90ஸ் கிட்ஸின் ஹாஸ்டல் வாக்குமூலம் – 2

நான் காலேஜ் சேர்ந்த முத வருஷம்.. ராகிங் எல்லாம் கொஞ்சமாதான் இருந்தது. எல்லா அக்காக்களுமே பாசமா தான் இருந்தாங்க. என்கூட ஜாயின் ஆன பர்ஸ்ட் இயர் பிள்ளைகளெல்லாம் ஹாஸ்டலில் அழுதுகிட்டே இருந்தாங்க. எனக்கு அழுகை அவ்ளோ சீக்கிரத்தில் வராது… தவிர அம்மாப்பாவை விட்டு தனியே இருப்பது, எனக்கே எனக்குனு எல்லாமே தனியா இருப்பது ரொம்ப பிடிச்சிருந்தது.

அதனால சந்தோஷமா திரிஞ்ச என்னை மட்டும் பாடச் சொல்லி, ஆடச் சொல்லி ஏ-ஜோக் சொல்லச் சொல்லி, வேற மாதிரி சொன்ன எல்லாத்தையுமே செஞ்சதால ஒரு கட்டத்துல எல்லோருக்கும் என்னை பிடிச்சுப்போச்சு. சீனியர்கள், வேற டிபார்ட்மெண்ட் சீனியர்கள் எல்லாருக்கும் நான் பிரண்ட் ஆகிட்டேன்.

அப்பதான் கவனிச்சேன் ஹாஸ்டலோட வராண்டா முனைல ஒரு இருட்டுப் பகுதி இருக்கும். அங்கே யாரும் போகமாட்டாங்க. சுவற்றுக்கு அந்த பக்கத்துல டிரைனேஜோ என்ன எழவோ இருந்ததால, கண்றாவியா ஒரு நாத்தம் வேற எப்பவுமே இருக்கும்.

ஆனா அங்க எப்பவுமே மஞ்சுக்காவும் பிரியாக்காவும் ஒரு பாயைப் போட்டு பேருக்கு ஏதாவது கதை புத்தகத்தை வச்சிக்கிட்டு கைல மடிச்சு விசிறும் விசிறியை வச்சிக்கிட்டு பேசிட்டிருப்பாங்க, இல்லைனா ஒரு போர்வையில தூங்கிட்டிருப்பாங்க.

அடிக்கடி மழையின் காரணமாக எல்லாம் காலேஜ் லீவு விடும்போது, தூரத்து ஊர்கள்ல இருந்துவந்த நாங்க ஊருக்குப் போகமாட்டோம். பக்கத்து ஊர்க்காரங்க ஊருக்கு போவாங்க. இந்த மஞ்சுக்காவும், பிரியாக்காவும் அருகிலிருக்கும் பெரிய டவுனோட பக்கத்து பக்கத்து ஊர் ஆட்கள் தான். இந்த ஹாஸ்டலில் வந்துதான் பிரண்ட்ஸ் ஆனாங்க.

ஆனா இவங்க சின்ன சின்ன லீவுக்கெல்லாம் ஊருக்குப் போகமாட்டாங்க. எங்க கிட்ட நாங்க பிரண்ட்ஸ், பிரிஞ்சிருக்க பிடிக்கலைம்பாங்க. பர்ஸ்ட் இயர் பிள்ளைகளுக்குள்ள சண்டை வந்தா, எங்களை மாதிரி நீங்களும் ஒத்துமையா இருக்கணும்பாங்க. எங்க சைன் பண்ணாலும் மஞ்சுபிரியானு சேர்த்தேதான் சைன் பண்ணுவாங்க.

எங்களுக்கெல்லாம் இத மாதிரி பிரண்ட்ஷிப்போட இருக்கணும்னு ஆசையா இருக்கும். இதை மத்த சீனியர்கிட்ட சொன்னா நமுட்டு சிரிப்பா சிரிச்சுக்கிட்டே, “ஏன் அதே மாதிரி பிரண்ட்ஷிப் தான் வேணுமா, எங்களை மாதிரியெல்லாம் இருக்கமாட்டிங்களோ?”ம்பாங்க.

இப்படி இருக்கையில மஞ்சுக்காவோட தாய்மாமனோட மஞ்சுக்காவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. சின்ன வயசுலேருந்து பேசி வச்சிருந்தாங்களாம். ஒரு பொங்கல் லீவோ ஆனுவல் லீவோ ஞாபகம் இல்லை, முடிஞ்சு வரும்போது மங்களகரமா தடியான தாலி, புத்தம் புது மெட்டியோட நிறைய வளையல்களோட ஹாஸ்டலுக்கு வந்தாங்க. மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சாங்க… “அக்கா… மாமா எப்படி?ன்னு…
“எப்படிக்கா இருந்தது பர்ஸ்நைட்டு”னு டைரக்டாவே கேட்டாங்க. ஹாஸ்டலில் அப்படித்தான் கேட்டுப்பாங்க. நோ லிமிட்ஸ் இல்லையா? என்ன ஒண்ணு வார்டன் இல்லாத நேரமா பார்த்து கேட்டுக்கணும் அவ்ளோதான்.

நன்றி: News4Tamil

அவரு பேரு முருகனோ குமரனோ என்னவோ… முருகன்னு வரும் பாட்டையெல்லாம் பாடி கிண்டல் பண்ணுவோம். அக்கா சிரிச்சிட்டே போயிடுவாங்க. மஞ்சுக்கா ரொம்ப அமைதி. கல்யாணத்துக்கு பிறகும் மஞ்சுக்காவும் பிரியாக்காவும் அந்த நாத்தமான டார்க் ப்ளேஸ்ல தான் படுத்துகிட்டோ… ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சிக்கிட்டோ… பேசிட்டு இருப்பாங்க.

“ஏன்க்கா இந்த நாத்தத்துல எப்படி இருக்கிங்க?”ன்னு விஜி ஒரு தரம் கேட்டதுக்கு, “இங்கயே இருக்கிறதால பழகிடிச்சி. இங்க அமைதியாக இருக்கறதால எங்களுக்கு இந்த இடம் பிடிச்சு போச்சு, நீ கூட வா, இரண்டு நாள் இருந்தா நாத்தம் தெரியாது”ன்னாங்களாம்.

அவ வந்து “கோடி ரூபா குடுத்தாலும் நான் அங்க இருக்கமாட்டேன்பா”ன்னு சொன்னா.

ஒரு தரம் புதன்கிழமை காலேஜ் ரீ ஓபன் ஆச்சு. ஜெனரலா புதன், வியாழக்கிழமைகளில் காலேஜ் ரீ ஓபன் ஆனாக்கா, ஹாஸ்ட்லர்ஸ் இரண்டு நாட்கள் எக்ஸ்ட்ராவா லீவு போட்டுட்டு திங்கள் கிழமைதான் வருவோம். இது ஒரு எழுதப்படாத விதி.

ஆனா மஞ்சுக்கா புதன்கிழமை 10 மணிக்கெல்லாமே வந்துட்டாங்க. மாமாதான் கொண்டு வந்து விட்டாரு. (ஆல் சீனியர்ஸ் அக்காஸ்தான் அக்காஸோட லவ்வர்ஸ், புருஷர்ஸ் எல்லாமே மாமாஸ் தான்!) விஸிட்டர் ட்யூட்டி பார்த்த சீனியர்ட்ட வார்டனை பார்க்கணும்னு மாமா கேட்டாராம்.
வார்டன் வந்ததும் அவங்ககிட்ட மாமா, “நான் திங்கள் கிழமையில் கொண்டு வந்து விடலாமா? இன்னைக்கு கிளாஸ் அட்டென்ட் பண்ணதும் கூட்டிட்டு போகலாமா?”ன்னு கேட்டதும், வார்டன் சிரிச்சிட்டே, “நிறைய ப்ரொஃபஸர்ஸ் கூட இன்னும் ஜாயின் பண்ணலை, லீவுல இருக்காங்க. இவங்க பேட்ச் மேட்ல ஒவ்வொரு கிளாஸ்லயும் சிங்கிள் டிஜிட்லதான் ஆள்கள் வந்திருக்காங்க. எல்லாமே திங்கள் கிழமையில்தான் வருவாங்க நீங்க இப்பவே கூட கூட்டிட்டு போங்க… கிளாஸ் எதுவும் நடக்கலை”ன்னு சொல்லியிருக்காங்க.

திருமணமானவர்களுக்கு வார்டன் தரும் சலுகைகள் இதெல்லாம்.

பார்க்க வந்தா நேரத்தை கண்டுக்க மாட்டாங்க.. விஸிட்டர் ஹவர்ஸ், அவுட்டிங் ஹவர்ஸ் எதையுமே கண்டுக்கமாட்டாங்க. மாமா, “சரி கிளம்பு மஞ்சு போலாம்”னதும், அக்கா “பரவாயில்லை வந்துட்டேன் நான் இங்கயே இருந்துட்டு வேணும்னா வெள்ளிக்கிழமை கிளம்பி வரேன்”னு சொல்லியிருக்காங்க. ரப்புனு ஒரு அறை விட்டு, எனக்குத் தெரியாதா? வெள்ளிக்கிழமை ஏதாவது சாக்கு சொல்லி இங்கியே இருந்துடுவன்னு சத்தமா சொல்லி இருக்காரு. அதுவரைக்கும் அங்கேயிருந்த மஞ்சுக்காவையும் மாமாவையும் சேர்த்து ரொமாண்டிக்கா கிண்டல் பண்ண தோழிகள், சீனியர்கள் ஏன் வார்டன் கூட அதிர்ந்து போயி ஒண்ணுமே புரியாம நின்னிருக்காங்க.

“இவளை அந்த பிரியாகூட சேர விடாதிங்க மேடம்”னுட்டு, “நீ இன்னைக்கு இப்ப என்கூட வரணும், இல்லைனா சாயங்காலமாவது வரணும், நான் இருந்து கூட்டிட்டுப்போறேன். அப்படி வரலைனா நான் செத்துடுவேன்”னு சொல்லிட்டு மாமா கிளம்பிட்டாரு.

அக்கா எப்பவும் போல அமைதியா மூஞ்சை வச்சிட்டு, “அவரு எப்பவுமே இப்படித்தான் சொல்வாரு”ன்னு சொல்லிட்டு, கிளாஸ்க்குபோகாம அந்த நாத்தம் பிடிச்ச டார்க் ப்ளேஸூக்கு போயிட்டாங்க. பிரியாக்கா அன்னைக்கு சாயந்திரம் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து கை கோர்த்துட்டே அட்டெனென்ஸ் எடுக்கும் இடத்துல நின்னு பிரஸன்ட் சொன்னாங்க.

இரவு 10 மணிக்கு தந்தி வந்தது… மஞ்சுக்காவோட கணவர் இறந்துட்டதா. நாங்க எல்லாரும் அழுதோம். பிரியாக்கா உட்பட‌. ஆனா மஞ்சுக்கா, “இது சும்மா என்னை வரவழைக்கிறதுக்கு போடற டிராமா”ன்னு சொன்னாங்க. வார்டன்தான் வாட்ச்மேனையும், அவரோட சம்சாரத்தையும் துணைக்கு அனுப்பி, போய்ட்டு வா எதா இருந்தாலும்னு அனுப்பி வச்சாங்க.

ஒரு மாசத்துக்கு பிறகு மஞ்சுக்காவோட அம்மா அவுங்களை கூட்டிட்டு வந்து, “அவ மனசு மாறணும், நீங்க எல்லாரும் ஒத்துமையா இருந்து பார்த்துக்கங்கனு” எங்க கிட்ட சொல்லிட்டு, வார்டனோட கையை பிடிச்சு அழுதுக்கிட்டே, “படிக்கணும்றா.. தம்பியை இழந்துட்டோம், இவளை பத்திரமா பார்த்துக்கங்க”ன்னாங்க.

அக்கா தனக்கு எதுவுமே நடக்காத மாதிரி, ஆனா கண்ல தண்ணிவச்சுகிட்டு நின்னாங்க. பார்க்க பாவமா இருந்தது.

பிரியாக்கா, மஞ்சுக்காவை இனி நான் பார்த்துப்பேன். அவளுக்கு நான் இருக்கேன்னு டயலாக்கா விட்டாங்க. ச்ச எவ்ளோ நல்ல பிரண்ட்ஸ்னு நினைச்சோம்.

Photo by Hannah Busing on Unsplash

அடுத்து வந்த ஹாஸ்டல் டேல பிரியாக்கா ரஜினி போலவும், இவங்க விஜயசாந்தி போலவும் அடிக்குது குளிருக்கு ரொம்ப கிளாமராஆடினாங்க.
அப்புறமாதான் தெரிஞ்சுது எப்பவுமே பிரியாக்கா, மஞ்சுக்காவோட தாலியை இழுத்து இது எனக்கு வேணும்… எனக்கு வேணும்னுவாங்களாம்…
வேற என்னென்னவோ பேசிக்கிட்டாங்க…
வளர வளர தான் இந்த உறவுக்கு என்ன பேருன்னு தெரிஞ்சது.

இந்த உறவை வெளிப்படையாக அங்கீகரிக்காதது சமூகத்தோட பிழையா?
இதப் புரிஞ்சு விலகத்தெரியாத வயசுல கல்யாணம் பண்ணி, மென்டலி ஸ்ட்ரெஸ் ஆகி, தற்கொலை பண்ணிகிட்ட மாமாவோட, மற்றும் பெத்தவங்களோட பிழையா?
என்னவோ சில வருடங்கள் பேசிட்டு நாங்க எல்லாரும் எங்க வேலையை பார்க்கப் போயிட்டோம்..
எதுவானாலும் இழப்பு இழப்பு தானே? ஒரு உயிர் போச்சு தானே?

இன்னொரு கதை வரும்…

முந்தைய கதையை வாசிக்க:

https://herstories.xyz/subha-kannan-love-short-story/

படைப்பு:

சுபா கண்ணன்

ஆசிரியர், எழுத்தாளர், கதைசொல்லி. பாடல், கதை என கலை வடிவில் குழந்தைகளுக்கு பாடங்களைக் கொண்டு சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவள் விகடன் இதழில் இவர் எழுதிய ‘மனுஷி’ தொடர் பெரும் ஆதரவைப் பெற்றது.