காலங்காலமாகத் தாய்மையைக் கொண்டாடிக் கொண்டே இருக்கும் திரைப்படங்களில் முதன் முறையாகத் தாயாக மறுக்கும் ஒரு பெண்ணை நாயகியாகக் காட்டியிருக்கிறது ’சாராஸ்’ மலையாளப் படம். தாய்மை என்பது அற்புதமான விஷயம், மனித இனம் பெருகுவதற்குத் தாய்மைதான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இந்தத் `தாய்மை’யைப் புனிதப்படுத்தி, `தாய்மையின்’ பெயரால் பெண்களைச் சுரண்டுவதில் தான் சிக்கல் இருக்கிறது.

தாய் என்பது பெண்ணின் நீண்ட வாழ்க்கையில் ஒரு ரோல் (role) மட்டுமே. விலங்கினங்களில் குட்டி போட்டு, பாலூட்டி, குட்டி தன் காலில் நிற்கும் வரைதான் தாய் கவனித்துக்கொள்ளும். அதற்குப் பிறகு அதனை விரட்டிவிட்டு தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடும். பறவையினங்களிலும் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, குஞ்சு பறக்கும் நிலை வந்தவுடன் தாய்ப்பறவை அதனைத் துரத்திவிடும். மனித வாழ்க்கையில் மட்டும் தான், ’தாயாகும்’ பெண் காலமெல்லாம் தாயாகவே சேவை செய்ய வேண்டியுள்ளது.

தாயான பெண், குழந்தைக்குப் பாலூட்டி, வளர்த்து, நேரத்துக்குத் தூங்க வைத்து, உணவூட்டி, படிக்க வைத்து, படிப்புச் சொல்லிக் கொடுத்து, படித்துமுடித்து வேலை கிடைத்து, வேலைக்குப் போகும் போதும் மதிய சோறு கட்டிக் கொடுத்து, கல்யாணம் செய்து வைத்துஅப்பாடா, இப்பவாவது குழந்தைகளை அவர்கள் வாழ்க்கையைக் கவனிக்கச் செய்து தன் வாழ்க்கையை வாழ்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் இல்லை. மகளானால், பிரசவம், அவளையும் குழந்தையையும் கவனிப்பது, பின்பு பேரப்பிள்ளைகளை வளர்ப்பது, மகனானாலும், மருமகளுக்கு பிரசவத்திற்குப் பின்பு பேரப்பிள்ளைகளை வளர்ப்பது என்று டியூட்டி தொடர்கிறது. சில அம்மாக்கள், பேரப்பிள்ளைகளின் கல்யாணம், அவர்களின் குழந்தைகள் என்று கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் தன் வாழ்க்கையைப் பற்றி பெண்கள் யோசிப்பதே இல்லை. ’தன் வாழ்க்கையா?’ அப்படின்னா என்ன? குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிப்பதுதானே வாழ்க்கை… ” என்றுதான் சராசரிப் பெண்ணின் மனநிலை இருக்கிறது.

குழந்தைகளை, அவர்கள் வாழ்க்கையை வாழச் செய்துவிட்டு, தனக்கு விருப்பமான வேலை, பொழுதுபோக்கு, பயணம் எல்லாவற்றையும் வாழ (எளிமையாகச் சொல்வதானால் ஆண்கள் செய்வது போல) இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனுசிக்கும் உரிமை இருக்கிறது. இந்த வாழ்க்கையை இணையருடனோ இணையர் இல்லாமலோ வாழலாம். ஆனால், பெரும்பான்மைப் பெண்கள் தாயானவுடன், ஆணாதிக்கச் சமுதாயம் தூக்கிவைக்கும் ’மாயக் கிரீடத்தில்’ மயங்கி, தன் வாழ்க்கையே குழந்தைகளை வளர்ப்பதும், அவர்களுக்குக் காலமெல்லாம் சேவை செய்வதும்தான் என்று இருந்துவிடுகிறார்கள். தனக்கென்று உள்ள விருப்புவெறுப்புகளையெல்லாம் தூரப் போட்டுவிட்டு, இந்தச் சுழற்சியில் தன் சுயத்தைத் தொலைத்துவிடுகிறார்கள்.

மாறாக, குழந்தைகள் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவுடன், தன் விருப்பங்களுக்கேற்ப வாழ முற்படும் பெண்ணை, அவ்வாறு வாழ இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் பொதுபுத்தி எளிதில் அனுமதிப்பதில்லை. “உன் மக, சின்னக் குழந்தைகளை வச்சுட்டுக் கஷ்டப்படுறா, அவளுக்கு ஒத்தாசையா இருக்கறதவிட்டுட்டு நீ இப்ப வேலைக்குப் போயே ஆகணுமா?” “உம் மகனும் மருமகளும் வேலைக்குப் போறப்ப, நீ அவங்ககூட இருந்து, பேரப்புள்ளைகளைப் பாத்துக்கறதுதானே நியாயம், உம் புருசனோட சேர்ந்துட்டு ஊர் ஊரா டூர் போயிட்டு இருக்கே?” “இந்த வயசுல, மகங்கூடயோ மககூடயோ இருக்காம, தனி வீட்டுல இருந்துட்டு கஷ்டப்படணுமா ?” இப்படியெல்லாம் வரும் விமர்சனங்கள், கடைசியில், “நீயெல்லாம் ஒரு தாயா? ” என்று தூற்றுவதில் முடியும்.

ஒரு பெண்ணைத் தாயாக்கிவிட்டால், அவளைக் காலமெல்லாம் சுரண்டலாம், குடும்ப அமைப்புக்கும் மதத்திற்கும் ஜாதியக்கட்டமைப்புக்கும் பங்கம் வராமல் காப்பாற்றலாம் என்பதை ஆணாதிக்கச் சமுதாயம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது. அதனால்தான், தாய்மையை விரும்பாத பெண்களே இல்லை என்று பெண்களையும் ஆண்களையும் நம்ப வைத்திருக்கிறது. அப்படி இருக்கும் பெண்களையும் ஊடகங்களில் காட்ட மறுக்கிறது. அதை முன்னோடியாக எடுத்துக் கொண்டு, ’தாயாக மாட்டேன்’ என்று பெண்கள் மறுத்துவிட்டால் தன் நிலைமை திண்டாட்டமாகிவிடுமே என்று ஆணாதிக்கச் சமுதாயம் பயப்படுகிறது.

இது எல்லாம் துவங்குவது பெண்ணின் கருப்பையில் இருந்துதான். அதனால்தான், அந்தக் கருப்பையை ஆணாதிக்கச் சமுதாயமும் குடும்பமும் மதங்களும் ஜாதிக்கட்டமைப்பும் அரசாங்கங்களும் கட்டுப்படுத்துகின்றன. தன் உடல்மீதான உரிமையையே பெண்ணுக்கு மறுத்து, அவளை, அவள் உடலை, கருப்பையை, தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இப்போது திரும்ப ’சாராஸ்’ படத்திற்கே வருவோம். நாயகிக்குப் பெரியாரைப் பற்றியோ பெண்ணியம் பற்றியோ எதுவும் தெரியாது. ஆனால், இந்தத் ’தாய்மை’யும், அதன் பேரில் பெண்களைச் சுரண்டுவதும் அந்த இளம்பெண்ணின் மனதிற்குப் புரிந்திருக்கிறது. இந்த வேலைச்சுமையும் சமூக அழுத்தங்களும் அந்த எளிய பெண்ணைப் பயமுறுத்துகின்றன. ’எனிக்கி பிரசவிக்கண்டா’ (நான் பிரசவிக்க மாட்டேன்) என்கிறாள். அதற்கு எந்தக் காரணமும் அவள் சொல்வதில்லை. இதுதான் இயல்பு.

ஓர் ஆண் முடிவெடுப்பதற்கு எந்தக் காரணத்தையும் பொதுச்சமுதாயம் கேட்பதில்லை. ஆனால், ஒரு பெண் இயல்பில் இல்லாத ஒரு விஷயத்தைச் செய்யும் போது, அதைத் திரையில் காட்ட ஊடகம் பயப்படுகிறது. அதற்குப் பல காரணங்களைக் காட்டி, ’இதனால் தான் இவள் இப்படி முடிவெடுக்கிறாள்’ என்று இயக்குநர்கள் காலங்காலமாக நியாயப்படுத்தி வந்திருக்கிறார்கள். ’அவள் அப்படித்தான்’ படத்தில், நாயகி வெளிப்படையாகத் துணிச்சலாக, தனக்குச் சரியென்று பட்டதை, பெண் உரிமைகளைப் பேசும், ’திமிர்பிடித்தவளாக’ இருப்பதற்குக் காரணம் அவள் அம்மா, அப்பாவின் மோசமான திருமண உறவு என்றும், `ஓகே கண்மணி’யில் நாயகி திருமணத்தில் விருப்பமில்லாமல் லிவ்விங்டுகெதரில் இருப்பதற்குக் காரணம் அவள் அம்மா, அன்பான அப்பாவைப் பிரிந்ததுதான் என்றும் ’நியாய’ப்படுத்துகிறார்கள். எந்தக் காரணமும் எந்த தாக்கமும் இல்லாமல் பெண் தன் சுயசிந்தனையில் முடிவெடுப்பதை நம் திரைப்படங்கள் காட்டியதில்லை. அந்த வகையில் சாராஸ் படத்தின் நாயகி முக்கியமானவள்.

தனக்குக் குழந்தை பெற விருப்பமில்லை என்று சொல்வதில் அவளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. திருமணத்திற்குப் பிறகு, சாரா எதிர்பாராமல் கர்ப்பமடைகிறாள். குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்லி குடும்பமும், பின் கணவனும் வற்புறுத்தும் போதும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. அழுத்தங்கள் கூடும்போது, “என் முடிவை ஒப்புக் கொண்டுதானே திருமணம் செய்து கொண்டாய், இப்போது ஏன் நிர்பந்திக்கிறாய்?” என்று கணவனையும், “இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்தது அல்லாமல், உங்கள் வாழ்வில் வேறெதாவது செய்ய முடிந்ததா?” என்று மாமியாரையும் கேள்வி கேட்கிறாள்.

யாரும் அவளுக்கு உதவாதபோது, அறிவியல் தான் அவளுக்கு கைகொடுக்கிறது. புரிதலுள்ள மருத்துவரின் விளக்கம் தான் அவளுக்கு உதவுகிறது. “இது உன் உடல், முடிவு உன்னுடையது, சட்டரீதியாகக்கூட உன்னை யாரும் வற்புறுத்த முடியாது” என்று எடுத்துரைக்கிறார். கணவன் புரிந்துகொள்கிறான். சாரா, தன் கனவான, திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வெற்றி பெறுகிறாள்.

இந்தப் படத்தில் எதிர்பாராத கர்ப்பத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மருத்துவர் மூலம் அழகாக விளக்கி இருக்கிறார்கள். “நீங்கள் தயாராகாத போது குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள், கலைத்துவிடலாம். மனதளவிலும் உடலளவிலும் பெண் தயாராகும் போதுதான் குழந்தையை நன்கு வளர்க்க முடியும்” என்ற மருத்துவரின் விளக்கம், கர்ப்பத்தைக் கலைப்பதில் ஏற்படும் குற்றவுணர்வை உடைக்கிறது.சாராஸ்’ மிக முக்கியமான படம். குழந்தை பெற விருப்பமில்லை என்று சொல்லும் பெண்ணையும் ஓர் ஆண் விரும்புவான், கல்யாணம் செய்துகொள்வான், காதலுடன் வாழ்க்கை நடத்துவான்; அவள் பெற்றோர் மட்டுமல்ல, கணவனின் குடும்பமும் அவளை ஏற்றுக்கொள்ளும் என்று எடுத்துச் சொல்லியிருக்கும் படம் இது. அன்புத் தோழர்களே, குழந்தை பெற விரும்பாத பெண்ணையும் நாம் இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவள் முடிவை மதித்து, அவளை விமர்சிக்காமல், நிர்ப்பந்திக்காமல் அன்பு செலுத்த வேண்டும். இந்தப் பெண்கள் நம்மைச் சுற்றித்தான் வாழ்கிறார்கள். அவர்கள் குரல் எழுப்பப் பயப்படுகிறார்கள், அவர்கள் தமது விருப்பத்தைச் சொல்வதற்கான நம்பிக்கையைத் தருவது நம் கையில்தான் உள்ளது.

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.