பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் எழுதிய நூல் – ‘தேர் இஸ் அன் எலிஃபன்ட் இன் மை வூம்ப்’ (There is an Elephant in My Womb). தன் தாய்மைப் பயணத்தை ஜாலியாகவும், அச்சத்துடனும் இந்நூலில் அவர் வெளிப்படுத்தியிருப்பார். எப்பேற்பட்ட பெண்ணுக்கும் தாய்மை அச்சமூட்டக்கூடியதே. அது குறித்த வெளிப்படையான உரையாடல்கள் இன்னும் பரவலாக்கப்படவில்லை. குறிப்பாக ‘childless by choice’ போன்றவை எல்லாம் இன்னும் இங்கே ‘வினோதமான’ ஒன்றுதான்.

சமூக ஊடகம் ஒன்றில் பெண் ஒருவர் எழுதிய வைரல் பதிவு இது. குழந்தைப் பேறு என்பது இன்றுவரை எப்படி பெண்ணின் தெரிவாக இல்லாமல், குடும்பம், கணவன், சமூகம் என பல ‘ஸ்டேக் ஹோல்டர்கள்’ கட்டுப்படுத்தும் விஷயமாக உள்ளது என்பதை அப்பெண்ணின் பதிவு சிந்திக்க வைக்கிறது. இங்கு பெண்மை தாய்மை அடைந்தாலே முழுமை பெறும்; நிறைவு பெறும் என்பது இங்கே ஒரு கற்பிதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பெண் நிலம் போல. வளமையைத் தரவேண்டும்; ‘வம்சவிருத்தி’க்கு உழைக்கவேண்டும் என்பது ஆண்மைய சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்தப் பெண் அதற்கு மனதளவில், உடலளவில் தயாராக இருக்கிறாளா, தன்னைத் தானேப் பேணிக்கொள்ளும் பொருளாதார நிலைத்தன்மை அவளுக்கு இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் சமூகம் கவலை கொள்வதில்லை. அவளுக்கு திருமண வயது வந்தாலே குழந்தை பெற்றுக்கொள்ள அவள் தயாராகிவிட்டாள் என சமூகமும் குடும்பமும் கருதுகின்றனர்.

ஒரு பெண்ணின் கருப்பையைப் போல பெரும் உடைமைப் பொருள் இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. அங்கே மதம், சாதி, இனம், தேசம், சமூகம் என அத்தனையும் கடைவிரித்து உட்கார்ந்திருக்கின்றன. ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போதே, அந்தக் கருப்பையின் ஏகபோக பாதுகாப்புப் கடமையை அவளது கணவனான ஆணும், அவனது குடும்பமும், ஆண்மைய சமூகமும் பெற்றுவிடுகின்றன.

அதற்கு முன் மட்டும் என்ன கருப்பை அவள் கையிலா இருந்தது? அதை ரகசிய லாக்கரில் வைத்துப் பூட்டிப் பொத்திப் பாதுகாத்து, ‘கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் மாப்பிள்ளை’ என்று கண்ணீர் மல்க அவளைப் பெற்ற, வளர்த்த குடும்பத்தின் ஆண் கையளிக்கிறான். ஆக, கருப்பையைப் பாதுகாக்கும் கடமை தந்தை வீட்டிலிருந்து கணவர் வீட்டுக்கு கைமாறுகிறது, அவ்வளவே.

இதில் இன்னொன்றையும் நாம் நினைவுகொள்ள வேண்டும். கருப்பையை பாதுகாக்கும் கடமை மட்டுமே குடும்பங்களுக்கானது. அதன் ஏகபோக உரிமையை ஆணாதிக்கம் சாதி, மதம், இனம் போன்றவை கைக்கொண்டிருக்கின்றன. பெண்ணின் கருப்பையில் கரிய பெரும் யானை போல இவை வசிக்கின்றன.

‘இரண்டுக்கு மேல் வேண்டாம்’ என அரசு பெண்ணின் கருப்பையில் கைவைக்கிறது. ‘ ஆண் வாரிசு எப்படியாவது வேண்டும்’, ‘எனக்கு வயதாகிவிட்டது, இப்போதே பெற்றுக்கொண்டால் நல்லது’, என கணவன் தன் அதிகாரத்தை கருப்பையில் நிறுவமுயல்கிறான். ‘முதல் குழந்தையை கலைத்தால், அதன்பின் பக்கத்துவீட்டு ரமாவுக்கு பத்து வருஷம் குழந்தை இல்லை’, ‘காலாகாலத்துல குழந்தையை பெத்துக் குடுத்தா, நான் வளத்துவிட்டுட்டு கண் மூடுவேன்ல?’, ‘கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சே… இன்னுமா ஒண்ணும் இல்ல?’ என்று குடும்பமும் சமூகமும் தங்கள் விருப்பத்தைக் கொண்டு கருப்பையை கசக்கிப் பிழிய நினைக்கின்றனர்.

ஆக, சம்பந்தப்பட்ட பெண் – குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, சாப்பிட முடியாமல் வாந்தியெடுத்து, தூங்கமுடியாமல் உட்கார்ந்தே உறங்கி, உடல் எடை எகிறி, கால்வீங்கி, வலிக்க வலிக்க அலறித் துடித்து மறுபிறப்பாகப் பிள்ளையைப் பெற்றெடுப்பவளுக்கு இதில் எந்தக் கருத்தும் சொல்ல இடமில்லை!

பிறந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பாலூட்டி, தூங்கவைத்து, தூளியாட்டி, அதற்குப் பாலூட்ட வேண்டுமே என கிடைப்பதை எல்லாம் அடித்துப் பிடித்துத் தின்று, எடையேறி, தூக்கம் தொலைத்து, அசுத்தம் செய்யும் குழந்தைக்குக் கால் கழுவிவிட்டு, வயிறு பெரிதாகிவிடும் என பெல்ட் போட்டுக்கொண்டு, பெருவிரல்களைப் பிரிக்காமல் உறக்கத்திலும் சரிபார்த்துக்கொண்டு, நாற்பது நாள்களுக்கும் மேலாக உடல் வெளியேற்றும் கழிவையும் சகித்துக்கொண்டு, இருமும்போதும் தும்மும் போதும் வயிற்றைக் கிழித்துப் போடப்பட்ட தையல் பிரிந்துவிடக் கூடாதே என பயந்து வாழ்வது பெண். ஆனால் இத்தனையைச் செய்யும் அவளுக்கு, அந்த முழுப் பயணத்திலும் எந்த விதத்திலும் உரிமையுமில்லாமல் இன்றும் பார்த்துக் கொள்கிறது சமூகம்!

எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை இது? சரி, முதல் குழந்தைதான் அறியாமல் செய்த தவறு என்று உஷாராகும் பெண்களை அடுத்த முறையாவது விட்டுவைக்கிறார்களா என்றால், ஹ்ம்ம்ஹ்ஹூம்ம்ம்… இல்லை சார். ‘முதல் பையன் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் போயாச்சே? இன்னுமா ரெண்டாவது பெத்துக்கல?’, ‘ஒத்தக் குழந்தையா வளர்றதாலதான் உன் பிள்ளை அடம் பிடிக்குது’ என வினோத காரணங்கள் சொல்லி அடுத்த அழுத்தம் அப்பெண்ணுக்குத் தரப்படுகிறது.

தாய்மை என்ற ‘வரம்’ வேண்டும் என கோயில் கோயிலாக ஏறி இறங்கும் பெண்களை எப்படிக் கடந்து போகிறோமோ, அதேபோல ‘எனக்கு குழந்தை வேண்டாம்’ எனச் சொல்லும் பெண்ணை ஏன் நம்மால் எளிதில் கடந்து போகமுடிவதில்லை? ஏன் அவளைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தீர்ப்பு சொல்கிறோம்? ஏன் அவள் அதற்கான நியாயத்தை இங்கு கற்பிக்கவேண்டியிருக்கிறது?

தாய்மை பெண்ணை முழுமையாக்குகிறதா என ஒவ்வொரு ஆணும் தன் தாயிடம், தன் மனைவியிடம் எந்த அழுத்தமும் தராமல் கேட்டுப் பாருங்கள். சொல்லப்படாத கதைகள் வெளிவரும். பெண்ணின் கருப்பை அவளுக்கே உரிமையானது. அங்கிருக்கும் யானையை விரட்டிவிட்டு, மீண்டுமாய் அவளிடமே அதைத் திருப்பிக் கொடுங்கள், பிளீஸ்!