“கல்யாணத்திற்கு அப்புறம் நான் வேலைக்குப் போக மாட்டேன்” என்று, மேல்தட்டு, நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த இன்றைய தலைமுறைப் பெண்கள் சிலர் சொல்வதை ஆங்காங்கே கேட்க முடிகிறது. “ஏம்பா? ” என்றால், “நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப எங்கம்மா வேலைக்குப் போனாங்க. பக்கத்து வீட்ல இருந்த மத்த அம்மாங்க மாதிரி, நான் ஸ்கூல் விட்டு வர்றப்ப எங்கம்மா வீட்டுல இருக்க மாட்டாங்களான்னு ஏக்கமா இருக்கும். அந்த ஏக்கம் என்னோட குழந்தைக்கு வரக் கூடாது. அதனால வேலைக்குப் போக மாட்டேன். வீட்டுல இருந்து குழந்தையை வளர்ப்பேன்” என்று பதில் சொல்கிறார்கள்.

செல்லங்களா, உங்களுக்குச் சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் குளோரிஃபை (அளவுக்கு அதிகமாகத் தூக்கி வைக்கிறது, புகழ்வது என்று சொல்லலாம்) பண்ணி வைத்திருப்போம். “அப்பா தினமும் டூவீலரில் ஸ்கூலுக்குக் கொண்டு போய்விடணும்”, “அம்மா சாப்பாடு ஊட்டி விடணும்”, “சைக்கிள் ஓட்டிட்டு ஸ்கூலுக்குப் போகணும்”, “டான்ஸ் கத்துக்கணும்”, “சானியா மிர்ஸா மாதிரி டென்னிஸ் விளையாடணும்”, இப்படிக் குட்டி குட்டியாக நிறைய ஆசைகள் சின்ன வயதில் நம் எல்லோருக்கும் இருந்திருக்கும். அவற்றில் சில நிறைவேறியும் இருக்கும். நிறைவேறிய பின் அதை நாம் பொருட்படுத்தமாட்டோம்.

சில விருப்பங்கள் நிறைவேறாமல் இருக்கும், அவற்றைப் பற்றியே நினைத்து, “இந்த விஷயம் எனக்குக் கிடைக்காமல் போயிருச்சு” என்று கழிவிரக்கத்துடன் ஏக்கப்படுவோம். என்னவோ அது கிடைக்கப் பெற்றவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் போலவும், ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கற்பனை செய்துகொண்டு, ’எனக்குத்தான் கிடைக்காமல் போச்சு’ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.

“இந்தச் சோகம் என் குழந்தைக்கு வரக் கூடாது, அவள்/ன் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வேன்” என்று மனதிற்குள் ஒரு முடிவும் எடுப்போம். இது எவ்வளவு குழந்தைத்தனமானது என்று தன் குழந்தை வளரும்போது தான் புரியும். ஏனென்றால், அந்தக் குழந்தைகளின் முன்னுரிமைகளும் விருப்பங்களும் வேறாக இருக்கும். நிறைவேறாத உங்கள் ஆசையை, அவர்களுக்கு நிறைவேற்றுவதை, அவர்கள் பொருட்படுத்தக்கூட மாட்டார்கள். இதுதான் யதார்த்தம்.

அப்படி குளோரிஃபை பண்ணப்பட்ட ஓர் ஆசைதான், “அம்மா, வேலைக்குப் போகாம வீட்டுல இருக்கணும்” என்பது. இதை நம்மிடம் திணிப்பது ஆணாதிக்கச் சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களும் சினிமாவும்தான். இவர்களுக்குப் பெண் வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போவதிலோ சம்பாதித்து பொருளாதாரச் தற்சார்புடன் இருப்பதிலோ விருப்பம் இல்லை. பெண்ணுக்கான வெளி வீடு, அவள் உழைக்க வேண்டியது குடும்பத்துக்காகவும் ஆணாதிக்கத்தைப் போற்றும் மதம், ஜாதியத்தைக் கட்டிக்காப்பதற்காகவும்தான். பெண் வேலைக்குப் போய்விட்டால் இவையெல்லாம் பாதிக்கப்படுமே என்று அவள் பணிபுரிவதற்கும், தன் துறையில் முன்னேறுவதற்கும் வெவ்வேறு வழிகளில் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்களில் ஒன்றுதான் – வேலைக்குப் போகும் அம்மாவால் குழந்தையைச் சரியாக வளர்க்க முடியாது என்பது.

முதலில் குழந்தை வளர்ப்பு என்பது தாய்க்கான வேலை மட்டும் அல்ல என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை தாயின் கவனிப்பு குழந்தைக்குத் தேவை. அதற்குப் பிறகு தந்தையும், மொத்தக் குடும்பமும், சமுதாயமும் சேர்ந்துதான் குழந்தையை வளர்க்க வேண்டும். ஏனென்றால் அந்தக் குழந்தை வளர்ந்து தாய்க்கு மட்டும் உழைப்பதில்லை, குடும்பத்திற்காகவும், மொத்த சமுதாயத்திற்காகவும் உழைக்கிறது.

தாய் என்பது பெண் வாழ்வில் ஒரு ரோல் மட்டுமே, அது மட்டுமே அவள் மொத்த வாழ்க்கையும் அல்ல. எனவே, `தாயை’யும் குழந்தை வளர்ப்பையும் ஒரு கட்டத்தில் பிரிக்க வேண்டியுள்ளது. இப்படிச் சொல்வதனால், தாய் குழந்தையை கவனிக்கவே கூடாது என்று அர்த்தம் அல்ல. ஒரு மனுசியாக, தன் முழு உழைப்பையும் குழந்தைக்கு மட்டுமே தருவது அவசியமில்லை என்பதுதான் பொருள்.

Indian woman character in ethnic clothes, with mop in hands washing floor, cleaning cafe or restaurant hall cartoon vector illustration. Small family business, work for refugees and immigrants concept

விவசாயப்பணி செய்யும் பெண்களும், உழைக்கும் வர்க்கத்தினரும், அடித்தட்டுப் பெண்களும், கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்குப் போகமாட்டேன், குழந்தை பிறந்தவுடன் அதை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருப்பேன் என்று சொல்வதில்லை. அவர்களால் சொல்லவும் முடியாது. தன் கணவனுக்கு இணையாக அவர்களும் வேலைக்குப் போனால்தான் குழந்தைகளும், குடும்பமும் சாப்பிட முடியும், குழந்தைகளைப் படிக்க வைக்க முடியும். தன்னுடைய ஆளுமையை, சம்பாத்தியத்தை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் எப்படிக் குழந்தைகளை வளர்க்கிறார்கள், படிக்க வைக்கிறார்கள் என்று கவனித்து, அவர்களிடமிருந்து மேல்தட்டு, நடுத்தரவர்க்கப் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளை அங்கன்வாடி, பால்வாடி மையங்களில் விட்டுவிட்டு வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகளை ’பேம்பர்’ (அளவுக்கதிகமாக செல்லம் கொடுப்பது) செய்வதில்லை. வீட்டு வேலைகளுக்குக் குழந்தைகளைப் பழக்குகிறார்கள். சில பொறுப்புகளைக் குழந்தைகளிடம் தருகிறார்கள்.

ஒற்றைப் பெற்றோராக இருக்கும் என்னுடைய தோழிகள், வேலை பார்த்துக்கொண்டே குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கிறார்கள். டே கேர் மையங்களில் வளரும் அவர்கள் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் விளையாடி, ஹோம் ஒர்க் செய்து, ஒன்றாக உணவருந்தி சந்தோஷமாக வளர்கிறார்கள். அம்மாவின் பணிச்சுமையை உணர்ந்துகொள்ளும் தோழியின் பத்து வயது மகன், அவர் வீட்டில் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் போது, பிரட் ஆம்லெட் செய்யவும், டீ போட்டுக் கொடுக்கவும் பழகிவிட்டான்.

வேலைக்குப் போகும் அம்மா வளர்க்கும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்யப் பழகுகிறார்கள். கடைக்குப் போய் வருவதால் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்புணர்வும் வருகிறது. சின்னச் சின்னப் பிரச்னைகளுக்குச் சுணங்கிப் போகாமல், அவற்றை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வருகிறது. என் அம்மா வேலைக்குப் போகும்போது வீட்டுவேலைகளில் பாதியை நானும் தம்பியும்தான் செய்வோம். பள்ளியிலிருந்து வந்து வீடு பெருக்கி, பாத்திரம் கழுவி, விடுமுறை நாட்களில் துணிதுவைத்து, கிரைண்டரில் மாவரைப்பதற்கும் அம்மா பழக்கினார். அது பின்னாளில் எனக்களித்த தன்னம்பிக்கை அளப்பரியது.

“குழந்தையை வளர்க்க வேண்டும், அதனால் வேலைக்குப் போக மாட்டேன்” என்று பிரகடனம் செய்யும் அடுத்த தலைமுறை செல்லங்களே, முழு நேரமும் பார்த்துக்கொண்டால் தான் ஒரு குழந்தையைச் சிறப்பாக வளர்க்க முடியும் என்பது ஆணாதிக்கப் பொதுப்புத்தியின் கற்பிதம். அந்த மூளைச்சலவைக்குப் பலியாகாதீர்கள் டியர்ஸ். அங்கன்வாடி, பால்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், டே கேர் சென்டர், தனியாக உதவியாளர் என்று நம்மைச் சுற்றி உள்ள பல வசதிகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு, வேலைப் போய்ச் சம்பாதித்து, சுயமரியாதையுடன், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். ’அதெல்லாம் சரி, இவ்வளவு திட்டமிட்டு நாங்கள் வேலைக்குப் போய்த்தான் ஆகணுமா’ என்று கேட்டால், ’கண்டிப்பாகப் போகணும்.’ ஏனென்று அடுத்த வாரக் கட்டுரையில் சொல்கிறேன். லவ் யூ டார்லிங் கேர்ள்ஸ்.

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.