குட்டி – 3

முன்கதைச் சுருக்கம்: செல்லப் பிள்ளையான குட்டிக்கு அவளது அப்பா, ஒரு திருப்தியான வரனைப் பார்த்திருந்தார். குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது.


இனி..
.

தென்னந்தோப்புக்குள் தடதடவென ஓடிய ரமேஷ், குட்டியைப் பார்த்தவுடன் நின்றான். பயங்கரமாக மூச்சு வாங்கியது. பேசவே முடியவில்லை. 
“அக்கா…”


தோப்பில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு, வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள் குட்டி. பெரிதாய் எந்த யோசனைகளும் இல்லை. சும்மாவே அப்படி கட்டிலைப் போட்டு வானத்தைப் பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தாள்.

ரமேஷ் கூப்பிட்ட சத்தத்தை கேட்டு எழுந்து அமர்ந்தாள்.
“என்னடா?”
“இப்ப தான்க்கா ஒரு விஷயம் தெரிஞ்சது”, என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மூச்சு வாங்கினான்.

நீண்ட நேரம் அவனை இளைப்பாற விடாமல்,
“என்னடா கண்டுபிடிச்ச… சொல்லு?”
“வீட்டுல இருக்கிற spider manக்கு ப்ளூ கலர் ரத்தம் க்கா”
“ஙே. என்னாது?”
“அதான்க்கா. செவுத்து மேல போவுமே”
“அது spider man இல்லடா. ஸ்பைடர். spider man அப்படின்னா சினிமாப் படம். அதுல ஹீரோவுக்கு ஸ்பைடர் கடிச்சு ஸ்பைடரோட சக்தி எல்லாம் வந்துரும்.”
“சரி சரி, ரொம்ப பேசாத. உனக்கு அந்த ஸ்பைடரோட ரத்தம் ப்ளூ கலர்னு தெரியுமா தெரியாதா?”
“தெரியாதுடா. எப்ப பாத்த?”
“எங்க வீட்டுலதான். வரியா பாப்போம்.”
“சரி வா போலாம்.”

போகும் வழியெல்லாம் செடிகளை பிய்த்து போட்டுக் கொண்டும், இலைகளை இழுத்துக் கொண்டும், ஓட்டமும் நடையுமாக ரமேஷ் வீட்டுக்குச் சென்றார்கள்.

ஊரின் நடுவில் கண்மாய் உண்டு. அதைச் சுற்றி இருக்கும் வீடுகளில் ஒன்றுதான் சுரேஷின் வீடு. அவ்வப்போது வித்தியாசமான பூச்சிகள்கூட வரும். ஏதாவது கடித்துவிட்டால், கோவிலில் திருநீறு போட்டுக்கொண்டு வருவார்கள். இப்போதிருக்கும் இளவட்டங்கள்தான் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருந்து வாங்குவார்கள். 

இப்போதெல்லாம் பெரியவர்களும் சுகாதார நிலையம் செல்கிறார்கள். ஆனால் உடனே திருநீறும் போட்டுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் திருப்தியாயிருப்பதில்லை. அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் விஷப்பூச்சி கடித்து ஒரு சிறுவன் இறந்திருந்தான். மருத்துவம் பார்த்திருந்தால் பிழைத்திருக்கலாம். கடித்தவுடன் அந்தப் பையன் அவன் அம்மாவிடம் வந்து, “ஏதோ கடித்துவிட்டது”, என்று மட்டும் சொல்லியிருக்கிறான். உடனே அவன் அம்மா அவனை தலைக்கு குளிப்பாட்டிவிட்டு பூசாரியிடம் கூட்டிப் போய் திருநீறு போட்டுக் கொண்டு வந்தார். யார் கண்டார்… அது விஷப் பூச்சியாயிருக்கும் என்று?

கொஞ்ச நேரத்தில் அவன் உடல் நிறம் மாறி, கண்கள் சொருக ஆரம்பித்தன. வீட்டில் இருந்த எல்லோருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. அவசரமாய் ஆஸ்பித்திரி தூக்கிக் கொண்டு ஓட, அதற்கு மேல் எல்லாம் வேகமாய் முடிந்துவிட்டது. ஊரே அழுதது. அழுதென்ன பயன்?

அதன் பிறகு ஊருக்குள் ஒரு பெரு மாற்றம். கையில் சிக்கும் சிறு பூச்சிகளை எல்லாம், பட்டென்று அடித்து விடுகிறார்கள். அந்தச் சம்பவத்தின் விளைவாக உருவான பதற்றம் இன்னும் குறையாமல் இருப்பதே காரணம். அப்படி அடி வாங்கியதுதான் இன்றைக்கு ரமேஷிடம் அடிவாங்கிச் செத்த சிலந்தி. 
பெரியவர்கள் எல்லாம் பதற்றத்தில் இப்படி பூச்சிகளை கொன்று குவிக்க, சிறுவர்கள் எல்லாம் பூச்சிகளை ஆராய்ந்து தள்ளினார்கள். 

Photo by engin akyurt on Unsplash

சிலந்தி ரத்தத்தின் நிறத்தை பார்க்க குட்டி வேகமாய் சென்று கொண்டிருந்தாள். ரமேஷும் அவள் பின்னாடியே மெல்ல ஓடிப்போனான்.
வழியில் குட்டியின் அத்தை அவள் ஓடுவதைப் பார்த்தாள்.
“ஏ குட்டி பிள, எங்கடி போய்ட்ருக்க?
” ரமேசு வீட்டுல செத்த சிலந்திக்கு ப்ளு கலர்ல இருக்காம் த்தேய். அதான் பாக்க போய்ட்டு இருக்கேன்.”
“அது சரி. அங்க உங்க அப்பன் உனக்கு மாப்பிள்ள பாத்துட்டு இருக்கான். நீ இங்க செலந்தி ரத்தம் பாத்துட்டு இருக்க.”
“என்னாது. மாப்பிளையா? என்னாத்த சொல்ற?”

ஓடியவள் அப்படியே ப்ரேக் அடித்ததைப் போல நின்றாள். ரமேஷ் கொஞ்சம் முன்னாடி ஓடியிருந்தான். இவர்கள் ஏதோ பேசப் போகிறார்கள் என்று புரிந்தது. அதனால் பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் விளையாட ஓடினான்.

குட்டிக்கு படபடவென இருந்தது. சட்டென்று எதுவுமே தோன்றாத ஒரு நொடி. 10வது, 12வது பொதுத் தேர்வின் ரிசல்ட் வந்த போதுதான் கடைசியாக அவளுக்கு இதயம் இப்படி படபடத்துக் கிடந்தது. 

வெட்கம் வருவதைப் போல இருந்தது. அத்தை முன் நிற்கவே கூச்சமாக இருப்பதைப்போல தோன்றியது. அத்தை ஏதோ சொன்னாள். கவனிக்கவில்லை. ஒரு நிமிடம் ஏதோ நினைவில் மூழ்கிவிட்டாள். திரும்பவும் செருமிக்கொண்டு கேட்டாள்.
“என்னாத்த?”
“அட! உங்கப்பன் எல்லார்ட்டையும் சொல்லிட்டு தான்டி பாத்தான். எனக்கும் போன் அடிச்சானே. மாமாகூட விசாரிச்சாரு.”
‘ஏன் என்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை?…’ யோசித்தாள்.

“என்கிட்ட எதுவும் சொல்லல த்த. சரி நான் வீட்டுக்கு போறேன்.”
“சரி பிள. பாத்து மெதுவாப் போ. பொண்ணு பாக்க வர நேரத்துல எங்கயாவது விழுந்து வாரிட்டு நிக்காத.”
“சரித்த”
ரமேஷ் குழம்பிப்போனான். ‘இப்பதான நம்ம கூட வரேனு சொன்னுச்சு அக்கா? இப்ப வீட்டுக்கு போறேனு சொல்லுது?…’

“ஏ குட்டியக்கா. சிலந்தி ரத்தம் பாக்க வரலயா?”
“அப்புறம் பாக்கறேன்டா”
“நீ வர வரைக்கும் அப்புடியே இருக்காதுக்கா”
“பரவால்லடா. அப்புறமா வேற செலந்தி பாத்துக்கறேன்”
குட்டியின் அத்தை ஏதோ சொல்லியதால் தான் இப்படி இருக்கிறாள் போல. 
“என்னாச்சு க்கா. அத்தை என்ன சொன்னுச்சு?”
“அப்புறம் சொல்றேன். நீ வீட்டுக்குப் போடா” சிரித்துக்கொண்டே ஓடினாள். 

தொடரும்…

கதையின் முந்தைய அத்தியாயம்:

படைப்பு

சௌம்யா

எம்.பி.ஏ. பட்டதாரி மற்றும் தொழில்முனைவோரான இவர், சேலத்தில் பிறந்து சென்னையில் வசித்து வருகிறார். சிறுவர் இலக்கிய உலகத்தில் கதை சொல்லியாகவும், பத்திரிகை எழுத்தாளராகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.