நண்பர்கள் வட்டத்தில் மாறுபட்ட வாழ்க்கை முறை கொண்ட பலரை நான் சந்திக்கிறேன். உரையாடுகிறேன். குறிப்பாக  கல்லூரி படிக்கும் மாணவர்கள், சிறு குழந்தைகள் உள்ள தம்பதியர், பெண்ணின் திருமணத்திற்கு வரன் தேடும் பெற்றோர், பேரக் குழந்தைகளைப் பராமரிக்கும் பெரியவர்கள் என வெவ்வேறு தருணங்களில் பலர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் பெண்களை ஒரு சுயமாக சிந்திக்கும் உயிரியாகக்கூடப் பார்க்க முன்வரவில்லை என்பது கவலையளிக்கிறது. சிறு உரையாடலில்கூட அவர்களிடம்  பெண்ணின் தேர்வு அல்லது விருப்பம் என்பது குறித்து ஒரு விரிந்த பார்வையை நான் உணரவில்லை. 

பெண் குழந்தைகளைக் குறித்த பன்முக சிந்தனைகளை / அணுகுமுறைகளை ஒரு வரியில் விவரிப்பது என்றால் அவை, ” பெண் குழந்தைகளைத் திருமணத்திற்கு தயார் செய்தல்” என்று கூறி விடலாம். நான் ஏதோ நூறாண்டுகளுக்கு முந்தைய நிலவரத்தைக் கூறுவதாக நினைக்க வேண்டாம். 2022 ஆம் ஆண்டு நவீனப் பூச்சுகளுடன் அதே பழங்கால ஆணாதிக்க சிந்தனைகள் உலவி வருகின்றன. நல்ல மதிப்பெண்கள் எடுத்து உயர் கல்விக்கான சாத்தியம்  இருந்தும், மாப்பிள்ளை அமைவது சிரமம் என்ற காரணத்தால் வீட்டில் தங்கிவிடும் எத்தனையோ பெண்களை நான் அறிவேன்.எத்தனையோ பொறியியல் பட்டதாரிகளான பெண்கள் வீடுகளில் திருமண ஏற்பாடுகள் செய்து வருவதால், வெறுமனே வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். என் மனதில் மிகவும் கவலையை ஏற்படுத்திய இரு அம்சங்களை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கல்வி என்பது நம்முடைய சமூக அமைப்பில் சில குறுகிய வரையறைக்கு உட்பட்டது தான். இருப்பினும்  பெண்கள் தங்களுடைய  விருப்பத்தின் பேரில் கல்விப் புலத்தை தேர்வு செய்வது  என்பது அரிதாகக் காணப்படுகிறது. ஒரு வேளை தேர்வு செய்தாலும் கூட, அவர்களின் வருங்காலத் திருமண வாழ்க்கைதான் அவர்கள் பணிக்குச் செல்வதா வேண்டாமா என்பதை நிர்ணயிக்கும்.

மிகவும் எளிமையான ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். ஆணோ பெண்ணோ 20-22 வயதுவரை பெற்றோர் பராமரிப்பில் வளர்கிறார்கள். அவர்களின் சுயமரியாதையை உறுதி செய்யும் விதமாக ஏன் தங்களுடைய சொந்த செலவுக்கு தாங்களே சம்பாதிக்க வேண்டும் என்பதை ஒரு நிலைப்பாடாக குடும்பங்களில் ஏற்படுத்தக் கூடாது? அந்தந்த குடும்பச் சூழலுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மை இருக்கலாம். ஆண்கள் வேலைக்குச் செல்வது என்பதை அவசியமாகப் பார்க்கும் சமூகம், பெண்கள் வேலைக்குச் செல்வதை இன்னமும் ஆடம்பரமாகப் பார்ப்பது மாற வேண்டும். பெண்கள்தங்களுடைய சுயமரியாதையை உறுதி செய்யும் ஒரு செயல்பாடு தான் சுயசம்பாத்தியம். இதை பெண்கள் கூடுதலாக உணர வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

Photo by Emil Kalibradov on Unsplash

திருமணம் என்பது இன்னும் நமது தமிழ்ச் சமூகத்தில் இரு குடும்பங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்று தான் கருதப்படுகிறது. வரன் தேடுவது பல லட்சங்கள் புழங்கும் துறையாக உருவாகி உள்ளது. அதிலும் மிகுந்த சமரசத்திற்கு உள்ளாவது பெண்களின் பணிதான்.

பெண்களின் பணி என்பதை எப்பொழுதும் கட்டாயமற்றதாகவே நம் மனங்களில் ஆழப் பதித்து இருக்கிறோம். ஒரு வேளை அரசாங்கத் துறையில் பணி என்றால் முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் குழந்தைப் பேறு என்று வரும் போது, பெண்ணின் சமரசங்கள் தொடர்கதை தான்.

இந்த சமூக அமைப்பில் 18 வயதானவுடன் தேர்தலில் வாக்களிக்க ஆண்/பெண் இருவருக்கும் சம உரிமையை அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப் படுத்தி உள்ளது. பள்ளிப் படிப்புடன் கல்வியைத் தொடர முடியாத விட்டாலும் கூட, நேர்மையாக உழைத்து சம்பாதித்து சுயசார்புடன் வாழ்க்கையை தொடர்வது ஆண்/பெண் இருவருக்கும் அத்தியாவசியம் என்ற சிந்தனையைப் பரவலாக்க வேண்டும்.

வேலைக்குச் செல்வது அல்லது சுயதொழில் செய்வது என்பது வெறும் வருமானத்துடன் வரையறுக்க முடியாதது. பலவிதமான மனிதர்களைச் சந்திப்பது, பிரச்சினைகளை எதிர்கொள்வது என்று சமயோசித புத்திக் கூர்மையை வளர்த்தெடுக்கும் ஒரு செயல்முறைதான். திருமணம் என்பதுதான் பெண்ணின் வாழ்க்கைக்கான ஒரே லட்சியமாகக் கருதும் போக்கு மாற்றப்பட வேண்டும். பொருளாதாரச் சூழல் எவ்வாறாக இருப்பினும் பல குடும்பங்களில் இதுதான் பொதுவான சிந்தனைப் போக்காக உள்ளது. அது மாற வேண்டும்.

பெண்களின் சுய தேர்வாக கல்வி,பணி, திருமணம் என்பது உறுதிப்படுத்தப்படும் இலட்சிய சமூக அமைப்பை நோக்கிப் பயணிப்போம்.

யோசிப்போம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரஞ்சனி பாசு

நூல் விமர்சகர்.