அக்டோபர் இரண்டு- சிறப்புக் கட்டுரை 

அண்ணல் காந்திக்கு, 1943 ஆம் ஆண்டே ஆங்கிலேயர் காலத்தில், boycott foreign goods என்ற காந்தி உருவப்படம் பொறித்து, ஒரு முத்திரை வெளிவந்துள்ளது. இது எதற்குப் பயன்பட்டது எனச் சரிவர தெரியவில்லை. ஆனால், அஞ்சல் தலை சேகரிப்போர், அஞ்சல் தலைகளுடன்தான் இதையும் சேர்த்து சேகரிக்கின்றனர். தாமரையும் பிறை நட்சத்திரமும் இப்படத்தில் உள்ளன.

விடுதலை பெற்று ஓர் ஆண்டு முடியும் முன் காந்தி கொல்லப்பட்டார். அதனால் முதல் விடுதலை நாளன்று அவரது நினைவைப் போற்றும் வண்ணம் நான்கு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. இவைதான் காந்தி அடிகள் படம் பொறித்து வெளியான முதல் அஞ்சல் தலைகள். இவற்றில், பாபு என இந்தியிலும் உருதுவிலும் எழுதியிருக்கிறார்கள்.

அப்போது, கவர்னர் ஜெனரல் ராஜாஜி தனது அதிகாரபூர்வ கடிதப் பரிமாற்றங்களில் மிகக்குறைவான (100) எண்ணிக்கையில் காந்தி அஞ்சல் தலைகளை, service என முத்திரையிட்டுப் பயன்படுத்தினார். அவை இப்போது மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. இவற்றில் பத்து ரூபாய் மதிப்புள்ள சர்வீஸ் அஞ்சல் தலை நான்கு இணைந்த அஞ்சல் தலைகள் 500,000 பவுண்டுகளுக்கு விலை போயிருக்கிறது.

காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “இதைப் போன்ற ஒருவர், ரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் நடமாடினார் என்பதை வரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்” என்கிறார். அவரை மட்டுமல்ல உலகின் பல தலைவர்களையும் அறிஞர்களையும் கவர்ந்தவராக காந்தி இருந்திருக்கிறார்; இருக்கிறார்.

அமெரிக்கப் போராளி மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் காந்தியத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தார். காந்தியால் ஈர்க்கப்பட்டு இந்தியப் பயணத்தை மேற்கொண்ட அவர், காந்தியின் பூமிக்கு எனது பயணம் என்று எழுதியுமிருக்கிறார். 1964 டிசம்பரில் அமைதிக்கான நோபல் பரிசை கிங் வென்றபோதும், காந்தியை அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.

இவ்வாறு அமெரிக்கத் தலைவர்களைக் கவர்ந்ததாலோ என்னவோ இந்தியாவைத் தவிர, காந்தியடிகளுக்கு அஞ்சல்தலை வெளியிட்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது.

தி சாம்பியன் ஆஃப் லிபர்ட்டி (‘CHAMPION OF LIBERTY’) வெளியீடுகள் முதன்முதலில் 1957இல் அமெரிக்காவில் வெளிவந்தன. இவை, சொந்த நாடுகளில் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்ற வெளிநாட்டுத் தலைவர்களுக்காக வெளியிடப்பட்டவை. ஒவ்வோர் அஞ்சல்தலையும் தலைவர்களின் உருவப்பட மெடல், ரிப்பனில் தொங்குவது மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில், 1961ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் காந்தியடிகள் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

இதே வரிசையில் பிற்காலத்தில் மற்றோர் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. அது என்னிடம் இல்லை.

1969 ஆம் ஆண்டு காந்திஜியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதைக் கொண்டாடும் விதமாக யாரை எதிர்த்து காந்தி போரிட்டாரோ, அந்த இங்கிலாந்து நாடே அவருக்கு அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது.

மேலும் 40 க்கும் மேற்பட்ட நாடுகள், காந்தியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அஞ்சல்தலைகள் வெளியிட்டன. அவற்றில் என்னிடம் உள்ள ஒருசில அஞ்சல் தலைகள்

அதே ஆண்டு இந்தியாவும் தனது பங்கிற்கு அஞ்சல் தலைகள் வெளியிட்டு, அவரைப் பெருமைப்படுத்தியது.

இது தவிர பல்வேறு காலகட்டங்களில் இந்தியா, காந்தியின் அஞ்சல் தலைகளை வெளியிட்டு உள்ளது. மேலும் பல அஞ்சல் உறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இவை போக காந்தியடிகளின் மனைவி கஸ்தூரி பா காந்தி இறந்த இருபதாவது ஆண்டின் நினைவாக ஓர் அஞ்சல்தலையும் 1996 ஆம் ஆண்டு மேலும் ஓர் அஞ்சல் தலையும் இந்திய அரசு வெளியிட்டு அவரைச் சிறப்பித்து உள்ளது. அவரும் மிகச்சிறந்த போராளிதான். காந்தியின் போராட்ட மயமான வாழ்க்கையில் இணைந்து நடந்தது மட்டுமல்லாது, பல அறப் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் (1942) காந்தியுடன் கைது செய்யப்பட்டு, பூனாவிலுள்ள எரவாடா, சுல்தான் மூன்றாம் முகமது ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்தவர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் அண்ணல் காந்தியின் அஞ்சல் தலைகளை வெளியிட்டு உள்ளன. போலந்து போன்ற சில நாடுகள் அட்டை வெளியிட்டுள்ளன. ருமேனியா போன்ற சில நாடுகள் அஞ்சல் உறைகள் வெளியிட்டுள்ளன. மியான்மர் போன்ற சில நாடுகள் அஞ்சல் முத்திரை (post mark) வெளியிட்டுள்ளன. அவரது பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் நாள் இந்தியாவில், பொதுவிடுமுறை நாளாகவும், உலகம் முழுவதும், அகிம்சை (non-violence) நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அகிம்சை நாளாக ஐநா அறிவித்த ஐநாவே 2009 ஆம் ஆண்டு அவருக்கு அஞ்சல் தலையும் வெளியிட்டுள்ளது.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.