டும் கெடுதல் செய்பவையாக மாறியது எப்படி? இந்த வாயுக்கள் ஒரளவில் வெப்பத்தை விண்வெளிக்குச் செல்ல அனுமதிக்கின்றன. ஆனால் காற்று மண்டலத்தில் மிக அதிகமாக பசுமைக்குடில் வாயுக்கள் சேரும்போது அவை விண்வெளிக்குச் சிறிது வெப்பம் கூட வெளியேறாதபடி அனைத்து வெப்பத்தையும் பூமியை நோக்கித் திருப்பி விடுகின்றன. இதனால் பூமியின் சராசரி வெப்பம் அதிகரிக்கிறது. இன்றுள்ள பிரச்சினையே இது தான். 

காற்று மண்டலத்தில் இயற்கையாகக் கரியமிலவாயு சேருகின்ற அதே நேரத்தில் காற்று மண்டலத்திலிருந்து அந்த வாயு இயற்கையாக அகன்றும் வருகிறது. பூமியில் தாவரங்கள் தோன்றிய காலம் முதல் பல கோடி ஆண்டுகளாக இதுதான் நிகழ்கிறது. காற்றில் அடங்கிய கரியமிலவாயுவின் ஒரு பகுதி இயல்பாகக் கடல்நீரில் கரைந்துவிடுகிறது. இப்படியாக சேருவதும் அது அகற்றப்படுவதும் கடந்த பல கோடி ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. இது சரிசமமாக இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிடில் பருவநிலையில் சிக்கல்களை உண்டாக்கிவிடும். அது தான் நம்முள் உள்ள சவால்.

காற்று மண்டலத்தில் பொதுவாக கரியமில வாயு எந்த அளவுக்கு இருக்கிறது என்று எப்படி அளப்பது? அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. பத்து லட்சம் லிட்டர் பிடிக்க கூடிய ஒரு பெரிய அண்டாவைத் தயார் செய்து ஏதேனும் ஒர் இடத்தில் வைக்க வேண்டும். நாம் ஏதுவும் செய்ய வேண்டாம். காற்று அந்த அண்டாவுக்குள் தானாக நுழையும். பிறகு அண்டாவின் வாயை மூடிவிட்டு அந்த அண்டாவுக்குள் கரியமிலவாயு 280 லிட்டர் அளவுக்கு இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை சுருக்கமாக 200 PPM என்று குறிப்பிடலாம். அதாவது PPM என்றால் பத்து லட்சத்தில் இருக்கும் பங்கு. (Parts per million) என்று அர்த்தம். இதுதான் உலக அளவில் பின்பற்றப்படும் அளவுமுறை.

2020 ஜூலை 22 PPM அளவு 414.22. 2019 ஜூலை 22 PPM அளவு 411.41. கடந்த ஒரு வருட வேறுபாடு 2.81PPM (0.68%). ஆனால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இது 280PPM ஆக இருந்தது. ஆக கரியமிலவாயு அளவு நிறையவே அதிகரித்துள்ளது என்பது தெளிவு. தொழிற்புரட்சிக்கு பின்னர் இதன் வேகம் செங்குத்தாக அதிகரித்துள்ளது. கரியமிலவாயு சேர்மானம் காணமாக பூமியில் சராசரி வெப்பம் மெல்ல அதிகரித்து வருவதாக பல நிபுணர்களும் ஆராய்ச்சி அமைப்புகளும் கூறினாலும் உலக தலைவர்கள் இதனை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஓசோன் பிரச்னை எழுந்தபோது, உலகப் பார்வை இதன்மேல் விழுந்தது.

விழித்தெழுந்த உலகம்

பூமி சூடாகி வரும் பிரச்சனை குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தி வந்த உலக வானிலை அமைப்பும் ஐ.நா.சுற்றுச்சூழல் அமைப்பும் சேர்ந்து பருவநிலை மாற்றம் குறித்த உலக நாடுகள் குழு ஒன்றை 1988 ஆம் ஆண்டில் அமைத்தன. இது சுருக்கமாக IPCC (Intergovernmental Panel on Climate Change) என்று அழைக்கப்படும்.

இதன் முதல் மாநாடு 1992ல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் புவி உச்சி மாநாடாக  நடத்தப்பட்டது. 172 நாடுகள் கலந்து கொண்டன. அதில் 116 நாடுகளின் பிரதமர்கள் அல்லது அதிபர்கள் கலந்து கொண்டனர். இயற்கை ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த வேண்டும். வாகனங்களிலிருந்து கரியமில வாயு வெளிப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இன்றைய மின்சார வாகனப் பரவலாக்கல்.

இங்கு பேசப்பட்ட முன்னெடுப்புகளில் முக்கியமானது ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எவ்வளவு கரியமிலவாயு காற்றில் கலக்கிறது என்று அளவிடுவதாகும். தகுந்த உத்திகளைப் பின்பற்றி இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்காவிலிருந்துதான் அதிக அளவில் கரியமிலவாயு காற்றில் கலக்கிறது என்பது தெரியவந்தது. அப்போது சீனா இரண்டாமிடம் வகித்தது. ஆனால் சீனா விரைவிலேயே முதல் இடம் பிடித்தது. இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது. 

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒரு நாட்டிலிருந்து மொத்தம் (டன் கணக்கில்) எவ்வளவு கரியமிலவாயு வெளிப்படுகிறது என்பது ஒரு கணக்கு. இன்னொன்று நபர் வாரிக் கணக்கு… இது முக்கியமானது. ஒரு நாட்டின் மொத்த கார்பன்டையாக்சைட் வெளிப்பாட்டை அந்த நாட்டின் மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது. 2015 பாரிஸ் ஒப்பந்தம் பருவ நிலை மாற்றம் குறித்த நிகழ்வுகளில் மைல்கல். ஆனால் வெப்பமண்டலத்தில் அமைந்த வளரும் நாடுகள் மீது ஒரு சுமை உண்டு. அது காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை மேலும் அதிக அளவில் அகற்றுவதற்கான வகையில் நிறைய காடுகள் வளர்ப்பதாகும்.

Photo by Mika Baumeister on Unsplash

முன்னேறிய நாடுகளின் நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றிக்கு பதிலாக, அல்லது அவற்றின் உபயோகத்தை குறைத்து சூரிய மின்சாரம், காற்று மின்சாரம் ஆகியவற்றுக்கு மாறுவது பெரிய பிரச்சனையாக இராது. இவ்விதம் மாற்றிக்கொள்ளத் தகுந்த நிதியும், தொழில்நுட்பமும் உண்டு. இதனை அவை வளர்ந்துவரும் நாடுகளுக்கு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கா எவ்வாறு பாரிஸ் ஒப்பந்தத்தை மீறியது; அதன் அரசியலை வாசித்து அறியலாம். இதுகாறும் அதிக அளவில் நுகர்ந்த முன்னேறிய நாடுகளையும் வளர்ந்து வரும் நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும் ஒரே தன்மையில் பார்ப்பது சரியில்லை என்பதே உலக தலைவர்கள், அறிஞர்களின் பார்வையும் கூட.  

இறுதியாக கிரெட்டா துன்பர்க் வார்த்தையில் கூறுவதானால், “நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் பேரச்சம் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நான் நாள் தோறும் உணரும் அச்சத்தை, நீங்களும் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நம் வீடு தீப்பற்றி ஏரியும் போது என்ன செய்வோம்? அதையே இப்போது செய்ய வேண்டும். ஏனென்றால் , நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது”.      

படைப்பு:

ஜெ. பாலசரவணன்

ஆசிரியரான பாலசரவணன், புத்தக விரும்பியும்கூட. சேலம் ‘பாலம் தி புக் மீட்’ வாரந்திர வாசகர் வட்டத்தை தோழர் சகசுடன் இணைந்து நடத்திவருகிறார்.