‘கீழ் என் கிளவி உறழத் தோன்றும்’ என்ற தொல்காப்பியக் கருத்தின்படி பார்த்தால், இந்தியாவிற்குத் தாழ்திசையாகிய கிழக்குத்திசையில் இருந்த தீவு என்பதால், இலங்கை, கீழம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கீழ் + நிலம் = கீழம் என்று புணர்ந்து பின்னர் ஈழமாக மருவியுள்ளதாகக் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதற்கு ஆதாரமாகப் பல்வேறு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். அநுராதாபுர மாவட்டத்தில், அபயகிரி விகாரைக்கு அருகில் உள்ள கல்வெட்டில் ஈழம் என்ற பெயர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஈழத்துப் பூதந்தேவனார்’ எனக் குறுந்தொகையும், ‘ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்’ என்று பட்டினப்பாலையும் ஈழம் குறித்துக் குறிப்பால் உணர்த்தின.
‘கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர்த் தண்ணுஞ்சை தன் மிதியா
பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு’ என்று முத்தொள்ளாயிரம் சோழ ஆட்சி ஈழம் வரை பரவியிருந்ததைக் கூறி, பெருமை கொண்டது. ஈழத்தைத் தாக்கிப் போரிட்டு, வென்றதால் ஈழம் வென்ற கிள்ளி என்று அழைக்கப்பட்ட சோழ மன்னன் கிள்ளி வரலாற்றுச் சான்றாக நிலைபெற்றுவிட்டான். இதையெல்லாம் எடுத்து வைத்துதான், இலங்கையின் பண்டையப் பெயர் ஈழம் தான் எனச் சூடம் அடித்துச் சத்தியம் செய்கின்றனர் வரலாற்றாளர்கள். அது மட்டுமல்ல, சோழர் கல்வெட்டுகளிலும் ராஜ ராஜ சோழம் போன்ற வரலாற்று இலக்கியங்களிலும் மட்டுமல்ல, பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட சாசனங்களிலும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயர் இருப்பதால் இலங்கை என்பது ஈழமே…ஈழமே… ஈழமே… எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் வரலாறு படித்த அறிஞர்கள்.

ஈழம் என்பதற்குச் சொர்க்க தேசம், தங்கம், கள் என்ற பலப் பொருள்கள் உண்டு. ஈழம் என்பது தூயத் தமிழ்ச் சொல்லன்றி வேறில்லை. ஈழம் என்ற நாட்டை, கிட்டத்தட்ட 1800 ஆண்டுகளுக்கு முன் பௌத்தம் பரப்ப வந்த பிக்குகளே தீவு என்று பொருள்படும் ‘லங்கா’ என்ற பெயர் கொண்டு அழைத்தனர். ஆங்கிலேயர் வருகைக்குப்பின் சிலோன் என்ற ஆங்கிலப் பெயருடன் இருந்த இலங்கை, 1972இல் சமஸ்கிருதக் கலப்புடன் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்ட போது, சமஸ்கிருதம் கலந்த சிங்கள மொழியின் மேலாதிக்கத்தை நிறுவதற்காகவே ஸ்ரீலங்கா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கடுமையான எதிர் விமர்சனங்கள் எழுந்தன. பொதுவாக ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும்போது அந்நாட்டின் பெயரை மாற்றி, மக்களைக் குழப்பி, தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவருவது ஆக்கிரமிப்பாளர்களின் உத்தி. அது மிகச் சிறப்பாக ஈழநாட்டில் நடந்தேறியுள்ளது.
தமிழ்க் கண்டமாம் குமரிக் கண்டத்தை முதற்சங்க கடல்கோள் விழுங்கும்வரை இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிருந்த நிலப்பரப்பே ஈழம். கிறிஸ்துவுக்கு முன், அதாவது 2373 ஆம் ஆண்டுகளுக்குமுன் அந்தக் கடல்கோள் ஏற்பட்ட போது, அன்று இருந்ததாகச் சொல்லப்படும் குமரிக்கண்டத்தில் ‘ஏழ்கடல் நாடு’ என்று ஒரு நாடு இருந்ததாகவும், அந்த ஏழ்கடல் நாட்டின் சுருக்கம் தான் ஈழம் எனவும், கடல்கோளுக்குப்பின் தனித்தீவாக எஞ்சிய துண்டே ஈழம் எனவும் பல்வேறு விளக்கங்கள், பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு வரலாற்றாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழர் வழங்கிய தமிழ்ச் சொல்லாக ஈழ் – ஈழம் இருக்க, ‘ஈழம் என்பது பாளி மொழிச் சொல்லான சிஹலம் என்பதிலிருந்து திரிந்தது’ என்று கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் புதுப்பாதை போடவும் தவறவில்லை.

ஈழக்காசு, ஈழக் கழஞ்சு, ஈழச்சேரி, ஈழத்துணவு, ஈழ மண்டலம் என்று பல்வேறு சொற்றொடர்கள் தமிழர்களின் வாழ்வியலில் தொடர்ச்சியாகப் பயன்பட்டுத்தான் வந்துள்ளன. ஈழ கேசரி, ஈழ நாடு போன்ற பத்திரிகைகள் தோன்றிய காலத்தில்கூட, ஈழம் என்பது முழுத் தீவையுமே குறித்தன. அரசியலில் இன வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தபோது தான், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்க, ‘தமிழீழம்’ என்ற சொல் அறிமுகமானது. தமிழர்களுக்குத் தனி நாடு என்ற கோரிக்கை தோன்றிய போது, தமிழீழம் என்ற பெயரே முன்வைக்கப்பட்டது. பின்னர் தமிழீழம் சுருங்கி ஈழமானது. இப்படியாக முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், நாளடைவில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கும் சொல்லாக மாறிப்போனது. தமிழ் ஈழம் என்ற தனிநாடு கோரிக்கை தோன்றிய காலத்தில்தான், ஈழம் என்ற பெயர் சர்ச்சைக்குரியதாக மாறியது. யுத்தம் முடிந்த பிறகோ, ஈழம் ஈன்ற சொல்லைப் பயன்படுத்துவதுகூட தேச விரோதச் சொல்லாகப் பார்க்கப்படுகிறது.

2012இல் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என அன்றைய மத்திய அரசு தடை விதித்தது. சமீபத்தில்கூட பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘த கார்டியன்’ பத்திரிகையில் வெளியான சுற்றுலா வினா விடைப் போட்டியில், ‘ஈழம் என்பது எந்தப் பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீகப் பெயர்?’ என்ற கேள்விக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய விடைகளில் ‘இலங்கை’ இடம் பெற்றதைத் தொடர்ந்து, இந்தத் தகவல் தவறானது என்றும், அதனை நீக்குமாறும் அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் பல்வேறு விளக்கங்களுடன் கோரிக்கை விடுக்க, அந்தப் பத்திரிகையும் இலங்கை தொடர்பான அந்தக் கேள்வியைத் தமது இணையப் பக்கத்தில் இருந்து அகற்றிவிட்டது. பட்டினப்பாலை, சோழர் கல்வெட்டுகள், ராஜ ராஜ சோழம் போன்ற வரலாற்று இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் காணப்படும் ஈழம் தொடர்பான சான்றுகளைச் சுட்டிக்காட்டி, இலங்கை அல்லது சிலோன் என்று அழைக்கப்படுவதற்கு முன்னர் ஈழம் என்றே இத்தீவு தேசம் அழைக்கப்பட்டதாகத் தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியருமான பீ. புஷ்பரத்தினம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியதுடன், “ஈழம் என்ற பெயரை இந்த அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்பதற்காக முன்னர் பயன்படுத்தியதை இல்லை என அரசாங்கத்தால் கூற முடியாது” என்றும் கூறியுள்ளார்.
ஈழம் என்பதற்கான பெயர்க்காரணம் குறித்து வாதங்களும் எதிர்வாதங்களும் இன்றைக்கும் ராஜா, பாரதிபாஸ்கர் பட்டிமன்றம் போல தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. இலக்கியவாதிகளும் தமிழ் ஆய்வாளர்களும் இது குறித்த கருத்து முரண்பாடுகளால் மோதிக்கொண்டிருக்க, அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை எப்படி கையாளுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. ஈழம் என்பது அரசியல்வாதிகளுக்கு வாக்கு வங்கிச் சொல்லாகவும், தமிழ் நடிகர்களுக்கு சர்வதேச வணிகச் சந்தையாகவும் மாறியிருக்க, அரசியல் அறுவடை செய்யப் பார்க்கும் சீமான்களும், சீமாட்டிகளும் ஈழத்தால் செழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், உண்மையான இனப்பற்றுள்ள எந்தத் தமிழருக்கும் ‘இன்பத் தமிழீழத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ தான்.
(தொடரும்)
படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!