“அப்படித் தனியாகப் போய் அந்த ரூமுக்குள்ள உட்காருங்க” என்று அந்த நடுத்தர வயது சுங்கச் சோதனை அதிகாரி என் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு சொன்னதும் திக்கென்றது. இடம் மதுரை விமான நிலையம். 2017 மே மாதம். இதற்கு முன் சில முறை ஆசிரியர் சங்க கருத்தரங்கில் கலந்துகொள்ள இலங்கை சென்றிருந்தாலும், இந்த முறை சுற்றுலாவிற்காக விசா விண்ணப்பித்து, முறையான துறை அனுமதியும் பெற்றிருந்தேன். என்ன பிழை கண்டாரோ என்னை விசாரணை அறைக்கு அனுப்ப, நகம் கடித்தபடி குழப்பத்துடன் நான். விசாரணை அதிகாரி வந்ததும், ஏதோ குற்றவாளியை விசாரிப்பது போல, “எதற்காக இலங்கைப் பயணம்? சுற்றுலாவிற்கு ஏன் இலங்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? எங்கு தங்குவீர்கள்? ஆசிரியர் சங்க நண்பர்கள் வீட்டில் தங்குவேன் எனக்கூறுவது நம்புவது போல இல்லியே?” என்ற நக்கலான கேள்விகள். அதற்குள் சுற்றுலாவிற்கு உடன் வந்திருந்த மல்லிகா அக்கா, பதற்றத்துடன் ஓடிவந்து, என்னைப் பற்றிக் கூறி அன்றைய நாளிதழில் வந்திருந்த எனது படத்தையும் செய்தியையும் காட்ட… “நீ யாராயிருந்தால் எனக்கென்ன?” என்ற தொனியில் அலட்சியமாக, “நீங்கள் அங்கு போய் என்ன செய்தாலும் எங்களுக்குத் தெரிந்துவிடும்” என நம்பியார் சிரிப்புடன் வழியனுப்பி வைத்தார். இப்படித்தான் இன்று இலங்கை செல்லும் ஒவ்வொருவரின் முதுகுக்குப் பின்னும் அரசின் சந்தேகப்பார்வைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும் டில்லிக்குச் செல்வது போல மதுரையிலிருந்து 50 நிமிட விமானப்பயணத் தூரத்திலிருக்கும் கொழும்புவுக்கான பயணம் எளிதாக இருப்பதில்லை. ஆனாலும், இலங்கை ஒருநாளும் நமக்கு அந்நிய நாடாகத் தோன்றியதேயில்லை. இந்தியாவின் மற்றொரு மாநிலமாகத்தான் பூகோள எல்லைகளை மனதளவில் தகர்த்து உயிரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்னைகளுக்காக முத்துக்குமாரும் செங்கொடியும் தீக்குளித்து தங்கள் பாசத்தை வெளிப்படுத்தியது அதற்கான ஒரு சோறு பதம். உலகம் நன்கறிந்த இவர்களைத் தவிரவும், 1989 லிருந்தே பலரும் தங்கள் உயிரைப் பரிசளித்து இனப்பற்றை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

தமிழகத்திற்கும் இலங்கைக்குமான சமூக, வணிக, கலாச்சார, சமய, இலக்கியத் தொடர்புகள் பின்னிப்பிணைந்த நெடிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. சங்ககாலம் முதற்கொண்டே இரு நாடுகளுக்குமிடையேயான வணிக உறவுகளைச் சங்க இலக்கியங்கள் விவரிக்கின்றன. பட்டினப்பாலையில் “ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி வளம் தலை மயங்கிய நனந் தலை மறுகின் நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி” என்ற சொற்றொடர், ஈழம் இலங்கையையும், காழகம் பர்மாவையும் குறிப்பிடுவதுடன், தமிழ்நாட்டிற்கும் அந்நாடுகளுக்கும் இடையேயான வணிகத் தொடர்பைக் காட்டி நிற்கிறது. சோழ மன்னர்கள் கடல்கடந்து இலங்கையை வெற்றி கொண்டதை அத்தனை வரலாற்று நூல்களும் பதிவுசெய்துள்ளன.

“நல்ல காலம், தமிழகத்துக்கும் இலங்கைக்குமான பாலம் இல்லாதது எங்கட மக்களுக்குப் பெரு நன்மை, ஏனென்டால், தமிழ்நாட்டில் நடக்கும் எதுவும் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும், தமிழ் சினிமா முதல் கொரோனா வரை” என்று கூறிச் சிரிக்கும் எனது முகநூல் தோழி கவிஞர் லதா கந்தையாவின் வார்த்தைகள் உண்மையானவை. தமிழகத்தின் பிரதிபலிப்பை இலங்கையின் ஒவ்வொரு சமூகப் பண்பாட்டு வாழ்வியலில் இயல்பாகக் காணமுடிகிறது. தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே 19ஆம் நூற்றாண்டு காலம் தொட்டு அமைந்திருந்த போக்குவரத்து வசதிகளும் இந்த நெருக்கத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை முதல் தூத்துக்குடி வரை ரயில் பாதை இருந்திருக்கிறது. தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து இலங்கைக்குச் செல்லும் பயணிகள் படகுகள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கும், அங்கிருந்து கப்பலின்மூலம் தலை மன்னாருக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆங்கிலேயரை விரட்டியடிக்க, ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற கப்பல் கம்பெனியை உருவாக்கி, வந்தே மாதரம் என்ற வாசகத்துடன் இந்து சமுத்திரத்தில் கப்பலை மிதக்கவிட்ட கப்பலோட்டிய தமிழனால் சிறிதுகாலம் தூத்துக்குடிக்கும் கொழும்பிற்குமான போக்குவரத்து சாமானிய வணிகனுக்கும் சாத்தியமானது. பாம்பன் பாலம் கட்டப்பட்ட பிறகு, 1914 பிப்ரவரி 24இல் ‘இந்தோ சிலோன் போட்மெயில்’ என்ற பெயரில் எழும்பூர்– தனுஷ்கோடி–தலைமன்னார் என்று இயங்கிய ரயில்– கப்பல்–ரயில் சேவையால் இலங்கைப் பயணம் இன்னும் எளிதானது. 1964இல் தனுஷ்கோடியைத் தாக்கிய புயலால் இந்தப் பயணமும் முடிவுக்கு வந்தது.

1965இல் ராமேஸ்வரம் முதல் தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. ராமானுஜம் என்று பெயரிடப்பட்டு, வாரத்துக்கு 3 நாட்கள் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் பயணித்த அந்தக் கப்பல் எப்போதும் ஹவுஸ்ஃபுல் இல்லையில்லை… ஷிப்ஃபுல் தானாம். அப்படி ஒரு பயணத்தை மேற்கொண்ட தோழி சுகுணா ராணி தனது பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “1981இல் விருதுநகரில் ஒரு தனியார் கல்லூரி இலங்கை சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 18 வயதில் நான் சிலோன் சென்றது மிகப்பெரிய அதிசயமாக எங்கள் உறவுகளில் விமர்சிக்கப்பட்டது. இலங்கைக்கு மட்டும் சென்று வருவது போல அன்றைய பாஸ்போர்ட் எடுக்கும் வசதிகள் இருந்தன. அனைத்து நாடுகளுக்குமான பாஸ்போர்ட்க்கும் இதற்குமான கட்டண வித்தியாசமான 50 ரூபாயை மிச்சப்படுத்த இலங்கைக்கு மட்டுமான பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டோம். தனுஷ்கோடி ரயில் நிலையத்திலிருந்து வெகு தொலைவில் ஒரு பெரிய வெட்டவெளியில் எங்களைக் கொண்டு விட்டனர். மீன் கவிச்சைத் தாங்க முடியாததாக இருந்தது. எங்கெங்கு நோக்கினும் கருவாடு குவியல்கள். வெகு நேரக் காத்திருப்பிற்குப்பின் தூரத்தில் நின்றுகொண்டிருந்த இலங்கை செல்வதற்கான கப்பலுக்கு அழைத்துச் செல்ல படகு வந்தது. ஆசையாக ஏறினோம். ஐந்து பேர் மட்டுமே பயணிக்க முடிகிற மிகச் சிறிய போட் அது. படகிலிருந்த சிறிய ஓட்டையின் வழியே தண்ணீர் பெருவாரியாக வரத் துவங்கியது, படகு கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டோம். கப்பலுக்குள் ஏறினால், கூட்டம் அலை மோதியது. நிறைய பேர் வணிகத்திற்காக வந்திருக்க வேண்டும். கையில் ஏதேதோ மூட்டை முடிச்சுகளுடன் இருந்தனர். நானும் கையில் 10 பிளாஸ்டிக் வாளிகளுடன் தேமே என்று அவர்களுடன் உட்கார்ந்திருந்தேன்… அங்கு சென்றதும் இலங்கை மக்கள் இதை விலை கேட்க வருவார்கள், அவர்களிடம் விற்று விட்டு, அந்தப் பணத்தைச் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்” என்று எங்கள் பெற்றோர் அனுப்பி வைத்திருந்தார்கள். முதல் வகுப்பு ரொம்ப அழகாக இருந்ததாம், எங்களுக்குச் சாதாரண வகுப்புதான். மேல்தளத்திற்குப் போய்ப் பார்க்க ஆசை வர, சென்றோம், அங்கிருந்து பிரமாண்டமான கடலைப் பார்க்கப் பயமாக இருந்தது. அந்த உயரமான இடம் வரை அலை அடித்தது. உடை முழுக்க நனைந்துவிட்டது. என் மனம் பூரா ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்வதற்காகக் காலையில் நான் உடுத்தியிருந்த பட்டுப்பாவாடையிலேயே இருந்தது. பாவாடை நனைந்து, அம்மாவிடம் வாங்கப்போகும் திட்டுகளை நினைக்க, நினைக்க பயணத்தை ரசிக்க முடியவில்லை. புயல்போலக் காற்று சுற்றிச் சுழல அலைகள் உயரெழும்பி பயமுறுத்தின. வயிறு கலங்கியது. ஒருவரையொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டோம். தலைமன்னார் வந்துவிட்டது. அங்கிருந்து சிறிது தூரம் ரயில் பயணமும் நெடிய பேருந்துப் பயணமுமாகக் கொழும்பு சென்றடைந்தோம். வடகிழக்கு மாகாணங்களுக்குச் செல்வதாக இருந்த பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு போர் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் போக முடியாது எனவும் சொல்லப்பட்டது. ஆனால், போர் குறித்து எங்களுக்குப் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. கொழும்புவைச் சுற்றியே எங்கள் சுற்றுலா அமைந்தது. எங்கள் கையிலிருந்த வாளிகள், சாந்துப்பொட்டு, கடலை மிட்டாய், கவரிங் நகைகள், பொரிகடலை என விதவிதமான பொருள்களை எந்தவித சங்கோஜமுமில்லாமல் விற்றுப் பணமாக்கிக்கொண்டோம். அப்துல்ஹமீதுவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதே எங்கள் பிரதான விருப்பமாக இருந்தாலும், முதலிலேயே பதிவு செய்யாததால், அதுவும் முடியாமல் போயிற்று. கண்டி புத்தர் கோயில் புத்தரிடம் எனக்கு பாஸ்போர்ட் கிடைத்தால், 10 ரூபாய் தருவதாக ஏற்கெனவே மனதிற்குள் பேரம் பேசியிருந்ததால், ஞாபகமாக உண்டியலில் போட்டுவிட்டேன். ஒரு வார காலம் இலங்கையைச் சுற்றிப்பார்க்க பாஸ்போர்ட், விசா, போக்குவரத்து உட்பட 500 ரூபாய் செலவாகியிருந்தது” என்று கண்கள் விரிய சொல்லிக்கொண்டிருந்தவர், மனதால் 40 வருடத்திற்கு முன்னால் பயணித்திருந்ததை உணர முடிந்தது.

ஆனால், இலங்கையின் உள்நாட்டுப் போரினால், 1983ஆம் ஆண்டு இந்தக் கப்பல் போக்குவரத்தும் முடிவுற்றது. போக்குவரத்துகள் எளிமையாயிருந்த காலப்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து வணிகர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் இலங்கை சென்று பெரும்பொருள் சம்பாதித்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்திருக்கிறார்கள். மீனவர்கள் பலர் இரு கரைகளிலும் இரு குடும்பங்கள் வைத்திருந்ததாகப் பகடியாகக் கூறுவார்கள். ஏன், இறுதிப் போருக்கு முன்புவரைகூட மீனவர்கள் வழியாக இலங்கை இந்தியப் ‘பொருட்கள் பண்டமாற்று’ சகஜமாக நிகழ்ந்திருக்கிறது.

திரைக்கலைஞர் எம்.ஜி.ஆர்.

சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய சினிமாவால் இரு நாடுகளுக்கிடையேயான இணக்கம் இன்னும் அதிகமானது. இலங்கை, தமிழ் சினிமாவுக்குத் தந்த ஒவ்வொருவரும் மாணிக்கப் பரல்கள்தாம். இலங்கையின் நாவல்பட்டியில் பிறந்து வளர்ந்த எம்ஜிஆரின் கையில் தன்னையே கொடுத்து மகிழ்ந்தது தமிழகம். (அதே நேரம், ஈழப்போருக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற ஆதரவு உலகமே அறிந்தது). மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தின் பாலுமகேந்திரா தென்னிந்திய திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையானார். யாழ்ப்பாணம் அருகே நெல்லிப்பழையைச் சேர்ந்த சுஜாதாவின் திறமையைத் தமிழ், மலையாள சினிமாக்கள் பயன்படுத்திக்கொண்டன. கொழும்பில் பிறந்த ராதிகா தான் இன்றைக்குச் சின்னத்திரையின் ராணி. ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா உமாசங்கரும் சிங்களத்துப் பைங்கிளிதான். மன்னாரில் பிறந்த கேத்தீஸ்வரன் தமிழ் சினிமாவின் போண்டாமணியாக உருவெடுத்தார். ஏன், சமீபத்திய லாஸ்லியாவும் தர்ஷனும்கூட பிக்பாஸ் வழியாகக் கிடைத்த இலங்கை வரவுகள்தாம்.

இயக்குநர் பாலுமகேந்திரா

இவர்கள் தவிர, சிலோன் மனோகர், வி.சி. குகநாதன், நடிகரும், எம்பியுமான மறைந்த ஜே.கே. ரித்தீஷ், நடிகர் ஜெயபாலன், நிரோஷா, இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமி, தயாரிப்பாளர் கருணாமூர்த்தி, ’என் ஜாய் எஞ்சாமி’யால் கலக்கிய த என்ற தீக்ஷிதா எனத் தமிழ் சினிமாவில் சங்கமித்த இலங்கையரின் பட்டியல் மிக நீளமானது. தனது ‘லைக்கா’ நிறுவனத்தின் மூலம் இலங்கையின் சுபாஸ்கரன் அல்லிராஜா தமிழ் டாப் ஹீரோக்களின் தயாரிப்பாளரானார். நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவை இலங்கையில் கண்டெடுக்க, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மலர் மருத்துவமனை மதிமலரைக் கரம்பிடித்தார்.

திரைக்கலைஞர் சுஜாதா

தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் எல்லாக் காலத்திலும் நடிகர்களைக் கொண்டாடுகிறார்கள்; இளையராஜாவின் பாட்டு ஒலிக்காத இலங்கைத் தமிழர் வீடுகளில்லை. சிவாஜி – எம் ஜி ஆர், கமல் – ரஜினி , விஜய் – அஜித் சண்டைகள் அங்குமுண்டு. போக்குவரத்து கடினமானாலும் இன்றும் வணிகம் தொடர்கிறது. தமிழகத்தில் நாகரிகமாகும் ஆடைகளும் பொருள்களும் இலங்கையின் வாசலை விரைவில் எட்டிவிடுகிறது. கல்வியும் மருத்துவமும் நாடி தமிழகம் வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. தமிழகத்து அரசியல் நிகழ்வுகள் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இப்படி மனத்தடைகள் ஏதுமின்றி, இனத்தாலும் மொழியாலும் பாலம் அமைத்து, தங்களைப் பிரித்த பூகோளத் தடைகளைத் தகர்த்தெறிந்துவிடுகின்றனர் இருநாட்டுத் தமிழர்களும்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது.