கருப்பைக்கும் காமத்துக்கும் உண்டான தொடர்பையும் இன்பத்தையும் அறிந்து உணர்ந்த பின்பே கரு உருவாக்கத்தில் பெண்கள் ஈடுபட வேண்டும். ஆனால், நமது குடும்பங்கள் காமவயப்பட்ட உடலியல் மாற்றங்கள் குறித்த உண்மைகளைப் பெண்களுக்குக் கற்றும் கொடுக்காமல் கற்றுக்கொள்ளவும் அனுமதிக்காமல் வளர்க்கின்றன. அதே குடும்பங்கள் எள்ளளவு நாகரிகமும் இன்றி பெண்களுக்குத் திருமணமான அடுத்த மாதத்திலிருந்தே ஏதேனும் விசேஷம் உண்டா என நச்சரிக்கத் தொடங்கிவிடுகின்றன.

கரு உருவாக்கம் என்பது பானை உருவாக்கத்தைப் போன்றது. ஒரு நேர்தியான பானை செய்வதற்கு முன் மண்ணைப் பக்குவப்படுத்தி, பழக்கி பானை செய்யும் நுட்பங்களைக் கற்றுத் தேர வேண்டும். இது எதையும் பின்பற்றாமல் எல்லோரிடமும் பானை இருக்கிறது, எனக்கும் உடனடியாக ஒரு பானை வேண்டுமென்று செய்யப்படும் பானைகள் ஒருபோதும் நேர்த்தியான பானைகளாக வடிவம் பெறுவதில்லை. குடும்ப உறவுகளின் அழுத்தத்தாலோ கணவனின் வன்முறையான புணர்வுகளாலோ காமத்தின் முழுமையை உணராத பெண்களின் கருப்பையில் உருவாகும் சிசுக்கள் வளர்ச்சியடைகின்ற பொழுதும் எதிர்மறை அழுத்தங்களுக்குள் ஆட்பட வாய்ப்புகளுண்டு.

தக்க பருவம் வரை காத்திருந்து மண்ணை உழுது தயார் செய்து பயிரிடுவதைப் போல பெண்களின் கருப்பை விரும்பும் பருவம் வரை காத்திருந்து புணர்புழைகளின் வழி பேரின்பத்தைக் கருப்பைக்குக் கடத்தி பல பரவச நிலைகளைக் காட்டி மூளையை வசப்படுத்திய பின்னர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானத்திற்கு வருவது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட அடித்தளமாக அமையும்.

ஓவலேசன் சமயங்களில் பெண்களிடத்தில் மிகுதியாகப் பொங்கி எழும் காமத்தைக் கையாளக் கற்றுக்கொடுக்காத சமூகம் குழந்தை பெறுவதற்காக மட்டும் ஓவலேசன் சமயத்தில் புணரச் சொல்லிக் கொடுப்பது சுரண்டலின் தொடக்கம். அல்லது காமத்திற்கு அப்பாற்பட்ட பரிசுத்த அன்புடையவர்களாகக் காலத்திற்கும் பெண்களை அறியாமையில் வைக்க நடத்தப்படுகின்ற நாடகம்.

பெண்களைக் காமம் அற்றவர்களாகவே கட்டி மேய்க்க விரும்பும் குடும்ப அமைப்புகள் பரவச நிலை பற்றி, பெண்களாகச் சொன்னால்தான் ஆண்களால் உணர முடியுமென்று ஒருபுறம் புழுக, மறுபுறம் பரவச நிலை என்றால் என்ன என்று கேட்கும் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களை வைத்துக் கொண்டு அறியாமையோடும் ஆதிக்கத்தோடும் சமூகம் இயங்கி வருவதனால் இன்பங்களைத் துய்ப்பதற்கான அடிப்படையை இழந்த சமூகமாக நமது சமூகம் உள்ளது.

புணர்புழையின் தசைச் சுவர்களில் சுரக்கும் திரவம், புணர்ச்சியின் பொழுது ஏற்படும் சீரான ரத்த ஓட்டத்தின் விளைவுகளாலும் பேரின்பத்தினாலும் புணர்புழையின் வாய்ப்பகுதி தொடங்கி கருப்பை வரை உள்வாங்குதல், சிக்கெனப் பற்றிக் கொள்ளும் திறம் போன்ற செய்கைகளின் மூலம் பெண்களின் பரவச நிலைகளைச் சுலபமாக உணரலாம். இவற்றையெல்லாம் உணர்ந்து பெண்களின் தேவைகளுக்கு மதிப்பளிப்பதன் மூலமே காமத்தை முழுமையாக அனுபவித்திட முடியும்.

பெண்களின் பரவச நிலையைப் பெண்களாகச் சொன்னால்தான் அறிய முடியுமென்ற மூட நம்பிக்கையோடும் ஆண்மையப் போக்கோடும் பார்ன் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அவற்றில் பெண்களைத் துன்புறுத்தி, கைகால்களைக் கட்டி வைத்து புணர்ந்து, பரவசத்தை ஏற்படுத்துவது போல் காட்டப்படுகின்ற செய்கைககளை உத்தியாகக் கருதி, பெண்களைக் கையாள நினைக்கும் ஆண்கள் சூழ்ந்த உலகில் எதையும் அறியாமலும் அறிந்திருந்தால்கூட அனுபவிக்க முடியாமலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய சமூக நிர்பந்தத்துக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனர்.

காமத்தின் முழுமையால் கருப்பையில் குழந்தைகள் உருவாக வேண்டும் என்ற இயற்கையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காத சமூகம், குழந்தை பெற்றெடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்யும் பெண்களை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் பெண்மையைக் குழந்தை பெறும் செயலோடு மட்டும் வைத்திருக்க முயற்சிக்கின்றது.

பெருநகரங்களில் மக்கள் தொகை பொங்கி வழிகின்ற காலத்தில் சமூகம், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்களால் மனித இனமே அழிவை நோக்கி நகர்வதாகத் தர்க்கமின்றி வாதிடுவது கேலிக்குறியது.

குழந்தை பெற்றெடுக்க விரும்பும் பெண்களை இந்தச் சமூகம் நடத்தும் விதம் மிகவும் மோசமானது. ’நார்மல் டெலிவரி இல்லையா, கர்ப்பமா இருக்கப்போ குனிந்து நிமிந்து வேலை செய்திருக்க மாட்டா, புள்ளையை நல்லா பெத்துக்கணும்னு நினைச்சிருந்தாதான, குழந்தை அழுதுட்டு இருக்கு, தாய்ப்பால் கொடுத்தாதானே நேர நேரத்துக்கு, பொட்டைப் புள்ளையைப் பெத்து போட்ருக்கா, காக்கையாட்டம் கறுப்பா பெத்துப் போட்ருக்கா, சித்திரையில புள்ளையப் பெத்துருக்கா குடும்பத்துக்கு ஆகாது’ என்று பலவாறு வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிரசவித்தப் பெண்களின் உளவியல் நலம் பாதிப்படையும்படியான செயல்களில் குடும்பச் சமுகம் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் பிரசவிக்கத் தயாராக இருக்கும் கர்ப்பிணிகளை வளைகாப்பு என்ற சடங்கிலமர்த்தி, தாய் வீட்டுக்கு அனுப்பி கர்ப்பிணிப் பெண்களுக்கான பணிவிடைகளைச் செய்ய, தாயைப் பணிப்பது என்பது ஓய்வில்லாமல் பெண்களைச் சுரண்ட வழிவகை செய்யும் கலாச்சார வன்மம். குழந்தை உருவாக்கத்திற்கு விந்தணுவைத் தருவதோடு பெண்களுடன் ஒருங்கிணைந்த ஆண்களின் கடமைகள் நின்றுவிடுவதில்லை. ஒருபுறம் விந்தணு அனுப்பியதோடு கடமை முடிந்து விட்டதாக ஆண்களை வழிநடத்தும் குடும்பங்கள், மறுபுறம் குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருக்கவே விரும்புவார்கள், தாய் வாரி அணைத்துக்கொண்டாலே அழுகின்ற குழந்தைகளின் அழுகை நின்றுவிடும் என்றெல்லாம் குழந்தை பராமரிப்பை, தாய் மட்டுமே செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றது.

குழந்தையோடு உறவாடி பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுகையிலேயே தந்தையின் மீது குழந்தைகளுக்கு நம்பிக்கை பிறக்கும். தந்தையை முழுமையாக உள்வாங்கிக் கொள்கையிலேயே குழந்தைகள் தொட்டதுக்கெல்லாம் தாய் வேண்டுமென அழுது தேம்பும் கலாச்சாரப் பழக்கத்தைக் கைவிடுவார்கள்.

நிர்வாணத் தன்மையுடன் உடலோடும் உளவியலோடும் உறவாடும் துணையின் அரவணைப்பே பிரசவித்து குழந்தை வளர்கின்ற வரை பெண்களுக்குத் தேவைப்படுகின்றது. ரசனையாக ரசித்த பெண் உடல் குழந்தை உருவாக்கத்திற்காக எப்படியெல்லாம் மாற்றமடைகிறது, சோர்வடைகிறது என்பதையெல்லாம் ஆண் துணை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும். இதை உணரும் சமயத்திலேயே குழந்தை பிறப்புக்குப் பின்னான திரைத்துறை பெண் நட்சத்திரங்களின் உடல் தோற்றங்களைக் கேலி செய்து ட்ரோல் செய்வதைத் தவறென ஆண்கள் உணரக்கூடும்.

கர்ப்ப காலத்திலும் குழந்தை பிரசவித்த பிறகும் பெண்களுக்கு உதவ வேண்டிய ஆண் துணைகள் விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் பொழுதுகூட கர்ப்பிணி/பிரசவித்த பெண்களை அதிகாரத் தொணியுடன் அதை எடுத்துவா, இதை எடுத்துவா என்று வேலை வாங்குவதை நமது குடும்பங்கள் மத்தியில் வெகுவாகக் காண முடிகிறது. அழுகின்ற குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு கணவனின் அதட்டலுக்கு மத்தியில் அன்றாட வீட்டுப் பணி செய்யும் பெண்களின் பாடு பெரும்பாடு. குளிக்கச் செல்லும் கணவனுக்குத் துண்டும் துணியும்கூட மனைவிதான் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற பழக்கங்களுக்குள் பெண்கள் மூச்சுவிடக்கூட நேரமின்றி சுரண்டப்படுகின்றன.

கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்பும் தாய்சேய் பராமரிப்பில் தந்தைக்குப் பெரும்பங்கு உண்டு. தாய்ப்பால் ஊட்டுவிக்கும் நேரங்களில் ஆண் துணை வாய்ப்பு இருக்கும் நேரங்களில் எல்லாம் உறுதுணையாக இருப்பது அவசியமான ஒன்று. ஆனால், நமது ஊர்களில் தாய்ப்பால் ஊட்டுவிக்கும் நேரங்களில் ஆண்களை வெளியே அனுப்பும் சூழலைக்கூட இன்றும் பார்க்கமுடிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொலைக்காட்சித் தொடரில் வரும் கதாப்பாத்திரமான மீனா பிரசவத்திற்குப் பின்பு, குழந்தை உறங்கிய பின் தன்னுடைய அறையில் உறங்கச் சென்றுவிடுவாள். அவளது கணவனும் அதே அறையில் உறங்கச் செல்வான். அதைக் கண்ட மீனாவின் மாமியார் மூத்த மருமகள் தனத்தை அழைத்து மீனாவுடன் நீ உறங்கச் செல், குழந்தை அழுதால் எடுக்க வசதியாக இருக்கும் என்று கூறுவதாக ஒரு காட்சி. தனம் அதற்குப் பராவாயில்லை என்னுடைய அறையிலேயே உறங்குகிறேன், குழந்தை அழுதால் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்பாரள். மாமியாரோ உனக்கு ஒன்றும் தெரியாது, குழந்தை பெற்ற உடம்புக்காரி மீனா, மீனாவோடு கணவனும் உறங்குவது சரியல்ல என்று கூறியவாறு காட்சிகள் நீண்ட வண்ணம் இருந்தன. இங்கே பொதுவாகப் பிரசவித்த பெண்களைத் தாய் வீட்டில் விடுவதற்கும் இதே காரணம்தான் சொல்லப்படுகிறது. இதில் ஓய்வின்றிப் பெரிதும் சிரமப்படுவது பிரசவித்த பெண்களின் தாய்மார்களே. இதனால் குழந்தை வளர்பான பேரன்டிங்கில் (parenting) தந்தையுடைய பங்கு என்பது இல்லாமல் போய்விடுகிறது.

பிரசவித்த பெண்ணுக்கு இரவு நேரமான ஓய்வு நேரங்களில் முழுமையான அரவணைப்புத் தேவைப்படும். பிரசவித்த சில நாட்களுக்குத் துணையிடமிருந்து வரும் அரவணைப்பு பந்தமே பெண்களை ஆரோக்கியமான வாழ்விற்கு அழைத்துச் சென்று சிறந்த முறையில் தாய்ப் பால் ஊட்டுவிக்கவும், ஆற்றல் இழப்புகளை ஈடுசெய்து உடல் மறு பலம் பெறவும் வழிவகை செய்யும்.

பிரசவித்து சோர்ந்திருக்கும் காலத்தில் குழந்தையின் அவ்வப்போதைய அழுகையை ஆற்றுப்படுத்தி முழுமையான ஓய்வின்றி இயங்கும் பெண் துணையைப் புணரக் கூடாது என்பதைக்கூட ஆண்களுக்குக் கற்றுக் கொடுக்காத குடும்பங்கள் குழந்தைகளுக்கு எதைக் கற்றுக் கொடுக்க போகின்றன? இந்த லட்சணத்தில்தான் குடும்ப அமைப்புகள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாமென்று முடிவெடுக்கும் பெண்களையும் குழந்தை பெறுவதில் தாமதமாகின்ற பெண்களையும் விமர்சித்து வருகின்றன.

பெண்ணுடலின் மாற்றங்களையும் தேவைகளையும் ஆரம்பம் முதலே அறையும் குறையுமாகக் கற்றுக்கொள்ளும் ஆண்கள், கர்ப்பக் காலத்தில் எப்படி உடலுறவு கொள்வது, பிரசவித்த சில நாட்களில் எப்படி உடலுறவு கொள்வது, மாதவிடாய் நாட்களில் எப்படி உடலுறவு கொள்வது போன்ற பெண்களுக்குத் தேவையில்லாத ஆணிகளை மட்டும் தவறாமல் தெரிந்து கொள்கின்றனர்.

கர்ப்பிணி, பிரசவித்த பெண்களுக்கு ஆண் துணையிடமிருந்து உளவியலாலும் உடலாலும் சற்றுக் கூடுதல் நெருக்கம் கொண்ட அரவணைப்பு தேவையே ஒழிய, உடலுறவு தேவையற்றது. பிரசவித்த பின் கருப்பையிலுள்ள கழிவுகள் ரத்தப் போக்காக முழுமையாக வெளியேறி கரு முட்டை உருவாகும் சுழற்சி சீராகத் தொடங்கிய பின்னரே காமம் என்பது தேவையாக மறுமலர்ச்சி பெறும். இடைப்பட்ட காலங்களில் ஆண் துணையின் உடலுறவுக்கு உடன்படுவது என்பது பெண்களுக்கு அயர்வையே கொடுக்கும்.

குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிடுவதற்கு முன்பு ஆணும் பெண்ணும் காமம் பற்றி புரிந்துகொள்ள முற்பட வேண்டும். விவாதிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் சந்தேகங்களைப் பகிர்ந்தும் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொண்டும் தேவையையும் தேவை இன்மையையும் அறிந்தும் செயல்பட வேண்டும்.

குழந்தை கருவில் வளரத் தொடங்கிய நாள் முதலே பேரன்டிங்கைச் சரி வரக் கையாளப் பழக வேண்டும். குழந்தை பராமரிப்பில் சமத்துவம் பேணும் அளவிற்காவது பெற்றோராகப் போகும் பெண்ணும் ஆணும் அற உணர்ச்சி கொண்டிருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் எல்லாம் நாங்க பெறாத குழந்தையா, வருடக் கணக்காகத் தாய்ப் பால் கொடுப்போம் என்று வரும் பழம்பெரும் பாழாய்ப்போன கதைகளுக்கெல்லாம் காது கொடுக்காமல் மூளையின் சிந்திப்பாற்றலைப் பயன்படுத்தி குழந்தைகளை வளர்த்தெடுங்கள். அந்தக் காலத்திலெல்லாம் வருடக் கணக்கில் தாய்ப் பால் கொடுத்தோம் என்று சொல்லும் மரியாதைக்குரிய முன்னோரிடம் சென்று, உங்களுக்கு எத்தனை குழந்தை என்று கேட்டுப் பாருங்கள். மார்கழிக்கொன்றும் கார்த்திகைக்கொன்றும் ஐப்பசிக்கொன்றுமாக இடைவெளிவிடாமல் வருடந்தோறும் குழந்தைகளைப் பெற்றுப் போட்டிருப்பார்கள். அதில் போதிய ஊட்டச் சத்தின்றி ஒன்றிரண்டு குழந்தைகளைத் தவறவும் விட்டிருப்பார்கள். சமயத்தில் பெற்றுப் போட்டத் தாயே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தவறியிருப்பார். இரண்டாம் தாரமாக வந்து அடுத்த குழந்தைதளை அதே போல் பெற்றெடுத்துள்ளனர் பலர்.

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண்ணால் முதலில் பிறந்த குழந்தைக்கு எத்தனை வருடம் தாய்ப்பால் கொடுத்திருக்க முடியும்? தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே குழந்தைகளைப் பெற்றுப்போடும் பெண்ணின் ஆரோக்கியம் என்ன ஆகியிருக்கும் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாகவே முந்தைய நூற்றாண்டின் பேரு கால மரணங்கள் அமைந்திருக்கின்றன. இதுபோன்ற உண்மைகளையெல்லாம் கேள்வுக்குள்ளாக்காமல் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்று வீட்டிலிருந்தபடியே நார்மல் டெலிவரி செய்யலாம் என்று அறைகுறையாக உங்கள் உயிரோடு விளையாடாமல் மருத்துவ அறிவியலைக் கரம்பற்றிக் கொள்ளுங்கள்.

மருத்துவம், அறிவியல் துறைகளில் தவறு நடக்கிறதென்றால் தட்டிக் கேளுங்கள். இங்குதான் நமக்கு அரசியல் தேவைப்படுகிறது பெண்களே. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அப்பாவும் கணவனும் ஓட்டுப் போடும் கட்சிக்கு ஓட்டுப்போடும் சார்பு நிலையிலேயே நமது அரசியலை வைத்திருப்பது? வாருங்கள் நமக்கான அரசியலை நாமே நிலைநாட்டிக் கொண்டு தவறுகளை நம் குரலில், நம் அனுபவத்தின் வலிகளிலும் வேதனைகளிலும் இருந்து தட்டிக் கேட்போம்.

குழந்தை பெறுவது என்பது நம் பிறவியின் கடமையல்ல. நமது தேவைகள் பூர்த்தியாகும் பொழுது தேவைப்பட்டால் உயிர் பெற வேண்டிய ஓர் உடல் குழந்தை. குழந்தை உருவாக்கத்திலும் வளர்ப்பிலும் பராமரிப்பிலும் தாய்மைக்கே கடமை உண்டு என்ற ஆண்மைய அறியாமையை அழித்துவிட்டு, தாய்க்கும் தந்தைக்கும் சம பங்கு உள்ள பெற்றோர்மையை உயர்த்திப் பிடிப்போம். வாரிசைப் பெறத் திட்டமிடாமல் மனிதக் குழந்தையைப் பெற திட்டமிடுவோம்!

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.