நைட் ஃபுல்லா குஷ்டு மட்டையாகி இருந்தாள் ஆதி. நள்ளிரவில் அவள் வாந்தி எடுக்கும் போது ஓடிச் சென்று அவள் நெற்றிப் பொட்டைப் பிடித்துக்கொண்டான் சிபி.

பின்பு சீரகத் தண்ணீர் போட்டுக் கொடுத்து அவளைத் தூங்க வைத்துவிட்டு, அவன் படுக்கும் போது மணி மூன்று இருக்கும்.


காலையில் திடீரென்று விழிப்பு வந்துவிட்டது ஆதிக்கு.

அயர்ந்து உறங்கும் சிபியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு, அதைவிட மென்மையான குரலில், “சிபி, டீ தாப்பா!” என்று எழுப்பிவிட்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.

மெடா’வைத் திறந்தவளுக்கு அன்று ஆண்கள் தினம் என்று தெரிய வந்தது.

ஊரில் வாக்கப்பட்டிருக்கும், அவள் போனாலே பாசமாய் அட்டகாசமாய் மீன் குழம்பு வைத்துச் சாப்பாடு போடும், வெள்ளந்தி அண்ணன், சிறுவயது முதல் தங்களுக்காகவே சமையலறையில் ஓடாய்த் தேய்ந்த அப்பன், கீழே தூக்கக் கலக்கத்துடன் டீ போட்டுக் கொண்டிருக்கும் ஆருயிர் சிபி அனைவர் மீதும் திடீர் அன்பு பொங்கிப் பிரவகித்தது.

தென்னை மரங்களின் சலசலப்பையும் சிலுசிலுவென்ற காற்றையும் மாமரத்துக் கிளிகளின் கீச்சுக்குரல்களையும் குயிலின் இன்னிசையையும் ஒரு சேர அனுபவித்தவளுக்கு, “மானிட சமுத்திரம் நானென்று கூவு” என்று கத்த வேண்டும் போல் ஒரு பரவச அனுபவம் ஏற்பட்டது.

“சிங்கப் பயலே!…” என்று தொடங்கி அற்புதக் கவிதை ஒன்றை ஐந்தே நிமிடங்களில் தட்டச்சிப் பதிவேற்றினாள்!


ஹார்ட்டின்கள் குவியத் தொடங்கின; பெரும்பாலும் ஆண்களிடமிருந்தே!

ஆண்கள் நலம்!

(தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.