நானாக நான் – 5

நம் பால்யத்தின் எத்தனை கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலேயே இருக்கிறோம். காலத்தால் வளர்ந்து நின்றும் இன்னும் குழந்தைகளாகவே இருக்கிறோம். பதில் தெரியாத அல்லது இன்னும் பதிலைச் சரியாகப் புரிந்து கொள்ளாத கேள்விகள்தான் எத்தனை?

சின்ன வயதில் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவளாக இருந்திருக்கிறேன். அதுவும் பேய் கதைகள் பேசும் நேரம் கடவுளர்களின் பெயரை உச்சரிப்பதில் என்னை மீற ஆளேயில்லை. கடவுள் பக்தி இருந்ததோ இல்லையோ, பேய் பயம் அதிகமாகவே இருந்திருக்கிறது. 

அதிலும் இரவில் மொட்டை மாடியில் சகோதரிகளுடன் அமர்ந்து கொண்டு போர்வையை தலை வரை மூடிக்கொண்டு பேய்க் கதை பேசுவது அலாதி இன்பம். ஆனால் கதை முடிந்தவுடன் கீழே இறங்கி கழிப்பறைக்கு போவதற்கோ, அல்லது எங்கள் அறைக்குப் போவதற்கோ பயத்தால் உறைந்து போயிருப்போம். என் அக்காவின் ஆடையை பிடித்துக்கொண்டே கீழே இறங்குவேன். ஆனாலும் அடுத்த நாள் பேய் கதைப் பேசுவதற்காக காத்திருப்பதை நிறுத்தியதே இல்லை. 

நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிற்கு வெளியில் திடீரென்று ஒரே கூட்டம். வீட்டிற்குள்ளிருந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் தலைவிரி கோலமாக ஆடிக் கொண்டிருந்தாள். என் மூத்த அக்கா, அப்பெண் சாமி ஆடுகிறாள் என்றாள். இல்லையில்லை அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்றாள் இளைய அக்கா. அம்மா முந்தானையைப் பற்றி நின்று கொண்டிருந்த நான் அம்மா கைகளை பற்றிக் கொண்டேன் பயத்தில். அந்த பெண் ஆக்ரோஷத்தோடு கத்திக் கொண்டிருந்தார். திடீரென்று அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் தொண்டையைக் கிழித்து அக்கோழியின் ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்துவிட்டார். நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். கண்களை மூடிய பிறகும் அதே காட்சி தெரிந்தது. 

அன்று இரவெல்லாம் மனம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் கைப்பம்பில் நிறைய பேர் குடி தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணும் சகஜமாக எல்லோரிடமும் பேசிக்கொண்டு தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார். நேற்று பார்த்தது இந்த பெண்ணைத்தானா என்று என்னால் நம்பமுடியவில்லை. அவள் வேறு ஒரு பெண்ணாக மாறி, உயிரோடிருந்த கோழியின் பச்சை ரத்தத்தைக் குடித்தது அவளுக்கு  ஞாபகம் இருக்கிறதா என்று சந்தேகமாகவே இருந்தது. அந்த பெண்ணின் முகம் இப்போது நினைவிலில்லை. ஆனால் அந்த காட்சி இன்னும் கண்களை விட்டு அகலவில்லை. அப்பெண்ணை பிடித்திருந்தது பேயா? சாமியா? இல்லை வேறு ஏதாவதா? அந்த வயதில் இக்கேள்விகளுக்கு பதில் இல்லை. 

என் கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். ஆறு மாதக் காலமாக உடல்நிலை சரியில்லாமல் பத்து கிலோவிற்கு மேல் எடை குறைந்திருந்தேன். அந்த சமயம் மனமும் சற்று பலவீனமாகத்தான் இருந்தது. உறக்கம் சரியாக இல்லை. உறக்கத்தினூடே ஏதோ விசையை அல்லது அழுத்தத்தை உணர்வேன். அந்த அழுத்தத்திலிருந்து விடுபட எத்தனிப்பேன். பலமுறை முயன்று பின்புதான் அவ்வழுத்தத்திலிருந்து விடுபட இயலும். மிகச்சோர்வாக உணர்வேன். 

Medical vector created by pikisuperstar – www.freepik.com

இந்த விஷயத்தை அம்மாவிடம் கூறினேன். ஏதோ காத்து சேஷ்டை, பேய் சமாச்சாரம் என்று கூறி பல பூஜைகளை செய்தார்கள். நாளடைவில் என் உடல் நலம் தேறிய பின்னர் அது போன்ற பிரச்சனைகள் உறக்கத்திலில்லை. 

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு உளவியலாளர் தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்தார். மன அழுத்தத்தின் அறிகுறிகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். நான் என்னவெல்லாம் உறக்கத்தின் ஊடாக அனுபவித்தேனோ அத்தனையும் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்று கூறிக்கொண்டிருந்தார். மன அழுத்தத்தைப் புரிந்துகொள்ளத் தெரியாமல் இருந்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி எனக்கு மட்டும்தான் வந்தது. அம்மா இன்னமும் நம்புகிறார் அது ஏதோ கெட்ட சக்தி என்று. 

அன்று கோழி ரத்தம் குடித்த அப்பெண்ணிற்கும் அவர் மனநலத்திற்கும் கூட பெரிய சம்பந்தம் இருந்திருக்கும்தானே?

பல முறை கேரளத்தில் உள்ள சோட்டானிக்கரை கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். பல பெண்களையும் பெண் பிள்ளைகளையும் பேய் ஓட்டுவதற்காக அங்கு அழைத்து வந்திருப்பதை நம்மால் காண இயலும். அவர்களில் எத்தனைப்பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்? எந்த வகையான மன்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு எப்போதேனும் உளவியல் சார்ந்த சரியான சிகிச்சைகள் கிடைத்திருக்கிறதா? இந்நிலையில் இப்படி கோவில்களுக்கு அழைத்து வந்து முழுமையாக குணமடைந்தோர் எத்தனைப்பேர்? கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்தி நிற்கும் அந்த பெண்களின் மனப் பரப்பெங்கும் நிறைந்திருக்கும் வலியைப் புரிந்து கொள்ள அவர்களைச் சார்ந்தவர்கள் நினைத்ததுண்டா? என்ற பல்வேறு கேள்விகள் மனதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 

நாம் காணும் மனிதர்களில் ஐந்தில் ஒரு நபருக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என்கிறது உளவியல். உடல்நலம் குறித்த விழிப்பைப் போல மனம் நலம் குறித்த விழிப்புணர்வுகளும் பெருகி வந்தாலும் நூறு சதவிகிதம் கல்வி உள்ள கேரள மாநிலங்களில்கூட பெண்களின் நிலை இப்படியாகத்தான் இருக்கிறது என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செய்தி.

யோகா போன்ற கலைகள் ஒன்று ஆன்மீகமாகப் பார்க்கப்படுகிறது இல்லையென்றால் அரசியலுக்காவும் விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்தப் படுகிறது. உடல்நலம் மனநலம் குறித்த அதன் பயன்பாடு மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது. யோகக் கலையின் சரியான பயன்பாடும் மனநலம் சார்ந்த உளவியல் பார்வையும் நமக்கு அவசியமானது.

உடல்நலம் போல அல்லாமல் மனநலம் குறித்த புரிதல்கள் நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கின்றன. மனநலம் குறித்த உரையாடல்களும் கேள்வி பதில்களும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. தற்கொலை என்ற சமூகப் பிணியை களைய, மனநலக் குறைகளை இன்னமும் பேய், பூதம் என்று முழுமையாக நம்பிக் கொண்டிருக்கும் மக்களின் அறியாமையை விலக்க மனநலம் குறித்த புரிதல் அவசியமாகிறது. நம் நட்பு வட்டத்திலோ அல்லது சொந்தபந்தங்களிலோ தற்கொலை செய்து கொண்டவர்களின் மன நலனைப் பற்றி நாம் சிந்தித்ததுண்டா?  மற்றவர்களை பரிகசிக்கும்போது பிறரின் மீது வன்மமான உணர்வுகளை உமிழும்போது அவர்களின் மன வலியைப் பற்றி நாம் எண்ணியிருக்கிறோமா ?

என் புலனக் குழுமத்திலும் தற்கொலைப் பற்றிய விவாதம் நடந்துகொண்டிருந்தது. தற்கொலை மிகப்பெரிய கோழைத்தனம். கையாலாகாதத்தனம் என்று கூறினார் ஒருவர். தற்கொலை என்பது மரணம். மரணத்தை நேரில் சந்திப்பதென்பது எப்படி கோழைத்தனமாகும் என்றார் இன்னொருவர். தற்கொலைகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது தற்கொலைகளைப் போலவே. உண்மையில் தற்கொலை என்பதும் மரணம்தானே? மரணத்தையே சந்திக்கத் துணிபவரால் வாழ்வை சந்திக்க இயலவில்லை என்பது எவ்வளவு பெரிய கோராமை.

வாழ்வின் பாதைகள் அடைக்கப்பட்டு, மரணத்தின் வாசலைத் திறந்து கொள்ளும் மனிதனை அருகிலிருந்து அவதானிக்க, மட்டுப்படுத்த, ஆறுதலளிக்க நாம் தவறிவிட்டோம் என்றுதானே அர்த்தம். அப்படி தவறிவிட்ட நாம் அதை தவறு என்று சொல்வதற்கும் தகுதியற்றவர்களாகத்தானே ஆகிறோம்.

People vector created by stories – www.freepik.com

உடலின் பிரச்சனைகளைப் போல மனதின், மூளையின் பிரச்சனைகள் ஏன் பரிசீலிக்கப்படுவதே இல்லை. நேர்மறை எண்ணங்கள் நமக்கு முக்கியம் தான். ஆனால் நேர்மறை எண்ணங்களால் மட்டும் இதுபோன்ற மனநல பிரச்சனைகளிலிருந்து முழுமையாக வெளி வந்துவிட முடியாது. மூளையின் இரசாயன மாற்றங்களை அதற்கான சரியான மருந்துகளையும் வாழ்வுமுறையையும் கொண்டே சரி செய்ய இயலும் அல்லவா? 

 மனநலக் கோளாறு என்ற பிரச்சனையை பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்குவதை நாம் கண்டிக்க வேண்டியிருக்கிறது. பைத்தியம் என்ற சொல்லாடல் மனப்பிறழ்வு கொண்டவர்களை மேலும் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

தன் மனப் பிறழ்வைக் கூட எழுத்துக்களாக மாற்றிய எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் அவர்களை இந்நேரத்தில் நினைக்காமல் இருக்க இயலவில்லை. எந்த ஒரு வலியையும் வேதனையையும் கசப்பையும் துன்பத்தையும் வேறொன்றாக மாற்றக்கூடிய ரசவாதம்தானே கலை. இந்தப் பைத்தியக்கார உலகில் மாறுபட்டவனாக இருப்பதும் இந்த பைத்தியம் அல்லாத உலகில் மாறுபட்டவனாக இருப்பதும் இரண்டும் ஒன்றுதானே என்னும் ஐயா கா.நா.சு அவர்களின் வரிகள் நினைவு கூறத் தக்கவை. 

உடலைப் போல மனமும் நோய்வாய் படலாம். பழுதாகலாம். சரி செய்து கொள்ளும் உபாயமும் மருந்தும் நிறையவே இருக்கின்றன. பேய் பூதம் போன்ற மூடப் பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நம் மனத் தடைகளை தகர்த்து மனநலம் காக்க அறிவியலை நாடுவோம். தொடர்ந்து பேசுவோம். 

கதைப்போமா ?…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.