காதல் தோல்வியடைந்த சுப்ரமணியண்ணன் கல்யாணமே வேண்டாம்னு பம்பு செட்ல குடிச்சுட்டு மல்லாந்து உளறிட்டே இருக்கும்.

அவங்கம்மா பொக்கேலா (பொற்கலை என்பதைத்தான் இப்படி அழகாக அழைக்கும் எங்க ஊரு) போய் எழுப்பி இட்டாந்து சுடுசோறு போட்டு தூங்க வைக்கும். “ராத்திரியில மோஹினி நடமாட்டம் இருக்கும். வயசுப்புள்ளைங்கள அப்படியெல்லாம் தனியா விடக்கூடாது”ங்கும்.

திடீர் ஞானோதயமாக, “எனக்கு உடனடியாக கல்யாணத்தை பண்ணி வைம்மா” னு சுப்ரமணியண்ணன் ஒரு நாள் சண்டை போட்டுச்சு.
விஷயம் வேறொண்ணுமில்ல. ஏதோ சஹிருதய குடிகார பார்ட்னர் பய, “டேய் அவ (முன்னால் காதலி) மறுவீடு வந்துருக்காடா, நல்லாத்தான் இருக்கா! அவளுக்கு முன்னாடி நீ ஒருத்தியை கட்டி புள்ளையை பெத்துகிடணும்டா, இவளுங்களுக்கு முன்னாடி கெத்தா வாழனும்டா”னு ஏத்திய ஸ்ருதிக்கு தக்கபடி ஸ்க்ரூவை ஏத்திவிட, சுப்ரமணி அண்ணன் அவங்கம்மாவிடம் மல்லுக்கட்டிகிட்டு இருந்துச்சு.

பொக்கேலாம்மாவும் அவங்க வூட்டுக்காரரிடம் என்னென்னவோ எடுத்து சொல்லி பெண்தேட சம்மதம் வாங்கிடிச்சு. “நீ வேலைக்கு போனன்னா உனக்கு கல்யாணத்தை முடிச்சிடறோம். கல்யாண செலவுக்கு காசுவேணும்ல?”னு சொல்லி, கடனவுடனை வாங்கி கல்யாணத்தை முடிச்சிட மனதளவுல தயாரா இருந்தாங்க.

10 -15 கிலோமீட்டருக்குள்ளயே அமைஞ்சதுதான் ராஜகுமாரியண்ணி. கருத்தமேனி, வலதுபக்கம் புடவையணிந்து… (இதெல்லாம் நான் பெரிய மாடர்னாக்கும்னு காட்டிக்கும் ஒரு செயல்) மாட்டலும், ஜிமிக்கியும், இரண்டு பக்கமும் மூக்குத்தியும், பட்டை பட்டாடையுடன் (பட்டாடை கொலுசு) பொண் அழைப்புக்கு வந்த காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது.

இரண்டு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு பிறகு பிறந்த பெண். விவசாய குடும்பம்தான். அங்காளி பங்காளி என பெரிய குடும்பம். வயல்வேலைகளை நல்லா செய்யும். களையெடுக்கும் வேலையோ, நாத்து நடும் வேலையோ பத்து ஆள் வேலையை ஒண்டியா செய்யும். சமையல் அவ்ளோ தோதுபட்டு இருக்காது. முழுவீட்டையும் குத்தவச்சு உக்கார்ந்து மொழுவரதாகட்டும் (மொழிகிவிடல்), உரலில் நெல்லை குத்தி எடுப்பதாகட்டும், ஒற்றை ஆளாக எல்லாம் சொடக்கு போடும் நேரத்தில் செய்யும் (இதையெல்லாம் செய்ய உடம்பில் நல்ல ஸ்ட்ரென்த்தும் ஸ்டாமினாவும் வேணும்).

இப்படியாக இருந்தப்போ, திடீரென ராஜகுமாரியண்ணிக்கு பேய் பிடிச்சதா சொன்னாங்க.

ராத்திரியில திடீர் திடீரென அழுவறதா சொன்னாங்க. பேய் ஓட்டும் சாமியாரை கூட்டிட்டு வந்து அண்ணியோட அம்மா அப்பா சம்மதத்தோட பேயும் ஓட்டினாங்க.

புளிய விளாரால போட்டு விளாரிவிட்டாங்க. கை, கழுத்து , இடுப்பு என எல்லா இடத்திலும் தாயத்து கட்டிவிட்டாங்க.
காயங்கள் ஆறும்வரை அம்மாவீட்ல இருக்கட்டுமுனு அனுப்பி வச்சாங்க.
அண்ணி பத்து நாளைக்கு பிறகு திரும்பி வந்ததும்… என்னவோ பழைய களையாவே இல்லை. சோர்ந்து போய் இருந்துச்சு.
“தூக்கத்துல கத்தி இருக்கேனாம் எனக்கு எதுவுமே தெரியலை”னு அப்பாவியா சொன்னுச்சு.
“அழுதேன்றாங்க எதுவும் தெரியலை… ஆனா இப்போ எனக்கே கொஞ்சம் ஃபிரீயா இருக்க மாதிரி இருக்கு”ன்னுச்சு.

இதெல்லாம் கம்மாயில துணி துவைச்சப்போ பேசிக்கிடறதுதான்.
அண்ணி போனதுக்குபிறகு முத்தண்ணி எட்டி எட்டி பார்த்துட்டு, “குமாரி போயிடிச்சா சுப்பு”ன்னு கேட்டுது. “போயிடுச்சண்ணி”ன்னு சொன்னேன்.

முத்தண்ணி பத்தாவது பெயிலு, கொஞ்சம் படிச்சவங்க. அப்பப்போ பேப்ரெல்லாம் படிக்கும். பாய்கடையில பழைய பொஸ்தகம் எதுனா எடுத்து வந்து படிச்சுட்டு திரும்ப தந்துடும். ஏதோ ஒரு நாவல் படிச்சிருந்தப்போ அவங்க அத்தைக்காரி செக்ஸ் புக் படிக்கிறானு கொளுத்தி போட்டு பெரிய சண்டை ஆயிடிச்சு. சிலர் இருங்காங்க எங்க ஊர்ல… நாவல்கள் படிச்சாலே அவுங்களுக்கு அது செக்ஸ் பொஸ்தகம்தான். அதுல முன் அட்டை இவங்களுக்கு புரியற மாதிரி இருக்காதில்லை? அதுதான் காரணம்.

சரி விஷயத்துக்கு வருவோம்… குமாரியண்ணி போனதை உறுதிபடுத்திகிட்ட பின்னாடி அண்ணி ரகசியமா சொல்லுச்சு… “பேயுமில்லை பிசாசுமில்லை… சுப்ரமணி ஒரு போக்கத்தவன். குடிச்சு குடிச்சு அவனுக்கு சுறுசுறுப்பு பத்தலை… குமாரி கடைசிப்பொண்ணு, செல்லமா வளர்ந்த பொண்ணு அக்காக்களுக்கு கல்யாணம் பண்ணி போன பிறகு அண்ணன்களோட வளர்ந்ததால ஆம்பளை பிள்ளையாட்டமே வளர்ந்துடிச்சு”.

“களம்போட்டு நெல்லு பிரிச்சப்போ ஒத்தையாளா மூட்டையை தலையில வச்சி வீட்டுக்கு கொண்டுவந்து போட்டுச்சு, சுப்ரமணி பயலால அரைமூட்டைகூட தூக்கமுடியலை. ஏதோ நடந்திருக்கு. பேய் ஓட்டறதா சொல்லி அவளை பாதியாளா ஆக்கிட்டாங்க”ன்னுச்சு. எனக்கு என்னவோ புரிஞ்ச மாதிரி இருந்தது… கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது.

ஆறு மாதத்துக்குப் பிறகு குமாரியண்ணி மாசமானதா பேசிக்கிட்டாங்க… சுப்ரமணியோட பெரியப்பா மகன்தான் காரணம்னு அரசல் புரசலா பேசிக்கிட்டாங்க…
ஆனா குமாரியண்ணி எப்பவும்போல ரொம்ப இயல்பா இருந்தாங்க…
பேய் ஓட்டியதுக்குப் பிறகு, இப்போ ரொம்ப ஃபிரியா இருக்கேன்னதும் ஏதோ குறியீடோ?

படைப்பாளரின் மற்ற படைப்பு:

படைப்பு:

சுபா கண்ணன்

ஆசிரியர், எழுத்தாளர், கதைசொல்லி. பாடல், கதை என கலை வடிவில் குழந்தைகளுக்கு பாடங்களைக் கொண்டு சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவள் விகடன் இதழில் இவர் எழுதிய ‘மனுஷி’ தொடர் பெரும் ஆதரவைப் பெற்றது.