மனித மனம் எவ்வளவு புனிதமானதோ அதை விடப் புதிர்களால் நிரம்பியது. அதற்கென்று உருவங்கள் ஏதும் கிடையாது. ஆனால் அது உருவாக்கும் வடிவங்களோ எண்ணற்றவை. மனித மனத்தின் சிந்தனைகளுக்கென்று ஏதும் தனித்த கொள்கைகள் கிடையாது. வானில் திரியும் மேகங்கள் போல அவை நிமிடத்துக்கொரு தோற்றம் காட்டும்.
யாரும் யாரையும் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது. ஏனெனில் மனித மனம் மாறுதலுக்குரியது. இன்று அதிக விருப்பாயிருக்கும் ஒன்று, நாளை அதீத வெறுப்பாகும். இன்று பிடிக்காத ஒன்று மறுநாள் பிரியத்துக்குரியதாக மாறும். இது இயற்கையின் நியதி. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை இயன்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். யார் மீதும் குற்றம் குறைகளை மட்டுமே காணக் கூடாது.
திருமணங்களில் மணமக்களை வாழ்த்தும் போது, “ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டு வாழுங்கள்..”, என்று வாழ்த்துவார்கள். ஆனால் மதிப்பிற்குரிய சுகி.சிவம் ஐயா அவர்கள் மட்டும், “ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொண்டு வாழுங்கள்..”, என்றுதான் வாழ்த்துவார். அவரது இந்தக் கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது. உண்மையில் யாரும் யாரையும் புரிந்து கொள்ள முடியாது. இதுதான் நிலையானது என்று ஒரு பிம்பத்தை அவர்கள் மீது நாம் கட்டமைக்க முடியாது. அப்படிக் கட்டமைக்கப்படுவது எந்நேரமும் உடையும் அபாயத்திலேயே இருக்கும்.
தம்பதிகளுக்குள் மோதல் தொடங்குவதே புரிந்து கொள்ளாமல் பேசும் போதுதான். இதற்கு முக்கியக் காரணம் தனது இணையர் மீதான ஆளுமையை அதிகாரமாக ஒருவர் வெளிப்படுத்துவது தான்.

ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது தான் சொல்வதை மட்டுமே கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் மனம் விரும்புகிறது. தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கக் கூட இணையரின் அனுமதியைக் கேட்கும் சாபக்கேடு நம் சமூகத்து பெண்களுக்குத் தான் வாய்த்திருக்கிறது. இதில் மேல் வர்க்க, நடுத்தர வர்க்க, விளிம்பு நிலைப் பெண்களும் கூடப் பலியாகின்றனர்.
“இவள்/இவன் என்னுடைய உடமை.. நான் சொல்வதைப் பின்பற்ற வேண்டும்..” என்ற ஆளுமை மனத்தின் நீட்சியாகப் பிரச்சினைகள் பின்னொட்டி வருகின்றன. இப்போதைய தம்பதியரிடம் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. தனது இணையரிடம் சிறு குறை கண்டாலும் கூட, அதை நுண்ணோக்கி கொண்டு பலமடங்கு பெருக்கிப் பார்க்கும் தன்மைதான் பெருகியிருக்கிறது. தான் சொல்வதை மறுப்பதா என்ற தனிமனித அகங்காரம், அதைச் சுய மரியாதை என்ற பெயரில் முரசறைகிறது.
ஆரோக்கியமான இடைவெளி எத்தகைய உறவுக்கும் அவசியம். அடுத்தவரின் ஒவ்வொரு அசைவும் தனக்குத் தெரிய வேண்டும் என்று கட்டளையிடுவது அந்த உறவுக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
தனது இணையரையோ அல்லது நண்பரையோ பிரியத்தின் பெயரால் அடக்கியாள நினைக்கக் கூடாது. அது அந்த உறவைக் கசந்து போகத்தான் வைக்கும்.
சண்டையும், சச்சரவுமின்றி வாழ்க்கை அமையாது. மூன்று மணி நேரத் திரைப்படத்திற்கே வில்லன்கள் தேவைப்படும்போது நீண்ட நெடிய இந்த வாழ்க்கை சிலபல துரோகங்கள், அவமானங்கள், சோதனைகள் என்று தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதுதான் வாழ்வியலின் சுவாரஸ்யமும் கூட. தடைகள் இருந்தால் தான் அதைத் தாண்டும் எண்ணம் வரும். சோதனைகள் இருந்தால் தான் அதைச் சாதனையாக்கும் வேகம் வரும்.

தானும் மகிழ்வாக இருந்து தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுதலே மனநிறைவுடன் கூடிய அமைதியான வாழ்க்கையின் வெற்றி. அதற்கு முதலில் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான புரிதல் வேண்டும். தன்னைப் புரிந்து கொள்பவர் அடுத்தவரை எளிதாகப் புரிந்து கொள்வார். தன்னுடைய இக்கட்டான சூழ்நிலைகளையும் எவரொருவர் பதற்றம் கொள்ளாமல் கையாளுகிறாரோ அவர் வாழ்க்கையைப் புரிந்தவர் ஆகிறார். எந்தவொரு மனிதரின் சிந்தனையும், செயலும் ஒன்றாக இருக்கிறதோ அங்கு நல்ல புரிதல் தொடங்கும்.
எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் தனது மனைவியை வெளியில் எங்கும் செல்லக் கூடாது என்றும், வேலைக்குப் போகக் கூடாது என்றும் (வேலைக்குப் போனால் மதிக்க மாட்டாள் என்பது அவர் தரப்பு வாதம்), மனைவியின் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு கூட செல்லக் கூடாது என்றும்(அவர் வீட்டு விசேஷங்களுக்கும் போக மாட்டார்), மனைவி என்பவள் வீட்டு வேலைக்கும், கணவனின் படுக்கையறைத் தேவைக்கும் மட்டுமே என்றும் பலவிதங்களிலும் கட்டுப்பாடுகள் விதித்தார். பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த அவரது மனைவி அவரைப் பிரிந்து சிலகாலம் தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
பின்னர் சில உறவினர்கள் தலையீட்டால் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். ஆனாலும் சரியான புரிதல் இல்லாமல் எங்கே தவறு? என்ன தவறு? என்றெல்லாம் மனம் விட்டுப் பேசாமல் மீண்டும் பிரச்சினைகள் வரவே, அவர் மனைவி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்று விட்டார். பனிரெண்டு வயது மகன் தந்தையிடமே இருக்க விரும்பியதால் விட்டு விட்டு போய்விட்டார்.
என்னிடம் பேசிய உறவினர் தன் மனைவி மீது எந்தக் குற்றச்சாட்டும் சொல்லவில்லை. “அவள் ஏன் போனாளென்றே எனக்குப் புரியவில்லை..” என்றே சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அவரது கவலையெல்லாம் மகனை கவனித்துக் கொள்ள, சமையல் செய்ய, துணி துவைக்க, வீட்டுவேலைகள் பார்க்க ஒரு ஆள் தேவையென்பதால் இரண்டாவது திருமணம்(?) செய்ய மேட்ரிமோனியலில் பதிவு செய்து வைத்திருப்பதாகச் சொன்னார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
இன்னும் திருமணம் எதற்குச் செய்கிறோம் என்ற புரிதலே நம் சமுதாயத்தில் ஏற்படவில்லை என்று நினைத்த போது வந்த மன உளைச்சல் இன்னும் நீங்கவில்லை. இவரைப் போன்றவர்கள் எத்தனை திருமணம் செய்து கொண்டாலும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியாது. அதை விடப் பெருங்கவலை இவரைப் போன்றே ஒரு ‘நகல்’ மகன் வடிவில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான். புரிதல் இல்லாத மனிதர்கள் நிலை தடுமாறித்தான் போவார்கள்.
இன்னொருவர் தன் மனைவி மீது வீணாகச் சந்தேகப்பட்டு விவாகரத்து செய்து விட்டார். அந்தப் பெண் தனது மகனையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். சிறிது காலம் கழித்து தன்னைப் புரிந்து கொண்ட ஒருவரை அந்தப் பெண் மணம் செய்து கொண்டார். இவர் சமைக்கவும், வீட்டுவேலை செய்யவும், தாயாரைப் பார்த்துக் கொள்ளவும் இன்னொரு திருமணத்திற்கு(?) முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
நமது இந்தியத் திருமணங்கள் தனக்கான ஒரு ஆத்மார்த்தமான நட்புக்காகவும், தனது உணர்வுகளை நாகரீகமாகப் பகிர்ந்து கொள்ளவும் நடைபெறுவதில்லை. அது வியாபாரமாகி விட்டது. எதிர்காலத்தில் உட்கார்ந்து சாப்பிடக் கணக்கு போடுகிறது. வெறும் மஞ்சள் கயிறில் பந்தங்கள் இறுக்கப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. ஊர்வாயை மூடவும், உடல்தேவையைத் தீர்க்கவுமே இந்தியத் திருமணங்கள் பெரும்பாலும் நடக்கின்றன. புரிதல் என்பது இத்தகைய வலுக்கட்டாய உறவுகளில் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு தனி உலகம் தான். ஒவ்வொரு மனிதரும் நிறம், அங்கம், தலைமுடி என்றெல்லாம் வேறுபட்டிருப்பது போல ஒவ்வொருவருக்கும் சிந்தனைகள் நிச்சயம் வேறுபட்டுத் தான் இருக்கும். சக மனிதர்கள் மீதான நம்முடைய எண்ண வெளிப்பாடுகள் தான் நம்மை உயிர்ப்போடு இயங்கச் செய்கின்றன.
ஒருவர் தனது கருத்துக்களை அடுத்தவரிடம் வெளிப்படுத்தலாம். ஆனால் அவர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. எந்தவொரு கருத்து குறித்தும் ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே நடக்க வேண்டும். கருத்துக்களோடு தான் மோத வேண்டும். கருத்தைச் சொன்னவர்களோடு மோதக் கூடாது. இதுவும் ஒருவிதமான ஆக்கிரமிப்பு தான். ஒரே விதமான எண்ண ஓட்டங்கள் உள்ளவர்கள் அரிது. அதைப் புரிந்து கொண்டாலே பாதிப் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
உறவோ, நட்போ யாராக இருந்தாலும் அந்த உறவில் நேர்மையாக இருக்க வேண்டும். பொய்மைகளாலும், தவறான நம்பிக்கையாலும் கட்டப்பட்ட ஒரு உறவு அவற்றாலேயே விரைவில் வீழ்ந்து விடும். ஒரே தண்ணீரை ஊற்றி வளர்த்தாலும் வேப்பமரமும், மாமரமும் வெவ்வேறு சுவையுடைய காய்களைத்தான் தருகின்றன. அதுபோல ஒரே குடும்பத்தில் இருந்தாலும் எல்லோரது எண்ணங்களும் ஒன்றுபோல் இருக்காது.

அதேபோல் யாரும் ஈகோவை வளர்த்துக் கொள்ளக் கூடாது. கடவுள் நம்மை விட்டு வெளியேறுவதே (Ending god out) ஈகோ. அது இருக்குமிடத்தில் புரிதல் என்பது விலகித்தான் இருக்கும். நம்முடைய பலவீனம் சுட்டிக் காட்டப்படும் இடத்தில் ஈகோ சுறுசுறுப்பாகிறது. அப்போது அதன் தலையில் தட்டி அடக்குபவர்கள் வெல்கிறார்கள். மீறிக் கட்டவிழ்ப்பவர்கள் தோற்றுப் போகிறார்கள்.
புரிந்து கொள்வது வேறு; புரிய வைப்பது வேறு என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தான் மனதில் நினைப்பதை சொல்லாமலே அடுத்தவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட முட்டாள்தனம் வேறு ஏது? மனம் விட்டுப் பேசும் எத்தகைய உறவுகளிலும் இத்தகைய சிக்கல்கள் எழாது. அடுத்தவரின் விருப்பு,வெறுப்புகளையும் மதிக்கப் பழக வேண்டும். எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்த நயமான, எதிர்தர்ப்பைப் புண்படுத்தாத வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாம் சொல்லும் கருத்துகளை அடுத்தவருக்குப் புரிய வைக்க முயல வேண்டுமே தவிர அவர்களிடம் திணிக்கக் கூடாது.
புரிந்து கொள்ளாமல் ஒரு உறவைப் பிரியக் கூடாது. மனிதர்கள் நூறு சதவிகிதம் நல்லவர்களாக மட்டுமே இருக்க முடியாது. நமது உறவுகளை அவர்களுடைய நிறை, குறைகளுடன் அப்படியே ஏற்றுக் கொள்வோம். ஒருவர் எப்போதுமே ஒரே மனநிலையுடன் இருக்க முடியாது. மாற்றங்கள் சகஜமானவை. அதனை முதலில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு ஒவ்வாத, தீய வழக்கங்களை அவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு அன்பாகப் புரிய வைக்க முயலலாம். அவ்வளவே. மெல்லிய இடைவெளியில் தள்ளி நிற்பதே நமக்கான எல்லை.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கேற்ப புரிதலின் அருமை பிரிதலில் தான் தெரியும். அவசரப்பட்டு எந்த ஒரு உறவையும் வெட்டி விடக்கூடாது. மனித மனங்களின் மாற்றங்களை உணர்ந்து அடுத்தவர் தெளிவு பெற போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். இருக்கின்ற ஒரு வாழ்க்கையை இனிமையாக வாழ வேண்டும்.
நம் வாழ்வின் மகிழ்ச்சி என்பது பெரிய வீட்டிலோ, ஆடம்பரமான காரிலோ, பெருத்த வங்கிக் கணக்கிலோ இல்லை. நமக்கு ஒரு துன்பம் என்றவுடன் துடிக்கும் ஒரு உயிரையாவது சம்பாதித்து வைத்திருப்பவரே செல்வந்தர். இதரர் எத்துனை பணம் படைத்தவராயினும் ஏழையே.
அன்பு காட்டிக் கூட ஒருவரை நாம் அடக்கியாள நினைக்கக் கூடாது. அவரவருக்கான இடைவெளியையும், சுதந்திரத்தையும் நாம் தட்டிப் பறிக்கக் கூடாது. போதுமான இடைவெளிகளில் வளரும் தாவரங்களே அதிகப் பயனை அளிக்கின்றன. ‘கிட்டப் போனால் முட்டப் பகை’ என்பது முதுமொழி. ஆனால் என்றென்றும் புதுமொழி.
எண்ணங்கள் தான் நமக்குத் தோழமையும், விரோதமும். நம்மை வாழ வைப்பதும், அழிப்பதும் நம்முடைய அகச் சிந்தனைகளே. இதைப் புரிந்து கொண்டு வாழப் பழக வேண்டும். அப்போது இந்த உலகமெங்கும் அழகிய பூக்கள் பூக்கும் நந்தவனமாக மட்டுமே காட்சியளிக்கும்.
***
கட்டுரையாளரின் மற்ற படைப்பை வாசிக்க:
படைப்பு:

கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.