தற்போது ஃபேஸ்புக்கில் ‘செக்ஸில் பெரும்பாலான பெண்கள் இன்ட்ரெஸ்டிங்க் பர்ஸனாலிட்டி கிடையாது’, என்று ஒரு அரைகுறைப் பதிவு வைரலாகியிருக்கிறது. பாலியல் ஆசை ஆளுக்காள் வேறுபடும். சிலருக்கு பார்த்தாலே காமம் பொங்கி விடும். சிலருக்கு பேசினால் போதும். இன்னும் சிலருக்கோ எதிர்பாலினரின் உள்ளாடைகள்தான் கவர்ச்சி. இப்படி ஆளுக்கு ஆள் வேறுபடும் காமத்தை எதைக் கொண்டு அந்தப் பதிவர் அளவிட்டார் என்று தெரியவில்லை. காம சாஸ்திரம் எழுதியவர்கள் நம் முன்னோர்கள். ‘இன்ட்ரெஸ்ட் இல்லாத சக பர்ஸனாலிட்டி’யை வைத்துக் கொண்டு விதவிதமான பாடங்களை எழுத முடியாதல்லவா?         

சங்க காலத்தில் காமம் என்ற சொல் அன்பைத்தான் குறித்தது. ‘கமம்’ என்ற சொல்லில் இருந்துதான் காமம் பிறந்தது. ‘கமம்’ என்றால் நிறைவு என்று பொருள். அன்பின் நிறைவே காமம் ஆனது. ஆனால் இன்று காமம் என்ற சொல்லைத் தகாத வார்த்தையாக்கியது காலத்தின் கோலம்தான்.              ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஹார்மோன்கள் வித்தியாசம் இருக்கிறது.

ஆணுக்கு உடலளவில் காமம் இருந்தால் போதும். ஆனால் பெண்ணுக்கு காமம் மனதையும் நிறைக்க வேண்டும். அப்போதுதான் அவளுக்கு அந்த உறவு பூரணத்துவம் பெறும். பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது வெறும் உடலுறவுடன் முடிவது இல்லை. அவளை மதிப்பது, அவளுக்கான உரிமையை அவளே இயல்பாக எடுத்துக் கொள்வது, அவளுடைய செயல்பாடுகளைப் பாராட்டுவது, பாசம், நேசம் என்று எல்லாம் கலந்த ஒரு கலவையாகத்தான் பார்க்கிறாள். இது எத்தனை ஆண்களுக்குப் புரிகிறதென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.           

ஆண்களை விடப் பெண்களுக்கு அதிக அளவில் உடல்ரீதியான பிரச்சினைகள் இருப்பதால் சில சமயங்களில் அவர்கள் உறவுக்குத் தயாராவதில்லை என்பதுதான் உண்மை. சமூகம் மற்றும் புறக் காரணிகள் தரும் அழுத்தங்கள்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இதெல்லாம் தெரியாமல் பிதற்றும் ஆண்கள் கூட்டம்தான் அதிகம். இது மட்டுமின்றி நமது இந்திய சமூகத்தில் காமத்தை வெளிப்படையாகப் பேசும் பெண்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்?

கணவனிடம்கூட படுக்கையில் தன் பாலியல் வேட்கை குறித்து ஒரு பெண் வாய் திறக்க முடியாத நிலையில் தானே இன்றைய இந்திய சமூகம் இருக்கிறது? மீறி வெளிப்படுத்தும் பெண்களின் மீதான கண்ணோட்டம் ஆண்களுக்கு மாறித்தானே போகிறது? அட ஆண்களை விடுங்கள். காமம் பற்றிக் கதைக்கும் பெண்களுடன் பெண்களே பேசுவதில்லை என்பது எவ்வளவு கசப்பான உண்மை?        

இரத்தமும் சதையுமான வெறும் நுகர்ச்சிப் பண்டமாக மட்டுமே பெண் பார்க்கப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்க இயலாது. பாலியலில் முழுத் திருப்தி என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக அமையும். ஒருவரின் அனுபவத்தை வைத்து எல்லோரும் அப்படியே கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

ஆண்தான் பாலியல் வேட்கையை முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்ற பத்தாம்பசலித்தனம்தான் இன்னும் இருக்கிறது. ஆண் எத்தனைதான் படித்தாலும் நாகரீகமானவன் என்று சொல்லிக் கொண்டாலும் இந்த விஷயத்தில் பெண் தன்னை வென்று விடுவாளோ என்ற ஒரு பதட்டத்திலேயே இருக்கிறான். இதை நன்கு புரிந்து கொண்ட பெண் அவனைச் சும்மாவேனும் ‘திருப்தி’ப்படுத்த அவனிடம் தோற்றுப் போனதாகக் காட்டிக் கொள்வாள்.

Photo by Thiago Rebouças on Unsplash

சில ‘அதிபுத்திசாலி’ ஆண்கள் இதைக் கண்டுகொண்டு அமைதியாகி விடுவார்கள். சில அரைகுறை அராத்துகள்தான் தன்னுடைய பலவீனங்களை மறைத்துக் கொள்ள பெண்களின் மீதே அம்பைத் திருப்பியடிப்பார்கள்.           

ஒரு பெண் பாலியல் செயல்பாட்டின்போது எதுவும் செய்யாமல் ‘சும்மா’ இருக்க வேண்டும் என்றே ஆணாதிக்க சிந்தனை விரும்புகிறது. அவளாக ஏதாவது செய்தால்கூட, ‘இது எப்படி இவளுக்குத் தெரியும்?’ என்று‌ புருவம் உயர்த்துகிறது. ஒரு பெண் சிறப்பாக படுக்கையில் செயல்புரிய வேண்டும். ஆனால் அவள் தன் வீட்டுப் பெண்ணாக மட்டும் இருக்கக் கூடாது. இந்த இலட்சணத்தில் ஆண்கள் இருந்து கொண்டு பெண்களை குறை சொல்லக் கூடாது.             

சட்டென்று தூண்டப்படும் நிலையில்தான் ஆணுடம்பு இருக்கிறது. சுற்றுப்புறச் சூழலை அனுசரித்து தூண்டல் பெறும் நிலையில்தான் பெண்ணுடம்பு இருக்கிறது. அல்லது அப்படி வாழுமாறுதான் பெண் நிர்பந்திக்கப்படுகிறாள். வாழ்வில் செக்ஸ் என்பது ஒரு அங்கம்தான். அதுவே  முழு வாழ்க்கையும் அல்ல. மற்றவர் முன் அவமானப்படுத்தி, மட்டம் தட்டும் ஆண் இரவில் மட்டும் உறவுக்கு நெருங்குகையில் பெண் இன்ட்ரெஸ்டிங் பர்ஸனாலிட்டியாக எப்படி இருக்க முடியும்? பெண்ணை சகதோழியாக, சக உயிராக, ஒரு மனுஷியாக மதிக்கத் தெரிந்த ஆண்கள் இந்த சமூகத்தில் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்?               

காம உணர்வுகளைத்‌ தூண்ட சிட்டுக்குருவி லேகியம், தாதுபுஷ்டி மருந்து, வீரியம் ஏற்படுத்தும் மாத்திரைகள், பீமபுஷ்டி அல்வா என்று ஆண்களுக்கு மட்டும் விதவிதமான ‘தூண்டில்கள்’ விற்பனைக்கு வருகின்றன. ஆனால் இதுவரை பெண்களுக்கு தூண்டுதல் ஏற்படுத்த ஒரு லேகியமாவது வந்திருக்கிறதா?  அப்போது காம உணர்வுத் தூண்டுதல்கூட ஆணுக்கு மட்டுமே இருந்தால் போதும். பெண்ணுக்கு அது தேவையில்லை என்ற ஆதிக்க மனப்பான்மைதானே இங்கு கோலோச்சுகிறது?           

எத்தனை ஆண்கள் முழு விருப்பத்தோடு பெண்ணை நெருங்குகிறார்கள்? வேலை செய்த அலுப்பைத் தீர்த்துக் கொள்ளவும், தூக்கம் வருவதற்காகவும் மட்டுமே உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களிடம் எப்படி சக பர்ஸனாலிட்டிக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கும்? அது போக முன்னாள் காதலியையோ அல்லது விரும்பி அனுபவிக்க முடியாத பெண்ணையோ நினைத்துக் கொண்டுதானே நிறையப் பேர் மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்கிறார்கள்? ஆண்களெல்லாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மறைமுக இலட்சுமணக் கோடு போட்டிருக்கிறார்கள்.          

போகப்பொருளாகவே பெண்களை பெரும்பான்மையான ஆண்கள் நினைக்கின்றனர். தமக்கு வேண்டும் நேரத்தில் எல்லாம் உடற்சுகம் தரக்கூடிய வெறும் இயந்திரங்களாகவே அவர்களைப் பாவிக்கின்றனர். பெண்களுக்கு என்று தனிப்பட்ட எண்ணங்கள் உண்டு என்றோ உணர்ச்சிகளும் உண்டு என்றோ அவற்றை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்றோ பலர் அறிவதில்லை; அறிந்தும் சிலர் உடன்படுவதில்லை. பலரோ அரங்கத்தில் கூவிவிட்டு அந்தரங்கத்தில் மாறுபடுகின்றனர்.          

தாம்பத்திய வாழ்க்கையில் பெண்கள் முழுமையாக திருப்தியடைய என்னவெல்லாம் காரணமாக இருக்கின்றன என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சர்வே மூலம் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பெண்களில் அதிகமானோர் தாங்கள் உடலுறவில் அவ்வளவாக திருப்தி அடைவதில்லை என்றே கூறியிருக்கிறார்கள். ஆண்கள் பெண்களின் விருப்பத்தை உறவில் இரண்டாம் பட்சமாக பார்ப்பதும், அவர்களின் விருப்பங்கள் பற்றி யோசிக்காமல் தனக்குத் தோன்றியபடி நடப்பது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

உறவில் முழு இன்பமடைய வெறும் உடல் இயக்க பாலுறவு மட்டுமே காரணமல்ல என 72 சதவீதப் பெண்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, உடல் ரீதியாக அணுகுதல் மட்டுமே பெண்களை முழுமையாகத் திருப்தியடையச் செய்வதில்லை.

அதோடு மனவியல் ரீதியான அணுகுமுறையையும், பாதுகாப்பு உணர்வையும், நெருக்கத்தையும் பெண்கள் விரும்புகிறார்கள். அதை தன்னுடைய படுக்கையறைத் துணை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கவும் செய்கிறார்கள். அங்கே முரண்படும் ஆண்களால் பெண்ணின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இயலாமல் போகிறது.           

Photo by Dainis Graveris on Unsplash

ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம் என்று பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆர்வத்தைக் குறையாமல் வைத்துக் கொள்ளும் பொறுப்பு இருபாலருக்குமே உண்டு. அதை விடுத்துப் பெண்ணின் மீது மட்டுமே எப்போதும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்?  உறவின்போதான விருப்பம் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும்தான். அது மட்டுமல்லாது, வயது மற்றும் சூழலைப் பொறுத்தும் விருப்பு வெறுப்புகள் உருவாகலாம். பெண்களுக்கு உடலின் மூலம் கிடைக்கும் கிளர்ச்சியைவிடவும் உள்ளத்தின் மூலம் கிடைக்கும் பரவசமே மிக முக்கியம். வெறும் இயக்கம் மட்டுமே இல்லாமல் அழகான, இதமான பேச்சும் பெண்ணின் பெரு விருப்பம்.  உறவின்போது எதிர்வினையாற்றவும், அவர்கள் விரும்பும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுவதையே பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.         

பெண்களை வர்ணிக்கும் கவிதைகளை, பாடல்களை எல்லாம் ஆண்கள் எழுதினால் இங்கே இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதுவே பெண்கள் ஆண்களை வர்ணித்தால் அகராதியில் இல்லாத பெயர்களால்தானே அர்ச்சிக்கப்படுகிறாள். கணவனைக்கூட இந்த பண்பாட்டு கலாச்சார நாட்டில் வர்ணித்து விட முடியுமா?           

படுக்கையறை உறவு என்பது அத்தோடு நில்லாமல், வாழ்வில் எல்லாச் செயல்களிலும் பிணைந்திருக்கவே பெண்கள் நினைக்கிறார்கள். காதலாகிக் கசிந்துருகி இணைவதையே பெண்கள் விரும்புகிறார்கள். பெண் எப்போதும் வெறும் காமத்தை மட்டுமே எதிர்பார்க்காமல் அதையும் தாண்டிய உணர்ச்சி பூர்வமான நேசத்தைத்தான் எதிர்பார்க்கிறாள். இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே…

படைப்பாளரின் முந்தைய படைப்பை வாசிக்க:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.