1
இந்த திங்கட் கிழமைகள்
ஏனிப்படி இருக்கின்றன
எழும்போதே மணிமுள்ளை,
நொடி முள்ளாக ஆக்கி விடுகின்றன
செருப்புகளைக் கால் மாற்றிப் போட்டு
விழுத்தப் பார்க்கின்றன
பூமிக்குப் புதிதாக வந்ததுபோல்
பாதைகள் தடம் மாற
நடையை ஓட்டமாக்கிப்
பறக்க வைக்கின்றன
பறந்தும் இரயில்களைத்
தவற விடுகின்றன
அலுவலகத்தைக் கண்டடைந்ததும்
கடிகாரங்கள் நின்று விடுகின்றன
எங்கும் தேர்வறையின் பதட்டம்
-ஞாயிறிலிருந்து திங்கள்
திங்களிலிருந்து செவ்வாய்-
வாரா வாரம்
இந்தத் திங்கட் கிழமைகள் மட்டும்
வண்ணத்துப் பூச்சியிலிருந்து புழுக்களாக உருமாறும் தினம்
ஃ
2
ஃ

சொற்களுடைந்த
கனவின் புதிர்ப் பாதையில்
வாழ்வென்பது யார் கனவு
நான் காண்பதால் எனதா
நீ வந்ததால் உனதா
இல்லை நமதா
ஃ

மரணமென்பது –
யாருமற்ற இருள் குகையா
பேரமைதியா
நீருள் மூழ்குதலா
வானில் மிதத்தலா
தனித்துணை ஒற்றைவழிப் பாதையா
பாதையிலிருந்து கண் மறைவதா
எப்போதும் காணாத எல்லாமா
ஃ

எங்கிருந்தன
இந்த வேனில்கால இலைகள்
எங்கு சென்றன
இலையுதிர்கால மலர்கள்
ஃ
படைப்பாளர்

பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.
பிருந்தாவின் முந்தைய கவிதைகள்