கேளடா, மானிடவா – 6

குழந்தைகள், பெண்கள் வல்லுறவு செய்யப்படும் செய்திகள் வரும்போதெல்லாம், நாடே ஊரே கொந்தளிக்கும்போதும், யாருக்கும் இதுவரை தீங்கு செய்யாமல் நல்ல மனிதர்களாக இருக்கிற ஆண்கள்கூட வாய் முடி மௌனிப்பது எதைக் காட்டுகிறது என்றால், ஆண் பிள்ளை என்றாலே அப்படித்தான் இருப்பார்கள் என அவர்களும் தீவிரமாக நம்புவதைத்தான் காட்டுகிறது.

ஏதோ ஆண்கள் எல்லாருமே அப்படித்தான்; தைரியமுள்ளவன் குற்றம் புரிகிறான், மாட்டிக் கொள்கிறான், எல்லாருக்குமே ‘குற்றவாளி’ மனநிலைதான், இயற்கையாகவே அவனுடம்பு அப்படித்தான் என்கிற மனநிலை! ஆனால், உண்மையில் அது அப்படி அல்ல.

அப்புறம் இந்த சைக்காலஜி, மருத்துவ அறிவியல் எல்லாவற்றிலும் ஹார்மோன் காரணங்களைச் சொல்லுவார்கள். சைக்காலஜி என்பது பெரும்பாலும் கிட்டத்தட்ட முற்றுமுழுதுமாகவே ஆண் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. எலியோ வேறெந்த பிராணிகளை வைத்துச் செய்யப்பட்ட சோதனைகள்கூட, ஆண் பிராணிகளை வைத்து, ஆணின் கண்ணோட்டத்தில் அமைந்தவையே. அந்தத் துறையில் பெண்கள் வந்தாலும் கூட, ஆண்கள் முன்பே சொல்லிய பார்வையிலேயே சிந்திப்பதாகத்தான் அவர்களும் இருக்கிறார்கள்.

இந்தத் துறையில் மேலதிகமும் பெண்கள் வரும்போது- முன் தீர்மானமற்ற, திறந்த ஆய்வுகள், பெண்கள் சார்ந்த பார்வையில் நிகழும்போது- இப்போதைய எல்லாமும் மாறும்.

அதே சைக்காலஜியில் ஒரு சோதனை உண்டு. நாய்க்குச் தொடர்ச்சியாகச் சில தினங்கள், சரியாக 1 மணி அடிக்கும்போது சோறு வைத்துப் பழக்கினால், அப்போதுதான் சாப்பிட்டு பசியடங்கிய நாய்கூட ஒரு மணி அடிக்கும் சத்தம் கேட்டவுடனே அதற்கு மீண்டும் பசிக்கத் தொடங்கிவிடும் என்று. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. பழக்கம் என்பதுதான் நடத்தையில் பெரும் பங்கு வகிக்கிறது. சிறிய சிறிய நல்ல பழக்கங்களில், பெரிய நடத்தைகளைக் கொண்டு வந்துவிட முடியும் என்பதுதான் உண்மை!

ஓரிரு வருடங்கள் முன்பு தோழரின் அபார்ட்மெண்ட்டில் ‘சைல்ட் அப்யுஸ்’ குறித்த விழிப்புணர்வு வகுப்பு எடுக்கத் தயார் செய்துகொண்டிருந்தேன். எல்லா வயதுப் பிள்ளைகளுக்கும் எடுக்கலாம் என்று திட்டம். ஆண் என்றால் யார், பெண் என்றால் யார், நமது உடம்பின் பாகங்கள், பருவ வயதடைவது, அப்போது உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். பெண்ணுடல் பற்றித் தெரியும்; அதன் சுழற்சி பற்றித் தெரியும்; ஆணிற்கு அப்படி எதுவும் பெண்ணின் மாதாந்திர சுழற்சி போல இருக்கிறதா என்று கேள்வி மனதில் தோன்றியது.

நெட்டில் எண்ணிலா காணொளிகள். எதுவும் என் கேள்விக்கு விடையளிக்கவில்லை. ஆண் உடல் பற்றிய கல்வி என்பதோ, விழிப்புணர்வு என்பதோ எதுவும் இல்லை; ஆண் தன்னைத் தனியுடலாகக் காண்பதில்லை; ஒரு பெண்ணுடலை, தான் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதாகத்தான் காண்கிறான்.

ஆண்களுக்கு என்று பத்திரிகையே இல்லை. தன் உடம்பைப் பற்றி அறிய போர்னோக்ராஃபிதான் இருக்கிறது. அதில் ஆணுடல் பெண்ணுடல் இணையும் விதவித காட்சிகள்தான் இருக்கின்றன.

தன்னை, தன்னுடலைப் பற்றிய அறிதலில்லாமல், யாரையோ யாருடைய கற்பனை சாத்தியங்களையோதான் அறிந்துகொள்கிறான். தான் யார், தன் capablity என்ன என்கிற தன்னறிதல் இல்லாமல், யாருடைய கற்பனையையோ தன் வாழ்வில் முயல்வதாக, அவை எல்லாமே யதார்த்தத்தை மீறியதாக இருக்கின்றன. அவற்றை யதார்த்தத்தில் சோதிக்க தோல்விதான் ஏற்படுகிறது. தன் சக்திக்குள்ளதாக முயலும்போதுதானே வெற்றி பெற முடியும்? அந்தத் தோல்வியின் வெதும்பலையும் அவன் பெண்ணிடம்தான் காட்டுகிறான்.

என் கேள்விக்கான பதிலைத் தேடத் தொடங்கினால், தேன்கூட்டைக் கலைத்தது போல வித வித திசைகளில் பதில்கள் அழைத்துச் சென்றன. எங்கெல்லாம் சுற்றியலைந்து, பாவ்லோ கொய்லா’ வின் ஆல்கெமிஸ்ட் போல, வீட்டுத் தோட்டத்தில், விக்கிபீடியாவில் கண்டடைந்தேன்.

பெண்ணுக்கு மாதாந்திர சுழற்சி Mood Swing என்றால், ஆணுக்கு ஒரு நாளின் ஒவ்வொரு நொடியும் மாற்றத்திற்குள்ளாகிக் கொண்டே இருக்கிறது. அதிகாலைதான் அவனது உற்சாகமான நேரம். மாலை ஆக ஆக Dull’ ஆகிவிடும். உடலுக்கு என்று நடைப்பயிற்சி அல்லது வேறு ஏதாவது உடல் பயிற்சி செய்பவர்கள்தாம் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள்.

ஓவியம் என்பது கையா மனமா என்று கேட்டால், மனம்தான் இல்லையா. அதே போலத்தான், ஆணின், ஆண் உடம்பின் பிரச்னை என்பது அவனது மனம். மனத்தின் ஒவ்வொரு நொடியையும் கையாளத் தெரிந்தவன் நல்ல மனிதன்; தெரியாதவன் கெட்டவனாக வெளித் தெரிகிறான்.

பெண்ணுக்குப் பருவ வயதில் அம்மாவின் வழிகாட்டுதல் இருப்பது போல, பருவமடைந்த ஆணுக்கு அப்பா வழிகாட்ட வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் சரியான வழிகாட்டுதல் இருந்து விட்டாலே பாதி வெற்றி. ஒன்றைத் தவறாகத் தெரிந்துகொண்டு மாற்றிக்கொள்ள கஷ்டப்படுவதை விட, முதலிலேயே சரியாகக் கற்றுக் கொடுத்திடல் நலம்.

எப்படிப் பொதுப் பார்வையில் பெண்கள், திருநர்களைப் பார்க்கிறார்களோ, அதே கண்ணோட்டத்தில்தான் ஆண்கள் பெண்களை, தன்னைவிட ஒரு மாற்றுக் குறைவாக, தன்னைவிட அதீத உணர்ச்சி கொண்டவர்களாகப் பார்க்கிறார்கள்.

சிறு வயதிலிருந்தே எல்லாவற்றையும் ஆண்கள் எதிராளி இடத்தில் இருந்து சிந்திக்கப் பழக வைக்க வேண்டும். தம் செயல்களின் பாதிப்பிற்குத் தாமே பொறுப்பேற்கப் பழக்க வேண்டும். விளைவைப் பற்றிச் சிந்திக்காத, சுயநலப் போக்குதான் சமூகத்தில் இப்படியான எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்.

பால் குளம் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஓர் அரசன் புதிதாக வெட்டிய குளத்தில், மக்கள் அனைவரும் பொழுது விடிவதற்குள் தத்தமது வீடுகளிலிருந்து ஒரு சொம்பு பால் ஊற்ற வேண்டும் எனக் கட்டளை இடுகிறான். மக்களோ, இருட்டுதானே யாருக்குத் தெரியப் போகிறது? தான் ஒருவர் தண்ணீரை ஊற்றுவதால் என்ன நஷ்டம் என நினைத்து, தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றுகிறார்கள். விடிந்ததும் பார்த்தால், குளம் நிறைய நீர் நிரம்பி இருக்கிறது. எல்லாரும் அவரவர் பங்கு பாலைத் தந்திருந்தால், குளம் பாற்குளமாக இருந்திருக்கும். இது கதை!

ஆனால், ஒவ்வொருவருமே தத்தமது கடமையைச் செய்யத் தவறுவதால்தான், அது தீர்க்கமுடியாத பெருங்குற்றமாக வந்து சமூக மொத்தத்தையும் வருத்தும் பிரச்னையாக வடிவெடுக்கிறது. அப்படித்தான் ஆண் பிள்ளைகளை ஒவ்வொரு வீட்டிலும் சரியாக வளர்க்கத் தவறியதன் பிழையைத்தான் மொத்த சமூகமும் அனுபவிக்க வேண்டி வருகிறது.

Woman’s body line art vector floral pink pastel feminine illustration

வீட்டுக்கு வருபவர்களை ‘வாங்க’ என்று அழைக்கக் கற்றுத் தருவது முதல், யாரிடமும் மரியாதையாகப் பேசுவது, அமைதியாகவும் நல்ல பண்புகளுடனும் நடந்துகொள்ளப் பழக்குவது, தன்னால் முடிந்த வேலைகளை, எந்த வேலையும் கேவலமில்லை என்கிற கண்ணோட்டத்தில் செய்யப் பழக்குவது, யாரையும் சார்ந்து இல்லாமல் தன் வேலைகள் ஒவ்வொன்றையும் தானே செய்யப் பழக்குவது வரை வீட்டில் ஆண் பிள்ளைகளது ‘பங்கு பொறுப்புகளை’ உணர வைக்க வேண்டும். சிறிது பெரிது என்பது பலத்தில் இல்லை; மாறாக பண்பில் உள்ளது என்பதை உணர்த்தி வளர்க்க வேண்டும்.

எனது அப்போதைய தேடலில் yellow book, orange book, red book என அவை மட்டுமே பதின்பருவ பிள்ளைகளைப் பற்றிய அறிதலுக்கு இருந்தன. பிறகு பெண் குழந்தைகளுக்கான மென்ஸஸ் காமிக் புக் வந்தது. இப்போது எவ்வளவோ புத்தகங்கள் வந்துவிட்டன. When boys grown up & When girls grown up புத்தகங்கள் நானறிந்த வரையில், இந்தியப் பிள்ளைகளுக்கு இந்திய சூழலுக்கு ஏற்றபடி இருக்கின்றன.

யெல்லோ புக்கில் இரண்டே வரிகளில் ஆண் பிள்ளைகளது உடம்பைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது என்னவெனில், ஆண் பிள்ளைகள் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிக்கும்போது, ஃபுட் பாலில் கோல் போடும்போது, தனக்குப் பிடித்த பொருளை அம்மா அப்பா வாங்கித் தரும்போது என, எதற்காக எல்லாம் உற்சாகம் (excitement) அடைகிறார்களோ, அப்போதெல்லாம், மூளையின் தூண்டுதலுக்குட்பட்டு ஆணுறுப்பு விறைக்கும். அப்படி ஆகும்போதெல்லாம், அதை மனதால் கவனமாகக் கவனித்தால், அது சமநிலைக்குத் தானாகவே வந்துவிடும். இப்படி எப்போதெல்லாம் எதெற்கெல்லாம் எக்ஸைட் ஆகிறார்களோ அப்போதெல்லாம் தன்னை, தன்னுடலைக் கவனித்து சரிபடுத்திக் கொண்டே வந்தாலே, அவர்களுடம்பு நிதானப்பட்டுவிடும்.

விபாசனா – புத்தரின் தியான வழிமுறை. புத்தர் என்பது ஒரு நிலை. அதை யாரும் அடையலாம். அதைக் கற்றால், அதன் வழி சென்றால் அந்த நிலையை அடையும்போது ஒவ்வொருவருமே புத்தர். அதில், வெளி உலகிற்கும் நமது உடலுக்கும் பாலமாக இருக்கின்ற, உள்’ளையும் வெளியையும் அறிந்த நமது ‘மூச்சு’க் காற்றைக் கவனிக்கச் சொல்வார்கள். கூடவே, நமது தலை உச்சி முதல் பாத நுனி வரை உடம்பின் ஒவ்வொரு சிறிய பகுதியையும் அதன் உணர்ச்சிகளையும் கவனிக்கச் சொல்வார்கள். நமதுடலை நாமே துளித் துளியாக அறியும் உணரும் ஒரு பயிற்சி இது. இந்தப் பயிற்சியில் மனதும் உடலும் நிதானப்படும். பசி, தாகம், தூக்கம், காமம், கோபம், தாபம், சோகம், வருத்தம், துயரம் என நமது எல்லா உணர்வுகளும் உணர்ச்சிகளும் வந்து வந்து செல்பவை; மாறிக்கொண்டே இருப்பவை; நமதானவை; யாரோ உண்டாக்குபவை அல்ல; இன்னின்னாரை, இப்படி இப்படிப் பார்ப்பதால் வருபவை அல்ல, எந்த ஓர் உணர்ச்சியும் தனக்குள்ளிருந்து வருபவை எனப் புரியும். பயிலப் பயில, அமைதியாக அவற்றைப் பார்க்கப் பார்க்க, அவை தானாக எப்படி வந்தனவோ அப்படியே திரும்பிச் சென்றுவிடும். அந்த நேரத்து மனச் சமநிலை வசப்படும்.

கேள்விகள்:

ஆண் என்றால் யார்? ஆண்மை என்றால் என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பெண்ணை, பெண்ணுடலை எந்த விதத்திலும் துளியும் சம்மந்தப்படுத்தாமல் விடை தேட முயலுங்கள்.

கூடவே பெண் என்றால் யார்? பெண்மை என்றால் என்ன என்பதற்கு உங்கள் மனதில் உருவாகும் எண்ணங்களையும் எப்படி உள்ளது என்று பாருங்கள். இதன் கூடவே, திருநர் எல்ஜிபிடிக்யுஏ பற்றிய உங்களது புரிதலையும் யோசியுங்கள். உங்களை, அவர்களாகக் கற்பனை செய்து, அவர்களின் இடத்தில் உங்களை வைத்து யோசியுங்கள்.

– எதையும் கேள்வி கேள்

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.