உலக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஆண்களைவிட பெண்களே அதிக அளவு பாதிப்புகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் உள்ளாகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து குறைபாடுடைய பதின்ம வயதுப் பெண்களைக் கொண்டுள்ளாத நாடாக இந்திய ஒன்றியம் இருந்து வருகின்றது.

நமது ஊரின் பண்பாடு சமைப்பதை பெண்களின் கடமையாகக் கட்டமைத்து வைத்துள்ளது. ஆண்கள் அதிக அளவு ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று குடும்ப அமைப்பு 75% அதிகமான ஊட்டச்சத்து உணவுகளை ஆண்களின் தட்டுகளில் வைத்துவிட்டு, மிச்சத்தையும் சொச்சத்தையும் பெண்களின் தட்டில் போனால் போகட்டும் என்று வைக்கின்றது.

மாதாவிடாய்வழி உதிரத்தை சுத்திகரிக்கவும், கருத்தரித்து பத்து மாதம் இன்னொரு உயிரை உடலுக்குள் வளர்த்தெடுக்கவும், சிசுவைப் புறந்தள்ளவும், புறந்தள்ளிய பின் தாய்ப்பாலூட்டவும் பெண்களுக்கு ஆற்றல் இழப்பீடுகள் அதிகமாக ஏற்படுகின்றன. அதை சமன் செய்ய பெண்ணுடலுக்கு ஊட்டச்சத்து நிறை உணவுகள் அதிகம் தேவைப்படுகின்றது.

Photo by Kelly Sikkema on Unsplash

இதை இம்மியளவும் புரிந்துகொள்ளாத குடும்பங்கள் பேறுகாலத்தின் போது ஏற்படும் இறப்புகளை பற்றியோ, இளம் வயதில் மெனோபாஸ் நிலை அடையும் பெண்களைப் பற்றியோ வாய்திறப்பதில்லை. இதற்கெல்லாம் வாய்திறந்துவிட்டால், பெண்களுக்கு சம உணவு பகிரப்பட்டால், பெண் உடல் பலம் பெற்றுவிட்டால், “ஆண்தான் பலமானவன், ஆம்பளைன்னா அப்படிதான் பண்ணுவான், பொம்பளைதான் அடங்கி ஓடி ஒளியணும்”, என்று காட்டிய பூச்சாண்டி வேலைகளெல்லாம் தரைமட்டமாகிவிடும் என்ற அச்சம் சமூகத்துக்கு உண்டு. அதனால் மௌனம் சாதித்து பெண் நலத்தை திசைதிருப்பி, “பெண்கள் தம்மடிக்கிறார்கள், சரக்கடிக்கிறார்கள், குய்யோ முய்யோ”, என்று அடிக்கடி கதறிக் கொள்கின்றது.

இதில் முரண் என்னவென்றால் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பெரும்பாலான ஆண்கள் புகைபிடித்துக்கொண்டு புகையை எதிர் இருப்பவர் முகத்திற்கு அருகிலேயே விடுவார்கள், இவர்களால் அந்தப் புகையை சுவாசிக்க நேரிடும் புகைப்பழக்கமே இல்லாத பெண்களும்கூட புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீண்ட காலமாக வீட்டுக்குள்ளே புகைபிடிக்கும் ஆண்களால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என குடும்ப உறுப்பினர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் குடும்பங்கள் ஒரு போதும் கண்டுகொள்ளாது. தவறானதாகவே இருந்தாலும் அறமற்ற குற்றமாகவே இருந்தாலும் அதை ஆண்கள் செய்தால் தவறில்லை என்பது குடும்ப தர்மமாக நிலவுகின்றது.

குடும்பக் கடமையாக இருக்கின்ற பொழுது சமைப்பது பெண்களுக்கானதாகவும், வியாபாரமாக வருகின்ற பொழுதும், ஊதியம் பெறுகின்ற பொழுதும், சமையல் தொழில் ஆண்களுக்கானதாகவும் மாறிவிடுகின்றது. பெருமதிப்பிலான உணவுக்கடைகளை நிர்வகிப்பது, உணவு தயாரிப்பதில் மாஸ்டர்களாக இருப்பது, வல்லுனநர்களாக இருப்பது என்ற லாப மட்டங்களில் ஆண்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Photo by Johnathan Macedo on Unsplash

2000 ஆண்டுகளுக்கும் மேலாக சமைத்தே தேய்ந்துபோன பெண், இன்றும் கூலியில்லாமல் அதே சமயலறையில் சிறகொடிந்து சமைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். இந்தியக்குடும்பங்களில் வீட்டு வேலை செய்யும் சொற்பக் கூலிகளாக நிறைய பெண்கள் உள்ளனர். ஊதியம், வணிகம் என்ற தளத்தில் சமைப்பதை கையிலெடுத்த ஆண்கள் வீட்டு வேலை, தினக்கூலிகளாக பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. அதை குடும்ப அமைப்புகளும் ஆதரிப்பதுமில்லை என்ற பின்னணியில் நிறைய உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.

பெரிய வீடுகளுக்கு வீட்டு வேலை தினக்கூலிகளாக, மாத ஊதியம் வாங்கும் பணியாள்களாக சமைக்கச் செல்லும் பெண்கள், வீட்டு முதலாளி ஆண்களால் பல வித துன்புறுத்தல்களுக்கு ஆளாவது வழக்கம். அதை நகைச்சுவையாக காட்சிப்படுத்துகின்ற கலை இலக்கியத் துறையும், சுரண்டலைக் கொண்ட அக்காட்சிகளை நகைச்சுவையெனக் கருதி சிரிக்கின்ற குடும்ப அமைப்பும், ஆண் சமையல்காரரை வீட்டுக்குள் அனுமதித்து, வீட்டுப் பெண்கள் அவர்களுடன் இயல்பாக பேசுவதைக்கூட ஏற்றுக்கொள்வதில்லை. ஆண்கள் கூத்தடித்தாலோ, பணிப்பெண்களை சுரண்டினாலோ, வன்முறைகளில் ஈடுபட்டாலோ குடும்ப அமைப்பு சிறிதும் சலனம் கொள்வதில்லை. ஆனால் பால் போட, பேப்பர் போட வரும் ஆண்களிடம்கூட இயல்பாக வீட்டுப் பெண்கள் பேசுவதை சந்தேகிக்கும்.

குடும்ப அமைப்புக்கு ஆண்கள் செய்யும் குற்றங்களெல்லாம் இயல்பானதாகத் தெரிகின்றது. “ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா, பொம்பளைப் புள்ளை நைட் வெளிள சுத்தலாமா”, என்று பாதிக்கப்படும் பெண்களையே குறைசொல்லி, குற்றவாளியாக்கி, ஆண்களின் குற்றங்களை தொடர்ந்து ஆதரித்து வரும் ஆண்களுக்கான அமைப்பாக குடும்பம் மாறியுள்ளது.

குடும்பத்தாரின் தேவைகளுக்கு சமைத்துப் போடும் பெண்களுக்கு போதிய சத்தான உணவுகள் கிடைக்காமலிருப்பதால் ஏற்படும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை குறித்து யரும் கவலை கொள்வதில்லை. ஊட்டச்சத்து பற்றாக்குறையால் உடல் உபாதைகளை சந்திக்கும் பெண்கள், தங்கள் உடல் மீது நம்பிக்கை இழந்து விடுகின்றனர். பெண் உடல் பலவீனமானது என்ற பொது உளவியலை உண்மையென உள்வாங்கிக் கொள்கின்றனர். சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ளும் ஆண், தன்னை பெண்ணை விட பலமானவன் எனக் கருதுகிறான்.

சிலிண்டர் தூக்குவது, சுமைகளைத் தூக்குவது, கடினமான வேலைகளில் சுலபமாக ஈடுபடுவது என வீடுகளுக்குள் சிறு வயதிலிருந்தே பழகுகின்ற ஆண்கள் தங்களுடைய உடலை பலமானதாக்கிக் கொள்கின்றனர். சத்தான உணவெடுத்துக் கொள்வதில் பின்தங்கியுள்ள பெண்கள், கோலம் போடுவது, பூக் கட்டுவது, வீடு பெறுக்குவதென்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளுகின்ற பணிகளில் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டு உடலை பலவீனமானதாக்கிக் கொள்கின்றனர்.

பிறக்கின்ற பொழுது இங்கு எல்லாக் குழந்தைகளுமே ஒரே வலிமையுடன்தான் பிறக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுடைய பெண்ணுக்கும், ஊட்டச்சத்துடைய பெண்ணுக்கும் பிறக்கின்ற குழந்தைகளுக்குள் கண்டிப்பாக வேறுபாடு இருக்கும். ஆனால் ஒத்த ஊட்டச்சத்து கொண்ட இரு வேறு பெண்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் ஆண் குழந்தையாயினும், பெண் குழந்தையாயினும், ஒரே பலத்துடனேயே பிறக்கும். அவர்கள் வளரும் பொழுது பாலின பாகுபாட்டு கலாச்சாரத்தோடு குடும்பங்கள் தருகின்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவின் அடிப்படையிலும், அதன் மூலம் அக்குழந்தைகள் அடைகின்ற உடல் பலம் சார்ந்த நம்பிக்கை/அவ நம்பிக்கை உளவியலாலும், உடல் பழக்கத்தினாலும், ஆணும் பெண்ணும் இரு வேறுபட்ட உடல்வாகை அடைகின்றனர்.

Photo by Dan Gold on Unsplash

பலம் என்பது பாலினத்தால் வருவதல்ல. ஊட்டச்சத்து உணவாலும், பழக்கத்தாலும், உளவியலாலும் வருவதாகும். ஆரோக்கிய உணவுகளை சமைக்கத் தெரிந்த பெண்களுக்கு தங்கள் ஆரோக்கியம் குறித்து சிந்திக்கவும் தெரிய வேண்டும். சமைப்பது என்பது பெண்களுக்கே உரிய கடமையல்ல. ஆண் சமைத்தாலும் பருப்பு வேகும் என்பதை குடும்பங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் இணைந்து சமைத்துண்பதை சமூகம் பழகிக் கொள்ள வேண்டும்.

ஆணும் பெண்ணும் சரிசம ஊட்டச்சத்து உணவுகளைப் பகிர்ந்துகொள்வது என்பது அவசியமான ஒன்றாகும். பகிர்ந்து கொள்வதைத் தொடர்ந்து குடும்பங்களில் சரிசமமாக அமர்ந்து உணவு உட்கொள்வதை பண்பாடாக வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

கட்டுரையாளர்

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.