பெண்ணியம் என்பது உண்மையில் என்ன என்பது இப்போது எல்லோரிடமும் தொக்கி நிற்கும் ஒரு கேள்வி. ஆண்களைப் போல ஆடையணிவதும், முடி வெட்டிக் கொள்வதும், அவர்களைப் போல மது அருந்துவதும், கட்டற்ற பாலியல் உறவு கொள்வதும் மட்டுமே பெண்ணியம் என்று சில படித்த பெண்கள்கூடத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அதுவல்ல பெண்ணியம். இன்னும் அடிப்படை உரிமைகள் கூடக் கிடைக்காமல் அவமரியாதை செய்யப்படும் பெண்கள் சார்பாகக் குரல் கொடுத்து, அவர்கள் தங்களது அடிமைத் தளையிலிருந்து விடுபட வழி காட்டுவதே பெண்ணியம்.
சீரியல் கதாநாயகிகளைப் போல எல்லாக் கஷ்டங்களையும் தானே சுமந்து கொண்டு, யாருக்கும் எந்த வேலையும் கொடுக்காமல் குடும்பத்திற்காக ‘மெழுகுவர்த்தியாய்’த் தன்னை உருக்கி மாயும் பெண்களைப் போலின்றி, வீட்டு வேலைகளை கணவனையும், குழந்தைகளையும் பகிர்ந்து செய்யப் பழக்குவதே பெண்ணியம். வெற்றுப் பெண்ணியம் பேசாமல், தனக்கான உரிமைகளைக் குடும்பத்தினரிடம் ‘கேட்டுப் பெறாமல்’ இயல்பாக எடுத்துக் கொள்ளுவதே நிஜமான பெண்ணியம்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிடம், “பெண்ணுரிமை பத்தி படிச்சிருக்கீங்களா?”, என்று கேட்டேன். உடனே அவர்,”நானும் பெண்ணியவாதி தானுங்க… வீட்டு வேலை எல்லாம் கரெக்டா முடிச்சிட்டு, அவருக்கு எல்லாம் பர்ஃபெக்டா செஞ்சு முடிச்சிட்டு, குழந்தையைக் கவனிச்சிட்டு, மிச்ச நேரத்தில் பெண்ணியம் பத்தி பேசுவேனுங்க…” என்றார். அப்போது அவரிடம் பெண்ணியம் பற்றிய எனது கருத்துக்களாக உரையாற்றியதே மேற்கண்ட விளக்கம்.
அப்படியே மது அருந்துவதும், கட்டற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் அவரவர் தனிமனித விருப்பம், உரிமை, சுதந்திரம். அதில் நாம் மூக்கை நுழைத்து, “அப்படி இருங்கள்.. இப்படி இருங்கள்..” என்றெல்லாம் அவர்களுக்கு ஆலோசனை சொல்லக் கூடாது. அது தேவையுமில்லை. அவர்கள் செயல் சரி அல்லது தவறு என்று எந்தவித விமர்சனத்தையும் வைக்கத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டம். ஒருவருக்கு சரியென்று தோன்றும், ஒன்று இன்னொருவருக்கு தவறாகத் தோன்றும். இது இயல்பே.
சமீப காலங்களில் கட்டற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுபவரைப் பார்த்து தாங்களும் அதுபோன்ற வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அல்லது தூண்டப்பட்டு சில பெண்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட இரு தரப்புப் பெண்கள் யாராயினும் அவர்கள் செய்தது சரியா தவறா என்று நாம் அலசப் போவதில்லை. ஒருவர் கட்டற்ற பாலியல் உறவுகள்தான் தனது விருப்பம் என்று சொல்கிறாரென்றால் அவர் வாழுமிடம், அவரைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவரது வாழ்க்கைச் சூழல் என்று எவ்வளவோ காரணிகள் அவர் தன்னிச்சைப்படி செயல்பட இலகுவாக அமைந்திருக்கும்.
நம் நாட்டுப் பெண்கள் முதலில் தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக்கூட இன்னும் போராட வேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். வெளிநாட்டில் பாலியல் உறவு தொடர்பான செயல்பாடுகளில் கிட்டத்தட்ட சமநிலையில்தான் இருபாலரும் இருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் எந்தவொரு விஷயத்திலும் பெண் இரண்டாமிடம்தான் பெறுகிறாள். இந்த ஏற்றத் தாழ்வுகளையே இன்னும் நம்மால் முற்றிலுமாகக் களைய முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் கட்டற்ற பாலியல் உறவுகளில் சிக்கிக் கொண்டு, பெண்ணியம் என்ற பெயரில் நமது அக அமைதியை நாமே கெடுத்துக் கொள்வது பற்றி நாம் சிந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எந்த ஒரு மாற்றமும் உடனே நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.
சுதந்திரம் என்பது ஒரு கட்டுக்குள் இருந்தால் நல்லது. அதுவும் நமக்கு நாமே போட்டுக் கொண்ட கட்டாக இருந்தால் மிகவும் நல்லது. கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது எப்போதுமே ஆபத்தானது. நம்முடைய சுதந்திரத்தை நாம் அளவுடன் பயன்படுத்துவதே நல்லது. இதில் ஆண்,பெண் என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லை.
உலகம் தோன்றிய ஆதி நாட்களில் பெண்ணிலிருந்து இனம் பிறந்து பெருகியதால் அவள் உயர்வாகக் கொண்டாடப்பட்டாள். அவளது தலைமையை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர். தாய்வழிச் சமூகம் என்பது இயல்பாக இருந்தது. இடைக்காலத்தில் அது ஆண்கள் கைக்கு மாறியது. அதன் பின்னான நாட்களில் பெண்களின் அடிப்படை உரிமைகள் கூட நசுக்கப்பட்டன. அதிலிருந்து மீளவே நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இப்போதுதான் கல்வியறிவு, வேலைக்குச் செல்லுதல் என்று வந்துள்ளோம். இன்னும் முன்னேறப் பல நூற்றாண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அதற்கான விதையை அதுவும் சரியான விதையை, நாம் விதைத்தால் மட்டுமே பிற்காலத்தியப் பெண்ணினம் தலை நிமிர்ந்து நிற்கும்.
இன்னும் நமது ஆணாதிக்கக் கண்ணோட்ட சமூகம் பாதிப்பை ஏற்படுத்தியவர்களைக் குற்றம் சொல்லாது, பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சுமத்திச் சுட்டுகிறது. இதில் ஆண் பெண் என்ற வகைப்பாடு இல்லை. ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதுதான் சமூகம். ஆணை விடப் பெண்கள் இங்கே வாழ்வது கொஞ்சம் சவாலான விஷயம்தான். இதில் முதலில் தன்னுடைய இருப்பை அவள் உறுதிப்படுத்திக் கொள்வது மிக மிக அவசியம்.
பாலியல் சுதந்திரம் பற்றிய பேச்சு இன்று நேற்றல்ல சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரச்னைக்குரியதாக இருந்தது. இன்னும் அது விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. 1934 ம் வருடம் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் இது தொடர்பாக ஒரு வழக்கில் ஆஜராகி தோல்வியடைந்தார் என்கிறது வரலாறு. ‘சமாஜ் ஸ்வாத்ஸ்ய’ என்ற பத்திரிகையை மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரகுநாத் தோண்டே கர்வே என்பவர் நடத்தி வந்தார். இந்திய சமூகத்தில் பகிரங்கமாக விவாதிக்கப்படாத பாலியல் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, நிர்வாணம் போன்ற தலைப்புகளில் அவர் தனது பத்திரிகையில்
எழுதி வந்தார். இது பழமைவாதிகளுக்குப் பேரிடியாக இருந்தது.
ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை மற்றும் அதற்கான மருத்துவ ஆலோசனையை மையமாகக் கொண்ட தனது பத்திரிகையில், கர்வே இந்த முக்கியமான விஷயத்தை மிகுந்த துணிச்சலுடன் விவாதித்தார். அவர் பகுத்தறிவு சார்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த கருத்துகளையும் எழுதி வந்தார். இது அப்போதைய பிற்போக்குவாதிகளுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. கர்வேயின் எழுத்துகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய துணிச்சல்மிக்க தலைமை அப்போது இல்லை. அந்த சமயத்தில்தான் அம்பேத்கர் அவர்கள் இந்த வழக்கைக் கையில் எடுத்தார். சமூக சீர்திருத்த வரலாற்றில் கருத்து சுதந்திரத்திற்காக நடந்த சட்டப் போர்களில் மிக முக்கியமான வழக்கு இது.
1931 ம் ஆண்டு முதலில் கைது செய்யப்பட்ட கார்வே 100 ரூபாய் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து கர்வே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, நீதிபதி இந்திரபிரஸ்தா மேத்தா முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் 1934ல் கைது செய்யப்பட்டார். இது போன்ற ஒரு விஷயத்திற்கு அம்பேத்கர் ஏன் வாதாட வந்தார் என்று பார்ப்போமானால், அவர் தனது கல்வி, ஆய்வுப் பணிகள் என்று எல்லாவற்றையும் மேற்கத்திய நாடுகளில் தான் செய்தார். அவற்றின் நவீனக் கொள்கைகளில் அவர் ஈர்க்கப்பட்டார். பழமைவாதக் கொள்கைகள் நிறைந்த இந்தியாவில் அதனை மாற்றிட முனைந்த காரணத்தால் தான் தனது கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த வழக்கை அவர் எடுத்துக் கொண்டார். இந்த வழக்கில், பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 24, 1934 வரை, மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதி மேத்தா முன் விசாரணை நடைபெற்றது.
கர்வேக்கு எதிரான முக்கியக் குற்றச்சாட்டாகப் பாலியல் பிரச்சினைகள்
குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஒழுக்கக்கேட்டைப்
பரப்புகிறார் என்பதாகும். “பாலியல் விஷயங்கள் குறித்து ஒருவர் எழுதுகிறார் என்றால் அது ஒழுக்கக் கேடானது என்று கூற முடியாது. பாலியல் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் இப்படியே புறந்தள்ளும் பழக்கம் கைவிடப்பட வேண்டும்” என்பதே அம்பேத்கரின் முதல் வாதம். பாலியல் வக்கிரம் முறிமடிக்கப்பட வேண்டுமென்றால் அது தெளிவான பாலியல் அறிவு பெற்றால் மட்டுமே சாத்தியம் என்று அவர் வாதாடினார். பாலியல் குறித்து பேசக்கூடத் துணியாத ஒரு சமூகத்தில், ஓரினச்சேர்க்கை பற்றிய அம்பேத்கரின் கருத்துக்கள் புரட்சிகரமானவையாக இருந்தன.
ஆர்.டி. கர்வே மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் 1934 ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தோல்வி கண்டனர். ஒழுக்கக்கேடான விஷயம் குறித்துப் பேசியதற்காக மீண்டும் ஒரு முறை கர்வேக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. (இந்த வழக்கின் அடிப்படைச் செய்தி – பிபிசி செய்தித்தளம்)
இந்த வழக்கு நடந்து இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் இன்னும் இந்திய சமூகத்தில் பாலியல் குறித்து பேசும் சுதந்திரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமின்றி பாலியல் தேவை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். யாரும் எந்நேரமும் அதுகுறித்த சிந்தனையிலேயே இருப்பதில்லை என்பதுதான் நிச்சயமான ஒன்று. ஆனால் நம் இந்தியச் சமூகத்தில் பாலியல் நிறைவு என்பது பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இதைப் பொதுவெளியில் கூட இல்லை தனது இணையிடம் கூட விவாதிக்கும் கருத்து சுதந்திரம் என்பது சிறிதும் கிடையாது. இதில் கற்றோர், கல்லாதோர் என்று எந்தப் பேதமும் இல்லை. பாலியல் விஷயம் என்று வரும்போது பெண்ணைப் பேச விடக்கூடாது என்பதில் மட்டும் ஆண்கள் வித்தியாசமின்றி கை கோத்துக் கொள்கிறார்கள்.
பெண்ணின் உடல் மீது அவளுக்குத் தான் முதல் உரிமை என்பதை இன்னும் இந்திய சமூகத்தில் வலியுறுத்த இயலாத அவல நிலைதான் நீடிக்கிறது. இந்தியாவில்தான் ஆணின் ஏகபோக உரிமை பெண்ணுடலில் மையம் கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும் என்ற போராட்டத்தைத்தான் பெண்ணியம் முன்வைக்கிறது. எடுத்துக் கொண்ட சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இருவகை உண்டு. ஒரு சமயத்தில் கட்டற்ற பாலியல் உறவுகள் விருப்பமாக இருந்தாலும் இன்னொரு சமயம் அது அதீதமாகும் போது கசந்து போகும் அபாயமும் உண்டு. ஏனெனில் மனித மனம் என்பது மாறிக் கொண்டே இருக்கும். இன்று சரியென்று தோன்றுவது நாளை மிகத் தவறாகப் படலாம். ‘என் வாழ்வு; என் உரிமை; என் விருப்பம்’ என்று இருப்பதில் தவறில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பதே உடல், மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை மனதில் வைத்துக் கொள்வோம்.
கட்டற்ற பாலியல் உறவுகள் குறித்து மருத்துவ உலகம் நிம்போமேனியா என்ற ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய உறவுகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கிறது. பெண்களில், இது நிமோமானியா என்றும் ஆண்களில் இந்த நோய் சத்திரியாசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. நிம்போமோனியா அல்லது தடிப்புத் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அசாதாரண நிலைகளில் உடல் தேவையைப் பூர்த்தி செய்ய எத்தகைய நிகழ்வுகளிலும் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் ‘ஒருவருடன் உடலுறவில் இணைந்து பின் மற்றொருவருடன்’ என்றும், சில சமயங்களில் ‘ஒரே நேரத்தில் பல நபர்களுடன் உடலுறவில்’ ஈடுபடுவது என்றும் இருக்கும்.
இதனிடையே அவர்கள் தங்கள் உடலின் தேவைகளை அல்லது அவற்றை பூர்த்தி செய்யும் திறனை அதிகரிக்க வெவ்வேறு மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இது மருத்துவர்களாலும், அறிவியலாலும் ஒரு மனநோயாகப் பார்க்கப்படுகிறது. குற்ற உணர்வு மற்றும் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவர் அவ்வாறு நடந்து கொள்வதன் பின்னணியை ஆராயாமல் தேவையற்ற கருத்துக்களை திணிக்கக் கூடாது.
ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மது அருந்துவதும், பிற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதும், சமூக வலைத்தளங்களில் அதை வெளிப்படுத்திக் கொள்வதும்தான் இன்றைய பெண்ணியம் என்ற தவறான முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது. அதைப் பின்பற்றி மன அழுத்தத்தை வரவழைத்துக் கொண்டவர்கள் தான் இன்று அதிகம். அவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர்களின் மனநிலையை ஆராய்ந்தோமானால் அளவுக்கு அதிகமான அன்பை அடுத்தவர் மீது செலுத்தி, அதன் பிரதிபலனாக அவர்களின் அன்பு கிடைக்காமல் இருப்பவர்கள் அவர்கள் மீதும், இந்தச் சமூகத்தின் மீதும் தங்களுக்குள்ள கோபத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதுதான் உண்மை. திமிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களின் பின்னால் அவர்கள் அன்புக்கு ஏங்கி, அது கிடைக்காததால் இவ்வாறு நடந்து கொள்பவர்களாகவே இருக்கின்றனர்.
எப்போதும் தங்களுக்கான முக்கியத்துவம் கிடைக்காதபோதும், அங்கீகாரம் மறுக்கப்படும்போதும்தான் பலரும் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமானவர்களாக மாறிப்போகிறார்கள். அப்போது தோன்றும் ஒரு சமூக வெறுப்பை இரண்டு விதமாக மடைமாற்றம் செய்யலாம். ஒன்று இதுபோல் சமூக வலைத்தளங்களில் தங்களை ஆணவமாக, யாருக்கும் அடிபணியாதவர்களாக ‘வெளிப்படுத்திக்’ கொள்வது. இன்னொன்று தங்கள் வாழ்க்கைப் பாதையை எளியவர்களுக்கு உதவும் விதமாக மாற்றிக் கொண்டு, தங்களைப் பின்பற்றி நடக்க நாலு பேரை உருவாக்குவது. பின்னது மிகக் கடினம். முன்னது மிகமிக எளிமை. ஆனால் இதில் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் நம்முடைய ஆளுமை திறனும், மன நிம்மதியும் அடங்கியிருக்கும்.
கரை புரண்டோடும் காட்டாறு, அதைத் தடுக்கக் கரைகள் இல்லாத காரணத்தால் ஏகப்பட்ட சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் ஓடும் ஆறு தான் செல்லும் வழியெல்லாம் வளப்படுத்திச் செல்கிறது. பிறர் நம்மைக் கட்டுப்படுத்த வேண்டாம். நமக்கு நாமே ஒரு மெலிதான கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டால் நாமும் நன்றாக வாழ்நது பிறர்க்கும் நல்லதொரு வழிகாட்டியாக இருப்போம் என்பது மறுக்கவியலாத உண்மை.
கட்டுரையாளரின் மற்ற படைப்பு:
படைப்பு:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.