கடந்து சென்ற மாதங்களில் ஒரு வாரம், அடுத்தடுத்து மூன்று ஆங்கிலத் திரைப்படங்களை நெட்ஃபிளிக்ஸில் பார்த்தேன். கொலெட் (Colette), அடோன்மெண்ட் (Atonement), தி கேர்ன்சே லிட்டெரரி அண்ட் பொடேட்டோ பீல் பை சொசைட்டி (The Guernsey Literary and Potato Peel Pie Society) – மூன்றும் பெண் எழுத்தாளர்களைப் பற்றியது. முதல் இரண்டு படங்களின் குறிப்பைப் படிக்காமலே தெரிவு செய்தேன். மூன்றாவது படத்தின் கதை என்ன என்பதைப் பற்றிய குறிப்பைப் படித்திருந்தேன்.

எழுத்தாளர்கள், அதுவும் பெண் எழுத்தாளர்கள், தங்களின் வாழ்க்கையில் ஏற்படும் உறவு மற்றும் உளவியல் சிக்கல்களையும் குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் எப்படியெல்லாம் எதிர்கொண்டு எழுத்துலகில் தங்களின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்கிறார்கள் என்பதைச் சொல்கின்றன இந்தப் படங்கள்.

முதல் படமான கொலெட் (Colette) 1948-ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான பிரெஞ்சு பெண் எழுத்தாளர் கொலெட்டின் உண்மைக் கதை.

சிறுவயதில் பிரான்ஸ் நாட்டின் கிராமம் ஒன்றில் வசித்துவந்த அவரை, வில்லி (Willy) என்ற புனைப்பெயரைக் கொண்ட எழுத்தாளர் மணந்துகொண்டு பாரிஸ் நகருக்கு அழைத்து வருகிறார். வில்லி ஏற்கனவே வெவ்வேறு புனைப்பெயர்களில் எழுத்துலகில் வலம்வந்துகொண்டிருந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், இசை விமர்சகர். அவரைச் சுற்றி எப்போதும் ஓர் எழுத்தாளர் குழு இருக்கும்.

பாரிஸ் நகருக்கு வரும் கொலெட் எழுத்தாளரான கணவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்போது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை எதிர்கொள்கிறார், தனக்குள் இருக்கும் எழுத்துத் திறனை எப்படிக் கண்டுணர்கிறார், ஏற்கெனவே எழுத்தாளராக இருக்கும் வில்லி, கோலெட்டின் எழுத்துலகப் பிரவேசத்துக்கு உதவுகிறாரா இல்லையா, இருவருக்கும் இடையே இருக்கும் திருமண உறவில் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. ஓர்பாலின மற்றும் இருபாலின உறவு பற்றியும் இயல்பாகச் சொல்லிச் செல்கிறது கதை.

அடுத்தது, அடோன்மெண்ட் (Atonement ) – இந்தத் திரைப்படம் வெளிவந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக் கதையும் இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்குச் சற்று முன்னே துவங்கி கதை மாந்தர்களின் வாழ்க்கையைப் போர் எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதைக் காட்டுகிறது. பிறகு, நிகழ்காலத்தில் முடிவடைகிறது.

ப்ரையோனி என்ற பதிமூன்று வயது சிறுமி நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். ப்ரையோனிக்குத் தன் அக்கா செசீலியாவுக்கும் அவர்களின் குடும்பத்தில் பணிபுரிபவரின் மகனான ராபிக்கும் இடையே ஏற்படும் உரசல்களைப் பற்றியும் அவர்களுக்கிடையே மலரும் காதலைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியாத வயது. என்றாலும் ராபியின் மீது ஒருவிதமான ஈர்ப்பும் வெறுப்பும் ஒருங்கே ஏற்படுகிறது. குடும்பத்தில் நடக்கும் வேறு ஒரு பிரச்னையில் ராபியைக் குற்றவாளி என்று ப்ரையோனி சுட்டுவதால் அவரைக் கைது செய்கிறது காவல்துறை.

வளர்ந்து பெரியவளானதும் தன் தவறை உணர்ந்து அக்காவையும் ராபியையும் சேர்த்துவைக்க முயற்சி செய்கிறார் ப்ரையோனி. இதற்குள்ளாகப் போர் வெடிக்கிறது. சிறைத் தண்டனை குறைக்கப்படும் என்பதால் இராணுவத்தில் சேர்ந்து போர்முனைக்குச் செல்கிறார் ராபி. செசீலியாவும் செவிலியர் பணியில் சேர்ந்து போரில் காயம்பட்ட வீரர்களுக்குச் சேவை செய்கிறார்.

அக்காவிடம் மன்னிப்புக் கேட்பதற்காகத் தானும் செவிலியர் பணியில் சேர்கிறார் ப்ரையோனி. இந்த மூவரும் எதிர்கொள்ளும் உணர்வுப் போராட்டம் கதையை நகர்த்திச் செல்கிறது.

இவை எல்லாவற்றுக்குமிடையே எழுதுவதை மட்டும் நிறுத்துவதேயில்லை ப்ரையோனி. நாளடைவில் புகழ்பெற்ற நாவலாசிரியாகிறார். தன்வாழ்க்கைக் கதையாக இவர் எழுதும் நாவலைப் பற்றியும் கதை மாந்தர்களைப் பற்றியும் பேட்டி கொடுப்பதோடு நிறைவடைகிறது படம்.

இறுதியில், ‘தி கேர்ன்சே லிட்டெரரி அண்ட் பொடேட்டோ பீல் பை சொசைட்டி’ (The Guernsey Literary and Potato Peel Pie Society) என்று இதே பெயரில் வெளியான நாவலைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். புனைப்பெயரில் நாவல்கள் எழுதும் ஜூலியட் ஆஷ்டன் என்ற பெண் எழுத்தாளரைப் பற்றிய திரைப்படம். இரண்டாம் உலகப் போர் நடந்த 1940-களிலும் போர் முடிவடைந்த அடுத்த சில ஆண்டுகளிலும் கதை நடக்கிறது.

போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டையடுத்த பல குட்டித் தீவுகளை ஆக்கிரமிக்கிறது ஜெர்மானியர்களின் படை. அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட கேர்ன்சே தீவில் வசிக்கும் டாஸே ஆடம்ஸ் என்ற வாசகரிடம் இருந்து ஜூலியட்டுக்குக் கடிதமொன்று வருகிறது. தொடர்ந்து இருவருக்கும் இடையே நடக்கும் கடிதப் பரிமாற்றத்தில் ‘தி கேர்ன்சே லிட்டெரரி அண்ட் பொடேட்டோ பீல் பை சொசைட்டி’ என்ற இலக்கிய சங்கத்தைப் பற்றியும் அதன் உறுப்பினராக இருக்கும் தன்னைப் பற்றியும் தன் நண்பர்களைப் பற்றியும் எழுதுகிறார் டாஸே ஆடம்ஸ்.

ஜெர்மானியப் படையின் ஆக்கிரமிப்புக்கு இடையே உருவாகிய இலக்கிய சங்கத்தைப் பற்றிப் புத்தகமொன்றை எழுதவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதால் அது குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேர்ன்சே தீவுக்குப் பயணமாகிறார் ஜூலியட் ஆஷ்டன்.

அங்கே இலக்கிய சங்கத்தின் மற்ற உறுப்பினர்களோடு டாஸே ஆடம்ஸையும் அவரின் மகள் கிட்டியையும் சந்திக்கிறார். அவர்களின் வாழ்க்கைக் கதையைத் தெரிந்துகொள்ளும் அவருக்கு மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்ல மனம்வரவில்லை.

ஏற்கெனவே மார்க் என்பவரோடு திருமணம் நிச்சயமாகியிருக்கும் ஜூலியட் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. இடையே ஜூலியட்டுக்கும் அவரின் பதிப்பாளரான சிட்னி ஸ்டார்க்குக்கும் இடையே இருக்கும் நட்பு, ஓர் எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு நிகழ்வு, புத்தகம் எழுதுவதற்கு அவர் மேற்கொள்ளும் ஆய்வு இவை குறித்தெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன.

ஓர் எழுத்தாளரின் எழுத்து வாசகன் மீது ஏற்படுத்தும் தாக்கமென்ன என்ற கேள்வியை நாமெல்லோருமே அவ்வப்போது முன்வைக்கிறோம். அதற்கான பதிலைக் கொண்டு எழுத்தையும் எழுத்தாளரையும் மதிப்பீடு செய்து ஒரு தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கிறோம். ஆனால், இந்த மூன்று திரைப்படங்களும் ஓர் எழுத்தாளரின் எழுத்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதனால் உண்டாகும் மாற்றங்களையும் எடுத்துச் சொல்கின்றன. சொல்லப்போனால், எழுத்தாளரின் கையிலிருக்கும் பேனா உண்மையில் எழுதிச் செல்வது அவருடைய வாழ்க்கைக் கதையைத்தான் என்பதை உணர்ந்தேன்.

இதுபோன்ற வித்தியாசமான வலுவான கதைக்களத்தைக் கொண்ட அதுவும் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாவது தமிழ்த் திரைப்பட உலகில் வருமா என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தபோது என்னையுமறியாமல் பெருமூச்சுவிட்டேன். காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.

.

படைப்பாளர்:

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் என இரு மொழி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். சென்னையில் வசிக்கிறார்.

‘சந்தமாமா’ ஆங்கில இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இளம் பருவத்தினருக்காகத் தமிழக வரலாறு பற்றிய சுவையான குறிப்புகளை வாரத் தொடராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். துலிகா பப்ளிஷர்ஸ், பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான குழந்தைகள் புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக சமூக நலத்துறை, உலக சுகாதார நிறுவனம் (WHO), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), பன்னாட்டு எயிட்ஸ் தடுப்புமருந்து முன்னெடுப்பு (IAVI), துளிர் – குழந்தைப் பாலியல் வன்முறைத் தடுப்பு (Tulir CPHCSA) போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.