நாகரீகம் முதிரா கற்காலத்தில் கூடத் தாய்வழிச் சமூகம் தானென்பது வரலாறு. நாகரீகம் முதிர்ந்த(?) தற்காலத்திலோ யார் வழிச் சமூகம் என்பதில் தகராறு. ஆதிமனிதன் பெண்ணின் தலைமையில்தான்  தனது மக்களை வழி நடத்தினான். இடைக்காலத்தில் தான் அந்த வழக்கம் இடம் பெயர்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.               

பெண்ணின் பிறப்பு முதல் இறப்பு வரை ஆணாலேயே அவளது வாழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய துயரம்? ஆடை அணியாத கற்கால மனிதர்கள் கூட சமமான வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் இன்றைய படித்த(?) மனிதர்கள் பாகுபாட்டுடன் நடந்து கொள்கின்றனர்.               பெண்களைப் போற்றிய காலத்தில் உண்டானதுதான் தேவரடியார்கள் என்னும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் ஒரு பிரிவினர். ஆண்கள் இல்லற வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் போவது போல பெண்களும் இறைசேவையில் காலத்தைக் கழிக்க, இறைவனின் அடிமைகள் என்று பெயர் பூண்டு சேவை செய்யத் தொடங்கினர்.             

இறைவனின் சந்நிதியில் அர்ச்சகருக்கு அடுத்து ஆராதனை காட்டும் அதிகாரத்தை அன்றைய தேவரடியார்கள் பெற்றிருந்தனர். அவர்கள் பூஜை செய்யவும் உரிமை பெற்றிருந்தனர். இறைவனின் திரு முன்பு ஆடல், பாடல் இசைத்தனர். அவ்வாறான சேவையில் ஈடுபாடில்லாதவர்கள் கோயிலைச் சுத்தம் செய்தல், நந்தவனத்தைப் பராமரித்தல், இறைவனுக்கு மாலைகள் கட்டுதல், மடப்பள்ளியில் உதவுதல் என்று ஏதேனும் ஒரு பணியில் ஈடுபடுவர். அவர்கள் இறக்க நேரிட்டால் ஆலயத்தில் இருந்து நெருப்பை எடுத்துச் சென்று எரியூட்டினராம். அத்தகைய பெருமையோடுதான் அன்றைய தேவரடியார்கள் இருந்தனர்.               

ஆனால் அதன்பின் வந்தவர்கள் இந்தப் பதத்தின் பொருளையே மாற்றி விட்டனர். தங்களது முறையற்ற பாலியல் இச்சைகளைத் தணித்துக் கொள்ள இந்தத் தேவரடியார்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். பெண் என்பவள் களிமண் போல யார் எடுத்து வனைந்தாலும் உருவம் கொடுக்கும் என்ற திமிரான ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ஆண்களால் ஏகப்பட்ட பெண்கள் அவர்களது விருப்பம் இன்றித் தேவரடியார் ஆக்கப்பட்டனர்.               ஆண்களின் முறையற்ற இச்சைக்கு விருந்தாக சிவப்பு விளக்குப் பகுதிகள் இருப்பதால்தான் பிற பெண்கள் தைரியமாக வெளியில் நடக்க முடிகிறது என்ற ஒரு கருத்து முத்து சில ஆண்டுகளுக்கு முன்னால் உதிர்க்கப்பட்டது.

Pinterest

எத்தனை கேவலமான எண்ணம் அது?. அப்படியெனில் ஆண்கள் எப்போதுமே முறையில்லாத அதீத காம எண்ணங்களோடு அலைபவர்கள் என்றுதானே பொருள்?. அதற்காக இத்தகைய ஆண்களின் தேவைகளை நிறைவேற்ற சிவப்பு விளக்குப் பகுதிகள் தேவை என்றுதானே அர்த்தம்?.                

இவர்களை நக்கன், மாணிக்கி, சதுரி, தளியிலார், பதியிலார்,  தேவரடியார்,  தளியிலார், கூத்திகள், கணிகையர், அடிகள்மார், தேவதாசி, மாதங்கி, நாயகி, மாத்தம்மா, பசவி, சூலி மகே, விலாசினி, ஜோகினி, ஆடல் கணிகை, ருத்ர கணிகை, தளிச்சேரிப் பெண்டிர் என்று பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் அழைத்தார்கள்.                

அந்தக் காலத்தில் ஆசைக் கிழத்தி, காமக் கிழத்தி என்ற பெயர்களில் ஆண்கள் பல பெண்களுடன் உறவு கொள்வதை யாரும் தட்டிக் கேட்கவில்லை. அதற்கான முக்கியமான காரணி அன்றைய பெண்கள் பொருளாதார பலம் பெற்றிருக்கவில்லை என்பதுதான். அது மட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு என்று பல்வேறு மாயச்சங்கிலிகள் பெண்களைப் பிணைத்திருந்தன.                 

அரசர்கள் தங்களது அந்தப்புரச் சேவைக்கு மட்டுமே பெண்கள் என்று ஒரு பெரிய பெண்கள் பட்டாளத்தையே அடிமைப்படுத்தியிருந்தனர். அன்னிய தேசத்தை வென்றவர்கள் அங்குள்ள பெண்களைக் கைப்பற்றி பாலியல் அடிமைகளாக்கினர். அவர்களிடம் இருந்த யானைகள், குதிரைகள் போலப் பெண்கள் எண்ணிக்கையையும் அஃறிணையாகக் குறிப்பிடும் அவல நிலையே இருந்தது.                  

சில அரசர் குடும்பப் பெண்களே அரசியலில் ஈடுபட்டனர். மிகச் சொற்ப அளவிலேயே அவர்களது பங்களிப்பும் இருந்தது. அவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருந்தனர். மிகவும் போராடித்தான் அரசியலில் பெண்கள் இன்றும் குறைந்த அளவே இயங்குகின்றனர்.               உயர் குடியினர், தாழ்ந்த குடியினர் என்றெல்லாம் அன்றும் பிரிவுகள் இருந்தன. ஆனால் எல்லாப் பிரிவிலும் பெண்கள் ஒரே மாதிரியாக அதாவது இரண்டாம் பாலினமாகவே நடத்தப்பட்டனர். பெண்களைப் புறக்கணிப்பதில் அனைத்து சாதியினரும் ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றனர். இன்றைக்கும் அதே நிலை தொடர்வதுதான் அவலம். இதிலும் மிகவும் அவலமுரண் என்னவென்றால் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதைப் அந்தப் பெண்கள் உணர்வதில்லை என்பதுதான்.           

PC: Pinterest

இன்றைக்கு குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே தேவதாசி ஆக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் தாசிகளாக்கப்பட்டனர். இதை பல்வேறு கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சொல்லுகின்றன. செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பதிலாக விளிம்பு நிலைப் பெண்களும், ஏழைக் குடும்பத்துப் பெண்களும் பலிகடாவாக்கப்பட்டனர். ஒரு பெண் விருப்பப்பட்டு தேவரடியார் ஆவதில்லை. வேண்டுதல், ஏழ்மை, வஞ்சகம் போன்ற சமூகக் காரணிகளின் அழுத்தம்தான் அவர்களை அந்தச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது.             

எத்தனையோ பெண்கள் அதிலிருந்து விடுபட எண்ணினாலும் சந்தர்ப்பமும், சமூகமும் அவர்களை மீண்டும் அதிலேயே தள்ளியது. சட்ட மேலவையில் தேவதாசி முறை  ஒழிப்பு குறித்து,  1927, நவம்பர் 5ல்தனி நபர் தீர்மானமாகக் கொண்டுவந்தார் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி. அவர்தான் மெட்ராஸ் மாகாண சட்ட மேலவையின் முதல் பெண் உறுப்பினரும் கூட. அவருடன் இணைந்து துணை நின்றவர் இசை வேளாளர் சமூகத்தில் பிறந்து, பொட்டுக் கட்டும் முறையை ஆணித்தரமாக எதிர்த்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.           

பழமைவாத நம்பிக்கைகளில் ஊறிய அன்றைய முதல்வர் இராஜாஜி அவர்கள் அந்தத் தீர்மானத்தை நிராகரித்தார். அதன்பின் ஓமந்தூரார் ஆட்சியில் 1947 அக்டோபர் 9 ல் தேவதாசி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது.             உலகின் புராதனமான தொழில் புரிபவர்கள் என்று ஆண்களால் சுட்டப்படும் இத்தகைய பெண்கள், தாங்கள் இத்தகைய நிலைக்கு வந்ததற்கு சுட்டிக் காட்டுவது பொறுப்பற்ற தந்தை, சகோதரன், கணவன், காதலன் எனப்படும் ஆண்கள் குலத் திலகங்களைத்தான்.                  

இதில் மிகவும் கொடுமை என்னவென்றால் இத்தகைய அழகிகள் கைது செய்யப்படுவதைப் பெரிதாகப் படம் பிடித்துப் பிரசுரம் செய்யும் பத்திரிகைகள் அவர்களுடன் இணைந்து குற்றம் செய்த அழகன்களைச் சுலபமாக மறந்து விடுவதுதான். பாலினப் பாகுபாடு இதிலும் இருக்கிறது.     

 ‘கற்பு நிலையென்று வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்’ என்று முழங்கியவர் முண்டாசுக் கவிஞன் பாரதி. ஆனால் நமது இந்தியச் சமூகத்தில் கற்பு என்பது பெண்ணின் யோனியில் மட்டும் தான் இருக்கிறது.

PC:world4eu

“அம்பது பேர் கிட்ட போயிட்டு வந்தாலும் அவனுக்குப் பேரு ஆம்பிளைதான்.. ஆனா அதே ஒரு பொண்ணு போனா அவளுக்கு என்ன பேருன்னு நீயே தெரிஞ்சுக்க..” இது தொண்ணூறுகளின் இறுதியில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் அப்பட்டமான ஆணாதிக்கக் கருத்துக்களை அதுவும் பெண்களின் வாய்மொழி மூலமாகவே வெளியிட வைத்த ஒரு வசனமாகும்.

இன்னும் இதற்குக் கைதட்டி மகிழும் கனவான்களும் இருக்கின்றனர்.             இந்தப் பாலியல் சுரண்டலில் அந்தப் பெண்களை ஈடுபடுத்தும் ஆண்கள் தான் பெரும்பாலும் பலனடைகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அதிலிருந்து மீள நினைத்தாலும், இந்தச் சமுதாயத்தின் எதிர்வினைகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் அந்தச் சேற்றிலேயே உழல்கின்றனர்.                    

பெண்களை சக உயிராகக் கருதாமல் வெறும் போகப் பொருளாகக் கருதுவதே இத்தகைய நிலைக்கு முக்கியக் காரணமாகும். பெண் ஒன்றும் நுகர்வுப் பண்டமல்ல என்பதை ஆணாதிக்க சமூகம் எண்ணிப் பார்ப்பது இல்லை. படித்து நல்ல வேலையில் இருக்கும் நாகரீகமான(?) ஆண்கள் கூட மறைமுகமாகப் பெண்களை பாலியல் ரீதியாக மட்டம் தட்டுவது இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் மிகவும் சகஜமாகக் காணப்படுகிறது.                  நுகர்வுப் பண்டங்களின் விளம்பரங்களில் கூடப் பொருளை விட பெண்களைக் கவர்ச்சியாக முன்னிறுத்துவதே வணிகமாகிறது. பெண்கள் குறித்த ஆண்களின் கண்ணோட்டத்தை சிறுவயதில் இருந்தே நேர்மறையாக மாற்றியமைக்க வேண்டும்.                   

பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. என்றாலும் முழு சம்மதத்துடன் எந்தப் பெண்ணும் இதில் ஈடுபடுவதில்லை. அரசு இத்தகைய தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களை மீட்டு அவர்கள் சுய கௌரவத்துடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்.  

அவர்களுக்கு அடிப்படைக் கல்வி அறிவு கிடைக்க உதவ வேண்டும். தங்களது வாழ்க்கைப் பாதையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். வாழ்வில் நேர்மறையான வழிகளில் உயர்ந்த பெண்களைப் பற்றித் தெரியப்படுத்த வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய தெளிவை ஏற்படுத்த வேண்டும். இது சற்றுக் கடினமான ஒன்று என்றாலும் செயல்படுத்தத் தொடங்கினால் நிறையப் பெண்களின் வாழ்க்கை மீளத் தொடங்கும். 

படைப்பாளரின் மற்ற படைப்பை இங்கே வாசிக்கலாம்:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.