திருமணமான அடுத்த மாதமே “வீட்டில் ஏதும் விசேஷமா” என்று குடும்பத்தினர் கேட்பது எவ்வளவு அபத்தமானதாக இன்று உள்ளதோ அதைவிடப் பலமடங்கு அபத்தமான, மனிதத் தன்மையற்ற கேள்விகளை இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறைப் பெண்கள் எதிர்கொண்டுள்ளனர்.

முதல் குழந்தை பிறந்த இரண்டு, மூன்று மாதங்களில், “அடுத்த குழந்தை எப்போ, நல்ல சேதி ஏதும் இல்லையா” என்றும் “ஐந்தாவது பிஞ்சுக் குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாயிடம் அடுத்த குழந்தை எப்போ?” என்றும் கேட்ட வரலாற்று அவலங்களை நினைத்துப் பார்க்கின்ற பொழுது பேயென்ற நிரூபிக்கப்படாத பிம்பத்துக்குக் கொடுக்கக்கூடிய கொடூர குணங்களனைத்தையும் சமூகம் தனக்குள் கொண்டிருந்தது என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

ஐந்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பெண் குழந்தைகளாகப் பெற்றெடுத்து உடலாலும் உளவியலாலும் சோர்ந்துகிடக்கும் தாய்மார்களை நோக்கி, “எப்ப ஆம்பளப் புள்ள பெத்துக் கொடுக்கப்போறாளோ? ராசியில்லாதவ” என்று கூறிய பிணவறைகளை ஒத்த குடும்பங்களின் அசுத்த நாற்றம் இன்றைய குடும்பங்களிலும் வீசிக்கொண்டுதான் இருக்கிறது.

பிள்ளைப் பெற்றுப்போடும் இயந்திரமாகப் பார்க்கப்பட்ட பெண் உடலின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பற்றியோ போஸ்ட் பாஃர்ட்டம் டிப்ரஷன் போன்ற உளவியல் பிரச்னைகளைப் பற்றியோ ஒருபோதும் சிந்திக்காத சமூகம், பெண் இறந்துவிட்டால் பிணத்தைத் தூக்கியெறிந்துவிட்டு வேறொரு பெண்ணை ஆண்களுக்குத் திருமணம் செய்வித்து அழகு பார்த்த பேய்க்கலாச்சாரத்தில் பெண்களுக்கு எப்படியெல்லாம் பேய் பிடித்தது என்பதைக் காண்போம்.

பெண்களுக்குப் பேய் பிடிப்பதற்கான காரணங்களை நான்கு விதங்களில் புரிந்துகொள்ளலாம்.

1. குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் உளவியல் ரீதியிலான சமநிலையின்மையையும் சரிவரப் புரிந்துகொண்டு தனி கவனம் செலுத்த வேண்டிய பழக்கத்தைச் சமூகம் பின்பற்ற மறுத்த போக்கு என்பது பெண்களைப் பலவீனப்படுத்தி வாழ்நாள் நோய்களுக்கு இட்டுச் செல்ல வழிவகை செய்தன.

2. தொடர் குடும்ப வன்முறைக்குள்ளாகியப் பெண்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்புகள் குறுகிய காலத்திலேயே ஏற்பட்டுவிடும். உளவியல் பிறழ்வுக்குள்ளான பெண்களுக்கு ஆறுதலும் அரவணைப்புமே அவர்களை மீட்க உதவும்; புகுந்த வீட்டில் ஏற்படும் காயங்களுக்கு பிறந்த வீட்டிலாவது மருந்து கிடைக்குமா எனத் தவித்த பெண்களுக்குப் பிறந்த வீடுகள் மயானங்களாகவே காட்சியளித்தன.

ஆண் வாரிசுகளை விரும்பிய குடும்பங்கள், பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதில் காட்டிய அக்கறையை அவர்களது திருமண வாழ்க்கையில் காட்டியதில்லை. மகளின் திருமண வாழ்க்கை துன்பமாகிவிடும் பட்சத்தில் அதனை நினைத்து வருந்தி, கண்ணீர் வடிக்கத் தாய்மார்கள் மட்டுமே தயாராக இருந்தனர்.

மகள்களுக்குத் திருமணம் செய்விப்பதை அவர்களுக்குச் செய்யும் இறுதிச்சடங்காகத் தந்தையர்கள் கருதிவந்தனர். திருமணக் காரியங்கள் முடிந்ததும் மகள்களின் வாழ்வைப் பற்றியோ இருப்பைப் பற்றியோ கவலைகொள்ள வேண்டிய தேவை தந்தையர்களுக்கு ஏற்படவும் இல்லை.

வன்முறையால் சூழ்ந்த புகுந்த வீட்டை நினைத்து வருந்தும் பெண்களைப் பிறந்த வீடும் கைவிடுவதால் நம்பிக்கையை இழக்கும் பெண்கள் நோயின் தீவிரத்தன்மையை அடைந்துவிடுகின்றனர்.

3. இன்றளவும் பல குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பறிமாறி முடித்த பின்பே பெண்கள் உணவுண்ணும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. சுவையான உணவுகளையும் ஊட்டச்சத்து நிறைந்த கறி, காய்கள், பயிர், முட்டை, கீரை போன்ற உணவு வகைகளையும் குடும்ப உறுப்பினர்கள் பல நேரங்களில் பறிமாறிய பெண்ணுக்கென மீதம் வைக்காமல் உண்பது எந்தவிதக் குற்றவுணர்வையும் ஏற்படுத்தாத கலாச்சாரமாக நமது சமூகத்தில் நிலவிவந்துள்ளது. இறுதியாக உணவுண்ணும் பெண்கள் அரிசிச் சாப்பாடு போன்ற மாவுச்சத்தை உள்ளடக்கிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர்.

உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவற்றை உள்ளடக்கிய உணவுகளைக் குறைவாகப் பெண்கள் எடுத்துக்கொள்வதால் எளிதில் தைராய்டு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இருந்து இரவு உணவு மேசையில் நான்கு ரொட்டித் துண்டுகள் வைக்கப்படுமாயின் நான்கையும் மேசையில் அமருபவர்களே உண்டுவிட்டால் பறிமாறிய மனைவியோ அம்மாவோ மருமகளோ உணவுக்கு என்ன செய்வார்கள் என்று சிந்திக்கக்கூடிய குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை மிகக் குறைவாகவே இருந்துள்ளது.

காரைக்காலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் மாங்கனித் திருவிழா கொண்டாடப்படுவதற்கான கதைகளை நாம் கேட்டிருப்போம். அந்தக் கதை ‘காரைக்கால் அம்மையார்’ என்ற திரைப்படமாகவும் 1973இல் வெளிவந்துள்ளது. காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்படுகின்ற ‘புனிதவதியாரின்’ கணவர் ‘பரமதத்தன்’ வணிகம் செய்துகொண்டிருந்த பொழுது தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த இரு மாங்கனிகளை வீட்டுக்குக் கொடுத்தனுப்புகிறார்.

புராணக்கதைகளின்படி புனிதவதியாரின் சிவ பக்தியைச் சோதிக்க சிவன், ‘அடியார் வேடத்தில்’ புனிதவதியார் வீட்டுக்கு வர, அடியாரை வரவேற்று விருந்து உபசரித்து, கணவன் கொடுத்துவிட்ட இரண்டு மாங்கனியில் ஒன்றையும் பரிமாறி வணங்கி அனுப்புகிறார்

பரமதத்தன் மதிய உணவு உண்ண வருகிறார்; புனிதவதியார் உணவைப் பரிமாறுகையில் மீதமிருந்த மாங்கனியையும் வைக்கிறார். மாங்கனியின் சுவை மிகவும் பிடித்துப் போக மற்றொரு மாங்கனியையும் கேட்கிறார் பரமதத்தன். ஒரு வாழைப்பழம் இங்க, இன்னொரு வாழைப்பழம் எங்க என்பதைப் போல புராணம் நீளும்; நீளும் கதைகள் நமக்குத் இங்கு தேவையில்லை.

சுவை நன்றாக இருப்பதால் மற்றொரு மாங்கனியும் தனக்கே வேண்டும் என்று எண்ணிய பரமதத்தனைப் போன்ற ஆண்களைத்தான் ஆண்மைய சமூகம் உருவாக்கி வைத்திருந்தது. இரண்டையும் பரமதத்தனே தின்றுவிட்டால் புனிதவதி எதைத் தின்பார் என்ற எண்ணம் பரமதத்தனுக்கு ஏன் ஏற்படவில்லை என்ற கேள்வியை எனது பேராசிரியர் பாடமெடுக்கின்ற பொழுது அழுத்தம் திருத்தமாகக் கேட்டது இன்றளவும் நினைவில் உள்ளது.

இந்தக் கேள்விக்கான பதிலில்தான் பெண்ணுக்கு எப்படி பேய் பிடித்திருக்கும் என்ற கேள்விக்கான பதிலையும் நாம் தேட வேண்டியுள்ளது.

கணவன் பணிச்சூழல் காரணமாக வெளியூருக்குச் செல்ல நேருகின்ற தருணங்களில் தனக்கு மட்டும் சமைத்துச் சாப்பிடுவதற்கு இன்றும்கூடப் பல பெண்கள் தயக்கம்காட்டி பட்டினி கிடப்பதைப் பார்க்க முடிகிறது. சமைத்துச் சாப்பிடவில்லையென்றால்கூடப் பரவாயில்லை, ஆன்லைனிலாவது ஆர்டர் செய்து சாப்பிடலாமில்லையா என்று கேட்டால் அவரில்லாமல் எப்படிச் சாப்பிடுவது என்று பல பெண்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இறுதியாகவும், ஊட்டச்சத்துக் குறைவாகவும் உணவுண்ணும் பெண்களின் உடல் வலிமையிழந்து நோய்வாய்ப்படுகிறது.

4. விரும்பியவற்றை வேண்டும் என்று கேட்பதற்கும், விரும்பாதவற்றை நிராகரிப்பதற்குமான அதிகாரம் பெண்களுக்கு வழங்கப்படாமலிருந்த காலகட்டங்களில் பெண்கள் தனக்கான பிரச்னைகளையும் மகள், சகோதரிகள் போன்ற நெருங்கிய பெண் பாலின உறவு வகையினருக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளை அறிந்திருப்பினும் முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை இழந்திருப்பதால், பெண்கள் நாள் முழுக்க பிரச்னைகளையும் கொடுமைகளையும் நினைத்து நினைத்தே உளவியல் ரீதியாகப் பெருமளவு சோர்ந்து போய்விடுகின்றனர்.

உளவியல் சோர்வு நிலை என்பது அந்தப் பெண்களைச் சரிவர உணவு உட்கொள்ளவிடாமலும் உறங்கவிடாமலும் மீண்டும் மீண்டும் தன்னால் எதை மாற்ற முடியாதோ அத்துன்பத்தையே எண்ணி வாட வழிவகுத்துக் கொடுக்கும். வேறு வழி அறியாப் பெண்கள் கடவுள் வந்து காப்பாற்றிட வேண்டி விரதங்களைக் கடைபிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு மேலும் தங்களை வருத்திக்கொள்கின்றனர்.

மேற்சொன்ன நான்கு விதங்களைப் போன்று பல விதங்களில் உடலாலும் உளவியலாலும் நோய்வாய்ப்படும் பெண்களுக்கு ஏற்படுகின்ற மயக்கம், நினைவிழப்பு போன்ற அறிகுறிகளைப் பொருட்படுத்தி அவர்களுக்கு மருத்துவம் பார்க்காமல், பேய்ப் பிடித்திருக்கும் என்று கருதி பேயோட்டுவதை நமது சமூகம் ஒரு வகை பழக்கமாக பின்பற்றி வந்துள்ளது.

நோய்வாய்ப்படும் ஆண்களுக்குப் பேயோட்டுவது என்பதை ராகவா லாரன்ஸ் படங்களில்தாம் பார்க்க முடியும். ஆண்களுக்கு உடனுக்குடன் மருத்துவமும் பெண்களுக்கு பேயோட்டுவதுமாக மருத்துவத்திலும் பாலினப் பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இன்றைய நவீனச் சூழலிலும்கூட ஆண்களுக்கு கிடைக்கின்ற அளவு மருத்துவமும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்களும் பெண்களுக்குக் கிடைப்பதேயில்லை. இன்றும் நோய்வாய்ப்படும் பெண்களைப் புரிந்துகொள்ளாமல் சில குடும்பங்கள் அவர்களுக்குப் பேயோட்டுவதையே முதன்மை வைத்தியமாகக் கருதி வருகின்றன.

இன்றைக்கும் மார்பகப் புற்றுநோய், தைராய்டு, கருப்பைக் கட்டி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்காமல் பேயோட்டிக்கொண்டிருப்பதால் மடிந்துகொண்டிருக்கின்றனர்.

பேயோட்டிச் சலித்துப் போன பின்புதான் பல பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். நோய் அறிகுறிகள் தென்பட்டு, பேயோட்டுதலில் கழிகின்ற நாட்களுக்குள் நோயானது தீவிரத்தன்மையடைந்து விடுவதால் பாதிக்கப்பட்ட பெண்களைக் குணப்படுத்துவது என்பது மருத்துவத்துறைக்குச் சவாலான காரியமாக மாறிவிடுகிறது.

பெண்களை எந்தப் பேயும் வந்து பிடிப்பதில்லை; மருத்துவத்திற்குச் செலவழிப்பதைவிடப் போயோட்டுவதற்குச் செலவழிப்பது குறைவு என்ற அடிப்படையிலும் இந்த முறையைச் சில குடும்பங்கள் பின்பற்றுகின்றன.

காலம் காலமாகப் பேயின் தோற்றம் பெண்களின் வடிவை ஒத்தது என்றும், பேய்கள் பெண்களைத்தான் அதிகமாகத் தேர்ந்தெடுக்குமென்றும் அதிலும் குறிப்பாக இரவில் தனித்துப் பயணிக்கும் பெண்களையும் மல்லிகைப் பூ, மாமிசம் எடுத்துச் செல்லும் பெண்களைப் பேய் விடவே விடாது போன்ற கட்டுக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் வளர்கின்ற பெண்களும் தங்களுக்கு நோயின் அறிகுறிகள் தென்படுகையில் பேய்தான் தன்னைப் பிடித்திருக்குமென்று நம்புகின்றனர்.

உளவியல், அறிவியல், மருத்துவம் எல்லாம் இருந்தாலும் அதையும் தாண்டிய அமானுச சக்திகளைப் போயோட்டித்தான் குணப்படுத்த முடியுமென்று பரப்புரை செய்கின்ற சினிமாக்களும் சீரியல்களும் இலக்கியங்களும் பெண்களைப் பெரிதும் ஆட்டிவைக்கின்றன.

பேய் பிடித்ததாகச் சொல்லப்படுகின்ற பெண்களின் நிலை, பேயை நம்பும் பெண்களை நெறிப்படுத்த சமூகம் முதலில் தன்னைச் சமநிலைப்படுத்திக்கொள்ள வேண்டியதன் தேவை என்ன என்பவற்றைக் குறித்து அடுத்து அறியலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.