ஆள் நடமாட்டம் ஏதுமில்லா ராப்பொழுது அது. ஆழ்கடலின் அமைதியாய் அக்கிராமம் உறக்கத்தில் ஆழ்திருந்தது. அந்தச்சிறு வாண்டும்தான்.பாவம் பகலெல்லாம் ஓடி ஆடித் திரிந்து, அசதியில் தூங்கிக்கொண்டிருந்தான் ஐந்து வயது வாண்டு சித்து. கை இரண்டையும் தலையடியில் வைத்து, கால் மேல் கால் போட்டு ராஜாவாக தூங்கும் தன் மகனை ஆச்சரியத்தில் பார்த்து ரசித்து மகிழ்ந்திருந்தாள் சுவாதி. தூரத்தில் யாரோ கதறுவதைப் போல் ஓசை கேட்க… பதற்றத்துடன் தன் துணைவர் நந்திஷை எழுப்பினாள்.

“நந்திஷ்! நந்திஷ்! எழுந்திரு அங்க ஏதோ சத்தம் கேக்குது…”

அரண்டு எழுந்தான் நந்திஷ். “ திரும்ப வந்துட்டானுங்களா குடிசைகளை கொளுத்த?”, என்று சற்று கோபத்துடன் சொல்லிக்கொண்டே தன் குடிசையைவிட்டு வெளியே வந்து பார்த்தான். அவன் ஊகித்தது சரிதான். சிறிது தூரத்தில் குடிசைகளில் தீப்பற்றி எறிவதைப் பார்த்து படபடத்தான்‌. அவனோடு இன்னும் சில இளைஞர்கள் சேர்ந்தனர். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவர்கள் எரியும் குடிசைகளின் அருகே ஓடிச்சென்று, மாறி மாறி குடங்களிலிருந்த தண்ணீரை ஊற்ற ஆரம்பித்தனர். தண்ணீருக்கு பலமணிநேரம் நடந்துபோய்தான் எடுத்துவர வேண்டும் என்பதெல்லாம் உயிருக்குப் போராடும் சமயத்தில் பயனளிக்காத சிந்தனைகள். முதியவர்கள்,பெண்கள் என அனைவரும் தண்ணீர் ஊற்றி நெருப்பை ஒருவழியாக அணைத்தனர்.

தூக்கத்தில் சித்துவின் கைகள் எதையோ தேடுகின்றன. தன் அம்மாவைத் தேடியவாறே கண்களைக் கசக்கி விழிக்கிறான். சுவாதி வாசல் பார்த்து நின்றிருப்பதை அறிந்து கை ஊன்றி எழுந்து நடந்து வந்தான் சித்து. அவள் அருகில் சென்று வாசலில் நின்று அவனும் எட்டிப்பார்த்தான்.

விழிகள் கொட்ட கொட்ட விழித்துக் கொள்ள… மழலைக் குரலில் பால்மணம் மாறாமல்‌ கேட்டான். 

“சுவாதி… (அம்மாவை அப்பாவை பேர் சொல்லி அழைப்பது தான் அந்த வாண்டுக்கு பிடிக்கும்) அங்க பட்டாசு வெடிக்கறாங்களா, வெளிச்சம் வருது?”

சித்து குரல் கேட்டு உடனே பதற்றத்தில் அவனை தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள் சுவாதி.

“ஆமா சித்து பையா! அங்கே பட்டாசு வைச்சாங்களா… அது கூரை மேல பட்டு எரியுது. நந்திஷும் எல்லாரும் சேந்து அணைச்சிட்டாங்க…”, பதற்றம் மறைத்து ஒரு போலி சிரிப்புடன் சொன்னாள்.

“ஏன் சுவாதி… நான் தூங்கும்போது ஏன் பட்டாசு வெடிக்கிறாங்க? முழிச்சிருக்கப்போ வெடிச்சா நானும் பாப்பேன்ல? அய்யோ(சலிப்புடன்)… ஏன் வீட்டு பக்கத்துலயே பட்டாசு வெடிக்கிறாங்க‌‌? அப்புறம் தண்ணி ஊத்தி அணைக்கிறாங்க! சொல்லு சுவாதி…?”, என்று கேட்டு அவள் கன்னங்களைப் பிடித்து ஆட்டினான் சித்து.

அவனுக்கு என்ன பதில் சொல்வது, எப்படிச் சொல்வது என்று புரியாமல் சுவாதி குழப்பத்தில் இருந்தாள். அதற்குள்ளாக வீட்டின் அருகில் ஒரு மூதாட்டி, “அந்த சாதிகார பையனுங்களுக்கு நாம நிம்மதியா இருந்தா புடிக்காது. உடனே குடிசைய எரிச்சிருவானுங்க. பாவிப்பயங்க…” என்று தலையில் அடித்துக்கொண்டு போனாள்.

Photo by Andy Watkins on Unsplash

வாயைத் திறந்துகொண்டு அதை வேடிக்கை பார்த்த சித்து,” சுவாதி அந்த பாட்டி யார சொல்லறாங்க?சாதின்னா என்ன?”, என்று  கேட்டான்‌.

சுவாதி அமைதியாக சித்துவைப் பார்த்தாள். இளங்கலை வரலாறு பட்டப் படிப்பு முடித்ததும் சுவாதியும், நந்திஷும் சாதிமாறி திருமணம் செய்து, ஊரைவிட்டு வெகுதூரம் சென்று வாழ்ந்திருந்தனர். ஆறு ஆண்டுகள் கழித்து அப்போதுதான் அந்த ஊருக்கு நந்திஷின்  அப்பா இறப்பு செய்தி கேட்டு திரும்பியிருந்தனர்.

அங்கே குடிசையை எரித்தவர் சுவாதியின் தகப்பனார் அனுப்பிய ஆட்களாகக்கூட இருக்கலாம். நந்திஷ் ஒரு தனியார் கம்பனியில்  வேலை செய்கிறான். சுவாதி தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள். ஓரளவு சமாளிக்கும் வாழ்க்கைதான். பள்ளியில் குழந்தைகளின் பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் சுவாதிக்கு, தன் மகனின் இந்த கேள்விக்கு எவ்வாறு விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது புரியவில்லை.

அங்கே நந்திஷும் அவனோடு சில இளைஞர்களும் காவலுக்காய் ஊர்த் தொடக்கத்தில் நின்றிருந்தனர். அங்கே இருப்பவர்களுக்கு சுவாதியும் நந்திஷும் இங்கே வந்திருப்பதுதான் குடிசைகள் கொளுத்தப்பட்டதற்கான காரணம் என்பது இன்னும் தெரிந்திருக்கவில்லை. குடிசைகளைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர்.

இங்கே சித்து சுவாதியை விடாது ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தான். “சாதின்னா என்ன சுவாதி…?”

“நான் ஒரு குருவி கதை சொல்றேன் கேக்கிறியா?”, என்றாள் சுவாதி.

“ஹைய்ய்யா… கதை! கதை! குருவிக்கதை! ம்ம்ம் சொல்லு… சொல்லு…”, என்றான் குதூகலத்துடன் சித்து.

சுவாதி சித்துவை கீழே இறக்கி உட்காரவைத்து, அவளும் அமர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.

“ஒரு பெரிய காடு… அங்க குருவிகள் கூட்டமா ஒரு ராட்சத மரத்துல வசிச்சிட்டு இருந்ததாம்…”

“ராட்சத மரமா?அது எப்படி இருக்கும்  சுவாதி…?”, என்றான் ஆச்சரியத்துடன் சித்து.

“அந்த மரத்துல நிறைய கிளைகள் அடுக்கடுக்கா இருக்கும்‌. ஒவ்வொரு கிளையிலயும் குருவிங்க கூட்டமா அதோட குடும்பத்தோட வசிச்சிது”, என்றாள்.

“நிறைய கிளைகள்னா ஒரு 50 இருக்குமா சுவாதி?”

“இல்ல… எண்ணவே முடியாத அளவுக்கு அதிகமா இருக்கும்.”

“சரி… அப்புறம்?”

“அந்தக் கிளையில மேல இருக்குற குருவிங்க, அதுக்கு அடுத்து கீழ இருக்குற அடுக்குல உள்ள குருவிங்ககிட்ட, ‘நாங்க தான் பெரிய சாதிங்க. நாங்கதான் மேல இருக்குறோம். நீங்களாம் கீழ இருக்கவங்க’,ன்னு சிரிச்சுதாம். ‘நாங்க சாப்டறதெல்லாம் நீங்க சாப்பிடக்கூடாது. நாங்க போடற மாதிரி துணி நீங்க போடக்கூடாது. நாங்க போற வழியில நீங்க வரக்கூடாது, எங்க குருவி கூட்டத்தோட சமமா எதுவும் பண்ணக்கூடாது, பேசக்கூடாது’ன்னு சொல்லுச்சாம்…”

“அந்தக் குருவிங்களுக்கு அறிவில்லாம இருக்கும் போல…எல்லா குருவியும் ஒரே மாதிரிதான இருக்கும். அப்புறம் ஏன் இப்படி சொல்லுச்சுங்க?”, என்றான் சித்து.

Photo by Tobias Roth on Unsplash

“இதேதான் அதுல கீழ இருக்க குருவிங்களாம் கேட்டுச்சு. அதுக்கு எல்லாத்துக்கும் மேல இருந்த குருவி சொல்லுச்சாம், ‘நீ முன்னாடி செஞ்ச பாவத்துக்கு கடவுள் உன்ன தண்டிச்சிருக்காரு. அதனால தான் நீ எனக்கு கீழ கிளையில இருக்க… கவலப்படாத… உன்ன விட அதிகமா பாவம் செஞ்சவங்களாம் உனக்கும் கீழ அடிமையா இருப்பாங்க, பாரு’, அப்புடினு பொய் சொல்லி, எல்லாரையும் நம்ப வெச்சிதாம்.”

“ஓ அந்த குருவி தான் எப்பவும் மேல இருக்கணும்கறதுக்கு அப்புடி பொய் சொல்லிருக்கா?”

“ஆமா பையா! அந்தக் குருவி மட்டுமில்ல. எல்லாக் கிளையிலையும் சில குருவிங்கதான் மேல இருக்கணும்னும் அடிமையா மத்த குருவிய வெச்சிக்கணும்னும் பொய் சொல்லி ஏமாத்துச்சாம். அந்த குருவிங்களாம் அதோட குட்டிக்கும் அதே மாதிரி சொல்லி வளத்துச்சாம். அந்தக் குருவிங்க பொய் சொல்லச் சொல்ல, அந்த ராட்சத மரம் வளந்துட்டே இருக்கும். இது பொய்; ஏமாத்து வேலன்னு நிறைய குருவிங்க சண்டை போடுமாம். அப்போலாம் அந்த மரம் வளராம நிக்குமாம்… நீ சொல்லு சித்து… அந்த மரம் வளரணுமா சாகணுமா?” 

“பொய் சொல்றது தப்புதான சுவாதி? அந்த மரம் வளரக் கூடாது”, என்றான் சித்து.

“ரொம்ப சரி சித்து. அந்த ராட்சத மரம்தான் இவங்க சொல்ற சாதி. சாதின்னா எப்புடி அந்த குருவிக்கூட்டம், ‘நா பெருசு நீ சின்னது’ன்னு சொல்லிக்கிட்டு ஒண்ணு சேராம இருக்கோ, அந்த மாதிரி மனுசங்களும் ஏற்றத்தாழ்வு  வெச்சிக்கிட்டு ஒற்றுமை இல்லாம இருக்காங்க. மனுசங்க எல்லாரும் சமம்தான். இந்த உலகத்துல பிறந்த எல்லா உயிருக்கும் சாப்பிட, பேச, தண்ணீர் பயன்படுத்த, புடிச்சவங்களோட பழக, வாழன்னு எல்லா அடிப்படை தேவைகளையும் செய்யறதுக்கு உரிமை இருக்கு. இங்க யாரும் உயர்ந்தவங்களும் இல்ல, தாழ்ந்தவங்களும் இல்ல… சித்து, அந்த குருவிங்க பண்றது சரியா? தப்பா?”

“ரொம்ப தப்பு சுவாதி…”

“இப்போ உனக்கு இந்த குருவி கதை அளவு தெரிஞ்சா போதும் கண்ணா… பெருசானதும் நிறைய தெரிஞ்சிக்கலாம்…”

“பெருசானா மட்டும் எப்படி சுவாதி தெரியும்?”

சுவாதி ஜன்னலின் அருகில் அவனை அழைத்து, வெளியே நின்ற சிலையைக்  கைக்காட்டியவாறு சொன்னாள்…

“அதோ தெரியிறாரே அம்பேத்கர் தாத்தா? அவர்கிட்ட கத்துக்கலாம்”, என்றாள்.

TradeIndia

“ஐ… அம்பேத்கர் தாத்தா… கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! நந்திஷ் சொல்லி குடுத்தாங்க ‌”, என்றான் சித்து.

“ஆமா அவர்தான்!”, என்று சொல்லி மகனைத் தன்மடியில் படுக்கவைத்து தட்டிக்கொடுத்தாள். சித்துவும் அந்த ராட்சத மரத்தையும் குருவிகளையும் பற்றி கனவு கண்டவாறு கண்ணசந்தான்.

விடிந்தும் விடியாததுமாக நந்திஷும் சுவாதியும் சித்துவுடன் தாங்கள் வாழ்ந்த ஊருக்கே திரும்பிவிட்டனர்.

***

படைப்பாளரின் மற்ற படைப்பை வாசிக்க:

படைப்பு:

ஜெயபாரதி

ஆசிரியர். குரலற்றவரின் குரலாக என்றும் பயணிக்க விரும்பும் சமூக செயல்பாட்டாளர்.