அந்தப் பெண் என்னிடம் வரும் பொழுது தனக்கு என்ன நேர்கிறது என்றே புரியவில்லை என்றார். நான் எல்லா டெஸ்ட்களும் எடுத்துவிட்டேன். எனக்கு என்ன சிக்கல் என எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் பதிவைப் பார்த்தேன். எனக்கு மெனோபாஸ் அறிகுறி இருக்குமோ என்ற சந்தேகம். அவருக்கு முகத்தில் தெளிவில்லை. கடும் பதற்றம். ஜும் ஆன்லைன் பழகி, நேரில் பார்ப்பது போன்ற உணர்வில் முகம் காட்டிக்கொடுக்கும். மனம் அப்படியே முகத்தில் பலருக்குப் பிரதிபலிக்கும். அவரின் முகம் வருத்தம், மன அழுத்தம் இவற்றால் பாதிக்கபட்டு இருந்தது புரியவந்தது. அது ஹார்மோன் மாற்றங்களால் மட்டும் இல்லை…

அவர் சொன்னது, இரவில் எழுகிறேன்… உடல் முழுக்க வியர்வை… முகம் சிவக்கிறது. என்னால் இந்த வியர்வையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது முடிந்தவுடன் எனக்குப் பதற்றம் வந்துவிடுகிறது. அன்றைய நாள் முழுதும் எனக்குப் பய உணர்வு. இப்படித் தனியாக இருக்கும் பொழுது, லிஃப்டில் செல்லும் பொழுது, அர்த்த ராத்திரியில் வியர்வைச் சொட்டச் சொட்ட எழுந்துகொள்வது எனக்குக் கொடுமையாக இருக்கிறது என்றார்.

இரவில் வியர்வை ஏன்? உடல் ஏன் சூடாகிறது ?

வாசோமோட்டர் அறிகுறிகள் (Vasomotor symptoms)

அதாவது ரத்த நாளங்கள் சுருங்குதல், விரிவடைவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

ஹாட் ஃப்ளஷ் எனப்படும் திடீரென்று தலை சூடாதல், ரத்த அழுத்த மாறுபாடுகள், இதயத் துடிப்பில் மாறுபாடுகள் இவையெல்லாம் ஏற்படும். இவை தவிர, இரவில் திடீரென்று வியர்த்தல், ஏசி அறையிலும் வியர்த்தல் நடக்கும்.

வெப்ப அளவுகள், ரத்த அழுத்த அளவுகள், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும்  மெனொபாஸ் ஹார்மோன்கள் வேறுபாடு அதாவது ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரெஜெஸ்ட்ரோன், FSH  வேறுபாடுகள் முக்கியக் காரணம்.


இந்த  ஈஸ்ட்ரோஜன் இருக்கே, இது நல்லதாகவும் இருக்கும், வில்லத்தனம் செய்யும். காதலில் இருக்கும் பொழுது மகிழ்வாக இருக்கும். ப்ரேக் அப் ஆனால் வலி இருக்கும். ஆனால் எப்போது மகிழ்ச்சியாக இருக்கும், எப்போது வலி கொடுக்கும் என்று அதற்கே தெரியாது. சட்டென்று ஈஸ்ட்ரோஜன் குறைவதால் அதைச் சமாளிக்க முடியாமல் ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படும்.

ஹைபோதலாமஸ், பிட்யூட்டரி இரண்டும் ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்குக் காரணம். இவை உடலில் வெப்ப நிலையைச் சமம் செய்யவும் உதவும்.  முக்கியமாக இவை திடீரெனக் குறையும் பொழுது உடல் வெப்ப சமநிலையை ஹைபோதலாமஸ் சமாளிக்க முடியாமல் கை விடுகிறது. அதுதான் ஹாட் ஃளஷ்.  இது பெரும்பாலான மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படும்.

இன்னும் சரியாகச் சொல்வதெனில் ரத்தநாளங்கள் விரிவடைந்து தோலுக்கு அருகில் சூடாக உணர்வோம். தோல் சிவப்பாக மாறும். இதைச் சரி செய்ய உடல் வியர்வை உற்பத்தி செய்து குளிர்விக்கும். உடனே உடல் குளிரால் நடுங்க ஆரம்பிக்கும். யோசித்துப் பாருங்கள். உடல் திடீரென சூடாகும். வியர்வை ஊற்றும். இரவென்றால் தூக்கத்தில் நனைந்து எழுவோம். பின் உடல் நடுங்கிக் குளிரும். ஒரு பத்து நிமிடங்களில் ராஜஸ்தான், ஊட்டி அனுபவம் கிடைத்தாலும் உடல் இதைத் தாங்காமல் நமக்குச் சோர்வு, பதற்றம் வரும். இந்தச் சமயத்தில்தான் பெண்கள் தனக்கு ஏதோ தீராத வியாதி எனப் பயந்துவிடுகின்றனர்.


சில நேரம் இது பொது இடங்களில் சில பெண்களுக்கு வந்துவிடும். எல்லோரும் இதைப் பார்ப்பார்கள் என்ற பயமும் அவர்களுக்கு வந்துவிடும். பதற்றப்பட்டுக்கொண்டு பலர் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். இது முடிந்தவுடன் சிலருக்குப் பதற்றம் ஏற்படுவதும் இயற்கைதான். இதை என்ன செய்தாலும் தவிர்க்கவே முடியாது என்பதுதான் உண்மை. இதை எப்படி ஏற்றுக்கொண்டு மெனோபாஸைக் கடப்பது என்பதுதான் சவால். 

இரவில் இரண்டு, மூன்று உடைகள் அணியலாம். முதலில் பேட்டர்ன் கவனிக்க வேண்டும். நமக்கு எப்பொழுது, எந்த நேரத்தில் ஏற்படுகிறது என ஒரு குறிப்பு எழுத வேண்டும். 

ஜெனிட்டோயூரினரி அறிகுறி:

இதைக் கர்ப்பவாய் வறட்சி அதாவது வஜினல் கொலாஜன் குறையும். அடுத்து அதன் நெகிழ்வுத் தன்மை குறையும் வஜினல் பிஎச் குறையும். இதெல்லாம் ஈஸ்ட்ரோஜன் குறைவதால் நடக்கிறது. கர்ப்பவாய் வறட்சி பற்றிப் பெண்களுக்கும் புரிதல் இல்லை. ஆண்களுக்கும் இருக்காது. அந்தச் சமயத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடும் பொழுது  அதிக உராய்வு ஏற்படும். இதற்கான ஜெல், மாத்திரை, சப்ளிமெண்ட் இருக்கிறது, சரி செய்யலாம் என்ற உணர்வே பல பெணகளுக்கு ஏற்படுவதில்லை. மெனோபாஸ் என்பது இனப்பெருக்கம் நிற்பது மட்டுமே. அதன் பின் நமது தாம்பத்திய உறவுகள் தொடரலாம். இன்னும் மகிழ்வாக வாழலாம். அதே நேரம் கர்ப்பவாய் வறட்சி, தாம்பத்திய நேரத்தில் உராய்வில் எரிச்சல், வலி, வலியினால் ஆர்வம் குறைவது போன்று இருப்பின் மகப்பேறு மருத்துவரிடம் கூச்சமின்றி சொல்லி ஜெல், மாத்திரை எடுக்க வேண்டும். இல்லையேல் கணவன், மனைவி தாம்பத்திய  உறவே சிக்கலாக மாறிவிடும். இதில் வாசோமோட்டர் அறிகுறிகளால் பதற்றமும் சேர்ந்தால் இன்னும் புரியாமல் என்னடா இது வாழ்க்கை என வெறுப்பாக மாறும். இதுதான் இது எனப் புரிந்தால் வசந்தத்தை மீட்டு எடுக்கலாம். 

என்ன மாதவிடாய் பற்றிய புரிதலே சமுகத்தில் இப்பொழுதுதான் உருவாகியுள்ளது. மெனோபாஸ் சிக்கல்களும் கூடிய சீக்கிரத்தில் பொதுவில் பேசப்படும். பலருக்கு என்ன சிக்கல் என்பது புரியாமலே வீட்டில் பலப் பிரச்னைகள் உருவாகுகின்றன. அம்மா இந்த நேரத்தில் இப்படி இருப்பாள், நாம் இங்கு அனுசரிக்க வேண்டும். மனைவிக்கு இது நடக்கும். நாம் ஆதரவாக, அனுசரணையாக இருக்க வேண்டும் என்று குடும்பம் முழுவதும் மெனோபாஸ் கடக்க உதவ வேண்டும். முக்கியமாக இரவு வியர்த்தல், பதற்றம் ஏற்படும் சிலருக்கு அன்புதான் விரைவில்  மீட்டு எடுக்கும். 

இந்த ஹாட் ப்ளஷ் மெனோபாஸ் முடிந்தும் சிலருக்கு இருக்கலாம். சிலருக்கு வராமல்கூடப் போகலாம். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இந்த அறிகுறிகள் இருக்கும். ஆனால், வரும்முன் அந்த உணர்வு உணர்த்திவிடும். 

பெரி மெனோபாஸில் மிகுந்த சிக்கல் உடைய ஒரு விஷயம் ஒன்று உண்டு என்றால் அது ரத்தப்போக்கு. யாருக்கு எப்படிப் போகும் என்பது கணிக்க முடியாது என்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அதிக ரத்தப்போக்கு அல்லது வெறும் சொட்டுப் படுதல் என்று இருக்கும். ஹார்மோன்கள் மாற்றங்களால் ரத்த மாதிரிகள் எடுத்து கண்டடைவதிலும் சிக்கல்கள் உண்டாகும். சீராக இல்லாமல் இருப்பதால் இந்தச் சிக்கல்கள் உருவாகும்.

வாசோமோட்டர் சிக்கல்களால் மனம் அலைபாய்தல், மனநிலை தடுமாற்றம் நடக்கும். என் அனுபவத்தில் பெண்களிடம் மெனோபாஸ் நேரத்தில்  தூக்கமின்மை அதிகமாகக் காண்கிறேன்.

இரவில் விழித்திருத்தல், அதிகாலைக்கு முன்பே விழிப்பு,

அரை விழிப்பில் இருப்பது.

இதுபோன்ற தூக்கப் பிரச்னைகளுடன்  வேசோமோட்டர் அறிகுறிகள் தொடர்புகொண்டுள்ளது.

தூக்கமின்மையால் மன அழுத்தம் அல்லது மன அழுத்தத்தினால் தூக்கமின்மை போன்ற சிக்கல்கள் எழுகிறது. தூக்கமின்மை என்பது பல உடல் நலக்கோளாறுகளுக்கு அடிப்படை என்பதால் இதைக் கூடுதலாகக் கவனிக்க வேண்டி இருக்கிறது.

அதைத் தவிர தூக்கக் கோளாறான restless leg syndromeகூட சிலருக்கு வர வாய்ப்பிருக்கிறது. ஒரு பக்கம் ஹார்மோன்கள், இன்னொரு பக்கம் வயது இரண்டும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

கர்ப்பபை வறட்சி மட்டுமின்றி வஜினல் வறட்சித் தோல்  கடினமாதால் உருவாக வாய்ப்பு உண்டு. சிலருக்கு  சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வருவதும் உண்டு.

பல விஷயங்கள் சரியாகக் கண்டறியப்பட்டு நல்ல பெண் மருத்துவ நிபுணரிடம் சரிசெய்ய வேண்டும். சரி,  மறறவை எல்லாம் எப்படிச் சரி செய்யலாம்? எப்படிக் கண்டுப்பிடிக்கலாம்?

(தொடரும்)

படைப்பாளர்:

கிர்த்திகா தரன்

இணையத்தில் தொடர்ந்து பல வருடங்களாக இயங்கி வருகிறார். இரண்டு டயட் புத்தகங்கள் உள்பட மூன்று புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பெண்ணியப் பார்வையில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘ஹெப்டா சென்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். உணவும் மன நலமும் உட்பட்ட நியூட்ரிஷியன் சைக்காலஜி துறையில் ஈடுபட்டு வருகிறார். சமூகப் பணியாக ‘அட்கனக்ட்’ என்ற அமைப்பும் ‘வுமன் எண்டர்பிரனர் இந்தியா’ என்ற அமைப்பையும் நண்பர்களுடன் நடத்தி வருகிறார். என் எல் பி பயின்று நான்கு வருடங்களாக zenlp trainer ஆக கார்பரேட் டிரைனிங் செய்கிறார். பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார்.